கம்யூனிசம் சாத்தியமா?

0
69

சமூக, அரசியல், பொருளாதார, கருத்து பொதுவுடமை சாத்தியமா? சமூகம் என்பது பண்பாடு சார்ந்தது. ஐந்து விரல் கொண்ட கை போல சமூகம் பலதார மக்களை கொண்ட கூட்டம் என்று சொல்லலாம். அரசியல் என்பது மக்கள் கூட்டம் முடிவெடுக்கும் குறிப்பாக வாழ, வழிநடத்த எடுக்கும் முறை. பொருளாதாரம் என்பது உற்பத்தி, பரிமாற்றம், சேவைகள், விநியோகத்தை கோர்க்கும் வழிமுறை. பேச்சு என்பதே மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு.

மனிதன் தன் எண்ணத்தை சொல்வதை கொண்டாடும் சுதந்திரமே கருத்தியல். விமர்சனம்  மூலமாக முரண்பாடுகளைத் தீர்த்து, புதியதோர் அடிப்படையில் புதியதான ஒற்றுமையை நிறுவ கருத்து தேவைப்படும். அப்படியான முறை இல்லாவிடில் மனிதன் ஆதி மனிதனாகவே இருந்திருப்பான். மனிதனுக்கு மனிதன் வேறுபட்டவனே, இங்கே தேவையானது அந்த வேறுபாட்டை புரிந்துக்கொள்ளும் புரிதல். இந்த புரிதல் மட்டுமே கம்யூனிசத்தை சாத்தியமாக்கும்.

மக்கள் வேறுபடுவது பிறப்பிலிருந்தே தொடக்கம் என்றால் எங்கே பொதுவுடைமையை நிலை நிறுத்த முடியும். கீழிருந்து மேலாக நம்மிலிருந்து என்று பின்னே போய்க்கொண்டிருந்தால் ஆதி ஆண் பெண்ணில் இருந்து வந்த ஃபிஷ்ஷன் (fission)கள் நாம் என்பது புரியுமாயின் பொதுவுடைமை சாத்தியம்.

கொள்கை சார்ந்த வாழ்வு முறை என்பது அதாவது எல்லோரும் சமம். எனக்கிருக்கும் சுகம் துக்கம், வலி, வேதனை, அவசியம், அவசரம் தான் எதிரே, பக்கம், முன்னே, இருக்கும் மனிதனுக்கும் சக உயிருக்கும் இருக்கும் என்ற புரிதல் வருமாயின் பொதுவுடைமை சாத்தியம்.

உணவு தேடல் மட்டுமே இருந்த ஆதிமனிதன் நிம்மதியுடன் இருந்தானோ என்னவோ. பணம் என்பது அவசியத்தை தாண்டி அத்தியாவசியமாகி போன காலத்தில் அதன் நோக்கம் மறைந்து உழைப்பை சாமர்த்தியம் வெல்லும் காலம் மாறி பசி என்பது எல்லா உயிருக்கும் உண்டு என்ற புரிதல் வருமாயின் பொதுவுடமை சாத்தியம்.

கம்யூனிசம் என்பது முதலாலித்துவம், ஏகாதிபத்தியம், இன்னபிற “யிசங்களை” எதிர்ப்பது அல்ல. அது வாழ்வியல் முறை. எறும்பை போல தேனீக்களை போல வாழும் வாழ்வு முறை. அதாவது சுயநலமில்லாம் தன் உழைப்பை சமூகத்திற்கு அர்பணிப்பது. எல்லோர் உழைப்பையும் கூட்டி அதன் பயன்களும் சமமாக கொண்டாடுவது. மனித மனம் இப்படி இருந்தால் பூலோகம் சொர்க்கலோகம் ஆகிவிடாதா?  சுயநலமில்லாத மக்கள் உருவாக வகுக்கப்பட்ட சித்தாந்தம் என்றும் சொல்லலாம் கம்யூனிச கோட்பாடுகளை.

உதாரணத்திற்கு நீயும் நானும் அம்பானியும் டாடாவும் ஒன்றே. நம் உழைப்புகள் அதன் லாபமும் சரிசமமாக பிரித்து கொண்டாடபடும் என்றதும் உள்ளுக்குள்ளே அம்பானி சொத்துக்கும் டாடாவின் சொத்தில் பங்குக்கு ஆசை வந்ததே அது தான் கம்யுனிசத்திற்கு தடை கல் அதே சமயம் அது தான் கம்யூனிசம் ஓங்குவதற்கு தூண்டுகோளும்.

இப்படி சொல்லலாமா வேலை பார்க்காமல் பொறுப்பில்லாமல் சுற்றி திரியும் உன் நண்பனும் நீயும் கூட ஒரே இடத்தில் வைக்கப்படுவீர்கள். எண்பது சதவிகிதம் உன் உழைப்பு இருபது சதவிகிதம் மட்டுமே நண்பனின் உழைப்பு ஆனால் அதன் பயன் இருவருக்கும் சமம் என்றால் உள்ளே குமையும் எரிச்சலே தூண்டுகோள். முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் உள்ள இடைவெளியும்  இதுவே. இருபது, எண்பது அவர் அவர் கணக்குகளில் மாறுபடுகிறது.

