ஆராத்யாவின் அப்பாவாகிய நான் -2

0
70
இரண்டொரு முறை காரில் வரும்போது என்னிடம் கேட்டிருக்கிறாள். “ஏம்ப்பா நம்ம அபார்ட்மண்ட் செக்யூரிட்டி அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்ற? சாப்டிங்களான்னு ஏன் கேக்கற?”
“நமக்கு கேட்டை திறந்து விடனும்னு, உடனே எழுந்து வந்து சல்யூட் வைச்சு சிரிக்கறாங்களே கண்ணா, நாம அதுக்கு பதில் மரியாதை செய்யவேண்டாமா?” அதுபோக, வயதான காலத்துலயும் வீட்டை விட்டுட்டு வந்து வேலை பாக்கறவங்கள்ட்ட, சாப்டிங்களான்னு கேட்டா, அவங்க வீட்ல இருக்கறாப்ல நினைச்சுப்பாங்கதானே? “எப்போதோ ஒரு முறை கூறியிருக்கிறேன் அவளிடம்..
“எதுக்குப்பா, சர்வர்கிட்ட சாப்பாடு நல்லாருக்குன்னு சொல்லிட்டு பைசா கொடுக்கற?”
கண்ணா, சர்வரோட வேலை நமக்கு சாப்பாடு பரிமாறனும், அவ்வளவு தான். ஆனா அவரு அதை சிரிச்சுட்டே  செய்யறாருல்ல? உனக்கு children’s seat எடுத்துக் கொடுக்கறார். நாம உக்காந்துட்டிருக்கோம், ஆனா அவரோ நின்னுட்டே பரிமாறிட்டுருக்கார் பாரேன். டயர்டாகாம, எவ்வளவு முறை கேட்டாலும் மெனு தர்றாரு. ஒரு வார்த்தை தேங்க்ஸ்னு சொல்லி முடிக்கலாமா? சாப்பாடு நல்லாருக்குப்பான்னு சொன்னா, பாரு எவ்வளவு சந்தோஷப்படுறார் பாத்தியா” என்றேன். கண்களை விரித்து பூரிப்புடன் “ஆமாம்பா” என்றாள்
இது எல்லாமே, அவ்வப்போது சொல்லிவிட்டு மறந்திருக்கிறேன். இன்று காலை, அவளுடன் ATM சென்றிருந்தேன். பணம் எடுத்துவிட்டுத் திரும்பியபோது, வாசலில் இருந்த வயது முதிர்ந்த செக்யூரிட்டியிடம், “சாப்டிங்களா அங்கிள்” என்று வாய்மலரக் கேட்டவள்.. “தேங்க்ஸ் அங்கிள்” எனக்கூறி நகர்ந்தாள். உடனே எழுந்து வந்தவர் , அவளின் கன்னங்களைத் தொட்டு “சாப்டேன் பாப்பா.. நீங்க சாப்டிங்களா” என்று கேட்டுவிட்டு, கார் வரை வந்தவர், ஒரு நிறைந்த பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தார்.
காரில் ஏறியவள் கடிந்து கொண்டாள்.
“போப்பா, நீ அவரை சாப்டிங்களான்னே கேக்கலை”..சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினேன்..
இட்ட விதைகள் விருட்சங்களாகத் தொடங்கிய பூரிப்புடன்
ஆரத்யாவின் அப்பாவாகிய நான் குரு.
முந்தைய பதிவினை வாசிக்க கீழே இருக்கும் சுட்டியை சொடுக்கவும்.

384total visits.