பாலாவின் ரசனையும் ரசிகனும்

0
94

அக்னி நட்சத்திரம், நாயகன், மகாநதி இன்னும் நிறைய படங்களில் அந்த வார்த்தையை பேசி இருக்கிறார்கள். ஏன் நீங்கள், நான் இன்னும் பலரும் பயன்படுத்தி இருக்கிறோம்தான். ஒரு சராசரி சென்னை நாளின் டிராபிக்கில் வாகனப்புகையை விட அதிகம் காற்றில் கலப்பது அந்த வார்த்தைதான்.

போகட்டும்.

இங்கு பிரச்சினை என்பது ஒன்றுதான். முழு டீசரில் வேறெங்கும் எந்த வசனமும் இல்லாமல், ஒரே ஒரு வசனமாக வருகிறதே, அதுதான் சிக்கல். அதை வசனமாக வைப்பதற்கு பின் இருக்கும் மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கும்?

பெண்ணின் மார்பு, இடுப்பு என காட்டி பார்ப்பவரை ஈர்க்க முனையும் டீசருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு கெட்ட வார்த்தையின் வழி நெகட்டிவ் பப்ளிசிட்டியையாவது உருவாக்கி கவனத்தை ஈர்க்க முனைவது என்ன பாணி? தெருக்களில் துணியை அவிழ்த்துப்போட்டு நிற்கும் கிறுக்கனின் பாணி.

பாலாவின் பாணி நமக்கு ஒன்றும் புதுசு அல்ல. அவரின் படங்கள் எத்தனை இழிவானவை, அருவருப்பானவை என்பதையெல்லாம் கண்டே வந்திருக்கிறோம். ஆரியத்தை தூக்கிப் பிடிக்கும் மற்றொரு முதுகெலும்பற்ற அடிவருடிதான். அதையெல்லாம் தாண்டி இங்கு நிகழ்ந்திருப்பது என்ன?

நாயகன் ஒரு குப்பத்தை சார்ந்தவர். பிறகு ஒரு காதல். அநேகமாக காதலிக்கப்படும் பெண் இறப்பார். ஏனெனில் பாலாவின் சிந்தை அவ்வளவுதான். இப்போது கேள்வி, போலீசாக வரும் ஜோதிகா எந்த கூட்டத்தை அந்த வார்த்தை கொண்டு சுட்டுகிறார் என்பதுதான். அக்யூஸ்ட்டுகளையா? அக்யூஸ்ட்டுகள் யார், குப்பத்தில் இருப்பவர்களா? குப்பத்தில் இருப்பவர்கள் யாராக இருப்பார்கள்?

அடுத்தது, ஒரு பெண்ணை வைத்து பெண்ணை திட்டுகிற வார்த்தையை சொல்ல வைத்திருக்கும் அந்த கயமை புத்தி. இந்த புத்தி பாலாவுக்கு ஏராளம் உண்டு.

பாலாவின் படங்களில் பெண் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் விதத்துக்கே பக்கம் பக்கமாக கழுவி ஊற்றலாம். அப்படி சித்தரிக்கும் பாணிக்கு பின் ஒரு மனநிலை இருக்கிறதல்லவா, அந்த மனநிலையை புரிந்துகொண்டு யோசித்துப்பாருங்கள். நாமெல்லாம் இந்த சமூகத்தில் இருந்து அகற்ற விரும்பும் அயோக்கியத்தனமான குயுக்தி நிறைந்த நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்க சிந்தனை அது.

ஓடாத, பிற்போக்கான, கதை வறட்சி கொண்ட தோல்விப்படங்களை கொடுத்த எந்த ஒரு இயக்குநனும் கையாளக்கூடிய கீழ்த்தரமான உத்திதான் இது. எப்படியும் படத்தில் இந்த வசனம் வராது. ட்ரெயிலரிலேயே கூட வராது. சென்சாரில் வெட்டியெறியப்படும். எல்லாம் தெரிந்தும் சென்சார் பண்ணப்படாத டீசர் என்பதால் மட்டுமே அந்த வார்த்தையை வைத்து கவனத்தை ஈர்ப்பதெல்லாம் இழிவுக்கும் இழிவான நிலை.

பாலா ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் கதை கிடையாது. நீங்கள் போலி. வெறும் பாவனைக்காரர். சரியாக திரைக்கதை அமைக்கும் வக்கு கிடையாது. போதாதற்கு உங்கள் மனவக்கிரங்களை கதாபாத்திரங்களில் கொட்டும் நபர் நீங்கள். உண்மையில் உங்களுக்கு தேவை நீங்கள் கண்டுபிடித்த அந்த பாண்டி மடமே!

போன வாரம்தான் ஒரு படம் வந்தது. அதுவும் ஒரு பெண் அதிகாரியை பற்றிய படம்தான். அதை நாங்கள் கொண்டாடி கொண்டிருக்கிறோம். இப்போது நீங்கள் ஒரு படம் எடுத்து டீசர் வெளியிட்டிருக்கிறீர்கள். இதுவும் ஒரு பெண் அதிகாரியை பற்றிய படம்தான். உங்கள் படத்துக்கு குறிப்பிட்ட சாதியில் புழங்கும் பெயரை தலைப்பாக கூட சூட்டியிருக்கிறீர்கள்.

போன வாரம் ரிலீசான படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நீங்கள் எடுத்திருக்கும் இந்த லட்சணத்துக்கும் அந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம்தான் பெயர்.

அறம்!

-rajasangeethan John

434total visits,1visits today