எல்லோரும் வேலை செய்ய, தகுதிக்கான வேலை கொடுக்கப்பட்டு, தேவை நிர்ணயிக்கப்பட்டு, அரசே தொழில் நடத்தும் அரசே வீடு , மருத்துவ வசதி என எல்லாமே பார்த்து கொள்ளும், முதலாளிகள் – தொழிலாளிகள் என்ற பேதம் ஒழியும், இதனால் ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை நீங்கும். சரி  எல்லோரும் ஒன்று தான். ஆனால் திறமைகேற்ப ஊதியம், உழைப்புகேற்ப ஊதியம் என்பதெல்லாம் அடிபட்டு போய், தேவைகேற்ப ஊதியம் என வந்து விடுவிட்டால்  ஊக்கத்துடன் உழைப்பவர்கள் முட்டாளாகி விடுவார்கள் அல்லவா  உழைப்பு மழுங்கி விடாதா? முன்னேற்றம் பாதிக்கப்படும் அல்லவோ? இப்படியான பொதுவுடமை ஒத்துவருமா என்ன? பொது நோக்கோடு, லாபம் கருதாமால் இதே போல் முழுமையாக உழைக்கும் சிலர் எப்போது இருப்பர். உண்மையான கம்யூனிஸ்டுகள் அவர்கள். ஆனால் அவர்கள் என்றும் மைனாரிட்டி தான்.

தன்னலம் மறந்து உழைத்து கொட்டும் தந்தைகள், ருசியான பண்டத்தை ருசிமட்டுமே பார்த்துவிட்டு வீட்டினர் சாப்பிட எடுத்துவைக்கும் தாய்மார்கள், தம்பிக்கு தங்கைக்கு என்று கனவுகளை துறந்து உழைக்கும் அண்ணன்கள் அக்காக்கள் எல்லாம் கம்ம்யூனிஸ்ட் தானே, கம்யூனிசம் கோட்பாட்டின்படி பார்த்தால். கம்யூனிசம் வெற்றி குறுகி ஒரு வட்டத்துள் அதாவது குடும்பம் வாழ்வுமுறையில் வேறுவிதமாக பரிணாமம் கொடுத்திருக்கிறதோ?

என் குடும்பம் நல்லாயிருந்தா நான் நல்லாயிருப்பேன் என்னும் தந்தைகள், அடுத்த தலைமுறை இன்னமும் நல்லாயிருக்க வேண்டி பொருள் சேர்க்க பாடுபடும் மனைவிகள், படித்து பட்டம் வாங்கி நாட்டை விட்டு பறக்கும் அடுத்த தலைமுறை என்றாகி போன நிலையில் கம்யூனிசமும் அதன் கோட்பாடுகளும் அதை பற்றிய எண்ணமும் நிலைகொள்வதே அதிசயமாகும். இதில் எங்கே பொதுவுடமை சாத்தியம்?

கார்ல் மார்க்ஸ் முந்தின பொருளாதார வல்லுநர்கள் பொருள் சம்மந்தபட்டதாக மட்டுமே பொருளாதாரத்தை பார்க்க அவர் மட்டும் அதை வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதாக பார்த்தார். உழைக்கும் வர்க்கத்தை பாட்டாளிகள் என்கிறார். பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன.

ஒரு பொருளில் அடங்கியுள்ள மனித உழைப்பே அந்தச் சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறது. கூலிக் கொடுக்கப்படுவது உழைப்புச் சக்திக்கு மட்டும் தானே தவிர உழைப்புக்கு அல்ல; இப்படிக் கொடுக்கப்படாமல் அபகரிக்கப்படும் கூலிதான் லாபம், வட்டி, வாடகை போன்றவற்றை உள்ளடக்கிய ‘மிகைமதிப்பு’ அல்லது ‘உபரிமதிப்பு” ஆகும் என்கிறார். உழைப்பும் அதன் பயனும் முதலாளி தொழிலாளி இருவருக்கும் சமம். லாபாத்தை சரிவிகிதத்தில் பிரித்தே ஆகவேண்டும். தன் உழைப்பின் முழு பலனையும் தான் அடைய வேண்டும் என்ற லாப நோக்கு தான் மனிதர்களை கடுமையாக உழைக்க வைக்கிறது என்பதை உணர்வதே கம்யூனிசம் தான். சுரண்டல் அற்ற புதிய சமுதாயத்தின் உயர்ந்த‌ வடிவமே கம்யூனிச சமுதாயமாகும் என்கிறது  மார்க்சியம்.

