புற்றுநோய் குணப்படுத்த முடியுமா?

0
27

அந்த வீட்டின் காலிங் பெல் இரண்டு முறை அடித்து விட்டு ஒய்ந்தது. உள்ளே வேலையாக இருந்த தீபா கையில் கிண்ணத்துடன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அவள் கண்வனுடன் சேர்ந்து மர வேலை செய்யும் சங்கர் அங்கு நின்றீருந்த கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு, கதவை திறந்தாள்.

வாங்க அண்ணே, நிறைய நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கிங்க. இப்ப தான் வர வழி தெரிஞ்சுதா ? வீட்டில் அண்ணி, குழந்தைகள் எல்லோரும் எப்படி இருக்காங்க ?

பையன் என்ன படிக்கிறான் ? ஒரு நாள் அவங்க எல்லோரையும் இங்கே வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க.

நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போறேன். இப்படி உட்காருங்க அண்ணே. நான் உள்ளே போய் குடிக்க ஏதாச்சும் குடிக்க கொண்டு வருகிறேன்.

அதெல்லாம் வேண்டாம்மா. நான் இப்பத் தான் சாப்பிட்டு வாரேன். நான் கடந்த ஒரு மாசமா எந்த வேலைக்கு உன் வீட்டுக்காரரை கூப்பிட்டாலும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிச்சுடுறான். அது தான் என்ன ஏது சொல்லி பார்த்துட்டு போகலாம் நினைச்சு வந்தேன். ஆமா … அவனுக்கு என்ன ஆச்சு?

சுரத்தே இல்லாம இருக்கிறான். நாலு கேள்வி கேட்டா ஒரு வார்த்தையில் திக்கி திணறி பதில் சொல்லுறான். பார்க்கிறதுக்கு ஆள் மெலிஞ்சு போய் இருக்கிறான். பேச்சும் தெளிவில்லாமல் இருக்கிறது. எப்பப் பார்த்தாலும் வாயில் அந்த பான் பராக் அடக்கி வைச்சுக்கிட்டே தெரியுறான். என்ன ஏதும் நீ கேட்கிறதில்லையா?

அப்படியா சொல்லுறீங்க அண்ணே

அவரு தான் இப்ப வேலை எதுவும் வருவதில்லை. நான் போய், வேறு ஏதாச்சும் ஆளுங்க கிட்ட வேலை இருக்கா கேட்டுட்டு வாரேன் சொல்லி தினமும் வெளியே போய்ட்டு இரவு லேட்டாத் தான் வருகிறார். வந்தாலும் எதும் முன்ன மாதிரி சாப்பிட மாட்டேங்கிறார். ஒரு மணி நேரம் ஆகுது சாப்பிட்டு முடிக்கிறத்துக்கு. சின்னக் குழந்தைக்கு சோறு செய்யுறா மாதிரி சோறு குழைச்சு வடிக்க சொல்லுறாறு. அதையும் அப்படியே சாப்பிடாம மோர் விட்டுக் கரைச்சு கஞ்சியாக் குடிக்கிறார். எதுவும் அவர் கிட்ட பேச முடியல. அதிகமாக கோபம் வருது. இரவில் படுத்த பின் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகின்றது. இருமல் தொடர்ந்து இளைப்பு வருகிறது. சளி துப்பிட்டா இருமல் நின்னுடும் நினைச்சுக்கிட்டு அடிக்கடி காறிக் கொண்டு துப்புறார். இருந்தாலும் சளி வரலை, கொஞ்சூண்டு சிவப்பாகத் தான் வந்தது. அப்புறம் கொஞ்சம் சூடாக மல்லிக்காபி வைச்சுக் கொடுத்தாத் தான் தொண்டை வலி குறைந்து இருமல் நிக்குது.

பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவரிடன் போய் காட்டி சளிக்கு மாத்திரை வாங்கிக்கொடுத்தேன். அந்த மாத்திரை கூட அப்படியே இருக்கு. கேட்டா அளவு பெரிதாக இருக்கிறது முழுங்க முடியல சொல்லுறார். தொண்டையில் சதா கட்டை போட்டு அழுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது சொல்லி பதில்சொல்லுறார்.

என்ன சொன்னாலும் ஏதாச்சும் ஒன்னு சொல்லி வாயை அடைச்சிடுறார். எனக்கும் என்ன பண்ணுறது தெரியல அண்ணே. நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணணும். அவர்கிட்ட கொஞ்சம் பேசி அடுத்து என்ன செய்யுறது சொல்லிட்டுப் போங்கண்ணே.

