இடுகாட்டில் புதைக்கப்படும் புத்தகங்கள்

0
62
உயிர்மை பதிப்பகம் 7.2.2016 அன்று வெளியிட்ட எழுத்தாளர் திருமதி. தமிழச்சி தங்க பாண்டியனின் “அவளுக்கு வெயில் என்று பெயர், பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை” என்ற  இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
அவர் பேசிய உரையின் வரி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி துவங்குதற்கு முன்பாக மூன்றாம் அங்கத்தினர் மிகவும் நெகிழ்ச்சியாக அரங்கேற்றிய பாலச்சந்திரனின் கதை மற்றும் தமிழ்ச் சமூகத்தின் கதையை நினைவு கூர்ந்த மனுஷ்யபுத்திரன், பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த தருணத்தில் அவர் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டு “இதை இந்தத் தலைமுறையின் நியாபகத்தில் மட்டுமல்ல, என்றென்றைக்குமாக வருங்காலத்தில் பிறக்கக்கூடிய தமிழ் குழந்தைகளின் ஜீன்களில் பாலச்சந்திரன் பற்றிய நினைவுகள் இருக்கும். நாங்கள் ஒரு நாளும் இந்த ரத்தக்கறையை மறக்க மாட்டோம்.” என்று எழுதியிருந்தாகச் சொன்னார்.
மீண்டும் இந்த நூலில்  தமிழச்சியின் சொற்களைப் பார்க்கும்போது மனம் சொல்லுணாத் துயரத்தில் ஆழ்ந்ததாகவும், வலியையும் சந்தித்ததாகக் குறிப்பிட்டார். இந்தக் கதையை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப கேட்க வேண்டும். இந்தக் கண்ணீரை நாம் மறக்கக் கூடாது. இந்த ரத்தத் துளியை நாம் மறக்கக் கூடாது. அப்படி நாம் மறக்காமல் இருக்கும் வரை தான் தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு வரலாற்று அநீதியை பாலச்சந்திரனின் முகம் மறக்காமலிருக்கும்  வரை தான் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை நாம் மறக்காமலிருப்போம். இந்த உலகமும் மறக்காமல் இருக்கும். அந்த வகையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்து விட்டுத் தொடர்ந்து உரையாற்றினார்.
எழுத்தாளர் தமிழச்சியின் அவளுக்கு வெயில் என்று பெயர் என்கிற நூலை இந்தப் பதிப்பிற்காக வாசித்த போது, கடந்த 10 ஆண்டுகளில் அவரின் கவிதையில் ஏற்பட்டிருக்கக் கூடிய  மிகவும் குறிப்பிடத்தக்க, மாற்றம் அதாவது அவருடைய எஞ்சோட்டுப் பெண் என்கிற முதல் கவிதைத் தொகுப்பிற்கும், இன்று வெளிவந்த அவளுக்கு வெயில் என்று பெயர் என்கிற தொகுப்பிற்கும் இடையே தொடர்ச்சியும், நிறைய மாறுதல்களும்  கவனிக்கத்தக்கது.
எஞ்சோட்டுப் பெண்ணில் ஒரு கிராம வாழ்க்கை அல்லது கிராமியப் பண்பாட்டுடைய ஒட்டுமொத்தமான வேர்களும் கிளைகளும் மட்டுமே நிரம்பி இருந்தன. பிறகு ஒவ்வொரு தொகுப்பிலும் கிராம வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாடுகள், நகரப் பண்பாட்டிற்கும் கிராமியப் பண்பாட்டிற்குமிடையேயான முரண்பாடுகள் இவை எல்லாம் மிக ஆழமாக பிரதிபலிக்கக் கூடிய கவிதைகளை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பைப் பார்க்கிற போது முற்றிலும் நகர்மயமான சூழலில், நமது மரபு சார்ந்த பண்பாடும் நவீனப் பண்பாடும் ஒன்றோடொன்று கலந்து இயைந்த விசித்திரமான சூழலை இந்தக் கவிதைகள் பிரதிபலிப்பதாகக் கூறினார். இப்போதுள்ள மனிதர்கள் ஒரே சமயத்தில் நவீனமாகவும், புராதனமாகவும் இருப்பதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ நூல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், அடுத்த நூலான ‘பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்தில்லை’  பற்றிப் பேசும் போது  தற்காலத்தில் தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவருவதையும், நிறைய புதுமுக எழுத்தாளர்கள் அறிமுகமாவதையும் குறிப்பிட்ட அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார்.  இவ்வாறாக ஆயிரக்கணக்கில் வெளிவரும் நூல்களை யார் வாசிக்கிறார்கள், புத்தகங்களின் வாசகர்கள் யாவர், அதன் மீதான கவனம் எவ்வாறாக இருக்கும் என்பது ஒரு எழுத்தாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு விமர்சகனாக, ஒரு  வாசகனாக அவருக்கு எழுவதாகக் கவலையுடன் குறிப்பிட்டார். ஏனென்றால் புத்தகங்களெல்லாம்  சொற்களினுடைய இடுகாட்டில் புதைக்கப்படுவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டதாகச் சொன்னார். ஆனால் யாரோ சிலர் இந்தப் புத்தகங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் புதிய எழுத்தாளர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்திய அவர் மிகச் சில விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தான் சக எழுத்தாளர்களைப் பற்றிய பார்வைகளை பதிவு செய்துக் கொண்டே வருவதாகக் குறிப்பிட்டார். அது வாசகர்களுக்கான வழிகாட்டி மட்டுமல்லாமல், எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமாய் இருப்பதாகச் சொன்னார்.
தமிழச்சியின் “பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை” என்கிற விமர்சன நூலானது நிகழ்காலத்தின் பல இளம் படைப்பாளிகளைப் பற்றி செறிவான ஆழமான பார்வையை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார். இதை ஒரு முக்கியமான தமிழ்ப்பணியாகவும் இலக்கியப் பணியாகவும் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். ஏனென்றால் இந்த நூலானது சக எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதாகவும், அவர்களது நூல்களைக் கொண்டாடுவதாகவும், பல்வேறு உலக இலக்கிய நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றிற்கான ஒரு இடத்தை உருவாக்கித் தரும் பணியாக மேற்கொண்டிருப்பது தமிழச்சியின் பங்களிப்பாக அவர் நினைப்பதாகக் குறிப்பிட்டு பாராட்டினார்.
எழுத்து என்பது தனக்குத்தானே பேசிக்கொள்வதல்ல. அது உரையாடாலாக இருக்க வேண்டும். அந்த உரையாடலானது சக எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனமாகவும், கொண்டாடுவதாகவும் இருந்தால் பல புதிய எழுத்தாளர்கள் நம்பிக்கையோடு எழுத வருவார்கள் என்று கூறினார்.
அவரது ‘அந்நிய நிலத்தின் பெண்’ வெளியான போது அதைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட மூன்று விமர்சனக் கட்டுரைகளில் தமிழச்சியின் கட்டுரையும் ஒன்று. இதுவே அவர் ஒவ்வொரு படைப்பாளியுடனும் ஒரு ஆழமான உறவை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று கூறினார். அந்த வகையில் “பூனைகள் சொர்க்கத்திற்க்குச் செல்வதில்லை” என்ற நூல் நவீன தமிழ் இலக்கியத்திற்குச் செய்யப்பட்ட ஒரு முக்கியமான பங்களிப்பு என்று குறிப்பிட்டார்.
இந்த இரண்டு நூல்களை எழுதி வெளியிடும் திருமதி. தமிழச்சி தங்க பாண்டியனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெற்றார்.
விக்னேஷ் குமார்

453total visits.