கதிர் குறள் -1140

0
64

“டேய் எங்கடா வச்ச?”

“தெரிஞ்சா எடுக்க தெரியாதா எனக்கு. நீ நகரு முதல்ல.”

“ஆமா, நான் நகர்ந்தா நீ எடுத்து கிழிச்சுருவ. பேசாம ஓரமா நில்லு. நான் தேடறேன்”

“சரி தேடு, ஆனா எதுவும் சொல்லாம தேடு”

“ஆ..ன் சொல்றாங்க. எருமைமாடு… கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு? இன்னைக்கு ஆடிட் பன்றாங்கன்னு தெரியுமில்லை. நேத்தே எல்லாத்தையும் எடுத்து வச்சா என்ன உனக்கு?”

“ஏய், இப்படி பொறுமிகிட்டே செய்யறதுன்னா நீ ஒன்னும் தேட வேண்டாம். நகரு…. என் வேலையை நான் பார்த்துக்கறேன்.”

“கிழிச்ச, நீ போய் உன் லேப்ல எங்கயாவது வச்சியா பாரு.”

“எதுக்கு? நான் போனதுக்கு அப்புறம் இங்கே எடுத்துட்டு நான் ஒரு வேலைக்கும் நான் லாயக்கில்லைன்னு திட்டவா? நீ நகரு. என் வேலையை நான் பார்த்துக்கறேன்”

நிமிர்ந்து முறைத்த வண்ணம் அவன் கேபினை விட்ட நகர்ந்தாள் உமா.

நகர்ந்தாலும் தன் கேபினுக்கு செல்லவில்லை. சற்று தள்ளி நின்று கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் தன் டேபிளில் இருந்த அனைத்தையும் தேடுவதாக கலைத்து போட்டு கொண்டிருந்தான்.

“கீழ் டிராயர்ல எதுக்கும் பாருடா”

“ஏய், உனக்கென்ன? உன் வேலையை பார்த்துட்டு போ, என் லாக் புக் தானே? தொலைஞ்சா நான் திட்டு வாங்கிக்கறேன் போடீ”

எதுவும் சொல்லாமல் முறைத்தாள். பல நிமிடங்களுக்கு பிறகு கிடைத்தது. இடையில் பலமுறை அவனை தேடி ஆட்கள் வந்தார்கள். கல்லூரியில் அவ்வபோது நடக்கும் சுயபரிசோதனை இது. மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு துறையிலும் வரிசை முறையின்றி சிலரை தேர்ந்தெடுத்து அவர்களது கோப்புகளை சோதிப்பார்கள். அதிகமாக தன்னை அழைத்திடாத மமதையில் இருந்த கிருஷ்ணனின் பெயர் தான் இம்முறை முதலிலேயே அழைக்கப்பட்டது. அவனது வருகைப்பதிவேடுகளில் ஒன்றினை கடைசி நேரத்தில் காணவில்லை. அதைத்தான் தேடுகிறான். அவனை நொந்துக் கொண்டே உதவும் உமா அவனது தோழி என்று அனைவரையும் போல இருவரும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் தெரியும். அதை தாண்டிய உறவு என்பது. ஆனால் ஒருவருக்கொருவர் கூட சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.

நாம் காதலர்கள். இனி காதலிப்போம் என பேசி வைத்து காதலிப்பதை விட, காதல் என்ற வார்த்தையையே உபயோகிக்காமல், இருவருக்குமே அந்த உணர்வு இருந்து காதலிப்பது தனி சுகம். அதிலும் ஒருவரை ஒருவர் சொல்ல வைக்க செய்யும் குறும்புத்தனங்கள் உச்சக்கட்ட உற்சாகத்தை தரும். ஒருவழியாக அனைத்தும் முடிந்த பின் வந்த கிருஷ்ணன் உமாவை பார்த்தான். பார்வையாலேயே திட்டி தீர்த்தாள். பதட்டத்தில், கோபத்தில் அதிகமாக திட்டி விட்டோம், நம் தவறு தான். இருந்தாலும் நாமாக சென்று பேசினால் கிழித்து தொங்க விட்டு விடுவாள் என்ற பயத்தில் கிருஷ்ணன் தன் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் அவன் இடத்திற்கே வந்தாள்.

