தை மாத ஜோதிடபலன்கள்

0
193
       

செவ்வாய்

சுக்கிரன்

கேது

07 செவ்-மீனம்

12 சனி-தனுசு

14 சுக்-மீனம்

21 புத–மகரம்

24 குரு-வ.ஆ

30 சூரி-கும்பம்

 
சூரியன் ராகு
புதன் சனி   குரு

தை மாத இராசி பலன் (2017)  தை மாத கிரக சூழல்…

மேஷம் : இந்த மாதம் உங்களுக்கு சாதகமான நற்பலன்களே அதிகம் நடைபெறும். கடந்த ஒரு மாதக்காலமாக வீண்சிலவுகள், அலைச்சல்  குறைந்து முன்னேற்றமான பலனை அளிக்கும். தொழில் மேன்மையும், வியாபாரத்தில் லாபமும் அதிகமாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். அரசு விசயத்தில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை நீங்கும். தந்தையாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை வலுப்படும். ஒரு சிலருக்கு தந்தை மூலம் சொத்து வரவு, பணவரவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். விவசாயத்துறையில் உள்ளவர்களுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பெண்களால் பெரிதும் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி அன்னியோன்யம் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் உள்ள மகளிருக்கு சிறப்பு பலன் உண்டு. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான பலன் உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் வீண் அலைச்சல் உருவாகும். சக பணியாளர்களுடன் வீண் விவாதத்தை தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலைச்சுமை கூடும். தூக்கமின்மை ஏற்படும். யாரையும் நம்பி பணத்தை விரயமாக்க வேண்டாம். மாத பிற்பகுதியில் சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு கவனம்.

ஜனவரி 22 முதல் 24 வரை சந்திராஷ்டமம். கவனத்துடன் இருக்கவும்.

பரிகாரம் : செவ்வாய்கிழமையன்று முருகனை வழிபடவும். ராகு கால வேளையில் துர்க்கையம்மனை வழிபடவும். வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாடு மேலும் செல்வத்தை தரும். பைரவர் வழிபாடு பிரச்சனைகளை தீர்க்கும்.

ரிஷபம் : இந்த மாதம் சற்று முன்னேற்றமான மாதமாகவே இருக்கும். தந்தையுடன் வீண் விவாதத்தை தவிர்த்தல் நலம். அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். தொழில் முன்னேற்றமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வீடு, வாகனம், ஆபரணச்சேர்க்கை உண்டு. வாழ்க்கை துணையோடு அன்னியோன்யம் பிறக்கும். பெண்கள் மகிழும்படியான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் நிமித்தம் புதிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப்பணியாளர்களால் முன்னேற்றம் உண்டு. புதிய பதவி தேடிவரும். எதிலும் வெற்றி ஏற்படும். பொருளாதார வளம் கூடும். சகோதர சகோதரிகள் ஆதரவு பெருகும். பெண்களால் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றமான பாதையில் செல்வார்கள். ஆசிரியரிடம் நல்லப்பெயர் கிடைக்கும். ஜனவரி 30க்கு பிறகு படிப்பில் சற்று கவனம் தேவை. அரசியல்வாதிகள் கட்சியில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி முன்னேற்றம் பெறலாம். சுக்கிரனும், புதனும் சாதகமான சூழலில் இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணவரவு ஏற்படும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கப்பெறும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உடல் சோர்வு, வயிற்று பிரச்சனை, தொண்டை எரிச்சல் ஏற்படலாம். உஷ்னத்தை குறைக்கும்படியான உணவு, காய்கறிகள் பழங்களை எடுத்துக்கொள்ளவும். தோல் சம்பந்தப்பட்ட வியாதியில் இருந்து குணம் பெறலாம். தூக்கம் குறையும் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். உங்கள் மீது வீண்பலி ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மனசோர்வு ஏற்படும். அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது.

ஜனவரி 25, 26 சந்திராஷ்டமம் கவனம் தேவை.

