கதிர் குறள்-222

0
130

சில கேள்விகளுக்கு விடையே கிடையாது. இப்படி சொன்னதும் உங்களுக்கு “கோழில இருந்து முட்டை வந்ததா? முட்டைல இருந்து கோழி வந்ததா?”ங்கற கேள்வி ஞாபகம் வந்தா நிம்மதியா இருக்கீங்கன்னு அர்த்தம், இல்லாம “ஆண்டவன் ஏன் நம்மளை மட்டும் சோதிக்கிறான்?” இல்லை “ஏன் என் காதலை அவ புரிஞ்சுக்க மாட்டேங்கறா?” மாதிரியான கேள்விகள் தோணுனா கொஞ்சம் கஷ்டம்.

இது மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு. “காற்று வந்ததும் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா?” மாதிரி. நான் கூட கொஞ்ச வருசத்துக்கு முன்ன ஒரு அழகிகிட்ட இப்படி சொன்னேன் “நீ அழகாய் இருப்பதால் உன்னை காதலிக்கவில்லை, நான் காதலிப்பதால் தான் நீ அழகாய் இருக்கிறாய்” நல்லாருக்கா?

மேல சொன்ன எல்லாத்துக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? முடிவிலி. பதில் சொன்னா அதுல ஒரு கேள்வி உருவாகும். அப்படி உருவாகற கேள்விக்கு பதில் சொன்னாலும் அது இன்னொரு கேள்வில போய் முடியும். அதனால தான் சில இடத்துல எந்த பக்கமும் சேராம நடுவுல நிற்க வேண்டிய சூழ்நிலை வருது. உதாரணத்துக்கு அம்மாவா? மனைவியா? பதில் சொல்ல முடியுமா? யாரை சொன்னாலும் இன்னொருத்தர்கிட்ட மாட்டிப்போம்.

தெளிவா சொல்லனும்னா நம்மால எல்லா நேரத்துலயும் எல்லாருக்கும் நல்லவங்களா தெரிஞ்சுட முடியாது. யாராவது ஒருத்தங்களுக்கு நாம எதிரானவங்களா நின்னுதான் தீரனும். இதுல அதிகபடியா முயற்சி எடுத்து தோத்தது காந்திதான்னு சொல்லுவேன். ஒருபக்கம் சண்டை வேணாம் அஹிம்சைதான் எல்லாமேனு சொல்றார். வன்முறையை கையாண்டதால பகத்சிங்காக பரிஞ்சு பேச முடியாத மனுசன் இரண்டாம் உலக யுத்தத்துல பிரிட்டனுக்கு ஆதரவா இந்தியா கலந்துகிட்டா சுதந்திரம் தரோம்னு சொல்லவும் போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். சொல்லி தரதுல குழப்புனா நாம எப்படி கத்துக்க முடியும்?

நம்ம வீட்லேயே எடுத்துக்குங்க, பசிக்குதுன்னு யாராவது கேட்டா சாப்பாடு வாங்கி கொடுன்னு சொல்லிருப்பாங்க. சக மனுசனுக்கு உதவறது நல்லதுன்னு சொல்லி வளர்த்தவங்க அதே நேரத்துல அடுத்தவங்ககிட்ட கையேந்தி நிக்கறது அவமானம்னு சொல்லி கொடுத்துருப்பாங்க. குழப்பமா இல்லை. நம்மகிட்ட கேட்டா செய்யனும், நமக்கு ஒரு பிரச்சனைன்னா யார்கிட்டயும் உதவி கேட்க கூடாதுன்னா எப்படி?

இதுல மதப்பிரச்சனைகள்லாம் வேற உள்ள வரும். சில குறிப்பிட்ட மதத்துல நீங்க பிச்சையெடுத்து தான் சாப்பிடனும்னு விதி இருக்கும். அவங்ககிட்ட அதெல்லாம் மானப்பிரச்சனைன்னு சொல்ல முடியுமா?  அது அவங்க பிரச்சினை. விட்று. நீ யாராவது கேட்டா உதவி பண்ணுன்னா எடுத்ததும் அதனால நான் ஏன் பன்னனும்னு கேட்கறவங்களுக்கு என்ன சொல்லலாம்? நீங்க போடற பணம் 7.5 வருசத்துல இரட்டிப்பா கிடைக்கும்னா சொல்ல முடியும், வழக்கம் போல தானம் தர்மம் செஞ்சா புண்ணியம், அதை வச்சு சொர்க்கத்துலு ஒரு ஏசி ரூம் புக் பண்ணிக்கலாம்னு புளூக வேண்டியதுதான்.

என்ன அப்ப அதெல்லாம் பொய்யா?னு பதற வேண்டாம். பன்றதை புண்ணியத்துக்காகன்னு பண்ண வேண்டாம். சக உயிர் கஷ்டபட்டா கேட்கற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். முடிஞ்ச உதவியை செய்யனும். அதே மாதிரி எல்லாத்தையும் உதறிட்டு காசிக்கு போய் பிச்சையெடுத்தா செஞ்ச பாவம்லாம் போயிரும்னு சொல்வாங்க. அதெல்லாம் நம்பி திருவோடுக்கு ஆர்டர் பண்ணிடாதிங்க. உடம்புல சக்தி இருக்க வரைக்கும் உழைச்சு தான் சாப்பிடனும். நான் சொன்னா சண்டைக்கு வருவீங்களே இதோ வள்ளுவரே சொல்றார் கேளுங்க.

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

உரை:
நல்ல நெறியே என்று யாராவது சொன்னாலும் பெறுவது தீது; மேலுலகம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் கொடுப்பது நல்லது.

-கதிர் ராத்

294total visits,1visits today