கதிர் குறள் – 1329

0
46

இணையத்தில் மூழ்கி இருந்தான் பிரகாஷ். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களின் குருப் உயிரோடு இயங்கிக் செய்து கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரியும், எந்த வாட்சப் குருப்பும் துவங்கிய 10 நாட்கள் ஆரோக்கியத்துடன் இருந்து பின் படுத்த படுக்கையாகி “குட்மார்னிங், குட் நைட், பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கடைசிகால மூச்சை விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் கோமாவிற்கு போய், பின் அப்படியே இறந்து விடும். அடுத்து அதற்கு உயிர் வருவதற்காக ஏதாவது சிறப்புக் காரணம் தேவைப்படும். அது யாராவது நண்பன் ஒருவரின் திருமணத்திற்கு செல்ல திட்டமிடுதலாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இம்முறையும் அப்படித்தான். கல்லூரி நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு செல்வது குறித்து பேச துவங்கிய நண்பர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.

வழக்கமாக அதிக நேரம் போகும் என தெரிந்தாலே வாட்சப்பை கணிணியில் உபயோகிக்கும் வண்ணம் மாற்றிக் கொள்வான். பலருடன் உரையாட அதில் தான் வேகம் கிடைக்கும் என்று. ஒருவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவன் கேள்வி கேட்பான். சுவாரசியமாக போய் கொண்டிருக்கையில் மனைவி அஞ்சலியை கவனிக்க தவறி விட்டான். அவளும் இவன் கவனிப்பதாக நினைத்துக் கொண்டு சமையலறையில் இருந்தவாறு 15 நிமிடங்களுக்கு மேலாக தனியாக பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே சரியான நேரத்தில் உம் கொட்டிக் கொண்டே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

ஆண்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கமே இதுதான். ஆரம்பத்திலேயே மனைவியிடம் இது மாதிரி வேலையாக இருக்கிறேன், தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லி விடலாம். அதை சொல்வதற்கு ஒரு சலுப்பு. இது போன்ற சின்ன சின்ன அலட்சியங்கள் தான் பெண்களுக்கு அதிலும் மனைவிகளுக்கு சுத்தமாக பிடிக்காத, அதிக எரிச்சல் தரக்கூடிய விஷயங்கள். தெரிந்தும் பிரகாஷ் இதை அஜாக்கிரதையால் செய்தான். அவன் இருக்கும் இடத்திற்கே இரவு உணவு வந்தது. சாப்பிட்டுக் கொண்டே தொடர்ந்தான். குறைந்த பட்சம் உணவை கொண்டு வருகையில் மனைவியின் முகத்தை கவனித்திருந்தாலோ, அவள் எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்திருந்தாளோ அவள் கோபித்துக் கொண்டிருப்பதை புரிந்துக் கொண்டிருப்பான்.

நீண்ட நேரம் பதில் அளிக்காத கணவன் மிகவும் சுவாரசியமாக கணிணியில் ஏதோ செய்துக் கொண்டிருப்பதை பார்க்கவுமே அஞ்சலிக்கு தலை உஷ்ணமானது. எது வரை கண்டு கொள்ளாமல் இருப்பான் என பார்க்கலாம் என்றுதான் எதுவும் கேட்காமல் பேசாமல் இருந்தாள். எவ்வளவு நேரம் சும்மா இருப்பது என சமையலறையிலேயே சாப்பிட்டு விட்டாள். இருந்தும் அவன் எதுவும் பேசாமல் இருக்கவும் சாப்பாடு கொண்டு தருகையில் முகத்தை பார்த்து விட்டு “ஏன் உம்மென இருக்கிறாய்?” என்றாவது கேட்பான் என எதிர்பார்த்தாள். அப்போதும் அவன் கவனிக்கவில்லை. கடுப்பின் உச்சத்திற்கு சென்று விட்டாள். சமையலறையில் அதற்கு மேல் எந்த வேலையும் செய்ய பிடிக்காமல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, அவன் இருக்கும் அறைக்கு வந்து ஷோபாவில் சாய்ந்து படுத்தாள்.

அவன் அப்போதும் கவனிக்கவில்லை என்றதும் முகத்தை மேலும் உம்மென ஆக்கிவிட்டு, ஹெட்போன் போட்டுக் கொண்டு பாடல்களை கேட்க துவங்கினாள். கிட்டத்தட்ட 4 பாடல்கள் கேட்ட பின்னர்தான் அஞ்சலியை கவனித்தான் பிரகாஷ்.

“என்ன அஞ்சூ? பாட்டு கேட்கறியா? சாப்பிடலை? வேலைலாம் முடிஞ்சதா?”

