கதிர் குறள் – 1328

0
41

மல்லிக்கைப்பூவும் பட்டுப்புடவையும் சேர்ந்து தாக்கினால் என்னவாகும் ஆண் மனம்? தாங்குமா? காதல் என்னும் நீர்நிலை நிரம்பி காமம் என்னும் கரையை உடைக்க முட்டத் துவங்கும் தருணமாக அன்று அமைந்தது. வீட்டில் இருந்து ஒன்றாகத்தான் கிளம்பினார்கள். அப்போது கூட விமலுக்கு எதுவும் வித்தியாசமாக படவில்லை. மண்டபத்தில் தான் உள்ளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான்.

திருமணம் என்பதே ஒரு கொண்டாட்ட நிகழ்வு தானே. அதிலும் நண்பர்களின் திருமணம் என்றால் எப்படி இருக்கும். இந்த திருமணத்தில் சிறப்பு என்னவென்றால் மணமக்கள் மோகன் – சுகன்யா முறையே விமல்-மதுமிதா தம்பதியின் நண்பர்கள். அதனால் மற்ற உறவினர்களின் விசேஷ நிகழ்விற்கு செல்வது போல் அல்லாமல் வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாய் கிளம்பினார்கள்.Inline image 1சொல்லப்போனால் மேடையில் நிற்கையில் மணமக்களுக்கு எள்ளளவும் நாம் குறைந்து விடக்கூடாது என முடிவெடுத்து நேர்த்தியாக வந்திருந்தார்கள். மேடையில் நின்று படம் எடுத்துக் கொண்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து தத்தம் நட்பு வட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். சற்று நேரம் கேலியும் கிண்டலுமாக அரட்டை போய் கொண்டிருக்க, விமல் மெதுவாக தன் மனைவி என்ன செய்கிறாள் எனப் பார்த்தான். தன் தோழிகளுடன் முழு வீச்சில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். மிகவும் கலாட்டா பேர்வழி. தோழிகளுக்கிடையே தான் சுயரூபம் வெளிப்படுகிறது. அங்கு அவள் சிரிக்கும் சத்தம் இங்கு கேட்குமளவு உற்சாகமாக இருந்தாள்.

அக்கணம் தன் மனைவியை மிகவும் இரசித்தான். மனம் அவள் அருகாமையை கேட்டது. சற்று நேரத்தில் உடலும். தனியறையில் தான் உடல் விழிக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதற்கு எப்போது வேண்டுமானாலும் பசி எடுக்கும். சுற்றிலும் நண்பர்கள் இருந்தாலும் அடிக்கடி அவள் பக்கமே பார்வை சென்றது. எவ்வளவு நேரம் மது இதனை கவனிக்காமல் இருப்பாள். தொலைவில் இருப்பவனிடம் சைகையில் “என்ன?” எனக் கேட்க “ஒன்றுமில்லை” என சொன்னாலும் அவனது அசட்டு சிரிப்பு அவன் நாட்டத்தை போட்டுடைத்தது. ஒரு வருடமாக அவனுடன் குடும்பம் நடத்துபவளுக்கு தெரியாதா அவனை?

அவளுக்கும் பிடித்திருந்தது. தன் கணவன் தன்னை சைட்டடிப்பதை விரும்பாத மனைவி உண்டா? மேலும் அவனை செய்கைகளில் சீண்டிக் கொண்டிருந்தாள். சாப்பிட செல்கையில் ஆர்வமாக அவளுடன் சென்றான். எவ்வளவு நேரம் பிரிந்திருப்பது? உரசலுடன் உணவு உள்ளே சென்றது. விமலுக்கு தாங்கவில்லை. அவனுக்கு இந்த சூழல் பிடித்திருந்தது. ஒருவித போதை, ஒரு வித மயக்கம். தனக்கானவள் மீதான் ஏக்கம், இதோ கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறாள். சீண்டுகிறாள். கண்களில் கடித்து சாப்பிடுகிறாள்.

