கதிர் குறள் -1137

0
48

”தூக்கம் வருதா?”

”இல்லைடா சொல்லு”

”…..ம்”

”ஏன்…. உனக்கு வருதா?”

”தூக்கம் வரலை. ஆனா…”

”என்ன வேறெதும் வேலை இருக்கா?”

”நைட் 10 மணிக்கு எனெக்கென்ன வேலை? கொஞ்சம் தனிமைய தேடுது மனசு”

”ஏன்டா?”

”உண்மையை சொல்லவா?”

”சொல்லு”

”எனக்கு இன்னைக்கு முழுக்க ஒரு மாதிரி இருந்ததுதடி. உன் நினைப்பாவே…”

”என் நினைப்பாவே?”

”உன்னைதான் முழுக்க தேடிட்டுருந்தேன். நீ என்னை விட்டு 150 கிலோமீட்டர் தள்ளி இருக்கனு தெரியும். இருந்தும் மனசு உன்னை கேட்டுகிட்டே இருந்தது. திடீர்னு நீ வந்துட மாட்டியானு ஒரே ஏக்கம்.”

”ம்”

”தூரத்துல ஏதாவது ஒரு பொன்னு வந்துட்டுருந்தா கூட, அது நீயாத்தான் இருக்கனும்னு ஆசைப்பட்டேன். கிட்டத்தட்ட உன் உருவத்துல யாரும் என்னை கடக்கறதுக்கு இல்லை. மொத்த மனசும் அப்படியே எல்லாத்தையும் மறந்துட்டு உன்னை நினைக்க வச்சுருது.”

”ம்”

”என்ன வெறும் ம் கொட்டற?”

”நீ மேல சொல்லு”

”ஒப்பனா சொல்லட்டுமா? உன்னை தேடுனது என் மனசு மட்டும் இல்லை. என் உடம்பும் தான். அதை என்னால உணர முடிஞ்சது. நீ பக்கத்துல இருந்தா என்ன பண்ணுவன்னுலாம் யோசிக்க தோணலை. ஆனா நீ வேணும்னு ரொம்ப ஏங்குனேன். உடம்புலாம் கொதிக்கற மாதிரி ஒரு உணர்வு. தொட்டு பார்த்தா நார்மலா இருக்கு. என்னனு சொல்ல? மொத்தமா 3 நாள் பட்டினி கிடந்த மாதிரி, உடம்புல சத்தே இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதுலயும் தனியா இருக்கையில உன்னை நினைச்சுகிட்டா நினைப்பு எங்கெங்கோ போய் மயக்கம் வராப்ல ஆகிருது.”

”ம்”

”அதான், பேச வேண்டாம்னு சொன்னேன்”

”ஏன்?”

”புரியலையா? எனக்கென்னாவோ என் மனசோ உடம்போ உன்னை வேற எதுக்கோ தப்பா கேட்குது. அந்த நினைப்புல உன்கிட்ட பேச எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்மா.”

”லூசு”

”ஏன்டி?”

”பின்னே, இது ஏதோ தப்புன்னு நினைச்சுட்டு இருக்கையே? லூசா இல்லாம வேற என்ன?”

”காம உணர்வு தப்பு இல்லங்கறியா?”

”காமமா? இதுவா? உன் மனசு மட்டுமோ இல்லை உடம்பு மட்டுமோ பொதுவா ஒரு பொண்ணு கிடைச்சா போதும்னு ஏங்குனா அதுக்கு பேர் காமம்னு சொல்லிக்கோ. உன் உடம்பு, மனசு ரெண்டுமே சுத்தி இருக்க எந்த பொண்ணையும் கேட்காம இவ்ளோ தூரத்துல இருக்க என்னை கேட்குதுன்னா, இதுவும் காமமா? சரியான லூசுடா நீ?”

”அப்போ இது காதலா?”

”இதுவும் காதல் தான்”

”உனக்கு எப்படி தெரியும்?”

”எப்படியோ தெரியும்…”

”ஹேய்…. என் செல்லம் இல்லை…… சொல்லும்மா….”

”லூசு, நீ தேடுனதை விட 100 மடங்கு இல்லை 1000 மடங்கு நான் உன்னை தேடிட்டு இருக்கேன்டா…”

”நிஜமா?”

”சந்தேகமா?”

”லவ் யூ.. உம்மா”

”உம்மா”

”ம், ஆமா. நான்லாம் மனசுல என்ன இருந்தாலும் சொல்லிடறேன். நீ ஏன் சொல்றதில்லை?”

”சொல்லிட்டா ஆசை குறைஞ்சுரும். பாரம் இறங்கிரும். அதை அப்படியே உள்ளுக்குள்ள பத்திரமா வச்சுருப்போம். பொண்ணுங்களாம் கடல் மாதிரி. உள்ளுக்குள்ள எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் கரையை கடக்காம அப்படியே இருப்போம். கடைசி வரை அந்த அழுத்தம், அந்த காதல் குறையாம பார்த்துப்போம்.”

”ச்சே, சூப்பர்மா….. இங்கே கெத்தா நின்னுடறீங்க…”

அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்       குறள் : 1137

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

உரை: கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாத பெண்ணுக்குரிய பெருமைபோல் பிறிதொன்றும் இல்லை.

-கதிர் ராத்

343total visits.