பரிகாரம் : புதன் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரன் வழிபாடு சுகம் தரும். வியாழக்கிழமைகளில் ஜீவசமாதிகளுக்கு சென்று வருதல் மனநிம்மதியை தரும்.

மிதுனம்: இந்த மாதம் சற்று மகிழ்ச்சியாகவே இருக்கும். தொழில் மேன்மையடையும். பெண்களால் நன்மை பிறக்கும். அனைத்து விசயத்திலும் பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர் இடத்தில் இருந்த பகை அகலும். பண வரவு அதிகரிக்கும். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சென்ற மாதம் சிலருக்கு தொழில் நஷ்டம். பொருள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம், அது நீங்கி இந்த மாதம் இரட்டிப்பாய் லாபம், தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு விருத்தியடையும். தொழிலில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள சுயநலவாதிகளை அடையாளம் காண்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். வழக்கு விசயங்களில் நல்ல தீர்ப்பு வரும். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு பயணம் உண்டு. விஷேசங்களில் கலந்துக்கொள்வீர்கள். பெண்களோடு இணைந்து தொழில் முனைவோருக்கு முன்னேற்றமான பலன் உண்டு. வேற்று இனத்தவர், மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. குலதெய்வ நேர்த்திக்கடன் நிறைவேறும். மாத துவக்கத்தில் கணவன் மனைவியிடையில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். விட்டுக்கொடுத்து போவது நலம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். தனியார்துறையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது சேமம். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிப்பது வீண் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். மாத முற்பகுதியில் அனைத்து விசயங்களிலும் கவனம் தேவை.

ஜனவரி 27, 28, 29 சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை,

பரிகாரம் : தினமும் சூரியனை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு மன தைரியம் அளிக்கும். முருகன் வழிபாடு சகல வெற்றிகளையும் கொடுக்கும்.

கடகம் : சற்று கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு அதிகரிக்கும். தொழில் சுமாராக நடைபெற்றாலும் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் அதிபர்கள் வியாபாரிகள் மாத முற்பகுதியில் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தொழில் சிறப்படையும். வெளியூர் பயணம் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கான பயணங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு உல்லாசப்பயணங்களுக்கும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் அனுகூலமான பலனே தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொழுது போக்கில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தொழில் புரிவோருக்கு முன்னேற்றமான பலன் உண்டு. பலருக்கு வீடு, வாகன யோகம் உண்டு. அடுத்தவர்களுக்கு ஆடை ஆபரணம் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதுவேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. பணப்பற்றாகுறையை சமாளிப்பீர்கள். உறவுகளில் இணக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். இளைய சகோதர வழியில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பார்கள். குடும்பத்தில் வசதிகள் பெருகும்.  எந்த ஒரு செயலையும் அதிக சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை. சின்ன சின்ன அறுவை சிகிச்சை ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் தெரியாத வண்ணம் தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். தொழிலாளர்கள் வகையில் கண்காணிப்பு அவசியம், மாத பிற்பகுதியில் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஜனவரி 30, 31 சந்திராஷ்டமம் இந்த வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வெற்றியை தரும். செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபடவும். தினம் நவகிரகங்களை வழிபடவும்.

சிம்மம் : மனதில் சந்தோசம் அதிகரிக்கும். புத்திக்கூர்மை ஏற்படும். வெளியூர் பயணம் ஏற்படும். அம்மாவின் வழியில் நல்ல பலன் உண்டு. சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். திடீர் யோகம் உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் நிமித்தம் வெளியூர் பயணம் ஏற்படும். பெண்களால் ஏற்பட்ட சிரமம் நீங்கும். மாத முற்பகுதி சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலை விசயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் சீராக வளர்ச்சி பெருவார்கள். பிள்ளைகள் வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணியாளர்கள் நல்ல வளர்ச்சி அடையலாம். ஊதிய உயர்வு கிடைக்கவும் பலருக்கு வாய்ப்பு உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கப்பெறும். கால்நடைகள் மூலம் நல்ல லாபம் உண்டு. அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் போட்டியாளர்களால் பிரச்சனையை சந்திக்க நேரலாம். கலைஞர்கள் சீரான வளர்ச்சியை காண்பார்கள். சகோதர வகையில் வீண் அலைச்சலை கொடுக்கும். விவாதங்களை தவிர்க்கவும். மின்சார பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனங்களில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம்.

