கதிர் குறள் – 241

0
39

”பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கறான் அந்த ஆளு?”

”ஹேய், என்ன ஆச்சு? ஏன் கோபமா இருக்க?” என்று நடேசனின் தோளில் ஆதரவாக கைபோட்ட வண்ணம் வேலு கேட்க,

“இவ்ளோ பெரிய ஸ்கூலுக்கு ஓனர்னா அதுக்கேத்த மாதிரி நடந்துக்க வேணாமா?”

“உங்க ஓனரை தான் திட்றியா? என்ன வழக்கம்போல டீசல் அடிச்ச பில்ல வச்சுகிட்டு எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடுதுன்னு செக் பண்ணி சாவடிக்கிறானா?”

“அட அப்படி பண்றதக் கூட தாங்கிக்கிலாம்பா”

“வேற என்னனு சொல்லுப்பா, சொன்னாதானே தெரியும்?”

“விடியக்காத்தாலயே வேலை இருக்குன்னு சொல்லிட்டாருன்னு நானும் நேரமா கிளம்பி வந்தேன், கோவில் குளம்னு சுத்திட்டு 10 மணிக்கு ஸ்கூலுக்கு வந்தோம்பா”

“சரி, காலைல சாப்பிடலையா? அதான் டென்சனா இருக்கியா?”

“முழுநாள் சாப்பிடாம லாரி ஓட்டிக்கிறேன், எனக்கு அதுவா பிரச்சனை?”

“வேற?”

“10 மணிக்கு வந்தோமா? ஓனரே கூப்பிட்டு அவருக்கு சாப்பாடு இருக்குன்னும் என்னை வெளியே போய் சாப்பிட்டுக்க சொல்லியும் சொன்னார்”

“சரி அக்கறையா சொல்றது நல்லதுதானே?”

“சொன்னதோட நிறுத்தி இருந்தா பரவாயில்லையே”

“ம்”

“பாக்கெட்ல கையை விட்டு தேடி 20 ரூபாய் எடுத்து கொடுத்தார்”

“20 ரூபாயா? இஙக் கேண்டின்ல 2 இட்லி 15 ரூபாய்க்கு விக்கறானுங்க, ஒரு தோசை 25 ரூபாய், எப்படிப்பா பத்தும்?”

“சரி நானும் ஆளோட கஞ்சத்தனம் தெரிஞ்சதால எதுவும் பேசாம வாங்கிட்டேன், கைக்காசு போட்டு வயிறார சாப்பிட்டுக்கலாம்னு கேண்டின் பக்கம் போய்ட்டுருந்தேனா, மாது அண்ணன் எதிர்க்க வந்தாப்டி”

“ஸ்கூல் வாட்ச்மேன் அண்ணனா?”

“அவர் தான். எங்கப்பா போறன்னு கேட்டார், சாப்பிடன்னு சொன்னேன். அவரும் வா சாப்பிடத்தான் போறேன்னு ஹாஸ்டல் மெஸ்க்கு கூட்டி போனார். வேளைக்கு 25 ரூபாய். நான் சாப்பிட்டதுக்கும் சேர்த்து அவர் நோட்ல எழுதிகிட்டார் மனுசன். காசு கொடுத்ததுக்கு அடிக்கவே வந்துட்டார். “என்ன நாளைக்கு என்னை பார்க்கவே மாட்டியா? கையில பணம் ரொம்ப விளையாடுதா? எல்லா நேரத்துலயும் தூக்கி நீட்ட முடியுமா உன்னால?”ன்னு அசிங்கசிங்கமா திட்டுனார். நான் மன்னிப்பு கேட்டு சமாதான படுத்தினேன்”

“சரி”

“திரும்ப கார் எடுக்க சொல்ல ஓனர் ‘என்னப்பா சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். நானும் சாப்பிட்டேன்னேன். என்ன சாப்பிட்டனார். நான் மெஸ்ல தோசை சாப்பிட்டேன்னு சொன்னேன். மாதண்ணன் நோட்ல எழுதனத சொல்லிக்கலை. அதுக்கு அந்தாளு என்ன தெரியுமா சொன்னான்?”

“என்ன சொன்னான்?”

“நம்ம மெஸ்ல தான் சாப்பிட்டியா? அங்க காசு வாங்க மாட்டேங்களே, அந்த 20 ரூபாயை திருப்பிக் கொடுன்னு வெட்கமே இல்லாம கேட்கறான்யா”

“நிஜமாலுமா? திருப்பி கேட்டானா? நீ கொடுத்திட்டியா? வாங்கிட்டானா?”

“அதெல்லாம் பத்திரமா வாங்கி மடிச்சி பாக்கெட்ல வச்சுக்கிட்டான். ஏன் வேலு? எப்படி இந்த மாதிரி சில்லறைங்ககிட்ட காசு, பணம் சேருது? இவனை எல்லாம் எப்படிப்பா வெளிய பெரிய மனுசனா மதிக்கிறாங்க?”

“கேட்டினா இப்படிலாம் கருத்தா மிச்சம் பிடிச்சிதான் பணம் சேர்க்க முடிஞ்சதுன்னுவான். இவனை எல்லாம் யாருய்யா பெரிய மனுசனா மதிக்கிறா? காசு இருக்கறவனைலாம் மதிப்பாங்கன்னு நினைக்கறியா?”

“இல்லையா பின்ன?”

“அடப்பாவி, பணங்காசு சேர்த்தவன், அப்பன் பேர்ல வாழ்றவனெல்லாம் பெரிய மனுசன் கிடையாது. உனக்கு எப்படி சொல்றது? ம், இப்ப நீ பேசறப்ப எதுக்கு உங்க ஓனரை அவன் இவன்ங்கற? வாட்ச்மேனை மாதண்ணன்னு சொல்ற?”

“அது அவர் மேல இருக்க மரியாதைப்பா? எங்க ஓனரைல்லாம் முன்னாடி மட்டும் தான் ஐயான்னு கூப்பிடறது? மத்த நேரத்துல அப்படி சொல்லவே வாய் வரதில்லை”

“வராது, மரியாதை பணங்காசை பார்த்து வராது. நடந்துக்கற விதத்தை பார்த்து வரும். காசு, பணமெல்லாம் குணத்தை பார்த்துலாம் சேரும்னு இல்லைடா. நாட்ல திருடன், கொள்ளைகாரன், கொலைகாரன், ஊரை அடிச்சு பொழைக்கறவன்கிட்டலாம் இல்லாத காசா? அவனுங்களாம் பெரிய மனுசங்களா? ஒன்பதாயிரம் சம்பளம் வாங்கற வாட்ச்மேனுக்கு உன்னை சாப்பிட வைக்க தெரியுது. உங்க ஓனருக்கு கொடுத்த காசு தான் கண்ணுக்கு தெரியுது. பணத்தை விட சகமனுசனை மதிக்க தெரிஞ்சவன் தான் பெரிய மனுசன்”

அதிகாரம்: அருளுடைமை           குறள்: 241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

-கதிர் ராத்

219total visits.