ஜோடி புறாக்கள் -Bike ride

0
8

இரவு நேரத்தில் நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் தனியாகவோ அல்லது மனைவி மற்றும் குழந்தைகளோடோ காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, வேறொரு கார் உங்களுடைய காரைப் பின் தொடர்ந்து வருவதும், பின்னர் உங்களை முந்திச் செல்வதும், அதன் பின்னர் உங்களை முன் செல்ல விட்டு பின் தொடர்வதுமாக இருந்தால், என்னதான் நீங்கள் பெரிய பாதாம் பிஸ்தாவாக இருந்தாலும், ஒரு கணம் உங்களின் உள்ளே, யாரது..? எதற்காக நம் வண்டியைச் சுற்றிச்சுற்றி வருகிறான்..? என்ற கேள்விகள் எழுந்து, பின்னர் அந்த கேள்விகளே சிறு பயமாக உருவெடுத்து, மெலிதாய் ஒரு கலவரத்தினை மனதினுள் தோற்றுவித்துவிடும்.

அதே நேரம் ஒரு ரைடரை, இன்னொரு முகமறியா ரைடர் ஒருவன் மேற்கூறியதைப் போன்று சுற்றிச் சுற்றி வந்தானெனில், மனதினுள் பயமோ கலவரமோ தோன்றுவதற்கு பதிலாக “i got a company” என்ற ஆனந்தம் தான் மேலோங்கும். அப்படி சுற்றிச்சுற்றி வருவதன் அர்த்தம் “நீ தனியாக பயணிக்கவில்லை, உன்னோடு நானிருக்கிறேன். எனக்கு துணையாக நீயிருக்கிறாய்.”

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய காட்டெருமையில்* சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்துக் கொண்டிருந்த பொழுது, எனக்கு எதிரே இன்னொரு காட்டெருமையில் ஒரு ஜோடி பயணித்துக் கொண்டிருந்தது. (காட்டெருமை என்று குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம் அது ஒரு unique. எப்படி ஐபோன் இன்னொரு ஐபோனோடு மட்டுமே தன்னுடைய தொடர்பை வைத்துக் கொள்ளுமோ அதை போன்று தான் இந்த காட்டெருமையும். இன்னொரு காட்டெருமையோடு மட்டுமே தன் தொடர்பை வைத்துக் கொள்ளும்.) முதலில் நான் அந்த ஜோடியை முந்தி சென்று என் வேகத்தைக் குறைத்து, அந்த ஜோடி என்னை முந்திச் செல்ல அனுமதித்த பொழுது தான் அவதானித்தேன். வண்டியில் அமர்ந்திருந்த அந்த இருவரின் நடுவினில் ஒரு அழகான குட்டி பாப்பாவும் அமர்ந்திருந்தது. (அதிகபட்சம் போனால் அந்த பாப்பாவிற்கு இரண்டு வயது இருக்கலாம்.) அந்த ஆண் ஃபுல் ரைடிங் சூட்டில் ஒரு தேர்ந்த ரைடராய் தெரிய, அந்தப் பெண்ணும் லெதெர் ஜாக்கெட்டோடு அவனின் பின்னால் அமர்ந்திருந்தாள். i got a company என்று நான் நினைத்ததைப் போலவே அவனும் நினைத்திருப்பது அவன் என்னை முந்திச் சென்றதும் தெரிந்தது. என்னை முந்திச் சென்றதும் அவன் தன்னுடைய வேகத்தை மட்டுப்படுத்த இப்பொழுது என்னுடைய முறை. கிட்டத்தட்ட எண்பது கிலோமீட்டர் தூரம் இரு வண்டியும் ஒருவருக்கொருவர் துணையாக பயணித்து இறுதியில் திண்டிவனத்திலிருந்து பாண்டி செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டு, அவன் நின்று எனக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தான். vice versa நானும் அவனுக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.

