போலீஸ் எனும் நண்பன்

  0
  32
   கடந்த ஏழு வருட பைக் ரைடிங் அனுபவத்தில் ஒரு முறைக் கூட எந்தவொரு போலீசாராலும் எனக்கு பயணத்தடை நிகழ்ந்ததில்லை. மாறாக இம்முறை திண்டுக்கல் சுங்கசாவடியில் வைத்து ஒரு நூறு ரூபாய் தாளுக்காக என்னை மடக்கினார் ஒரு நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர்.

  லஞ்சம் வாங்கிய போலீஸ் எப்படி
  நேர்மையானவராக இருக்கமுடியும்?!?!?! என்ற கேள்வி உங்கள் மனதினுள் முளைத்துவிட்டது என்பதற்காக நட்புன்னா என்ன நண்பன் என்றால் யார் என்று பாடமெடு்க்கும் சசிகுமார் போலவே நேர்மை என்றால் என்னவென்று பாடம் எல்லாம் நான் எடுக்க போவதில்லை.

  சிறுவயதில் அம்மாவோடு மீன் சந்தைக்கு அடிக்கடி போவேன். மீன்சந்தையில் வியாபாரி கூறு பத்து ரூவா என்று சொல்லும் போது என் அம்மா அதை மூன்று ரூபாய்க்கு கேட்பார். சில நிமிடங்கள் தொண்டையில் தண்ணீர் வற்றிப் போகும்வரை மிகவும் காரசாரமாக பேரம் நடக்கும், இறுதியில் அம்மா ஐந்து ரூபாய்க்கு ஏறி வருவார், அதே நேரம் விற்பவரோ ஏழு ரூபாய்க்கு இறங்கியிருப்பார். இப்பொழுது இருவருமே சோர்ந்திருப்பார்கள். அடுத்ததாக அம்மாவிடமிருந்து பிரம்மாஸ்திரம் செலுத்தபடும். “அஞ்சு ரூபாக்கு தந்தேன்னா வாங்கிக்கிறேன் இல்லேன்னா வேற கடையில பார்த்துக்குறேன்” அங்கிருந்தும் அதே சூடோடு பதில் வரும் “கட்டுபடியாகாது நீங்க வேற கடையை பார்த்துக்கோங்க”. மறுமொழி ஏதும் பேசாமல் “உன் கடை மீனை நீயே வச்சுக்கோ” என்றபடி நகர்ந்து நாலு கடை தாண்டும் முன் கடைக்காரர் அழைப்பார், “அம்மா ஆறு ரூவா தந்துட்டு எடுத்துட்டு போங்க” என்று, இப்பொழுது மீண்டும் பேரம் துவங்கும், “அஞ்சு ரூபாய்க்கு மேல அஞ்சு பைசா தரமாட்டேன்” இப்பொழுது அம்மாவின் குரலில் ஒரு அதிகாரம் தெரியும். “சரி சரி எடுத்துட்டு போங்கம்மா” என்று கடைக்காரர் பணிந்துவிடுவார். மீனை வாங்கிவிட்டு நடந்து வரும்பொழுது அம்மாவிடம் கேட்பேன், “பாவம் அவங்க, ஆறு ரூவா கொடுத்து வாங்கினா தான் என்னம்மா”
  ” உனக்கொண்ணும் தெரியாது பேசாம வா” என்று என் வாயை அடைத்துவிடுவார்.