“என்ன?”

“என்னடா நினைச்சுட்டுருக்க?”

“என்ன நினைச்சுட்டுருக்கேன்”

“ஏன்டா, போனா போகுதுன்னு உனக்கு உதவியா இருக்கும்னு தேட வந்தா எரிஞ்சு எரிஞ்சு விழற? சுத்தி எத்தனை பேர் நிக்கறாங்கன்னு கூட பார்க்காம உன் வேலையை பார்த்துட்டு போன்னு சொல்ற?”

“நீயும் தான் என்னை திட்டுன?”

“நான் மெதுவா உனக்கு மட்டும் கேட்கற மாதிரி திட்டுனேன். நீ கத்தற? எனக்கு கத்த தெரியாதா? அசிங்கமாகிருக்கும் கத்திருந்தா”

“இப்ப என்ன ஆச்சுன்னு மூஞ்ச காட்டற?”

“என்ன ஆச்சா? உங்களுக்கு வேணும்னா சிரிச்சு பேசுவிங்க. வேணாம்னா எரிஞ்சு விழுவிங்க. அத்தனை பேர் முன்னாடி கத்துவிங்க. எல்லாம் என் தப்பு தான்”

“என்ன உன் தப்பு?”

“இல்லை. நான் தான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன். இங்கே பாருங்க சார், இனி தேவையில்லாம உங்க விஷயத்துல தலையிட மாட்டேன். தலையிடறது என்ன? பேசக்கூட மாட்டேன், நீங்களும் அப்படி நடந்துகிட்டா ரெண்டு பேருக்கும் மரியாதையா இருக்கும்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.”

“ஏய் உமா…”

“சார், சொன்னது புரியலையா சார்ர்”

சார் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்லவும் அவள் எதிர்பார்ப்பு கிருஷ்ணனுக்கு புரிந்தது.

“சரிங்க மேடம், போங்க, உங்க வேலையை பாருங்க”

அவள் எழுந்து செல்லும் பொழுது அவன் டேபிள் மீது அவள் வாங்கி தந்திருந்த பென் ஸ்டேன்டையும், பேப்பர் வெயிட்டையும் எடுத்துக் கொண்டு சென்றாள். கிருஷ்ணனுக்கு அவன் தவறு புரிந்தது. ஆரம்பத்தில் அவளை தாங்கி தாங்கி பேசிவிட்டு, தனக்கானவள் என்றானதும், கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தர வேண்டிய மரியாதையை குறைத்தது அவன் தவறு தான். வழக்கமாக ஏதாவது தவறு செய்தால் கூச்சப்படாமல் சென்று மன்னிப்பு கேட்டு பேசுவான். இன்று தன் இடத்திலேயே அமர்ந்தது பெரும் பிசகாகி விட்டது. இருந்தும் உள்ளுக்குள் இருந்த திமிர் அவனை இப்போது கூட சென்று மன்னிப்பு கேட்டு பேசலாம் என்பதனை தோன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வழக்கமாக அவளுடன் அமர்ந்து தான் மதிய உணவினை சாப்பிடுவான். இன்று அது நடக்காது என்றதும் மற்ற நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிட கிளம்பினான். அவன் உற்ற நண்பன் பிரபாகரனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஒரு மாதிரி அவனை பார்த்து நக்கலாக சிரித்தான்.

“என்னடா சிரிக்கற?”

“இல்லை, துரை எங்க கூடலாம் சாப்பிட வரிங்களேன்னு தான்”

“டேய் என்ன நக்கலா?”