இந்த பதிவை எழுத காரணியாக இருந்தது, இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன் பழனியிலிருந்து திரும்பி வருகையில், நான் சந்தித்த அந்த இரு கேரளத்து இளைஞர்கள் தான்.

இரவு எட்டு மணிக்கு என்னுடன் பழனியிலிருந்து வந்த நட்பை மதுரையில் ட்ராப்பியபின், வீட்டிற்கு அழைத்து இரவு உணவுக்கு வந்துவிடுவேன் என்று அம்மாவிடமும் சொல்லிவிட்டேன். மூன்று மணி நேரத்தில் 250 கிலோமீட்டர். காற்று மட்டும் எனக்கு சாதகமாக இருந்தால் சுலபமாய் கடந்துவிட கூடிய டார்கெட் தான் இது. ஆனால் விருதுநகரைத் தாண்டியதுமே காற்று எனக்கு பாதகமாக துவங்கிவிட்டது. சென்ற ஆகஸ்ட் மாதம் சந்தித்த அதே சுழல் காற்று. ஆனால் இம்முறை காற்றை எதிர்த்து போராடாமல் அதன் போக்கிலேயே சென்று அதை அவதானித்து, அது கொடுத்த சிறு இடைவெளியையும் எனக்கு சாதகமாய் பயன்படுத்தி கயத்தாறு வந்து சேரும் பொழுது மணி 9:30 ஆகிவிட்டது. (மழையைப் போலல்ல இந்த வெயிலும் காற்றும். மழையாவது மேற்கொண்டு பயணிக்க விடாமல் தடையைப் போட்டுவிடும். ஆனால் இந்த வெயிலும் காற்றும் பயணிக்க வைத்து உயிர்சக்தி மொத்தத்தையும் உறிஞ்சு எடுத்துவிடும்) single stretchல் போக நினைத்திருந்தவன் உமாஷங்கரில் pit stop போட்டு நிதானமாய் ஒரு டீயை உறிஞ்ச துவங்கினேன்.

என் ஜப்பானிய தோழிக்கு** அருகிலேயே, கேரள பதிவு எண் கொண்ட இன்னொருவனின் இத்தாலிய தோழி*** நின்றுக் கொண்டிருந்தாள். நான் பாதி டீயில் இருக்கும் பொழுது, ஹோட்டலில் இருந்து இருவர் வெளிவந்து அந்த வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். பின்னர் அந்த இருவரில் ஒருவன், “நமக்கொரு சிகரெட் வளிக்காம்” என்றான். நான் என் டீயை முடித்துவிட்டு, பயணத்திற்கு தயாராகவும், அவர்கள் இருவரும் கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு வண்டியிலேறி அமர்ந்தவர்கள். நான் கிளம்பும் முன்னமே கிளம்பிவிட்டார்கள். காற்றின் உக்கிரம் தனியாததால் 100+ஐ தொடாமல் காற்றோடு கலந்துரையாடியபடியே 80+ல் சென்றுக் கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் ஒரு இருசக்கரம் தனது வலப்புற இண்டிகேட்டரை ஒளிர விட்டு சாலையோரமாய் ஒதுங்கி நிற்க, அந்த வண்டிக்கு கை உயர்த்திக் காட்டிவிட்டு, நான் கடந்து செல்லவும். ஒதுங்கி இருந்த அந்த இருவரும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு என்னை முந்திச் சென்றனர். திருநெல்வேலி வரை முன்பின் பின்முன் என்று தொடர்ந்த எங்கள் பயணம் அவர்கள் நெல்லைக்குள் நுழையவும் முடிவிற்கு வந்தது, மீண்டும் ஒரு கையசைப்பு, ஒரு விடைபெறல்.

ரயில் சிநேகம் போலவே பைக் சிநேகம் என்றவொன்று இருப்பதால் ரைடர்கள் என்றுமே தனிமை பயணம் மேற்கொள்வதில்லை. அவர்களுக்கு என்று ஒரு company எப்படியும் அமைந்துவிடுவான்.

-வாஸ்தோ

90total visits.