கதிர் குறள் – 221

0
177

”டேய், எங்கடா வாசல்ல பைக்க காணோம்? நீ உள்ள இருக்க? பைக் எங்கடா?”

”பதறாதடா, எங்க கம்பெனி எலெக்ட்ரிஷியன் குமார் தெரியும் இல்லை, அவன் எடுத்துட்டு போயிருக்கான், நைட்டுக்குள்ள கொண்டு வந்து கொடுத்துருவான்.”

”டேய் மச்சி,  செம கிரேட் டா, ஒரு அசிஸ்டென்ட் மேனேஜரா இருந்துகிட்டு இவ்ளோ சகஜமா உனக்கு கீழே வேலை பார்க்கறவங்களோட பழகற, என்னாலலாம் முடியாதுப்பா.”

”எல்லாம் ஒரு காரணமா தான்டா”.

”என்ன காரணம்?”

”முதல்ல ஒருநாள் அவசரத்துக்கு கேட்டான். கொடுக்கலாமா வேணாமானு யோசிச்சேன். இப்ப நாட்ல எலெக்ட்ரிஷியன் வேலைக்கு எவ்வளாவு டிமாண்ட் தெரியுமா? கூப்பிட்டா உடனே எவனும் நம்ம அவசரத்துக்கு வரமாட்டான். அப்படி வரனும்னா டபுள் பேமென்ட் கேட்பான். நம்ம குமாருக்கு எலெக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலை எல்லாம் அத்துப்படி. வெளி வேலைக்கும் போய்ட்டு தான் இருக்கான். கம்பெனில வாங்கற சம்பளத்தை விட அதுல தான் நிறைய சம்பாதிக்கறான். அவன்கிட்ட பைக் இருக்கு, ஆனா என்னோடது மாதிரி லட்ச ரூபாய் பைக் அவனுக்கு அப்பப்ப தேவைப்படுது. அதிகம் 2 மாசத்துக்கு ஒரு தடவை தான் கேட்பான். பயங்கர விசுவாசம். நடுராத்திரி போன் பண்ணி கூப்டாலும் வந்து செஞ்சு தந்துட்டு போவான். அதுவும் இல்லாம கம்பெனில நிறைய உள்வேலைக்கு அவன் தேவை. இந்த மாதிரி விசுவாசிங்களாம் கிடைக்கறது கஷ்டம்னு இவனை பக்கத்துல வச்சுக்கறேன்”.

”ஏன்டா ஒரு தடவை பைக் கேட்கறதுக்குள்ளவா இவ்ளோ யோசிச்சுட்ட”?

”மச்சி, வாழ்க்கைல, அதுவும் குறிப்பா பணம் சம்பாதிக்கனும்னு நினைச்சுட்டாலே யுத்தத்துல இறங்கற மாதிரி தான். யுத்தம்னா சேனை முக்கியம். ஆள்பலம், உன் பக்கம் உனக்காக நிக்க எத்தனை பேர் இருக்காங்கங்கறது தான் கணக்கு. எல்லா ஆட்களயும் பணத்தை வச்சு வாங்கிட முடியாது. இப்படித் தான் சேர்த்துக்கனும்”.

”என்னடா இப்படி இருக்க? அப்ப ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போட தான் பழகுறியா? என்கிட்டயுமா?!”

”டேய் எல்லார்கிட்டேயும் அப்படி கிடையாதுடா, ஆனா சிலர்கிட்ட காரியம் ஆகனுங்கறதுக்காக தானே பழகனும். அவ்வளவு ஏன்டா? ஃபேஸ்புக்லயே நமக்கு லைக் போடுவாங்கன்னு தானே சிலரை லிஸ்ட்லயே வச்சு அவங்களுக்கு லைக் போட்டுட்டுருக்கோம்.”

”அப்ப ஒருத்தருக்கு முழு மனசோட எதையும் எதிர்பார்க்காம கொடுக்கறதோ, பழகறதோ தப்புங்கறியோ?”

”குழப்பிக்கற பாரு, ஒருத்தனுக்கு சுத்தமா முடியலை, கஷ்டத்துல இருக்கான், அவனுக்கு உதவி செஞ்சா, உதவின்னா என்ன அதிகமா செலவு பன்றததானே அப்படி சொல்லுவோம். அப்படி பண்ற செலவு எப்பவும் திரும்ப வரவே வராதுன்னு தெரிஞ்சும் பண்ணனும் தோணுதா, செய்…. மன திருப்திக்காக செய், தப்பே இல்லை. ஆனா ஒருத்தன் நமக்கு திரும்ப செய்வான்னு எதிர்பார்த்து செஞ்சுட்டு, ஏமாந்தா நான் எவ்ளோ பெரிய மனசோட செஞ்சேன், நன்றி கெட்டவனா இருக்கான்னு சொல்லக்கூடாது. அதுக்கான தகுதி நமக்கில்லை. தெளிவா சொல்லனும்னா எதிர்பார்க்காம செய்யற உதவில ஏமாற்றமே இருக்க வாய்ப்பு இல்லை. அதையும் இதையும் குழப்பிக்காத, அதுக்கு பேர் கொடை, ஈகைன்னு சொல்வாங்களே அதான்.”

”எது இந்த மன்னர்கள்லாம் பண்ணுவாங்கன்னு சொல்வாங்களே அதுவா?”

”ராஜாக்கள் மட்டும் இல்லைடா, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, யார் கஷ்டபடறவங்களுக்கு உதவினாலும் அதை ஈகைன்னு தான் சொல்வாங்க. அப்படி இல்லாம பலன் எதிர்பார்த்து செய்யறதுலாம் உதவி கிடையாது. அது கிட்டத்தட்ட வட்டிக்கு விடற மாதிரிதான்.”

இதைத்தான் வள்ளுவர் “ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது” என்கிறார்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

-கதிர் ராத்

439total visits,1visits today