நெருங்கிய நண்பர்களின் திருமணம். உடனே எல்லாம் கிளம்பி விட முடியாது. இருவரின் பெற்றோகளுக்கும் வேறு நன்கு அறிமுகமானவர்கள். 10 மணி வரை மண்டபத்தை விட்டு நகர முடியாது. தங்கள் திருமணத்தில் இருவரும் கூடவே இருந்ததற்கு நன்றிக்கடனை தீர்த்தாக வேண்டும். ஆனால் அதற்கென பிரிந்தெல்லாம் இல்லை. இருவரும் அருகருகே தான் அமர்திருந்தார்கள். அதிலும் விமல் மதுவின் கைகளை விடவேயில்லை. அவள் என்ன எனக் கேட்டால் “லவ் யூ” என்றான்.

மதுவுக்கும் கணவன் நிலை புரிந்தது. கைகளை தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள். ஒருவழியாக நேரமானதும் இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றார்கள். அறைக்கு வந்த பின் சம்பிரதாயங்களுக்கெல்லாம் காத்திருக்கவில்லை. சம்பிரதாயம் என்றால் வழக்கமாக கணவன்-மனைவிக்கும் இயல்பாக எப்படி நடக்கும் என்றால் அனைத்து வேலைகளையும் முடித்து வைத்து விட்டு, சிலிண்டர் அணைத்தாகி விட்டதா? பாத்ரூம் விளக்கு அணைத்தாயிற்றா? கதவு சாத்தியாகி விட்டதா? என்றெல்லாம் பார்த்து விட்டு இரவு உடைக்கு மாறிய பின் படுக்கையில் படுத்தபின் மெதுவாக துவங்கும்.

இம்முறை அப்படி அல்ல, அறைக்குள் நுழைகையிலேயே நடந்தது. முத்தங்களுடன் துவங்கிய இருவரும் மற்றவரின் சத்தங்களை பொருட்படுத்தாமல் விளையாட்டில் இறங்கினார்கள். இடையில் செய்த வெளிவேலை என்றால் ஃபேனை வேகமாக வைத்தது தான். அப்படியும் வேகத்தினால் வந்த வியர்வையை தவிர்க்க முடியவில்லை. ஒய்ந்த கணத்தில் அவன் நெற்றி முழுக்க வியர்வை. இறுதியாக அழுத்தி முத்தமிட்டு விலகியவன் மீதேறி அவள் முத்தமழை பொழிந்து, நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை இதழால் துடைத்தாள். மொத்த நிகழ்வில் அவளது கடைசி நெற்றி முத்தம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது. ஒரு அங்கீகாரமாக ஏற்றுக் கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் அவர்களுக்கிடையேயான புரிதல் முந்தைய நாட்களை விட அதிகமாகி இருந்ததை இருவருமே உணர்ந்திருந்தார்கள். காதலின் மாயம். நல்ல தம்பதிகளுக்கு நல்ல தாம்பத்யம் அவசியம். ஏதோ ஒரு காரணத்தினால் நடக்கட்டும். அது இருவரையும் இறுக்கமாக்கும். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 10 நாட்களுக்கு பிறகு இருவருக்குள்ளும் மெலிதாக முட்டிக் கொள்ள துவங்கியது.

யார் மீது தவறு என்று சொல்ல முடியாது. மது அடிக்கடி தன் தோழி சுகன்யாவின் புது திருமண வாழ்க்கை பற்றி சொல்வாள். இத்தனை நாள் அம்மா வீட்டில் தங்கினார்களாம், தேனிலவு இங்கெங்கே சென்றார்களாம். கணவன் இதெல்லாம் வாங்கி தந்தானாம் என்று, சாதாரணமான விஷயம் தான். அனைத்து பெண்களுக்கும் இந்த பழக்கம் உண்டு. அவர்கள் கேட்கும் அனைத்து விஷயங்களையும் கணவனிடம் பகிர்வது அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் விமலுக்கு அது ஏதோ தன்னை தன் நண்பனுடன் ஒப்பிடுவது போலே இருந்தது.

என்ன தான் மது தன் தோழியை பற்றி பேசினாலும் அவள் கணவன் என சொல்வது தன் நண்பனைத்தானே? அது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எடுத்ததும் அப்படியே சொல்லிவிட முடியுமா? அதனால் அந்த பேச்சை எடுக்க வேண்டாம் என நாசுக்காக தவிர்க்கப் பார்த்தான். எடுபடவில்லை. ஏனென்றால் மது அவர்களை பற்றி தவறான செய்திகளை சொல்லி வம்பளக்கவில்லையே, இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியாக சொல்கிறாள். அதனால் தினம் தினம் அவர்கள் பற்றி காதில் விழும் செய்தியை சொல்லிக் கொண்டே தான் இருந்தாள்.

