கதிர் குறள் – 1327

0
68

“இஷ்டம்னா இரு, இல்லை கிளம்பி உங்க அப்பா வீட்டுக்கு போயிடு”

“என்னை ஏன் போக சொல்றிங்க?”

“சரிம்மா, நீ இருந்துக்கோ. நான் போறேன்”

“எங்கே போறிங்க?”

“எங்கேயோ போறேன், உனக்கென்ன?”

“எனக்கென்னவா? ஏன் பேச மாட்டிங்க? எப்படியாவது என்னை விட்டு ஒழிஞ்சா போதும்னு ஆகிருச்சுல்ல?”

“நான் அப்படி சொன்னனா?”

“இதை தனியா வேற சொல்லனுமா? 2 வருசத்துலயே சலிச்சுட்டனா?”

“தேவையில்லாம வார்த்தைய விடாத ஆர்த்தி”

“வார்த்தைய விட்டது நானா? நீங்களா? எதுக்கெடுத்தாலும் அப்பா வீட்டுக்கு போன்னா என்ன அர்த்தம்?”

“சரி எங்கேயும் போக வேண்டாம், இங்கேயே இரு”

“இங்கேயே நீங்க பண்றதை பார்த்துகிட்டு எதுவும் பேசாம இருக்கனும்?”

“அப்படி என்ன பண்றேன்?”

“என்ன பண்ணனும்? இல்லை நான் கேட்கறேன் எப்ப பாரு ஃப்ரெண்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ்னா எதுக்குங்க கல்யாணம் பண்ணிக்கிறிங்க?”

“தப்பு தான் தெரியாம செஞ்ச தப்பு. அதை மாத்த முடியாது”

“ஓகோ அப்படி ஆகிருச்சா? முடிஞ்சா மாத்திருவிங்க, என்ன முடிஞ்சா? என்னை விவாகரத்து பண்ணவும் யோசிக்க மாட்டிங்கள்ள?”

“ஆமாடி, யோசிக்க மாட்டேன்”

“என்னங்க ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே இருந்திங்க?”

“அம்மா தாயே, நீயே பேச வச்சுட்டு, நான் பேசற மாதிரி பழி போடாத”

“உங்களுக்கென்ன? நான் இங்க இருக்கறதுதானே பிரச்சனை? என்னை கூட்டி போய் எங்கப்பா வீட்ல விட்ருங்க”

“ஏன் உனக்கே போகத் தெரியாதா?”

“தெரியும். நானா போனா நான் கோச்சுகிட்டு போன மாதிரி இருக்கும், உங்களுக்காகத்தானே போறேன், நீங்களே கூட்டி போங்க”

மேலும் வழக்காட விரும்பாமல் சங்கர் அவளை அழைத்து சென்றான். மாமனார் வீட்டின் வாசல் அருகே இறக்கி விட்டு விட்டு நிற்காமல் கிளம்பி வந்து விட்டான். நேராக வேலைக்கு சென்று கவனத்தை மடை மாற்ற முயன்றான். அது அத்தனை எளிதாக இல்லை. திருமணத்திற்கு முன்பு எந்த ஆணிற்கும் தம்பதிகளுக்குள் நிகழும் சண்டை பற்றிய புரிதல் அணுவளவு இருக்கவும் வாய்ப்பில்லை. அனைவரும் தாலியை கையில் எடுக்கையில் இனி வாழ்நாள் முழுக்க நிம்மதியாக இருக்க போகிறோம் என்று நினைத்துதான் எடுக்கிறார்கள்.

தத்தம் மனைவிகளுக்கு இதெல்லாம் பிடிக்கும், இதெல்லாம் பிடிக்காது, அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள இப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று யார்யாரோ சொன்னதை வைத்து, காதலிக்கையில் கிடைத்த அனுபவங்களை வைத்து ஒரு பட்டியலை தயார் செய்வார்கள். ஆனால் அது 100% வீணாகத்தான் போகும். டிசைன் அப்படி. நீங்கள் வருடக்கணக்கில் பழகிய உங்கள் முறைப்பெண்ணோ, காதலித்த காதலியோ திருமணம் ஆகிவிட்டால் புதிய பெண்ணாகி விடுவார்கள். அனைத்தையும் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

முன்பின் தெரியாதவர்களை எப்படி திருமணம் செய்துக் கொள்வது? காதலித்து புரிந்துக் கொண்டு செய்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் சும்மா, காதலிக்கையில் அனைத்தையும் புரிந்துக் கொள்ள முடியுமா? அப்படி என்றால் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள் அனைவரும் சண்டையிடாமல் தான் வாழ்கிறார்களா? இதோ இந்த சங்கர் கூட காதலித்துத்தான் திருமணம் செய்துக் கொண்டான். அதுவும் சொந்த மாமன் மகள் தான். காதலிக்கையில் மணிக்கணக்கில் என்ன பேசி புரிந்துக் கொண்டார்களோ தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டையில் தான் போய் முடிகிறது.

