அத்தா….

0
18
திருப்பத்தூரில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மன உந்துதல் நிகழ்வு ! 2500 மாணவர்கள் திரண்டிருந்தார்கள்.
பாடங்களைப் பற்றிய முக்கியத் தகவல்களைச் சொல்ல ஆசிரியர்களும், படித்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதை எடுத்துச்சொல்ல நானும் கலந்துகொண்டோம்.
நான் பேசும்போது கல்வி மட்டுமல்ல!! நம் நடத்தையும், செயல்பாடுகளும், மனித உறவுகளும், பெற்றோரை மதித்தலும் சேர்த்துத்தான் நம்மை உயர்த்தும் என்று
பேசிக்கொண்டிருந்தேன். தாய், தந்தையின் அருமை பற்றி சில நிமிடங்கள் சொல்லி முடித்தபிறகு..
ஒரு மாணவன் எழுந்து பேசத்துவங்கினான்.
‘சார்! எங்க அப்பா பெயிண்டர் வேலை பாக்குறாரு ! அவர் என்னைத் திட்டும்போதெல்லாம்,
“படிச்சிருடா! இல்லைன்னா என்னை மாதிரி செரமப்படணும்” னு சொல்லுவாரு! ஆனா எனக்கு பெயிண்டர் வேலைல என்ன சிரமப்பட்டுற முடியும்னு தோணும்! ஜாலியா போறாரு! சாயந்திரம் வந்திர்றாரு ! செமயா சம்பாதிக்கிறாரு! இதெல்லாம் கஷ்டமா? சும்மா சொல்றாருன்னு நினைச்சிக்குவேன்.
நேத்து எங்க வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சோம்.! நானும் அரை மணி நேரம் ஒரு சுவர்ல கொஞ்சமா அடிச்சுப்பாத்தேன். ராத்திரி கையெல்லாம் ரொம்ப வலிச்சிச்சு ! எதுக்கு வலிக்குதுன்னு தெரியல! அப்புறந்தான் பெயிண்ட் அடிச்சதால வலிச்சிருக்கும்னு தெரிஞ்சிச்சு! அதைப் பெருசா கண்டுக்காம இங்க வந்திட்டேன்.
இப்ப நீங்க அப்பா பத்தி சொன்னதும். அரைமணி நேரம் சுண்ணாம்பு அடிச்சதுக்கே இப்படி வலிக்குதே! எங்க அப்பாவும் இப்படித் தானே தினமும் வேலை பாத்திட்டு வந்திருப்பாரு! அவருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு நினைச்சேன். அவர் கஸ்டத்தைப் புரிஞ்சிக்காம இருந்திருக்கேன்னு நினைச்சு அழுகையா வந்திருச்சு ! இனிமே அவருக்காகவாவது நல்லா படிப்பேன். அவரையும் இனிமே மதிப்பேன்’ என்று சொல்லி அழுது எல்லோரையும் கலங்க வைத்தான்.
கிளம்பும் போது ஓடிவந்து என் அலைபேசி எண் கேட்டு வாங்கிக் கொண்டான்.
அன்று இரவு ஒரு அழைப்பு…!!!!
”சார்! நான் யாசின் பேசுறேன். மேடைல அப்பா பத்தி பேசினேனே?”
”தெரியுது…சொல்லுப்பா”
”எங்க அத்தா பேசணுமாம்” குடுக்குறேன்.
”ஒரு நடுங்கும் குரல்… அத்தா”
”சொல்லுங்க”
“எம் மவன்கிட்ட என்ன சொன்னீங்கன்னு தெரியல. ஆனா வீட்டுக்கு வந்ததும் 15 வயசுப்பய என்னைக் கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுவுறான். என்னை மன்னிச்சிக்க.. நீ சொல்றதெல்லாம் கேப்பேன். ஒழுங்கா படிக்கிறேன். உன் கஸ்டம் எனக்குப் புரியுது. நான் நல்லா படிச்சு உன்னை வச்சு காப்பாத்துவேங்கிறான். என்னன்னு கேட்டா.. நீங்க பேசினீங்கன்னான். நீங்க சொன்னதெல்லாம் சொன்னான். ரொம்ப தெம்பு வந்திருச்சு அத்தா. நீங்க யாரோ எவரோ தெரியல. நல்லா இருங்கத்தா…. எனக்காக இல்லைன்னாலும், நீங்க சொன்ன சொல்லுக்கு இந்தப்பய நல்லா படிச்சிருவாம்போல. ரொம்ப சந்தோசமா இருக்குத்தா!” என்று வெள்ளந்தியாக வாழ்த்திக்கொண்டே சென்றார்.”
”அத்தனை பயண அலுப்பையும் அந்த அன்பு என்ற தைலம் நீக்கிவிட்டது”
இதை விட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும் ?
சுரேகா சுந்தர்

165total visits,1visits today