விமலாவது தனக்கு இது தான் பிரச்சனை என வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். அவன் அதில் கௌரவம் பார்த்து அவள் அந்த பேச்சை எடுக்கையில் நேரடியாக சொல்லாமல், வேறு ஏதேதொ சொல்லி பேச்சை மாற்ற முயற்சித்தான். எங்கு சுற்றினாலும் மது மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கினாள். இதை தவிர்க்க கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து விழத் துவங்கினான். பதிலுக்கு அவள் ஏதாவது பேச, இவனுக்கு எரிச்சல் கோபமாக மாற வாக்குவாதம் பெரிதாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படியேத்தான் போனது. இறுதியாக “என்னிடம் பேசாதே” என்று அவன் கத்தும் படி ஆனது.

அவளும் சுத்தமாக பேச்சை குறைத்துக் கொண்டாள். எதற்கென்றே தெரியாமல் இருவருக்குள்ளும் ஒரு பெரிய இடைவெளி உருவானது. அதற்கு இருவருமே காரணம் இல்லை என்பது தான் விசித்திரம். இப்படியே இருந்து விட முடியுமா? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துத்தானே தீர வேண்டும். யார் முதலில் சகஜமாக பேசுவது? தன் பக்கம் தவறு என தோன்றினால் தான் போய் பேசலாம் என்று தோன்றும். இருவருக்குமே அப்படி தோன்றவில்லையே…!

இரு நாட்களுக்கு பிறகு தன் அலுவலக கோப்பு ஒன்றினை விமல் கிளம்பும் அவசரத்தில் தேட, கேட்டால் உதவலாம் என மது ஒதுங்கி நின்றாள். அந்த அவசரத்தில் கூட உதவவில்லை என்ற கடுப்பிலும் கோப்பு கிடைக்காத கோபத்திலும் “எதற்கும் உதவாமல் எதற்கு வீட்டில் இருக்கிறாய்?” என கத்தி விட்டு அலுவலகம் கிளம்பி சென்றான். ஆடிட்டிங் மதியத்திற்கு மேல்தான் என சொல்லவும் மீண்டும் தேடலாம் என வீட்டிற்கு வந்தான். அவன் வந்து கதவை திறக்கையில் அலுவலக நண்பன் போனடித்து அந்த கோப்பு அலுவலகத்தில் தான் இருக்கிறது என்று சொன்னான். நிம்மதியானது. அவசரப்பட்டு மனைவியிடம் கத்தி விட்டோமா என தோன்றியது. என்ன செய்கிறாள் என பார்ப்போம் என வீட்டினுள் நுழைந்தான்.

வீட்டில் மனைவியை காணவில்லை. எல்லா அறையிலும் தேடிப் பார்த்து விட்டு, வந்தமர்ந்து மனைவி மொபைலுக்கு போன் செய்தான். போன் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று இருக்கிறாள். அது தனியாக சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது. “எங்கே போயிருப்பாள்?” என்ற யோசனையுடன் அமர்ந்தவனுக்கு திடிரென பயம் வந்தது. ஒருவேளை கோபித்துக் கொண்டு போய்விட்டாளோ? அச்சச்சோ, என்ன செய்யலாம்? முதலில் எங்கே போய் இருப்பாள்? அவள் அம்மா வீட்டிற்கு போயிருப்பாளா? போன் செய்து கேட்கலாமா? ஒருவேளை அங்கு செல்லாமல் இருந்து நான் கேட்டால் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஒருவேளை சுகன்யா வீட்டிற்கு சென்று இருப்பாளா? எதற்கும் கேட்கலாம் என போன் செய்தான். முதலில் இயல்பாக நலம் விசாரித்து விட்டு, தன் மனைவி அங்கு வந்தாளா எனக் கேட்டான். இல்லையே என சொல்லவும் பதறாமல் சமாளித்து பேசி முடித்தான். ஆனால் உள்ளுக்குள் பதட்டம் அதிகமானது. எங்கு போயிருப்பாள்? அவள் அம்மா வீட்டிற்குதான் போயிருப்பாள்? அதை கேட்டால் மாட்டிக் கொள்வோம். 10 நிமிட பயணம் தான். ஒருவித பதட்டத்துடன் கிளம்பினான். சென்று பார்த்தால் வீடு பூட்டி இருந்தது. என்ன செய்யலாம்? அவள் தோழிகள் வேறு யாராவது வீட்டிற்கு சென்று இருப்பாளா? விசாரித்து பார்க்க வேண்டியது தான். அவள் போன் தான் வீட்டிலேயே இருக்கிறதே, அதில் இருக்கும் தோழிகளுக்கு போனடித்து விசாரிக்க வேண்டியது தான்.