“பின்ன என்னடா? புடவை சாயம் போனா தான் பேண்ட்-சர்ட் லாம் கண்ணுக்கு தெரியுது”

“அமைதியா இருடா”

“இங்கே பாரு. நான் சொல்றதை முதல்ல கேளு, எதுக்கு உனக்கு இந்த வேலை? பசங்களோட பழகுடா, உன் குணத்துக்குலாம் பொண்ணுங்க கூட பழகறதுலாம் ஒத்துவராது. வள்ளு வள்ளுன்னு விழுவ. பொண்ணுங்க பேசாம இருப்பாங்களா?”

“இப்ப என்னடா சொல்ல வர?”

“ஒன்னும் சொல்ல வரலை. எங்கூடவும் அப்பப்ப டைம் ஸ்பெண்ட் பண்ண சொல்றேன். வாழ்க்கைல எல்லாரும் முக்கியம் தான்”

“நான் எப்படா உன்னை அவாய்ட் பண்ணேன்?”

“டேய் புழுகாதடா, எப்பவாவது என் கேபின் பக்கம் வந்துருக்கியா நீ? ஒன்னு நீ உமா கேபினுக்கு போவ. இல்லை அவங்க உன் கேபினுக்கு வந்துருவாங்க. பேர் கெட்டுரும்டா”

“இங்கே பாரு, சட்டுன்னு முடி. எனக்கு அதை பத்தி கேட்க பிடிக்கலை”

“டேய், இன்னுமா புரியலை, உன் கெத்தை விட்டுட்டு யார்கிட்டயும் போய் வழியாதன்னு சொல்றேன். சாப்பிடு”

கிருஷ்ணன் ஒரு மாதிரி குழம்ப துவங்கினான். ஒரு வேளை இவ்வளவு நாளாக அனைவரும் என்னைப் பற்றி இப்படித்தான் நினைத்து கொண்டிருப்பார்களோ? எந்நேரமும் பெண்ணிடம் மட்டும் பழகியதும் தவறு தான். ஆனால் அவள் வெறும் தோழி மட்டும் இல்லையே. அது என் விருப்பம். அவளுக்கும் அதே விருப்பம் தான். இல்லையே, அப்படி இருந்திருந்தால் இன்று இப்படி அனைத்தையும் முறித்துக் கொண்டு போயிருப்பாளா? அவள் என்னை வெறும் நண்பனாக, சக ஊழியனாக மட்டும் தான் பார்த்திருக்கிறாள். நான் தான் தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு திரிந்திருக்கிறேன். ச்சே எப்படி பைத்தியக்காரத்தனமாக அவள் என்னை காதலிப்பதாக நம்பினேன்? இப்போது என்ன செய்யலாம்? அவளிடம் சென்று பேசலாமா? காதல் என்ற ஒன்று இல்லை என்றலும் அவள் சிறந்த தோழி, அவளை முழுவதும் இழப்பவன் முட்டளாகத்தான் இருப்பான் என்று யோசித்து அன்று மாலை உமாவை பார்க்க சென்றான்.

“சொல்லுங்க சார்”

“இங்கே பாரு உமா, என் தப்புதான், சாரி, நான் அப்படி கத்திருக்க கூடாது”

முறைத்தாள்.

“மன்னிச்சுரு உமா”

முறைத்தாள்.

“அதான் சாரி கேட்கறேன் இல்லை”

“என்ன பெரிய சாரி? தானா வந்து பேசுனா இளக்காரமா தெரியுது இல்லை. ஏன் எனக்கு வேலை இல்லாம தான் உன்கிட்ட வந்து பேசிட்டு இருந்தனா? ஒவ்வொரு மனுசனுக்கு ஒரு மதிப்பு இருக்கு, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறாங்களோ இல்லையோ, அவங்கவங்க புரிஞ்சுக்கனும். என் மதிப்பு என்னன்னு புரிஞ்சுக்காம இருந்தது என் தப்பு தான். அதுக்கு நல்ல பாடம் கிடைச்சது. நீங்க கிளம்புங்க சார், எனக்கு வேலை இருக்கு”

இப்போது கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. கோபமாக எழுந்து திரும்பி பார்க்காமல் வந்து விட்டான். தான் சென்று மூன்று முறை மன்னிப்பு கேட்ட பின்பும் அவள் இப்படி பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்த பிரபாகரன், கிருஷ்ணனின் கேபினிற்கு சென்று பேசினான்.

