8வது கதையாடலின் நிகழ்வுகள் பாகம்-2

0
63

கன்னிமாரா நூலகத்தில் நிகழ்ந்த கதையாடல் நிகழ்வின் இரண்டாம் பகுதி :-

சங்கர் நாராயணன் கணையாழி இதழிலிருந்த கதைகள் பற்றி பேச வந்தார்.

சங்கர் நாராயணனை அவ்வளவு எளிதில் எவருமே திருப்திபடுத்தி விட முடியாது. கலைவாணியே கதை எழுதினாலும் அதில் விமர்சனம் வைக்கக் கூடியவர் எனும்போது கணையாழி எம் மூலைக்கு ?

அவர் சொல்ல வந்தது மூன்று கதைகள். அதில் கவிஜி எழுதிய கதையை நான் சரியாக கவனிக்கவில்லை.

முதல் கதை ஒரு தலித் மாணவன் தன் பள்ளியில் சந்திக்கும் சங்கடங்கள் பற்றிய வர்ணனைகள் நிறைந்த சிறுகதை. ஆனால் தன்னைச் சிறிதும் ஈர்க்காமல் திணிக்கப்பட்ட சங்கதிகளாகவும், பல வருடங்களாகச் சொல்லப்படும் தேய் வழக்குகளாகவுமே தனக்கு அக்கதை பட்டது என்றார்.

இறுதியாகச் சொன்னது கணேச குமரன் அவரின் சிறுகதை.

சமகாலச் சிறுகதை எழுத்தாளர்களில் கணேசகுமரன் முக்கியமானவர். அதை நம்பித்தான் ஆசை ஆசையாக அச்சிறுகதையை வாசித்தேன், ஆனால் அது மெகாசீரியலின் சில பகுதிகளாகத்தான் இருந்தது. தனக்கு அதுவும் ஏமாற்றத்தையே தந்தது என்றார்.

பிள்ளைப் பேறு தங்காமல் தொடர்ந்து கரு கலைந்து போகும் ஒரு பெண் தான் நாயகி. அவள் ஒவ்வொரு மாதமும் படும் வலிகளைப் பதிந்துக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர். ஆனால் சொல்லும் விதத்தில் எப்புதுமையும் இல்லை.

அடுத்து, தடம் இலக்கிய இதழில் வந்த கதைகளை பேச வந்தார் மருத்துவர் ராதா. இவருக்கு வாய்த்தது சிறந்த கதைகள் எனலாம்.

ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி கதையைச் சொன்னார். அது மிகவும் பக்குவமான அழகான கதை என்கிற விமர்சனம் இக்கதையை அவர் சொன்ன பின் அவையில் எழுந்தது.

சிறுவயதில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எடுக்கும் போது அது கை தவறி நழுவி விழுந்து நொறுங்கி விட, அதன் பின் தன் வாழ்நாள் முழுதும் கண்ணாடி பொருட்களை தவற விடும் ஒருவரே நாயகன். அவருக்கும் கண்ணாடிக்குமான அந்த பிணைப்பை (!) பற்றிய வர்ணனைகளே கதை. இதைத் தேடி வாசித்துப் பாருங்கள்.

அடுத்து சாம்ராஜ் அவர்கள் எழுதியிருந்த மரிய புஷ்பம்.

திருமணமாகி கர்ப்பமுற்ற சில மாதங்களிலேயே கணவனை இழந்தவள் நாயகி.

தகப்பன இழந்த குழந்தை பிறக்கிறது. மன உளைச்சல் நீங்க கிருத்துவத்திற்கு மாறுகிறாள். சர்ச்சில் ஒரு போடோகிராஃபர் நட்பு கிட்டுகிறது.

அரசு வேலைக்கு முயல்கிறாள். அங்கு தன் மதம் மாறிய விவரத்தைக் குறிப்பிட முனையும் போது புது நண்பன் தடுக்கிறான்.

நீ மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். கிருத்துவத்திற்கு மதம் மாறிய விபரத்தைத் தெரிவித்தால்……. உனக்கு அந்தச் சலுகை ரத்தாகிப் போகும். எனவே பெயரை மாற்றியதையோ, மதம் மாறியதையோ நிரப்புப் படிவத்தில் எழுதாமல். பழையதையே எழுது. ஆனால் கிருத்துவளாக தொடர்ந்து வாழ் என்றெல்லாம் அறிவுறத்த, அவளும் அதையே செய்து அரசு வேலையும் பெறுகிறாள்.

