கதிர் குறள் – 243

0
55

ஒரே வார்த்தை, ஆனா இடத்துக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு பொருள் தரக்கூடிய வார்த்தைகள் தமிழ்ல ஏராளமாக கொட்டி கிடக்கு. அதுல ரொம்ப சிறந்தது, அதிக இடங்கள்ல பயன்படற வார்த்தை “ஹிக்கூம்” தான். இதுக்கு என்ன பொருள்னு உங்களால சொல்லிட முடியுமா? யார், எங்கே சொல்றாங்கனு பார்த்துதான் பொருள் சொல்ல முடியும். இந்த வார்த்தையோட இன்னொரு சிறப்பு என்னன்னா இதை எல்லா இடத்துலயும் பயன்படுத்த முடியும். இதை அதிகமா சிறப்பா பயன்படுத்தறது யார்னா மனைவிகள்தான். சுவராசியமானதுங்கறதால உதாரணத்தோட பார்ப்போம்.

”எங்கம்மா வீட்டுக்கு வராங்களாம்” – ஹிக்கூம்
”உங்கப்பாக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு ஏதாவது விசேசம்னு லீவ் போட வைக்கறார்” – ஹிக்கூம்
”ஏன்டி எனக்கென்ன உன் மேல பாசமே இல்லைன்னு நினைக்கிறியா?” – ஹிக்கூம்
”வரவர உன் சமையல் மோசமாகிட்டே போகுது” – ஹிக்கூம்
”இன்னைக்கு சமையல் சூப்பர், அசத்திட்ட” – ஹிக்கூம்

நிறைய இருக்கு, சினிமாலருந்து சொல்லுவமே,
“தங்கமகன்” படத்துல தனுஷ் சமந்தாகிட்ட “ஐ லவ் யூ” சொன்னதும்
“ஹிக்கூம், பர்ஸ்ட் டைம் கேட்கறேன்”
“நான் இன்னும் அதை கூட கேட்கலையே?”
“லவ் யூ லவ் யூ”

மேல வர எல்லா இடத்துலயும் ஒரே வார்த்தை “ஹிக்கூம்” ஆனா ஒரே அர்த்தம் கிடையாது. ஒத்துக்கறிங்களா? அதே மாதிரிதான் “அறிவு”ங்கற வார்த்தைக்கு உண்மைலயே ஒரே பொருளா? முதல்ல “அறிவாளி”ன்னு படிச்சவங்களை சொல்லுவாங்க. அரசாங்கம் படிப்பு சொல்லித்தர இலட்சணம் தெரிஞ்சதுக்கு அப்புறம் எல்லோரையும் சொல்லாம பர்ஸ்ட் ரேங்க் வாங்கறவங்களை, இந்த மெடல் வாங்கறவங்களை சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம் கம்ப்யூட்டர்ல வேலை பார்க்க தெரிஞ்சவங்களை சொன்னாங்க.

நான் சொல்றதுலாம் பொதுவா ஒவ்வொரு காலத்துலயும் சொன்னதை சொல்றேன். அப்புறம் இலக்கியம், எழுத்தாளர்கள் எல்லாம் அறிவாளிங்க இல்லையான்னு சண்டைக்கு வந்துட போறீங்க. இப்போ எல்லோரும் தெளிவாகிட்டாங்க. எப்படின்னா ஒரு துறைல அறிவாளியா இருக்கவன் இன்னொரு துறைல முட்டாளா இருப்பான்ங்கறது எல்லோருக்கும் புரிஞ்சுருச்சு.

அறிவுக்கு எதிர்பதம் அறியாமை. இதுவும் ஆரம்பத்தில் கல்வியறிவு இல்லாதவங்களை சொல்ல ஆரம்பிச்சு இப்போ எங்கே வந்து நிக்குது தெரியுமா? லஞ்சம் வாங்காதவன். கொடுக்காதவன். வாய்ப்பு கிடைச்சும் திருடாதவனை சொல்றதுக்கு வந்தாச்சு, “இப்படி பொழைக்க தெரியாம அறிவில்லாம இருக்கியே?”ன்னு. திருடறதுக்கு பேர் திறமை, நேர்மைக்கு பேர் அறியாமைன்னு ஆகிருச்சு. சமகால சமூகத்துக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு கொடுக்காதவனை எப்படி சொல்லுவாங்க? “அவன் நடைமுறைக்கு ஒத்து வர மாட்டான், தனி உலகத்துல இருக்கான்”

நல்லா நிதானமா யோசிங்க, எது அறிவு? எதுக்குனே தெரியாமே ஏகப்பட்ட ஃபார்முலாவ மனப்பாடம் பண்ணி டிகிரி வாங்கி, வெறும் சம்பளத்துக்காக புரோக்ராம் எழுதிட்டு இருக்கறது தான் அறிவா? எப்படி வாழனும்? எதுக்கு வாழனும்?னு தெரிஞ்சுக்கறது தானே அறிவு. சக உயிரினத்தை மதிக்கனும். அது தான் உண்மையான அறிவு. ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்காம மதிப்போமா? முழுசா புரிஞ்சுகிட்டு தானே மதிப்போம். மனிதனை தவிர்த்து மற்ற உயிரினங்களை பார்த்து கத்துக்கனும். எந்த உயிரினமாவது அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வச்சுட்டுருக்கா?

மனுசன் மட்டும் தன்னோட வாழ்க்கையை தாண்டி அடுத்த தலைமுறைக்குனு சொத்து சேர்த்து வைக்காம இருந்துருந்தா பல அழிவுகள் நடந்துருக்காது. அதிகபட்சம் குளிர்காலத்துலேயும், மழைகாலத்துலேயும் உணவு கிடைக்காதுன்னு தான் மற்ற உயிரினங்கள் சேர்த்து வைக்கும்.

நம்மளை எடுத்துக்கோங்க. சேர்த்து வைக்கறவன் அடுத்த தலைமுறை சாப்பாட்டுக்கு கஷ்டபட்டுட கூடாதுன்னா சேர்த்து வைக்குறான்? ஆடம்பர வாழ்க்கைக்கு சேர்த்து வச்சது போதாதுன்னு இப்ப இருக்கவங்க அதிகாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்கறாங்க. என் தலைமுறைலருந்து தான் என் குடும்பத்துல இருந்து தான் தலைவன் உருவாகனும், நடிகன் உருவாகனும்னு. எவ்வளவு கேவலமா இருக்கோம்.

இந்த மாதிரி தன்னோட வாழ்க்கையை ஒழுங்கா வாழாம அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்கறதை மட்டும் செஞ்சுட்டு செத்து போறவங்ககிட்ட இருக்க அறியாமை, மற்ற உயிர்களை மதிக்கற அருள் உள்ளம் இருக்கவங்ககிட்ட இருக்காதுன்னு சொல்றார் வள்ளுவர்.

அதிகாரம்: அருளுடைமை      குறள்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

உரை: அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

கதிர் ராத்

265total visits.