“நான் தான் சொன்னேன் இல்லைடா, உனக்கு இப்ப என்ன? உமா இல்லாம இங்கே வேலை பார்க்க முடியாதா என்ன? நீ எதுக்கு பிடிச்சு தொங்கனும்?”

“டேய், கடுப்புல இருக்கேன், பேசாம போயிரு”

“இல்லை மச்சான், நீ இப்படி இருக்கறதை பார்த்தா பரிதாபமா இருக்குடா, மூனாவது மனுசனா இருந்தா பார்த்து சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பேன். நீ என் நண்பன்டா, அப்படி விட்டுட முடியுமா?”

“சிரிச்சுகிட்டு போய்ட்டு இருப்பியா? ஏன்? சிரிக்கற அளவுக்கு என்ன காமெடியா தெரியுது உனக்கு?”

“காமெடி இல்லை மச்சான். பரிதாபமா இருக்கு. ஒருத்தன் தனக்கு தானே மண்ணள்ளி போட்டுகிட்டா பார்த்து மத்தவங்க சிரிப்பாங்க, ஆனா கூட பழகனவன் சிரிப்பானா சொல்லு”

“இப்ப நான் மண்ணள்ளி போட்டுக்கற மாதிரி தெரியுதா?”

“ஆமா, இப்பவே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு எல்லோரும் கதை பேசறாங்க, நாளைக்கு உனக்குன்னு பொண்ணு பார்க்கும் போது எதையும் விசாரிக்கமயா செய்வாங்க, பேர் முக்கியம்டா.”

எதுவும் பேசாமல அவனை பார்த்தான். பிரபாகரன் தொடர்ந்தான்.

“அப்படியே நீ உமாவையே விரும்பறேன்னு வச்சுக்க, ஒரு பேச்சுக்கு சொல்றேன். அது நடந்துருமா? கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா? வெவ்வேற சாதி? எத்தனை பிரச்சனைங்களை பார்க்கனும். தேவையா இதெல்லாம்?”

பிரபாகரன் பேசப் பேச கிருஷ்ணன் மனம் கரையவில்லை. அவன் மனதில் ஒரே எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

“அப்ப உமா எனக்கில்லையா?”

ஒரு வாரம் அப்படியே ஒடியது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. வேலை நிமித்தமாக பேசிக் கொண்டார்கள். அப்படி பேசிக் கொள்வதும், காலமும் இருவரிடமும் இருந்த வன்மத்தை கரைக்க துவங்கி இருந்தது. அடுத்த நாள் உமாவின் பிறந்த நாள். இருவரும் நெருக்கமாக இருந்த பொழுது பல திட்டங்கள் தீட்டி இருந்தார்கள். கிருஷ்ணனுக்கு அனைத்தும் ஞாபகத்தில் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.12 மணி வரை விழித்துக் கொண்டு தான் இருந்தான். போன் செய்து வாழ்த்த தயக்கமாக இருந்ததால், வாட்சப்பில் உடன் வேலை பார்ப்பவர்க்கள் இருக்கும் குருப்பில் “Happy Birthday UMA” என்று குழுமத்தின் பெயரினை மாற்றிவிட்டு உறங்கி விட்டான். விடிந்ததும் அதை பார்த்து விட்டு பலர் வாழ்த்தினார்கள். அனைத்திற்கும் உமா நன்றி சொல்வதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

கல்லூரிக்கு வந்த பின் நேரிலும் சக பெண் ஆசிரியர்கள் உமாவை கட்டியனைத்து வாழ்த்தினார்கள். கிருஷ்ணனுக்கு வெறுப்பாக இருந்தது. தனியாக அவன் கேபினில் அமர்ந்திருந்தான். பிரபாகரன் அவனைத் தேடி வந்தான்.