நான் அவன் கிட்ட கேட்டேன். ஒழுங்கா பதில் வரல. அது தான் உன்கிட்ட வந்து கேட்டேன். எனக்கு மனசுக்கு எதுவும் சரியாப் படல. இவனைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கணும். நீ சொல்லுறது வைச்சுப் பார்த்தா தொண்டையில் தான் பிரச்சினை மாதிரி தெரியுது. அங்கே கடை வீதியில் ஒரு காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் ஒருவர் இருக்கிறார். நாளைக்கு வேலைக்கு எங்கேயும் போகாம வீட்டில் இருக்கச் சொல்லு. அவர்கிட்ட கூட்டுட்டி போறேன். இப்ப கடைத் தெருவில் கொஞ்சம் வேலையிருக்கு. வாரேன் என்று சொல்லியவாறு படியில் இறங்கினார்.

மறு நாள், டேய் எப்படி இருக்கிற? சொல்லி முதுகில் ஒரு அடி விழுந்தது. ரஞ்சித் திடுக்கிட்டு திரும்பி பார்க்க சங்கர் ஒரு புன்முறுவல் பூத்தார்.

நல்லா இருக்கிறேன் என்று சொல்ல நினைத்த ரஞ்சித், வார்த்தைகள் வெளியில் வராமல் திணறிணான்.

நேத்து வீட்டுக்கு போயிருந்தேன். தங்கச்சி நிறைய கவலைப்படுது. என்ன நடக்குது ?

அண்ணே உங்ககிட்ட சொல்லுறதுக்கு என்ன, எப்பப் பார்த்தாலும் தொண்டையில் ஒரு வலி சுள்ளூனு பிடிச்சிக்கிட்டு இருக்கிறது. சோறு சாப்பிட்டா அடைச்சுக்கிறது. கீழே இறங்க மாட்டேங்கிறது. தண்ணீர் மட்டும் நல்லா இறங்குது. சாப்பாடு அளவே குறைஞ்சு போச்சு. முன்னால் மாதிரி வேலை செய்ய முடியல. அசதியா இருக்கிறது. அதையும் பொறுத்துக்கிட்டு வேலை செஞ்சா கை கால் எல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்கிறது. இதனால் வேலைக்கு போறத குறைச்சுக்கிட்டேன். உடம்பு எடையும் குறைஞ்சுக்கிட்டே வருது. இரண்டு மாசத்தில் ஆறு கிலோ குறைஞ்சுசிட்டது. என்ன பண்ணுறதுனு தெரியலணா ?

சரி விடு. பார்த்துக்கலாம். கடைவீதியில் ஒரு மருத்துவர் இருக்கிறார். வா அவர் கிட்ட போய் ஒரு காட்டிக்கிட்டு வரலாம்.

சரிங்கண்ணே.. இருங்க வண்டியெடுத்துக்கிட்டு வாரேன்.

இல்லைடா, நீ பலகீனமா இருக்கிற. என்கிட்ட அந்தச் சாவியக் கொடு. நான் ஓட்டுறேன்.

இருவரும் அருகில் உள்ள மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் என்ன செய்கிறது என்று வினவிய போது, சங்கர் மேற்கண்ட உரையாடலை விவரித்தார்.

இதைக் கேட்ட மருத்துவர், ரஞ்சித் பக்கத்தில் அமரச் சொல்லி பரிசோதனை செய்தார். அவர் கையில் ஒரு கட்டி தட்டுப் பட்டது.

இந்தக் கட்டி எப்ப இருந்து இருக்கிறது ?

ஒரு மாசமா டாக்டர். வலி எதுவும் இல்லை. அதனால் கவனிக்காமல் விட்டு விட்டேன்.

இல்லை. இந்தக் கட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது உள்ளே இருக்கின்ற அடைப்புக்கு தொடர்பு கொண்டதாக இருக்கலாம். பரிசோதனையில் தான் என்ன வகையான கட்டி என்பது தெரிய வரும்.

நீங்கள் சொல்லுவதை வைத்து பார்க்கும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டிருக்கிற மாதிரி தெரிகின்றது. அது எந்த வகையான அடைப்பு என்பதை பரிசோதனை செய்த பிறகே சொல்ல முடியும்.

எந்த மாதிரி பரிசோதனை டாக்டர் ?

தொண்டையில் உள்ளே ஒரு டியூப் உடன் கேமரா இணைத்து அதாவது எண்டோஸ்கோபி செய்து பார்க்க வேண்டும். இதன் மூலம், அடைப்பு ஏற்பட காரணம் ஏதாவது கட்டியிருந்தால், அதில் இருந்து கொஞ்சம் சதை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.