சங்கருக்கு நண்பர்கள் அதிகம். சொல்லப்போனால் மிக அதிகம். அவனுடன் யார் பேசினாலும் சற்று நேரத்தில் நண்பர்களாகி விடுவார்கள். ஆண், பெண், மூத்தவர், இளையவர் என்றெல்லாம் பேதமில்லை. அதிலும் பழகியவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் நெருக்கம் காட்டுவார்கள். அதற்கு காரணம் சங்கரிடம் இரண்டு நல்ல பழக்கம் இருந்தது. ஒன்று நண்பர்களில் யாராவது தங்கள் பிரச்சனைகளை சொல்கையில் உதவ முடிகிறதோ இல்லையோ முழுவதுமாக நேரம் ஒதுக்கி அவர்கள் சொல்வதைக் கேட்பான். அழுபவர்களுக்கு தோள்தானே தேவை.

இன்னொரு பழக்கம் தன்னிடம் சொல்லப்படும் பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டான். இப்படிப்பட்டவனுக்கு நண்பர்கள் அமைவது கஷ்டமா? பலர் உண்டு. அதிகம் போனில் பேசுவார்கள்.

ஆண் நண்பர்கள் மணிக்கணக்கில் பேசுவதையே அவன் மனைவி ஆர்த்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமீபமாக பெண்களும் இவனிடம் நட்பாக பழகவும் தாங்கவே முடியவில்லை. முகத்தைக் காட்டத் துவங்கினாள். சடாரென மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அனைவரையும் துண்டித்து விட முடியுமா? முடியுமா என்பதை விட துண்டிக்க வேண்டுமா என்பது சங்கரின் கேள்வி. அப்படி ஒன்றும் மனைவிக்கு துரோகம் இழைக்கும் செயலை தான் செய்யவில்லையே. மனைவிக்கும் தன் மீது அப்படிப்பட்ட சந்தேகம் இல்லை. “பின் எதற்காக பேசக் கூடாது?” எனக் கேட்டால் “பிடிக்கவில்லை” என்ற ஒற்றைக் காரணத்தைத்தான் சொல்கிறாள். எப்படி ஏற்றுக் கொள்வது?

ஒரே பிரச்சனையை தினமும் ஓயாமல் பேசினால் என்னவாகும்? வெறுப்பாகும், சங்கருக்கும் வெறுத்துப் போனது வீடு. ஒரு கட்டத்தில் அவர்களது காதல் முழுவதும் மறந்து, அவள் இல்லையென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்படி நினைக்கையில்தான் மேலே இருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. மாலை ஆகும் வரை பெரிதாக தெரிவிக்கவில்லை. அதன் பின் என்ன செய்ய என்று தெரியவில்லை. இது வரை மனைவிக்கு போனடித்து பேசவில்லை. என்ன செய்யலாம் என குழம்பினான். அவன் யோசிக்கையில் மனைவியிடம் இருந்து போன் வந்தது. மிக இயல்பாக பேசினாள்.

கொஞ்சம் கூட கோபம் காட்டாமல் ஆர்த்தி பேசியதை சங்கரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி அவளுக்கு கோபம் போய்விட்டதென்றால் அவளுக்குத்தான் காதல் அதிகம் என்றாகி விடும். சமாதானமாகமல் கோபமாக பேசினான். நேரில் போட்ட சண்டையை மேலும் வளர்த்தான். அங்கேயே இருந்துக் கொள் என்று மிரட்டினான். முற்றிலும் தன்னை புதிய மிருகமாக வெளிப்படுத்தினான். பேசி வைத்த பின் தான் ஏன் அப்படி கோபப்பட்டோம் என்று நொந்துக் கொண்டான்.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு மீண்டும் அவனாக அழைத்துப் பேசினான். அப்போதும் காட்டமாகவே பேசினான். இறுதியாக நாளை கிளம்பி வீட்டிற்கு வரச்சொன்னான். ஆர்த்தி அவனை வந்து அழைத்துப் போக சொன்னாள்.