பிப்ரவரி 1, 2 சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்: குரு வழிபாட்டால் பிரச்சனை தீரும். ஞானிகள், சித்தர்கள் தரிசனம் நல்ல பலன் தரும். ஜீவ சமாதிகளை வணங்குங்கள்.

கன்னி : இந்த மாதம் மிகவும் அனுகூலமான மாதமாகும். தொழில் வியாபாரத்தில் மிகவும் முன்னேற்றமான பலனையே காணலாம். ரியல் எஸ்டேட், தரகு கமிசன் தொழிலில் லாபம் மிகவும் அதிகரிக்கும். வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப்பெறும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாய் இருப்பார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சகோதர வகையில் உதவிகள் கிட்டும். பொது காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம். பிள்ளைகள் கல்வி, வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனைவி வகையில் இருந்து வந்த காழ்புணர்வு நீங்கி அன்னியோன்யம் பிறக்கும். தந்தை உதவிகரமாக இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கப்பெறும். தான தர்மங்கள் செய்து மகிழ்வீர்கள். உறவினர் வீட்டு விசேச பயணங்கள் அமைய பெறலாம். டிவி, பிரிட்ஜ், வாசிங்மிசின், போன்ற மின்சார உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு மனை விற்பது சம்மந்தமான சிக்கல் விலகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதிய ஆடை ஆபரணம் கிடைக்கப்பெறும். அண்டை அயலாரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். எல்லா விதத்திலும் நல்ல பலன்களே நடைபெறும். பணவிசயத்தில் சிக்கனமாக இருப்பது தேவையற்ற விரையத்தை தடுக்கும். பெண்கள் விசயத்தில் சற்று கவனம்.

பிப்ரவரி 3, 4 சந்திராஷ்டமம் இருப்பதால் அந்த நாளில் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது பிரச்சனையில் இருந்து தவிர்க்கும்படி இருக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபடுங்கள். தினமும் மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்ல பலனை தரும். ராகுகாலத்தில் ராகு கேதுவை வழிபடவும். துர்க்கைக்கு விளக்கு போடுவது தைரியத்தை கொடுக்கும்.

துலாம் : சற்று கவனமாக செயல்பட வேண்டிய காலம். தொழில் வியாபாரம் சுமாராகவே நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்ய சிலர் முன்வருவார்கள். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். விவசாயம், நிலம் சம்மந்தமான தொழில் லாபம் தரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். விளைப்பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கவும் வாய்ப்பு உண்டு. போலிஸ், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல பலன் உண்டு. சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் வகையில் அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் தடைபெறும். வேலைப்பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புகளை ஏற்க கூடிய சூழல் உருவாகும். உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து உருவாகும். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாய்ப்புகள் தள்ளிப்போகும். வரவு மிக சுமாராகவே இருக்கும். வரவை மீறிய செலவுகளால் சிரமம் ஏற்படும். உடன் பிறப்புகளால் விரைய செலவுகள் அதிகமாகும். மனைவியிடத்தில் வீண் விவாதத்தை தவிர்க்கவும். பேச்சில் கவனம் மிக மிக அவசியம். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியற்ற சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சற்று கவனமாக படிக்கவும். ஜனவரி 30க்கு பிறகு கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பெண்களுக்கு சந்தோசம் அதிகரிக்கும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும்.

பிப்ரவரி 5, 6 சந்திராஷ்டமம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

பரிகாரம் : காரிய வெற்றிப்பெற நரசிம்மரை வழிபடுங்கள். சனிக்கிழமையன்று சனிஸ்வரனுக்கு நல்லெண்ணையில் தீபமிட்டு வழிபடவும். ஏழைகளுக்கு உணவளியுங்கள். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் சோம்பல் விலகி உடல் ஆரோக்கியம் பெறும்.