இதைக் கூட திரும்பி பார்க்காமல் கேட்கவும் வெறுத்து போய், அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை. ஒருவேளை மனைவிக்கு எதுவும் உடம்புக்கு முடியவில்லையோ என நினைத்து

“என்னடா ஏதும் தலைவலியா?” என்றான். பதிலில்லை. சற்று நேரம் பார்த்து விட்டு எழுந்து வந்து அவள் நெற்றியில் கை வைத்த படி கேட்டான். “என்ன செய்யுது?” என்றான். எதுவும் சொல்லாமல் இன்னும் நன்றாக திரும்பி படுத்துக் கொண்டாள்.

“ஹேய் என்னாச்சுடா? கேட்கறேன் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்”

பதிலில்லை. உடனடியாக கோபம் ஏறியது. “ஃபைன், சொன்னா சொல்லு, சொல்லலைன்னா இப்படியே படுத்துக்க” சென்று மீண்டும் இணையத்தில் முழுகினான். ஆனால் அஞ்சலியின் செய்கை அவன் உற்சாகத்தை உறிஞ்சி இருந்தது. அதனால் அவனால் முன்பு போல் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விரைவில் அனைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான். பின் மீண்டும் எழுந்து வந்து அனைத்து அறைகளிலும் மின்விளக்குகளை அனைத்து விட்டு வந்து படுத்தான். கொஞ்ச நேரத்திற்கு மேல் முடியவில்லை. கோபமெல்லாம் கடந்திருந்தது. சென்று மனைவியை உசுப்பினான்.

“அஞ்சூ, என்னடா, ஏதாவது கோபம்னா சொல்லுடா”

“….”

“பிளிஸ்மா, என்னாச்சு?”

“….”

எதுவும் பதில் வராமல் இருக்கவும் பலம் கொடுத்து அவளை திருப்பினான். அவள் கண்களை கைகளால் மறைத்திருந்தாள். அதை எடுத்து பார்க்கும் பொழுதுதான் அவள் அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

“அஞ்சூ, என்னாச்சுடா?”

“…”

“பிளிஸ் என்னன்னு சொல்லுடா”

“ப்போ, என்கிட்ட பேசாத”

“ஏன்? நான் என்ன பன்னேன்?”

“ப்போ, போய் சிஸ்டத்தையே கட்டிட்டு அழு”

“ஓ சிஸ்டம்ல ரொம்ப நேரம் இருந்ததை சொல்றியா? ரொம்ப நாள் கழிச்சு காலேஜ்மெட்ஸ் கூட சேட்டிங் போச்சுடா, அதான்”

“நான் பேசறது கூட உன் காதுல விழலைல்லை?”

“சாரிடா, அதுலயே கவனமா இருந்தது தப்புதான்”

“நீ அதுல கவனமா இருந்தது கூட தப்பில்லை. சாப்பாடு கொண்டு வரப்ப கூட என் முகத்தை கவனிக்க தோணலை. இட்ஸ் ஓகே, ஆனா இங்கே நான் கோச்சுட்டு படுத்துட்டுருக்கேன். அப்பவும் நீ பாட்டுக்கு போய் படுத்துக்கற? அவ்வளவுதானா?”

“ஹேய் அப்படியில்லைடா”

“அப்படித்தான். எனக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரிஞ்சுக்காம நீ எப்படி தூங்க போலாம்? இதான் நீ என்னை பார்த்துக்கறதா? காதலிக்கும் போது எப்படில்லாம் பாத்துக்குவன்னு சொன்ன?”

“நான் தான் கேட்டேன் இல்லை? நீதான் எதுவும் சொல்லலை. கோபம்னா திட்டி சண்டை போடும்மா, வந்து அமைதியா படுத்துகிட்டா எனக்கு எப்படி புரியும்?”

“ஓ நான் பேசறதே காதுல வாங்காதவங்களை திட்டி மட்டும் என்ன ஆகப்போகுது? தனியா பைத்தியம் மாதிரி புலம்பிட்டுருக்க வேண்டியதுதான்”

“ஹேய் சாரிடா அம்மு. சாரி சாரி சாரி. என்னோட தப்புதான். ரொம்ப பெரிய தப்பு. உனக்கென்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்காம எனக்கு கோபம் வந்துருக்க கூடாது சாரி மன்னிச்சுரு”

“…………..”

“பிளிஸ்டா, சாரி”

“…..”

“எழுந்திரு, வா பெட்டுக்கு வா, அங்கே வந்து படு, நீ என்ன சொன்னாலும் கேட்கறேன், முதல்ல நீ சாப்பிட்டியா சொல்லு”

“சாப்பிட்டேன், நீ போ, எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு, பாத்திரம்லாம் கழுவி வைக்கனும்”

“10 மணியச்சும்மா, நாளைக்கு பாத்துக்கலாம், வா வந்து படு”

“நாளைக்கு காலைல எழுந்தும் நான்தான் செய்யனும், அதுக்கு இப்பவே செஞ்சுட்டு படுக்கறேன்”

“சரி இங்க பாரு, என்னால தானே அந்த வேலை கெட்டது, நானே செய்யறேன்”

“அய்ய, ப்போ, போய் படு”

“ஹேய் என்ன லுலுவாய்க்கு சொல்றனா? இரு”

சொன்னபடி சமையலறைக்கு சென்று பாத்திரங்களை கழுவ துவங்கினான். பிரம்மச்சாரியாக நண்பர்களுடன் தங்கியிருக்கையில் அனைவரும் சமைக்க தெரிந்தவர்கள். முறை போட்டு சமைப்பார்கள். பிரகாசுக்கு தினமும் பாத்திரம் கழுவும் வேலைதான். அதனால் முன் அனுபவம் இருந்ததால் மிக வேகமாக அனைத்தையும் கழுவி கவிழ்த்து விட்டு வந்தான்”

“ஹேய் முடிச்சுட்டியா?”