“டேய், ஏன்டா ஒரு மாதிரி இருக்க?”

“அப்படிலாம் ஒன்னுமில்லையே”

சொல்லி முடிக்கவும் அவன் கேபினிற்கும் உமா நுழையவும் சரியாக இருந்தது. பிரபாகரனை பார்த்து

“சார் நீங்க கொஞ்சம் கிளம்பறிங்களா?” என்றாள்

“ஏன் மேடம், என்ன விஷயம்னு சொல்லுங்க, அவர் இருக்கட்டும்” என்ற கிருஷ்ணனை முறைத்தாள்.

உட்கார்ந்திருந்த கிருஷ்ணன் பக்கத்தில் வந்த உமா “பளார்” என்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.

“ஏன்டா, என் பர்த்டே கூட உனக்கு ஞாபகம் இல்லையா?”

உண்மையில் கிருஷ்ணனுக்கு அவள் அடித்தது அவமானமாக இல்லை. மகிழ்ச்சியாக இருந்தது, அவள் பழைய உமாவாக பேசியதும் அவ்வளவு உற்சாகம், அவளிடம் எதுவும் சொல்லாமல்

“பிரபாகர், நீ கிளம்பு. நாம அப்புறம் பேசுவோம்”

“மச்சி”

“போ ன்னா போடா”

கைகட்டி கிருஷ்ணனை முறைத்துக் கொண்டு நின்றிருந்த உமாவை பார்த்து

“முதல்ல உட்காரேன். பேசிக்கலாம்”

“அதெல்லாம் முடியாது. நீ எப்படி மறக்கலாம்?”

“நான் எங்கே மறந்தேன்? வாட்சப்ப ஓழுங்கா பாரு. நான் தான் 12 மணிக்கு குரூப்ல போட்டு விட்டது”

“ஓ, அப்ப உனக்கு தெரியும், 12 மணி வரை முழிச்சுட்டுருந்துருக்க. ஆனா போன் பண்ண மாட்ட”

இன்னொரு முறை அடித்தாள். இம்முறை முன்பு போல பலமாக இல்லை, செல்லமாக அடிப்பது போல் இருந்தது.

“சாரிம்மா, என் தப்பு தான். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”

“அதெல்லாம் மத்தவங்க நிறைய சொல்லிட்டாங்க, நீ வேற சொல்லு”

“வேறென்ன சொல்லட்டும்?”

“என்னன்னு தெரியாதா? சொல்றீயா அடி வேணுமா?”

“சொல்றேன்மா, அடிக்காத, எப்ப கத்துகிட்ட இப்படி கை ஓங்க? இங்கே பாரு உமா, நான் சொல்றேன். இங்கே வேண்டாம்”

“அப்ப எங்க?”

“நீ சொல்லு…. நீ தான் பர்த்டே கேர்ள். எங்கே சொல்றியோ அங்கே”

“சரி, என்னை ஈவ்னிங் கோவிலுக்கு கூட்டி போய்ட்டு, உன் வீட்டுக்கு கூட்டி போ. அங்கே வச்சு சொல்ற”

“கண்டிப்பா சொல்றேன்”

“அது” என்று கிளம்பியவளை

“உமா”

“என்னடா?”

“ரொம்ப தேங்க்ஸ்டா, நீ வந்து பேசவும் ரொம்ப நல்லாருக்கு மனசுக்கு”

“ம், அப்படியே இருக்கனும், இல்லை பிச்சு பிச்சு”

அவள் சென்ற பின் கிருஷ்ணனுக்கு பறப்பது போல் இருந்தது. “உமா எனக்குத்தான், என் உமா” என்று மனம் தனியாக பாடிக் கொண்டிருந்தது. அன்று மதியம் அவனுக்கும் சேர்த்து உணவு எடுத்து வந்திருந்தாள். ஒரு சிறு இடைவேளை, அவர்களை அதிகம் நெருக்கமாக்கியது. பிரபாகர் தனியாக சந்தித்து பேசினான்.

