“ஒழிவுதிவசத்தே களி” – மலையாள பட விமர்சனம்

0
150

“ஒழிவுதிவசத்தே களி” – நல்ல சினிமாவின் மற்றுமோர் அடையாளம்.

வெகுநாட்களாகப் பார்க்க வேண்டுமென நினைத்திருந்து சமீபத்தில்தான் பார்க்க முடிந்த திரைப்படம் ‘ஒழிவுதிவசத்தே களி’ (An Off-Day Game, ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு). எழுத்தாளர் ஆர்.உண்ணியின் சிறுகதையை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் பல சர்வதேச அங்கீகாரங்களையும், கேரள அரசின் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேர்தல் நாளின் விடுமுறையில் ஐந்து நண்பர்கள் (வாக்களிக்காமல்) ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விடுதி ஒன்றில் விடுமுறையைக் குடித்துக் களிக்க விரும்புகிறார்கள். அப்போது அங்கு நடந்தேறுகிற நிகழ்வுகளும் விவாதங்களுமே மொத்தத் திரைப்படத்தின் கதைக்களம். மிக எளிதான கதைக்களம், அதில் மிக இயல்பான உரையாடல்களின் வாயிலாக ஆழ்மன வக்கிரத்தால் தலைதூக்கும் சாதி வன்மம், வர்க்கபேதம், ஆணாதிக்கம் போன்ற பல உள்ளுணர்வுகள் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

(ஒரு குறிப்புக்காக: பிரதான கதாபாத்திரங்களான ஐந்து கதாபத்திரங்களில் நான்கு கதாபாத்திரங்கள் மேல்சாதி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், தாசன் என்கிற கதாபாத்திரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர உணவு சமைத்துத் தரும் கீதா எனும் நடுத்தரவயது பெண்ணும் விடுதியின் காவலாளியும் உடன் இருக்கிறார்கள். இவர்கள்தான் மொத்தக் களியையும் ஆட்டுவிப்பவர்கள் அல்லது அந்தக் களியால் ஆட்டுவிக்கப்படுபவர்கள்.)

ஆரம்பம் முதல் கடைசிவரைக் குடித்துச் சலித்து இறுதியாக ராஜா ராணி போன்ற பால்ய விளையாட்டொன்றை விளையாட முடிவெடுக்கிறார்கள் நண்பர்கள். இந்த விளையாட்டு கொஞ்சமும் எதிர்பாராத வகையில் என்னவாக முடிகிறது என்பதே நம் மனதை உலுக்கும் இறுதிக்காட்சி. இதன் மூலமாக நமது சமூகக் கட்டமைப்பு, அதிகாரத்தின் அத்துமீறல்கள், நீதியமைப்பு, சனநாயக அரசியலமைப்பின் ஓட்டைகள் அனைத்தும் பகடியாகச் செவியில் அறைந்து சொல்லப்படுகிறது.

படத்தில் மொத்தம் 70 ஷாட்கள், இதில் பிற்பாதியில் மிக நீண்ட “53 நிமிடங்கள்” கொண்ட ஷாட்டில் கேமாரா நம்முடைய கண்களாகவே கதாபாத்திரங்களைப் பின்தொடர்கிறது. திட்ட வடிவிலான திரைக்கதையுடன் படத்தைத் தொடங்கவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள் (No fromal screenplay). மேலும் பின்னணி இசையும் கூட மிகக் குறைந்த நிமிடங்களைத் தவிர பயன்படுத்தப்படவில்லை. மழையின் சாரல், பறவையின் கிறீச்சிடல்கள், நீரில் விழும் துளிகள், குமிழ்கள் போன்ற இயற்கையின் சப்தங்களே இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவையெதுவும் திட்டமிட்டுச் செய்தது போல் தெரியவில்லை ஆனால் இவையெல்லாமும் சேர்ந்துதான் ஒரு புதுவிதமான திரைமொழியின் பிரமிப்பையும் த்ரில்லர் படத்துக்கான விளைவையும் ஒருங்கே தருகின்றன என நினைக்கிறேன்.

படத்தின் மற்றொரு சிறப்புக்காரணியாக நான் கருதுவது கதாபாத்திர வடிவமைப்பும், அவைகளின் நம்பகத்தன்மையும். உலவும் கதாபாத்திரங்கள் அத்தனையும் அப்படியே நம்மைத் திரையில் பிரதிபலிக்கின்றன. தன் கூட்டத்தில் இருக்கும் சக நண்பனிடம் எந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் வன்முறையைக் கட்டு அவிழ்க்கிற இந்தக் குணவியல்புதான் நடைமுறையில்.. தன்னை முன்னேறிச் செல்லும் நண்பனை அவன் சாதிப்பெயரைப் பழித்துக் கீழ்மைப் படுத்தச் சொல்கிறது.. ஒரே இரவில் நாயக்கன்கொட்டாய் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தச் சொல்கிறது. அதுதான் மேலும் கீழ்சாதிப் பையனை விரும்பிவிட்ட ஒரே காரணத்தால் பெற்ற மகவென்றும் பாராமல் குரல்வளையை அறுத்து ஆணவக்கொலைச் செய்யவும் தூண்டுகிறது.