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரித்தான தனித் தன்மைகள் உண்டு. அதற்கெனத் தனியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் ஆகியவை உள்ளன. அவையெல்லாம் அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம், சமூகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை. இந்தியாவில் பொருளாதார நிலை அடிப்படையில் மட்டுமா வர்க்க பிரிவினை இருக்கு.  இல்லையே இங்கே பொருளாதார நிலையை தாண்டி சாதி மேலோங்கி நிற்கிறதே. பொருளாதாரத்தை விட மக்களின் சமூக நிலை, கல்வி நிலை, அதிகார நிலை சாதியை சார்ந்தே இருக்கிறது. இந்த புரிதலில் தான்  காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் ஜாதியை ஒழிக்க பாடுபட்டிருக்கின்றனர். ஜாதி மதவாதம் ஒழிந்தாலே இந்தியா வல்லரசாகி விடும். கம்யூனிசம் கோட்பாடெல்லாம் தேவையே இல்லை இங்கே.

ஜாதி மதம் பிரிவினை  ஒழியுமா? என்கிற கேள்வி மட்டும் தொக்கி நிற்காமல் போனால் இந்தியா சீராக வெற்றியை நோக்கி பயணிக்கிறது எனலாம்.

எறும்புகள், தேனீக்கள் போல் மனிதர்களை மாற்ற முடியும் என்பது சாத்தியமே இல்லை தான். ஏற்ற தாழ்வுகள் பார்க்கும் சமுதாயம் மாறினால் போதும். இந்த ஜாதிக்காரன் மேல்மட்டத்தில் இருக்கிறான், இந்த மதத்தவன் அவனக்கு ஏற்றார் போல் விதிகளை மாற்றுகிறான், இந்த மாநிலத்துக்காரன் அவன் ஆளுக்கு மட்டும் உதவுறான் என்பெதல்லாம் மறைய வேண்டுமாகின் மதசார்பற்ற எண்ணம் வேண்டும். நீ தமிழன், இந்தியன், ஏசியன், இந்த ஜாதிக்காரன், இந்த கடவுளை கும்பிடுபவன் என்பதெல்லாம் மறைந்து நீ இந்த பேரண்டத்தில் கோடான கோடி உயிர்களுக்கு மத்தியில் ஒரு உயிர் என்ற அடிப்படை புரியுமாகின் கம்யூனிசம் வாழ்வுமுறை சாத்தியம்.

கோல்நோக்கி வாழும் குடி என்கிறார் வள்ளுவர் வழிநடத்த வழிவகுக்க அரசன் என்பவன் பொதுவுடைமை புரிதலோடு இருந்தால் அதை தொடரும் மக்கள் பொதுவுடைமையை புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. மதத்தை உயர்த்திப்பிடிக்கும் அரசு, ஏன் இது என கேள்விகேட்டால் அவங்க செய்தப்போ கேள்வி கேட்டியா என்று திருப்பி கேட்டு மழுப்பும் அரசு, ஜாதியை பேசி பேசி சிறிதும் மறக்கவிடாமல் செய்யும் அரசியல் கட்சிகள், தப்பென்று தெரிந்தும் சுயநலமாக செயல்படும் அரசியல்வாதியும் அமைந்தது சாபம் என்றால் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் மனோபாவம் பரவலாக வேரூன்றிவிட்ட மக்களும் நம்ம தொகுதிக்கு எப்படினாலும் இவன் ரோடு போடமாட்டான் நம்மளே சேர்ந்து இவன் கொடுக்கும் காசில் போட்ருலாம் என்னும் மனோபாவத்தில் மக்கள் போக எங்கே அரசாட்சி எங்கே பொதுவுடைமை போகும்.

கம்யூனிசம் வெற்றி பெற வேண்டுமானால், அதிகார ஆசையும், தனித்துவ கோட்பாடும், பதவி மோகமும் அல்லாத கம்யூனிஸ்ட் பொதுவுடைமையை புரிந்தவர் கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிய வைத்து,  தேசிய அளவில் ஒத்த கருத்துக்களை கொண்ட இயக்கங்களை ஒன்றிணைத்து, வாரம் தோறும் நாடு முழுதும் கூட்டங்களை நடத்தி, மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான செயல்திட்டங்களை வகுத்து, நம்ப வைத்து, முழுமையாக ஏற்க வைக்க வேண்டும். சோவியத் ரஷ்யாவில் ஆரம்ப கால தலைமுறையினரின் மனோபாவம், பல பத்தாண்டுகள் கழித்து மாறியது. அதாவது அடுத்தத்தடுத்த தலைமுறையில் உண்மையான கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்தது. செம்புரட்சி நடந்த நாடுகள் அனைத்திலும் போக போக உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் கடும் துன்பம் அடைந்தனர். கூட்டுபண்ணைகளாக மாற்றிய ஆரம்ப வருடங்களில், விவசாய உற்பத்தி கடுமையாக குறைந்தது. பஞ்சம் உருவானது. சோவியத் ரஷ்யா இன்று இல்லை. லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவு கூறவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது கம்யூனிசம் என்கிற சித்தாந்தம் மட்டும் தான். தீர்வை கொண்டிருக்கும் கொள்கைகளை கொண்டது கம்யூனிச சித்தாந்தம் வீழ்ந்தது சித்தாந்ததால் அல்ல….. கம்யூனிஸ்டுகளால். புரியுமாகின் பொதுவுடமை சாத்தியம்.

-ஸ்வேதா சந்திரசேகரன்

283total visits.