கதிர் குறள் – 239

0
49

அதிகாரம்: புகழ்        குறள் எண்:239

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

உரை: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

Inline image 1

என்ன சொல்ல வர்றாருன்னு புரியலையே? பேர், புகழ் சம்பாதிக்காத ஒருத்தர் இறந்த பிறகு அவரை புதைக்கற நிலம் கூட புல் பூண்டு முளைக்காத அளவுக்கு வறண்டு போயிடுமா? ரொம்ப அதிகமா இருக்கே? திருவள்ளுவர் நல்ல டைப்பாச்சே, எதுவாயிருந்தாலும் மென்மையாதானே சொல்வார்..! வேற ஏதாவது விஷயத்தை சுத்தி வளைச்சு சொல்றாரோ? இருக்கும் இருக்கும்.

இவர் மாதிரி ஆளுங்கலாம் அசால்ட்டா ட்ரிபிள் மீனிங்ல எழுதிட்டு போயிருவாங்க. நாடிகட்டு மாதிரி. நாடி ஜோசியம் பார்த்துருக்கிங்களா? அது உண்மை பொய்னுலாம் பேச வேண்டாம். அதுல ஒரு சிறப்பு என்னன்னா ஒரு ஏடுல எழுதியிருக்கறது ஒருத்தருக்கு மட்டும் இல்லை, பலருக்கு பொருந்தற மாதிரி ஒரே ஏட்டுல எழுதி இருப்பாங்க. பிரிச்சோ சேர்த்தோ படிச்சுக்க வேண்டியது தான். எங்கோ மணம் வீசுது மாதிரி.

புகழ்னு எதை சொல்றாங்க? நடப்பு வழக்குல சொல்ற மாதிரி இது பேர், புகழா இருக்காது. வேற? புகழ், இகழ். ஒருத்தரை புகழ்றதுன்ன அவரை நல்லவன்னு சொல்லுவோம் இல்லை கெட்டவன்னு இகழ்வோம். யாரை நல்லவன்னு சொல்லுவோம். மத்தவங்களுக்கு நல்லது நினைக்கறவனை, அடுத்தவங்க பொருளுக்கு ஆசை படாதவனை, மொத்தமா சொல்லனும்னா வாழும்போது அடுத்தவங்களுக்கு தொல்லை தராம, நல்லது மட்டும் நினைக்கறவனை நல்லவன்னு சொல்லுவோம். இதுக்கு அப்படியே எதிர்மாறா சுயநலமா இருக்கவங்களை கெட்டவங்கன்னு சொல்லுவோம்.

அப்படி பார்த்தா புகழ் பெறாதவங்கன்னு வள்ளுவர் சொல்றது, புகழோட எதிர்பதம் இகழப்படறவங்களை, அதாவது கெட்டவங்களை. கெட்டவங்களை புதைச்ச இடத்துல புல்லு முளைக்காதா? அப்படி வராதே? திரும்ப படிப்போம், என்ன சொல்றார்? “புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம்” இதுல இறந்த பின்னுன்னோ, புதைக்கறதை பத்தியோ சொல்லலையே, நிலம் எப்பவுமே தான் நம்மளை சுமந்துகிட்டு இருக்கு. அப்ப வாழும்போதும்னும் எடுத்துக்கலாம்.

கெட்டவங்களை சுமக்கற நிலம், அதாவது கெட்டவங்க வாழற நிலம், இங்க நிலம்னு சொல்றதை ஊராகவோ, மாநிலமாகவோ, நாடாகவோ நம்ம விருப்பத்துக்கு வச்சுக்கலாம். கெட்டவங்க வாழற ஊர் “வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்”. ஒரு கெட்டவன் வாழறதால ஊரோட பசுமை போயிடும்னு இருக்கது.. ஊர் முழுக்க கெட்டவங்க, அப்படியும் சொல்ல முடியாது. ஊர்ல இருக்கவங்க எல்லார்க்கும் கெட்ட எண்ணம் வந்தா ஊரோட வளமை குறைஞ்சுரும்.

அது உண்மைதான். எல்லோரும் சுயநலமா இருக்கறதால தான் அடுத்த தலைமுறைக்கு நிலத்தையும் நீரையும் விட்டுட்டு போவோம்னு நினைக்காம மீத்தேன் எடுக்கறேன், ஹைட்ரோகார்பன் எடுக்கறேன்னு வரவங்களை கேள்வி கேட்காம உள்ள விட்டுட்டு இருக்கோம். அப்ப வள்ளுவர் சொன்னது சரிதான். ஒரு ஊர்லயோ நாட்லயோ இருக்கவங்களுக்கு சுயநலம் அதிகமாக அதிகமாக அந்த ஊரோட நாட்டோட வளமை குறைஞ்சுகிட்டே போகும்.

ஆனா பாருங்க மனுசன், புகழ் அதிகாரத்துல எவ்வளவு நேக்கா இயற்கை வளத்தை பத்தி சொல்லிருக்கார்…

கதிர் ராத்

 

154total visits,1visits today