விருச்சிகம் : இந்த மாதம் தொழில் முன்னேற்றமான மாதமாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் புகழ் செல்வாக்கு கிடைக்கப்பெறுவீர்கள். பூர்விக சொத்து கிடைக்கப் பெறும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு மகிழ்வீர்கள். அரசுக் காரியங்கள் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட கால காணிக்கையை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் உதவியாக இருப்பார்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும். நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். பெண்களால் பொருள் சேரும். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய காலமிது. பொறுமையாக இருப்பது பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்கும். சோம்பல் அதிகரிக்கும். உங்கள் வேலையை மற்றவரிடம் ஒப்படைபீர்கள். அது மேலும் பிரச்னையை உருவாக்கும். ஞாபக மறதியால் அவதியுறும் நிலை உண்டு. தொழில் வகையில் அது மேலும் சிக்கலை உருவாக்கும். திருமண முயற்சி தாமதாகும். பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். உங்கள் பொறுப்புகளை நீங்களே பார்த்துக்கொள்வது நலம். மாத பிற்பகுதியில் பொருள் விரையம் ஏற்படலாம். வேலையில் உள்ள பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் வேலை சுமை அதிகரித்தாலும் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மின்சாரம், நெருப்பில் கவனம் தேவை.

பிப்ரவரி 7, 8 சந்திராஷ்டமம் எனவே கவனமுடன் செயல்படவும்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினையை தீர்க்கும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிப்படுவதால் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

தனுசு : இந்த மாதம் நன்மைகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் மாதமாகும். குடும்பத்தில் சந்தோசம் அதிகமாகும். தொழில் நல்ல விதமாக நடைப்பெறும். இருந்தும் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக்கொண்டால் விரையங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டு. பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இலாபகரமான பலனே உண்டு. விவசாயத்திற்கு நவீன இயந்திரம் வாங்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பால் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும், புதிய பொறுப்புக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு கிடைக்கப்பெறும். அலுவலக பணவிசயத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்கள் கட்டுக்குள் வரும். வீடு நிலம் வாங்க வங்கிகளில் கடன் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு பெறும். காரியங்கள் செய்வதில் இருந்த தேக்க நிலை நீங்கும். புத்திரப்பாக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் கிடைக்கப்பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வீட்டு உபயோக ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  மாணவ மாணவியர்களுக்கு முன்னேற்றமான மாதமிது. படிப்பில் நல்ல வளர்ச்சி இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வதிருப்பணியில் ஆர்வம் கூடும். மின்சார சாதனங்களை கையாளுவதில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனச் சிதைவு கூடாது. மித வேகமாக செல்வது நல்லது. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு சற்று பின்னேற்றமான பலனே நடைபெறும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

பிப்ரவரி 9, 10 சந்திராஷ்டமம் இந்த நாட்களில் கவனமுடன் செயல்பாடவும்.

பரிகாரம் : செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபடவும். நந்தியை வழிபடுவதால் நல்லப்பலன் கிடைக்கப்பெறும். நவகிரகத்தில் உள்ள இராகுவிற்கு அர்ச்சனை செய்யவும்.

மகரம் : இந்த மாத துவக்கத்திலேயே நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் பனிபோல் விலகிவிடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பு அடையும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் சூழல் சிலருக்கு உள்ளது. எல்லா வகையிலும் அனுகூலமான மாதமாக இருந்தாலும், கிரக சூழல் எல்லா விதத்திலும் சரியாக இல்லததாதல் எதிலும் சற்று கவனம் தேவை. வார்த்தைகளை கவனமுடன் கையாளவேண்டும். எதையும் வெளிப்படையாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய தொழில் துவங்க திட்டமிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி உறவில் தற்காலிக பிரிவு உண்டாகலாம். கோபத்தை குறைத்துக்கொள்வதே உங்களுக்கு நல்லது. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். புத்தி தடுமாற்றம் இருக்கும். சகோதரவகையில் சர்ச்சைகள் ஏற்படும். தனியார் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம். சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியம் செய்தாலும் அதன் மூலம் பிரச்னையை அனுபவிக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பிறர் மீது அதிகாரம் செலுத்தும் எண்ணம் உருவாகும். தொழில் அதிபர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறும்.  பணியில் உள்ளவர்களுக்கு வேலைபளு, அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேத்த பலன் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சுக்கிரனால் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கும்.