  முதன்முறையாக சென்னை பாண்டி பஜாரில் தங்கை ஒருத்திக்காக டெடி பியர் பொம்மை வாங்க செல்கையில், பேரம் பேசியாக வேண்டிய சூழ்நிலையில், நிமிடத்திற்கும் குறைவான நேரமே பேசினேன். அதிர்ந்தோ, குரல் உயர்த்தியோ பேச தெரியாத எனக்கு இந்த மாதிரி பேரம் பேசுவது ஒத்துவராது என்று தெரிந்துவிட்டது. அதனால் என்னுடையே பேரத்தை வேறு மாதிரி அமைத்துக் கொண்டேன். பேச்சை நிறுத்திவிட்டு பர்சிலிருந்து இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து அவன் முன்னால் வைத்தேன். “எனக்கு இந்த பொம்மை வேணும். கைல இருநூறு ரூபா தான் இருக்கு. சரின்னா இந்த பணத்தை நீங்க எடுத்துக்கோங்க, அந்த பொம்மையை நான் எடுத்துக்கறேன். ஒத்துவராதுன்ன விட்டுடுங்க நான் வேற கடையில பார்த்துக்கிறேன்” என்று அடித்தொண்டைக் குரலில் சற்று நிறுத்தி நிதானமாக அழுத்தமாக சொன்னதும், அந்த கடைக்காரர் மறுபேச்சு எதுவுமே பேசாமல் அவர் முன்னிருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களையும் எடுத்து கண்ணில் ஒற்றி தன் கல்லாபெட்டியில் போட்டுவிட்டு, அவர் நானூறு ரூபாய் என்று விலை வைத்திருந்த அந்த டெடிபியரை என் கையில் கொடுத்துவிட்டார். இங்கே யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இருவருக்குமே நேரமும் மிச்சம், தொண்டைத் தண்ணீரும் மிச்சம்.

  சரி பேரம் பேசும் அனுபவத்தை நிறுத்திவிட்டு திண்டுக்கல் அனுபவத்திற்கு வருகிறேன்.

  திண்டுக்கல் சுங்கசாவடியில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான லேனில் நின்றுக் கொண்டு அந்த பாதையைக் கடக்கும் அத்தனை இருசக்கரங்களையும் மறித்து, ஹெல்மெட் துவங்கி வண்டி பேப்பர் வரை சரிபார்த்துக் கொண்டிருந்தவரின் முன்னால் கையில் பைக்கிற்கான தஸ்தாவேஜுக்களோடு ஃபுல் ரைடிங் சூட்டில் நின்றுக் கொண்டிருந்த என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, கனிவாக “தம்பி என்ன பண்றீங்க” என்றார். பதில் சொன்னேன். “கண்டிப்பா பேப்பர் எல்லாமே பக்காவா தான் வச்சிருப்பீங்க. ஒரு நூறு ரூபா மட்டும் அந்த போலீஸ்கிட்ட கொடுத்துட்டு போங்க” என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக, “ஏன் தம்பி ஹெல்மெட் போட்டிருக்கீங்க தான” என்று சந்தேகத்தோடு கேட்டவரை கிண்டலாக ஒரு பார்வைப் பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்த அவரும், மெலிதாக சிரித்தபடியே, “ஐயா ஸ்டேஷன்ல இருந்து வரசொல்றாங்க” என்று குரல் கொடுத்த ஏட்டிற்கு செவி கொடுக்காமல் “எந்த வண்டி உங்களது” என்று அங்கே வரிசையாக நின்றுக் கொண்டிருந்த வண்டிகளைப் பார்ததுக் கொண்டே கேட்டவரிடம் “அந்த கறுப்பு வண்டி தான் என்னோடது” என்றேன். என் தோழியின் அருகில் வந்து நின்றவர், என்ன வண்டி, என்ன சிசி,
  இதன் அதிவேகம் என்ன, இதில் என்னுடைய அதிகபட்ச வேகம் என்ன, எங்கிருந்து வருகிறேன், எங்கே சென்றுக் கொண்டிருக்கிறேன், ஊர் போய் சேர உத்தேசமாய் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வேன் என்று பல கேள்விகளைக் கேட்டுவிட்டு. “இந்த ஸ்டேஷன்ல தான் நான் இருக்கிறேன், இந்த பக்கம் வரப்ப உங்களுக்கு என்ன ஒரு அவசியம்னாலும் வந்து பாருங்க தம்பி” என்று சொல்லிவிட்டு வாக்கிடாக்கியில் வந்த அவசர அழைப்பை ஏற்று சென்றுவிட்டார்.

  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உடையிலும் சரி, பேச்சிலும் சரி அவர் எந்தவொரு இடத்திலும் தன்னை ஒரு போலீஸ்காரராக காட்டிக்கொள்ளவே இல்லை என்பது தான்.


  Never quit. winners never quit, quitters never wins…
  -வஸ்தோ

  234total visits.