நல் போதனைகள் (?) கூறிய அவனையே மறுமணமும் செய்துக் கொள்கிறாள்.

இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்கள் வாங்கி ஒரு வீட்டைக் கட்டுகிறார்கள். இவளுக்கு நல்ல வருவாய், அவனோ வெத்து வேட்டு. பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

ஏற்கனவே பல கடன்கள் வாங்கியவன் என அவளுக்கு அப்புறம் தான் தெரிகிறது. தொடர்ந்து தன் வருவாயை அவன் உபயோகிப்பதை அவளால் பொறுக்க மாட்டாத ஒரு கட்டத்தில் தன்னை விட்டு விலகிப் போ என்கிறாள்.

அவனோ தன் பூரண சுயரூபத்தை அப்போது காட்டுகிறான். அவளுடைய பழைய அடையாளங்கள் அத்தனையையும், அவள் ஞானஸ்நானம் பெற்ற புகைப்படங்களையும் காட்டி எல்லாவற்றையும் அரசிடம் சொல்லிவிடப் போவதாக மிரட்டுகிறான். அவள் பணிந்து போகிறாள்.

ஆனால், அவன் வீடுகளில் இல்லாதபோதெல்லாம் அறைகள் முழுக்க துழாவுகிறாள், எங்கே வைத்திருக்கிறான் அந்த அடையாளங்களை ? என்று. இப்படி அவ்வப்போது தேடத் தொடங்குபவள் ஒரு கட்டத்தில் எப்போதுமே தேடுமளவிற்கு அவள் மனம் பேதலிக்கத் துவங்குகிறது.

ஒரு நாள் ஓர் உயரமான ஸ்டூலில் ஏறி பரணைத் துழாவுகிறாள். பிடி நழுவி கீழே விழுந்து இறந்தும் போகிறாள். இந்த ஸ்டூல் மேல் ஏறித் தேடும் காட்சியில்தான் கதையை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். ஆனால் கதை இத்துடன் முடியவில்லை.

தீரா குற்றவுணர்ச்சியை சுமக்க ஆரம்பிக்கிறான் அந்தப் போட்டோகிராஃபர் கணவன். அது எந்த நிலைக்கு அவனைப் போக வைக்கிறதென்றால்………….. எந்தக் கதவு திறந்திருந்தாலும் அதை மூடுமளவு. ஆரம்பத்தில் தன் வீட்டில் அப்படிச் செய்தவன் அடுத்த வீடு, எதிர் வீடு என்றெல்லாம் முத்திப் போகிறது.

அவன் பால் பரிவு ஏற்பட்டு, அறைகளில் உள்ள கதவுகள், மேசை திறப்புகளையெல்லாம் மூடச் செய்யும் வேலை ஒன்றை அவனுக்காக வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்ததாக உயிர்மை இதழ்களில் வந்த இரு சிறுகதைகளைச் சொல்ல வந்தவர் சுஜாதா சுந்தர்.

நான் இப்படி எழுதும் வாசகசாலை கதையாடல் விமர்சனங்களால் கவரப்பட்டே இந்நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், என்னையும் கதை சொல்ல வைத்துவிட்டீர்கள் என்று பெருமையாகத் தான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.

அவர் சொன்ன முதல் கதை இமையம் அவர்களுடையது. சீதா எனும் சித்தாள் பெண்ணிற்கும், கட்டிட நிறுவனருக்கும் இடையில் மலரும் முதிர்காலக் காதல் அல்லது புரிதல்.

” நாங்கள் உழைக்காமல் சம்பாதிக்க பல அட்ஜஸ்ட்மெண்ட் வழிகள் இருக்க, எதற்காக இத்தனைக் கஷ்டப்பட்டு உழைக்க வருகிறோம் ? மானத்துடன் வாழத்தானே ?” எனத் தன்னை நாடி தன் வீட்டுக்கே வரும் முதலாளியைப் பார்த்து கேட்கிறாள் சீதா. சுளீரென்ற இந்த விளாசல் கதையை மிக அழகாக்கியது என்றார் சுஜாதா.

அடுத்து அவர் சொன்னது புலியூர் முருகேசன் அவர்களின் சிறுகதை.

இமையம் கதையை வாசிப்பதற்கும், புலியூராரின் கதையை வாசிப்பதற்குமான வித்தியாசம் சில ஆயிரம் கிலோ மீட்டர்களாக இருந்தன என்று ஆரம்பித்தார் சுஜாதா.