ஜனவரி 15, 16 பிப்ரவரி 11, 12 ஆகிய நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் இறைவழிபாட்டில் மனதை செலுத்துவது நல்லது.

பரிகாரம் : செவ்வாய்கிழமை முருகனை வழிபடவும். இராகுவின் தொல்லையில் இருந்து தப்பிக்க பைரவரை வழிபடவும். காளிக்கு அர்ச்சனை செய்வது பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும்.

கும்பம் : இந்த மாதம் தொழில் உத்தியோகம் நன்றாக இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களால் நன்மைகள் கிடைக்கும். கோபத்தை கை விடவும். பதவி உயர்வில் தடை ஏற்படும். உங்களை புரிந்துக்கொள்ளாமல் இருந்தவர்கள் புரிந்துக்கொள்ளுவார்கள். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த கடன் கிடைக்கப்பெறும். தடைபெற்று வந்த திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் கணவனின் அன்பை பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்து இடும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர் மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. கண் எரிச்சல், பார்வைக்கோளாறு, காது வலி ஏற்படும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. வருங்கால முன்னேற்றத்திற்கு செய்யும் முயற்சிக்கு மாற்று இனத்தவர் உறுதுணையாக இருப்பார்கள்.

ஜனவரி 17, 18, 19 தேதிகளில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். சனிக்கிழமை பெருமாளை வணங்கவும். பிரதோஷ வழிபாடு நன்மை பயக்கும். விநாயகர் வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம் : இந்த மாதம் முன்னேற்றமான மாதமாகவே இருக்கும். செய்தொழில் நல்ல லாபம் தரும். புதிய தொழில் துவங்க வாய்ப்பு உண்டு. பணபுழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசு ஊழியர்கள் தெம்பாக இருப்பார்கள். தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. தந்தை வகையில் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம். மாமன் வகையில் உதவிகள் கிடைக்ககூடும். தந்தை வழி சொத்துக்ளால் ஆதாயம் உண்டு. நீண்டகாலம் சந்திக்காத நண்பர்கள், உறவுகள் சந்திப்பு நிகழும். அதனால் மன மகிழ்ச்சி கூடும். அரசு வகையில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்த மாதத்தை விட முன்னேற்றம் இருக்கும். பகைவர்களை வெற்றி காண்பீர்கள். வங்கிகளில் சலுகைகள் கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். வாகனம் வாங்கும் முயற்சி தடைபெறும். வீடு மனை சேர்க்கை உண்டு. கடன்கள் கிடைக்கப்பெறும். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பெண் ஊழியர்களால் நன்மைகள் ஏற்படும். யாரையும் விமர்சிக்க வேண்டாம். அதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீண் விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற கவலையை கைவிடவும். தேவையற்ற மனக்குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் கோபத்தை குறைப்பது நல்லது. உங்கள் கோபமே உங்களுக்கு எதிராக இருக்கும். இறை வழிபாடு மூலம் உங்கள் ஆற்றலை மேம்படுத்தலாம்.

ஜனவரி 20, 21 சந்திராஷ்டமம். அந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம் : செவ்வாய்கிழமை முருகனை வழிபடுவது மிகவும் நல்லப்பலனை தரும். சனிக்கிழமை ஸ்ரீராமரை வணங்கவும். பைரவர் வழிபாடு காரிய வெற்றியை தரும்.

திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் தை மாத பலனை கணித்தவர்

ஜோதிட அமுதம் S. ஜோதிமணிகாந்தி D.Astro.,

 

712total visits,1visits today