“என்னடா இது? பார்த்தியா? உனக்கே அவமானமா படலையா?”

“உனக்கு எதுவும் புரியாது பிரபாகர். நீ கஷ்டம், அவமானம்னு சொல்றதுலாம்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு”

“இப்ப அப்படித்தான்டா இருக்கும். கல்யாணம்னு வரப்ப யோசிச்சு பாரு”

“மச்சி, நீ என் மேல அக்கறைல தான் பேசற. ஆனா நான் பார்த்துக்கறேன். நீ விடு”

அன்று மாலை, அவளை வீட்டிற்கு அழைத்து சென்று, குடும்பத்தினரிடம் அறிமுக படுத்தி விட்டு, தன் அறைக்கு அழைத்து சென்று அவள் விரும்பியபடி மண்டியிட்டு காதலை சொன்னான். அதன் பின் நடந்தவைகள் அவர்களது அந்தரங்கம். அதை வெளியே சொல்லக்கூடாது. அதன் பின் அனைவரும் அறிய காதலித்தார்கள். இடையிடையே அடிக்கடி சண்டையும் போட்டுக் கொண்டார்கள். அப்போதெல்லாம் பிரபாகர் வழக்கமான பல்லவியை பாடிக் கொண்டிருப்பான்.

கிருஷ்ணன் தெளிவாக இருந்தான். இந்த உலகத்தில் எங்கெல்லாம் காதல் பூக்கிறதோ அங்கெல்லாம் ஒரு அறிவீலி, அதாவது காதலின் அருமை தெரியாத முட்டாள் ஒருவன் இருப்பான். அவன் காதலில் நடக்கும் ஊடல்களை கஷ்டமென கூறி, காதலை பரிகசித்து சிரித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு காதல் பற்றி புரியாது. அவனுக்கு காதல் தரும் துன்பங்கள் மட்டுமே தெரியும், அது தரும் இன்பங்களை அறியமாட்டான். அதனால் “பார்த்தாயா, நான் துன்பமின்றி மகிழ்வாய் இருக்கிறேன்” என்று சிரிப்பான். அவன் பேச்சையெல்லாம் மதிக்கவே கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்களே காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதை கிருஷ்ணன் அறிந்திருந்தான்.

பல தடைகளை மீறி கிருஷ்ணன் – உமா திருமணம் முடித்து தம்பதியராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனும் காதலர்களை பரிகசித்து சிரித்து கொண்டு தான் இருக்கிறான்.

அதிகாரம்: நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்: 1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு

உரை:
காதல் பற்றியும், காதலர்களுக்கு ஏற்பட்ட தடைகளையும் பற்றியும் ஊரார் அறிந்து கொண்டார்கள். காதலியை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று உறுதிப்பூண்ட காதலன் மடலேறப் போகும் செய்தியையும் ஊர்மக்கள் அறிந்தனர். எனவே அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஊர் மக்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். தன் நிலையைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள் என்பதை எண்ணி நோகிறான். அப்படி நகைப்பவர்கள் அவன் படும் காதல் வலியை உணராதவர்கள். அவன் படும்பாடு அவர்கள் பட்டாலன்றோ தெரியும்! எனவேதான் முட்டாள்தனமாகத் தன்னை இகழ்ச்சிக் குறிப்போடு நோக்குகிறார்கள் என்று வெகுண்டு கூறுகின்றான். காதல் போராட்டத்துக்குட்படாத மாந்தரே தம் போன்று காமநோயால் உழல்பவர்களைப் பார்த்துச் சிரித்து நகையாடுவார்கள் என்று தலைவன் வருந்துவதாக அமைந்த பாடல் இது.

அறிவில்லார்’ என்பதற்கு காதல் நோய் பற்றிய அறிவு

-கதிர் ராத்

379total visits.