பின் நவீனத்துவத்தின் உச்சமாக புலியூராரின் கதை இருந்தது. தானாக அவதானித்ததில் கதை மலைவாழ் பழங்குடியினரின் அவலங்களை நகரத்தாரால் புழு போலக் கூட மதிப்பதாயில்லை என்பதாக இருந்தது என்றார்.

ஒரு நல்ல மழைப் பொழுதில் அறை ஒன்றில் கலவி நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த அறை மழையைத் தாங்கும் வல்லமை கொண்டதல்ல. ஒழுகி ஈரம் பெருகுகிறது. ஈரம் அவர்களிருவரின் உடைகளை நனைத்து அவர்களையும் தொடுகிறது. குளிர் பெருக, குளிர் தாங்காமல் ஆண் இறந்து விடுகிறான். அதை ஆசிரியர் மலர் மேகம் என வர்ணிக்கிறார். அதன்பின் பலப்பல குறியீடுகள். கதை அடுத்து நகரத்துக்கு போகிறது. நகரத்தில் அவள் பிணத்துடன் இருப்பதை எவருமே கண்டுகொள்ளவில்லை…………..

எப்படி எத்தனைமுறை மீள் வாசித்தாலும் தனக்கு கதை முழுமையாகப் புரிபடவில்லை, நீங்கள் வாசித்தீர்களா ? உங்கள் புரிதல் என்ன ? என்று என்னையும் அவையோரையும் பார்த்து கேட்டார் சுஜாதா.

நான் வாசிக்கவில்லை. ஆனால் தோழர் பார்த்தீபன் வாசித்திருந்தார். அவர் அக்கதை மிக அழகான ஒன்று. எளிதில் புரிந்து கொள்வது போல் எழுத விரும்பாத ஆசிரியர் அதை அப்படி குறியீடுகளால் சொல்ல வருகிறார். அதை உள்வாங்கி வாசித்தால் மிக உவப்பான அனுபவத்தைத் தரும் என்றார்.

இப்படி எழுதின புலியூர் முருகேசன் பற்றி அறிய வலை போட்டவருக்கு புலியூர் முருகேசனின் வரலாறு சிக்கியிருந்திருக்கிறது.

அவருடைய, ‘ பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு ‘ கதை, அவருக்கு கிட்டிய அவமானங்கள், துன்பங்கள், அவருக்கு கிட்டிய பேராதரவுகள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கிறார்.

இறுதியாக பேச வந்தவர் டோட்டோ என்கிற விஸ்வநாதன். நீண்ட விவாதங்களால் அவருக்கு பேச பத்து நிமிடங்களே இருந்தன. தீராநதி இதழில் இருந்து பேசவந்தார்.

பேச ஆரம்பிக்கும் முன் தனக்கும் கன்னிமாரா நூலகத்திற்குமிடையேயான சுவையான மலரும் நினைவுகளைப் பார்த்து மகிழ்ந்தார்.

ஆர்.அபிலாஷ் எழுதிய ஒரு சிறுகதையையும், லங்காவி என்று ஒரு கதையை எழுதியிருந்த ஆஸ்திரேலிய வாழ் தமிழ் எழுத்தாளர் கதையையும் சுருங்கச் சொன்னார். இரு கதை நடைகளுமே தனக்கு வாசிப்புச் சிக்கலைத் தந்ததாக வருந்தினார்.

அபிலாஷ் எப்பவுமே இப்படித்தானா ? இப்படித்தான் எப்பவுமேவா என பரிதாபமாக அவையோரைப் பார்த்து கேட்டார்.

அவர் யுவபுரஷ்கார் விருது வாங்கியவர். பல நல்ல கதைகளையும் தந்துள்ளார் என தேற்றினர் பார்வையாளர்கள்.

ஆஸ்திரேலிய எழுத்தாளர் எவ்வளவோ சொல்லியிருக்கலாம். ஆனால் அவரும் டெம்ப்ளேட் புலம் பெயர் வலிகள், சாதி, பொறுப்பற்ற பசங்க எனப்படுத்தி எடுத்துவிட்டார் என்று முடித்தார்.

கதைகள் சொன்ன ஐந்து பேருக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கினர் கன்னிமாரா வாசக வட்ட நண்பர்கள்.

இவ்வாறக மேலும் ஒரு மகிழ்ச்சியான தருணங்களைப் பரிசாகத் தந்தது கன்னிமாரா சிற்றரங்கம்.

நன்றி.

ராஜ ராஜேந்திரன்

321total visits,1visits today