ஒரு காட்சியில் தர்மன் என்கிற கதாபாத்திரம் தாசனை அவன் கருப்பு நிறத்தைச் சுட்டிகாட்டித் தொடர்ந்து கேலி செய்கிறான். ஒருகட்டத்தில் மனவேதனைத் தாளாமல் தாசன் நாற்காலியிலிருந்து எழுந்து மேசையில் கையை ஊன்றியபடியே கீழ்கண்ட கவிதையை தலைகவிழ்ந்தபடி வாசிக்கிறான்.

When I born, I black.
When I grow up, I black.
When I go in sun, I black.
When I scared, I black.
When I sick, I black.
And when I die, I still black.

And you white people.

When you born, you pink.
When you grow up, you white.
When you go in sun, you red.
When you cold, you blue.
When you scared, you yellow.
When you sick, you green
When you die, you grey…
And you calling me colored?

நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிற இக்கவிதைக்கு மற்ற நால்வரும் ஒன்றும் பேசாமல் நமட்டுச் சிரிப்புடன் ஒவ்வொருவராக அறையைவிட்டு வெளியேறுகிறார்கள். திடீரென அங்கு நிலவும் இந்த அசாதாரண சூழலுக்குத் தான்தான் காரணியோ என்கிற குற்றவுணர்வில் அனைவரிடமும் தோழமையுடன் மன்னிப்புக்கோருகிறான் தாசன். இவ்வாறு இந்தக் காட்சி நிறைவு பெறுகிறது.

ஆக அடிமைத்தனத்தின் கொடுமையைத் தொடர்ந்து அனுபவிக்கும் ஒருவன் தனது குறைந்தபட்சத் தார்மீக உரிமைக்காகக் குரல்கொடுக்கிற போதும் அவனைக் கேலிக்குள்ளாக்குவதும், உச்சமாக அவனையே குற்றவுணர்விற்கு ஆளாக்கிவிடுகிற மனப்பான்மைக்குப் பழக்கிவிட்டதும்தான் நம் சமூகச் சாதிய படிநிலைகளின் ஆகச்சிறந்த வெற்றி. (அங்குத் தலைகவிழ்ந்தபடியே அந்தக் கவிதையை வாசிக்கும் தாசன் நீங்களோ நானோ அன்றி வேறு யார்?)

இப்படி ஒவ்வொரு காட்சியும் தீவிர மனவெழுச்சியையும் நிலைகொள்ளாத தீவிர சிந்தனையோட்டத்தையும் தருகின்றன என்றால் அது மிகையில்லை.

ஒரு விடுதி, விடுதியின் அறை, ஐந்து கதாபாத்திரங்கள்…. கூட கொஞ்ச பணம் (பட்ஜெட் இருபது இலட்சம் எனச் சொல்கிறது விக்கிபீடியா) இவைகளைக் கொண்டு ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லரை மனதை உலுக்குகிற வகையில் எடுக்க முடியுமா? ஆம் என்று சாதித்துக்காட்டியிருக்கிற படக்குழுவினரை மனதாரப் பாராட்டத் தோன்றுகிறது. நல்ல சினிமாவை விரும்பும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டியத் திரைப்படம். படக்குழுவினருக்கு இன்னுமொருமுறை வாழ்த்துச் சொல்வதுடன் நண்பர்களுக்குப் பெரிதும் பரிந்துரைக்கிறேன்.

Directed by : Sanal Kumar Sasidharan
Screenplay by : No formal screenplay
Based on Ozhivudivasathe Kali by Unni R.
Music by Basil Joseph
Cinematography Indrajith S.
Edited by Appu N. Bhattathiri

“ஒழிவுதிவசத்தே களி”

1. படத்தின் ஆரம்பக் காட்சிகள் கதாபாத்திரங்கள் முகங்கள்கூட தெளிவில்லாத வகையில் கேண்டிட் ஷாட்களாகவும், குறியீடுகளுடனும் நகர்வதால் ஒருவித அயர்ச்சியைத் தருகின்றன என்பதை குறையாகச் சொல்லலாம்தான் (இதுமாதிரியான திரைமொழி நமக்குப் புதிது என்பதாலும் இருக்கலாம்). ஆனால் படம் முடிந்து இதனை யோசித்துப் பார்த்தால் வெறும் அற்பக் காரணிகளாகத் தோன்றுகிறன. தவிரவும் இவைகள் படத்திற்கு ஒருவகையில் நிறைகளாகவே இருக்கின்றன.

2. படத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கவிதை, ஆப்பிரிக்கக் குழந்தை ஒன்றால் எழுதப்பட்டது. இது UN-ஆல் 2006-ம் ஆண்டிற்கான சிறந்தக் கவிதைக்காக நாமினேட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (தகவல் இணையத்திலிருந்து, விவரமறிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்)

3. திரைப்படத்தின் தொழில்நுட்பத் தகவல்கள் விக்கிபீடியாவிலிருந்து.

671total visits.