தூண்டில் மீனுக்கு -கபாலி Untold-story

0
27
சமீபத்தில் நண்பரொருவருடன் நடந்த  சந்தோஷ் நாராயணன் பற்றிய உரையாடலினூடே “கபாலி” படத்தின் வெளிவராத “தூண்டில் மீனுக்கு” பாடல் குறித்த பேச்சு எழுந்தது. சில மாதங்களுக்கு முன்னரே ‘வானம் பார்த்தேன்’ மற்றும் ‘மாயநதி’ பாடல்கள் இரண்டையும் இணைத்து ஒரு பயணமாக ஒரு பதிவு எழுதியிருந்தாலும் இந்த பாடலைப் பற்றி எதுவும் எழுதவில்லை. காரணம், “தூண்டில் மீனுக்கு” பாடல் படத்தின் திரைக்கதையோடு அவ்வளவு இயைந்து வருவதில்லை. ஆனால், இந்த பாடல் சொல்லும் உட்கதை அழகாக இருக்கிறது.
‘வானம் பார்த்தேன்’  ஒரு  தேடல் படலம், பிரிவில் ஞாபகம் கலந்த பதிவு.
‘மாயநதி’ ஒரு சேரல் நிகழ்வு, பிரிவின் வலியை பரிமாறி இளைப்பாறும் கணம்.
இந்த இடைப்பட்ட தருணத்தை ஆட்கொள்ளும் ஒரு பரஸ்பர உரையாடல் இந்த ‘தூண்டில் மீனுக்கு’ பாடல்.
மலேசியாவிலிருந்து சென்னை வரும் கபாலி, செட்டியார் பங்களா, பாண்டிச்சேரியின் பிரெஞ்ச் பெண்ணின் வீடு என ஒவ்வொரு அடியாக தேடி இறுதியில் ஆரோவிலில் இருப்பதாக தெரிந்துகொள்கிறான். இருபத்தைந்து ஆண்டுகால பிரிவை ஒரு பேரிரவின் விடியல் தீர்த்து வைக்கப்போகும் என்ற ஆனந்த மனநிலையில் நொடிகளை உறங்காமல் நகர்ந்துகிறான்.
“இத்தன வருஷம் தூரம் இருந்தவ இப்போ எங்கேயோ பக்கத்துல இருக்கா.
என்ன நினைச்சுட்டு தூங்கிட்டு இருப்பா. என்ன பாத்த உடனே எப்டி ரியாக்ட் பண்ணுவா.
என்ன நினைப்பா.
அதையெல்லாம் நினைக்கும்போது நெஞ்செல்லாம் திக்கு திக்குனு இருக்கு மா.
உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு”
தூங்காமல் இருக்கும் கபாலி தான் மகளிடம் உள்ளத்தின் நினைவுகளை இவ்வாறு பகிர்ந்து நிற்கிறான்.கபாலியிடம் வெளிப்படும் இந்த மனத்தோன்றல்களில் மூன்று கேள்விகள் எழுகின்றன.
“என்ன நினைச்சுட்டு தூங்கிட்டு இருப்பா.
என்ன பாத்த உடனே எப்டி ரியாக்ட் பண்ணுவா.
என்ன நினைப்பா.”
பிரெஞ்சில் இருக்கும் பினோலோப் மூலமாகவோ அல்லது  சுவர் ஏறி குதித்து குமுதவல்லியின் இருப்பை உறுதி செய்யும் அந்த வழிகாட்டும் இளைஞன் மூலமாகவோ கபாலி சந்திக்க வருவதை ஒருவேளை குமுதவல்லி தெரிந்துகொண்டிருந்தால் கபாலியின் எண்ணங்களுக்கெல்லாம் பதில் கிடைத்திருக்கும்.
அதற்காக, படத்தின் திரைக்கதையிலிருந்து விலகி கபாலி தன்னை சந்திக்க வருவதை குமுதவல்லி தெரிந்துகொண்டு கபாலியைப்போலவே இந்த இரவை துரத்துகிறாள் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரே மனநிலையில் தூங்கா இரவொன்றில் இருவரும் நினைவுகளின் வழி பேசிக்கொள்கிறார்கள். பிரிவைக்கடந்து இணையப்போகும் இரண்டு அன்பானவர்கள் எப்படியெல்லாம் தங்களின் பிரிவையும் ஏக்கங்களையும் காத்திருப்புகளையும் வெளிக்கொள்கிறார்கள் என்று சொல்லும் பாடல் இது.