நிறைய வலி இருக்குமா டாக்டர் ?

இல்லை, வலி இல்லாமல் இருக்க மருந்து கொடுத்து தான் பண்ணுவாங்க. பரிசோதனை முடிந்த பின்னாடி வீட்டுக்குப் போயிடலாம். அப்படியே இதில் எழுதியுள்ள இரத்தம் டெஸ்ட், சிடி ஸ்கேன், மற்றும் கட்டியில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை எல்லாம் எடுத்துட்டு ரிப்போர்ட் கொண்டு வாங்க.

சரிங்க டாக்டர். இருவரும் வெளியே வந்தனர்.

மறு நாள் சாயந்திரம், பரிசோதனை முடிவுகளுடன், மருத்துவரை மீண்டும் சந்தித்தனர்.

மருத்துவர் அந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்து விட்டு, உங்களுக்கு தொண்டையில் அடைத்துக் கொண்டிருப்பது புற்று நோய்க் கட்டி, கழுத்திலும் பரவி இருக்கிறது என்று கூறினார்.

அதிர்ச்சியடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்.

சங்கர் கொஞ்சம் சுதாரித்து, டாக்டர் இதுக்கு ஏதாச்சும் வைத்தியம் இருக்கா? அறுவைச் சிகிச்சை செய்து கட்டியை எடுத்து விடலாமா ? என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர், இவருக்கு வந்து இருக்கும் கட்டிக்கு கரண்ட் அதாவது கதிரியக்கச் சிகிச்சை தான் செய்ய வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்ய இயலாது என்று கூறினார்.

சார், இதற்கு நிறைய செலவாகுமே ? என்று ரஞ்சித் கவலைப்பட்டார்.

அதற்கு மருத்துவர், அரசாங்க மருத்துவமனைகளில் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால், இலவசமாக செய்து கொள்ளலாம் என்று பதில் அளித்தார்.

இதனால் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமா?

முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிடின் ஐம்பது சதவிகிதம் பேர் அஞ்சு வருடத்தில் இறந்து விடுவார்கள். எனவே இதற்கு முறையான வைத்தியம் தொடர்ந்து பார்க்க வேண்டும். இடையில் நிறுத்தி விட்டால் மீண்டும் கட்டி வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை எப்படி முன்கூட்டியே அறிந்து கொள்வது?

தினமும் பல் விளக்கும் போது வாய் சுய பரிசோதனை செய்ய வேண்டும். வாயின் உட்புறம், நாக்கு, தொண்டையில் இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆறாத வாய்ப் புண்,கட்டி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்

எதனால் இந்த புற்று நோய்வருகின்றது ?

புகையிலை போடுதல் மிக முக்கியமான காரணி

பான்பராக், குட்கா, மாவா, வெத்திலைப் பாக்கு போடுதலும் இதில் அடக்கம்.

சிகரெட் குடித்தல், மது அருந்துதல், மூக்குப் பொடி போடுதல், அதிக அளவு பதப் படுத்தப்பட்ட உப்பு அதிகம் நிறைந்த உணவு உண்ணுதல், தூசி அதிகம் வரும் வேலையில் ஈடுபடுதல்.-மரத்தூள், டெக்ஸ்டைல், சிண்ட்தெடிக் பைபை பேக்டரி போன்றவற்றில் வேலையில் இருத்தல். இவைகளூம் புற்று நோய் உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

இதற்கான மருத்துவம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ?

நோய் பாதித்த இடம். பரவியிருக்கும் அளவு.

நோயாளியின் வயது, பொதுவான உடல் நிலை ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிகிச்சை முறை, கால அளவு ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றது.

நன்றி டாக்டர், நீங்கள் பரிந்துரைத்தப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள முழு சம்மதம் அளிக்கிறோம்.

சரி நீங்கள் குணமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மனம் தளராமல் சென்று வாருங்கள் என்று மருத்துவர் விடை அளித்தார்.

இந்தக் கட்டுரையின் மூலம் சொல்ல விளைவது

1. பான்பராக், குட்கா, வெத்திலைப் பாக்கு, புகையிலை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளுதல் போன்றவை தவிர்த்தல்.

2.இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆறாத புண், கழுத்தில் கட்டி, தொண்டை வலி, சாப்பாடு விழுங்குவதற்கு சிரமம், பசியின்மை,எடை குறைதல் உள்ளவர்கள் சீக்கிரம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

3.நோயைக் கண்டறிந்த பின் சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கு பின் உள்ள பரிசோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே.

  • டாக்டர் இராதா குமார் M.D., D.M

173total visits.