வீட்டிற்கு வந்து திட்டமிட்டபடி செய்தான். முதல் போனிலேயே உளறினான். பழக்கமில்லாத பெண்ணிடம் தான் இன்னார் கணவன் என சொல்லி விசாரிப்பது சிரமமாக இருந்தது. ஒரு போனிற்கு மேல் பண்ணவில்லை. என்ன செய்யலாம் என குழம்பிக் கொண்டிருக்கையில் கதவை திறந்துக் கொண்டு மதுமிதா உள்ளே வந்தாள். அவளை பார்க்கவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“எங்கே போன?”

“மாடி வீட்டுக்கு போனேன், துளசியை பார்க்க”

“சொல்லிட்டு போக மாட்ட”

“யார்கிட்ட சொல்லிட்டு போக?”

“சரி, போனை எடுத்து போக வேண்டியது தானே?”

“போன்ல சார்ஜ் இல்லைன்னு சார்ஜ் போட்டு போனேன்”

“ச்சே போடீ, கொஞ்ச நேரத்துல மனுசனை பதற வச்சுட்ட”

“ஏன், என்னாச்சு?”

“நான் உன்னை காணோம்னு எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா?”

“காணோம்னா? ஓ…. வீட்டை விட்டு கோச்சுட்டு எங்கேயோ போயிட்டன்னு நினைச்சிங்களா?”

“ம்”

மதுவுக்கு வேடிக்கையாக இருந்தது அவனை பார்க்க, அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

“எங்கெல்லாம் போய் தேடுனிங்க? என்ன குழப்பம் பண்ணி வச்சுருக்கிங்க?”

சொன்னான்.

“அய்யோ, அறிவே, ஆளைக் காணோம்னா முதல்ல அக்கம்பக்கத்துல விசாரிக்கனும். அடுத்த தடவை காணோம்னா முதல்ல பக்கத்துல இருக்க வீட்ல கேளுங்க சரியா?”

“ம், ம்கூம், நீ இனி எங்கேயும் போகக்கூடாது”

“எங்கேயும் போகக்கூடாதா?”

“ஆமா”

“எங்கேயும் போகாம உங்க கூடவே இருக்கவா?”

“ம்”

“கூட இருந்து என்ன செய்யட்டும்?”

“எதுவும் செய்யலனாலும் பரவாயில்லை. என் கூடவே இரு”

“என் ராஜாவுக்கு என்னை விட்டுட்டு இருக்க முடியலையா?”

“ஆமா”

“அப்புறம் ஏன் ஒரு வாரம் சரியா பேசலை?”

அவள் கையை பிடித்து

“சாரி, இனி ஒழுங்கா பேசறேன்”

சிறுபிள்ளையாய் மாறி இருக்கும் தன் கணவன் தலையை கோதி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு அன்றைய இரவு ஊடலின் இறுதியில் கிடைத்த முத்தத்தின் நினைவு வந்தது. அன்று முடிந்த இடத்தில் இருந்து துவங்கலாமா என யோசித்தான். அந்த எண்ணம் வந்து விட்டால் பிறகென்ன யோசனை? பதிலுக்கு முத்தமிட்டு துவங்கி இருந்தான்.

அதிகாரம்: ஊடல் உவகை   குறள் எண்: 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை, ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.

-கதிர் ராத்

156total visits.