“ஏன், உனக்கு வரத் தெரியாதா?”

“தெரியும். நீ கூட்டி போ”

“வந்தா வா, வரலைன்னா அங்கேயே இருந்துக்க” என்று கத்தி விட்டு போனை வைத்துவிட்டான். இரவு உண்மையில் அவனுக்கு உறக்கமே வரவில்லை. மனைவியின் நினைப்பு அவனை வாட்டி எடுத்தது. அதுவும் காலை விடியும் பொழுதே இன்று ஆர்த்தி வந்து விடுவாள் என்ற உற்சாகத்தோடு தான் எழுந்தான். வீட்டை சுத்தம் செய்தான். ஆர்த்தி பலமுறை சொல்லி செய்யாத விஷயங்களை செய்து விட்டு காத்திருந்தான். நேரமானதே தவிர அவள் வரவில்லை. இதோ இப்போது வந்துவிடுவாள் என்று அவன் மனம் அவனை சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தது. தாமதமானதால் கிளம்பி வேலைக்கு சென்றான். கோபம் கோபமாக வந்தது. போனே செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தான்.

மாலை வீட்டிற்கு வந்த பின் தனக்கு ரீசார்ஜ் செய்துக் கொள்ள மை ஏர்டெல் அப்ளிகேஷனில் முயல்கையில் மனைவி எண்ணில் சுத்தமாக பேலன்ஸ் இல்லாதது தெரியவந்தது. அதனால்தான் அழைக்காமல் இருந்துருப்பாளோ என்று நினைத்து விட்டு எதற்கும் கேட்போம் என போன் செய்தான். ஹலோ என்று ஈனஸ்வரத்தில் பேசினாள். அனைத்து கோபமும் எங்கோ ஓடிவிட்டது.

“ஹேய் என்னாச்சு? ஏன் ஒருமாதிரி பேசற?”

“ஒன்னுமில்லை, சளி பிடிச்ச மாதிரி இருக்கு”

“என்ன பண்ண?”

“நான் ஒன்னும் பண்ணலை”

“டானிக் எடுத்து போனியா?”

“ம்”

“ஏன் வரலை?”

“நீ வந்து கூட்டிப்போவன்னு பார்த்தேன்”

“நான் நீ வருவன்னு பார்த்துட்டுருந்தேன்”

“ம்”

“ஏன் ஒரு மாதிரி பேசற?”

“கஷ்டமா இருக்கு”

“நான் வரேன் இரு”

“எப்ப வர?”

“இப்போ கிளம்பிட்டேன்”

சென்று இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு அழைத்து வந்தான். ஆர்த்தி அமைதியாகவே இருந்தாள். ஏதாவது பேசிக் கொண்டே இருப்பவள். சங்கருக்கு தாளவில்லை. அருகே சென்று அமர்ந்து பேசினான்.

“சாரிடா மயிலு”

“ம் போ”

“நிஜமா என் தப்புதான்”

“…..”

“என் செல்லம்ல”

“…..”

“இங்கே பாரு, இப்படி பேசாம இருந்தீனா நான் சும்மா இருக்க மாட்டேன்”

“……”

“உன்னை எப்படி பேச வைக்கறேன் பாரு” என்று முத்தமிட துவங்கினான். அவன் செய்கையை இரசித்தாளே ஒழிய ஆர்த்தி பேசவே இல்லை. அவன் அதையே சாக்காக வைத்துக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறினான். அவள் அப்போதும் பேசவில்லை. அன்று முழுக்க அவன் தான் அனைத்தும். விடியும் வரை அவள் எஜமானியாகவும் அவன் அடிமையாகவும் ஆனார்கள்.

ஊடலில் கோபப்பட்டு கௌரவம் பார்த்தால் அப்படியே இருந்து விட முடியுமா? திரும்ப ஊடல் முடிகையில் என்னாகும் என யோசிக்க வேண்டாமா? மற்ற விஷயங்களில் எப்படியோ? தம்பதிகளுக்குள் பிரச்சனை என்றால் முதலில் கோபம் களைந்து இறங்கி வருபவர்கள் தோற்றதாக தெரியும். ஆனால் உண்மையில் அவர்கள் தான் ஜெயிக்கிறார்கள். அது ஊடலில் புரியாது. கூடலில் தான் புரியும்.

அதிகாரம்: ஊடல் உவகை      குறள் எண்: 1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர். அந்த உண்மை, ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

-கதிர் ராத்

278total visits.