பிரிந்திருந்த சமயத்தில் கபாலி மட்டும் பாடுவதாக கபிலன் எழுதியிருந்த ‘வானம் பார்த்தேன்’ இணைவதற்கு முன் கபாலி மற்றும் குமுதவல்லி இணைந்து பாடுவது போல இந்த ‘தூண்டில் மீனுக்கு’ எழுதப்பட்டிருக்கிறது
“தூண்டில் முள்ளில் மாட்டிக்கொண்ட மீன் நானடி”  என்று வானம் பார்த்தேனில் ஒரு வரி வரும். அதை வைத்தே இந்த பாடலும் தூங்காமல் துடிக்கும் தூண்டில் மீனாக கபாலியின் நிலையிலிருந்தும் வாடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை வாழும் குமுதவல்லியின் நிலையிலிருந்தும் தொடங்குகிறது.
“தூண்டில் மீனுக்கு தூக்கம் ஏனடி
வாடும் பூவுக்கு வாசம் ஏதடா”
வறண்டுகிடக்கும் வாழ்க்கையை ஒரு அன்பின் கண்ணீர் துளி நிரப்புவதாக சொல்லும் கபாலிக்கு வரும் குதவல்லியின் பதில் விடியலின் தேடல்.
இது, வானம் பார்த்தேன் பாடலில் “மழையினை கண் காணாமல் மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்” என்ற வரிக்கான விடை.
“ஒரு துளி மழையிலே உயிர்குளம் நிறையுதே
ஒரு வழி பயணத்தில் விடியலும் தெரியுதே”
இந்த ஒரு வழி பயணத்தை தான் கபாலியும் குமுதவல்லியும் சந்தித்துக்கொண்ட பிறகு “போன வழியிலே வாழ்க்கை திரும்புதே” என்று பாடியிருப்பார்கள்.
பிரிவில் தேடி அலைந்துகொண்டிருந்த கபாலி,
“வானம் பார்த்தேன் பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே” என்று பாடியிருப்பான்.
ஆனால், பிரிவு நிறைவடைய ஹோட்டல் அறையின் ஜன்னலின்வழி உறங்காத விழிகளோடு வானம் பார்த்து காத்திருக்கும் கபாலி
“வானம் பார்த்தேன் அழகிய விண்மீன் என் என்மேல் தூர
பாறை நெஞ்சம் கரைகிறதே” என்று பாடுகிறான்.
அதே தொலைந்த விண்மீன் காற்றோடு காற்றாக மேலே பொழியும் அற்புத தருணம் அது.
தொடர்ந்து இருவரும் நினைவுகளின் வழி அசைபோடுகிறார்கள்.
‘கரை தேடும் படகாக கடல் மீது மிதந்தேனே’
‘கரை சேர கடல் யாவும் குடித்தேனே’
‘உனதுயிர் உடலோடு எனதுயிர் கலந்தேனே’
‘அழகிய முகம் பார்க்க மெழுகென கரைந்தேனே’
மீண்டும் ‘வானம் பார்த்தேன்’ பாடலுக்கு சென்றால் அதில் வரும் வரி “இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்”
அதே வரியை ‘விதை தேடும் நிலம் போல மடி தேடி அலைந்தேனே’ என்று இந்த பாடலில் மீள்பதிவு செய்திருப்பான் கபாலி. அதற்கு எதிர்குரலாக குமுதவல்லியிடமிருந்து “மடி மீது குடியேற அழைத்தேனே” என்று வரும்.
‘வானம் பார்த்தேன்’ & ‘தூண்டில் மீனுக்கு’ பாடல்களில்  கபாலி மடி தேடுவதாய் பாடியதன் விளைவாக ‘மாய நதி’யில் குமுதவல்லியின் வரிகள் இவை.
“மணலூரும் மழையாய்
மடி மீது விழ வா வா”
“என்ன நினைச்சுட்டு தூங்கிட்ருப்பா, என்ன நினைப்பா” என்ற கபாலியின் எதிர்ப்பார்ப்புக்கான விடையாக குமுதவல்லியின் குரலிலிருந்து வரும் இந்த வரிகளில் இந்த பாடல் நிறைவடைகிறது.
“பௌர்ணமி வரும் இந்நாள் இரவிலும் பகல் ஆனேன்
தூரம் போன நிலவினை தோளில் தாங்கும் நேரம்
தூக்கம் கண்ணில் தொலைந்ததடா”
——
கபிலனும் பா.ரஞ்சித்தும் இந்த கபாலியை மேலும் மேலும் கொண்டாட வைக்கிறார்கள்
-இளம்பரிதி கல்யாண்குமார்

681total visits,3visits today