“ம்”

“அதுக்குள்ளவா?”

“ஹேய் இதுல என்ன இருக்கு?”

அவன் வந்த பேச துவங்கிய நிமிடத்திலேயே கோபப்பானையில் ஓட்டை விழுந்து கோபம் வெளியேற துவங்கி இருந்தது. அவள் வேலையை அவனாக செய்யவும் மொத்தமாக கோபம் காலியாகியிருந்தது. அது அஞ்சலி முகத்திலேயே நன்றாக தெரிந்தது. ஆனாலும் இன்னும் சற்று நேரம் இழுக்கலாம் என நினைத்தாள். அது பிரகாசிற்கும் புரிந்தது. நடிக்கும் மனைவியை சமாதானப்படுத்துவதும் நன்றாகத்தான் இருக்கும்.

“என்ன கோபம் போச்சா?”

“ம்க்கூம்”

“இதுக்கு அர்த்தம் என்னன்னு எடுத்துக்க?”

“ஒன்னும் எடுத்துக்க வேண்டாம், பேசாம தூங்கு”

“ஏன்? நான் தூங்க மாட்டேன்”

“தூங்காத, எனக்கென்ன? நான் தூங்கறேன்”

“நான் விடமாட்டேன்”

“ஏன் விடமாட்ட?”

“அப்படித்தான்”

“என்ன அப்படித்தான்? ஏற்கனவே கோபத்துல இருக்கேன். பேசாம படுத்து தூங்கு”

“அதான் உன்னலாம் கோபத்தோட விட்டுட்டு தூங்க முடியாது, தூங்கன பிறகு எழுந்து தலைல கல்லை தூக்கி போட்டா?”

“பாருடா, அவ்வளவு பயமா?”

“ஆமா, உனக்கு கோபம் போற வரைக்கும் தூங்க விடமாட்டேன்”

“என்ன செய்வ?”

“நீ சொல்றத செய்வேன்?”

“ஓ, அப்ப உட்கார்ந்து என் காலை பிடிச்சு விடு”

எழுந்து அமர்ந்து பிடித்து விட்டான். காலிற்கு சொடுக்கு எடுத்து விட்டான். உள்ளங்காலை கூச செய்து சிரிக்க வைத்தான்.

“போதும் போதும் கையை பிடிச்சு விடு”

வேண்டுமென்றே வலிக்கும் படி பிடித்து விட்டான்.

“ப்பா, போதும் விடு, நீ பிடிக்கவே வேண்டாம்”

“வேற ஏதாவது செய்யனுமா?”

“ஒன்னும் வேண்டாம், நீ தூங்கு”

“கோபம் போயிருச்சா?”

“இல்லை”

“அப்புறம் எப்படி தூங்கறது? தூங்க விடமாட்டேன்”

“ப்பா, எனக்கு கோபம் போயிருச்சு, ஆளை விடு”

“கோபம் போயிருச்சா, இதுக்குத்தானே காத்துட்டுருந்தேன்”

“ஏன் என்ன செய்ய போற?”

எதுவும் பேசாமல் அவளுக்கு மிகுந்த கூச்சமேற்படும் இடங்களை சீண்ட துவங்கினான்.

“ஹேய் பிரகாஷ், என்ன பன்ற?”

“என்ன பண்ணா உனக்கென்னடி?”

“இங்கே பாரு டைமாச்சு, ஒழுங்கா தூங்கு”

“ஏன் டைமானா என்ன?”

“நாளைக்கு 2 பேரும் வேலைக்கு போக வேண்டாமா?”

“அதெல்லாம் காலைல பார்த்துக்கலாம்”

“ஓஹோ அப்புறம்?”

“அப்புறம் என்னன்னு தெரியாதா? முட்டைக்கன்னி, இன்னைக்கு உன்னை என்ன செய்யறேன் பாரு”

அவன் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள

“டேய் நீ பேசறதை பார்த்தா விடியற வரை விடமாட்ட போல?”

“ஆமா, எனக்கு இந்த 12 மணி நேர இராத்திரி/பகல் பத்தாது. நீளமான இரவு வேணும் உன் கூட”

“எதுக்கு?”

“ம், உன்னை சமாதானபடுத்த”

அதிகாரம்: ஊடல் உவகை குறள் எண்: 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

-கதிர் ராத்

242total visits.