கதிர் குறள் -244

0
74

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கணத்தில் போதும் இந்த வாழ்க்கை முடித்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறிர்களா? சிறுபிள்ளைகளாய் இருக்கும் பொழுதே, வீட்டில் சண்டை போட்டு, அடி வாங்கும் பொழுது நான் நினைத்ததுண்டு. பின் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? அம்மா பிடித்த உணவை சமைப்பார்கள்.

சாப்பிட்டு விட்டு சாகலாம் என நினைப்பேன். சாப்பிட்டதும் தூக்கம் வந்துவிடும். தூங்கி எழுகையில் இரவு நடந்தது மறந்திருக்கும். இது இயல்பு தான். ஏதாவது ஒரு வயதில், ஏதேனும் ஒரு கட்டத்தில், துரோகத்தால் விரக்தியடைந்து வாழ்க்கையை முடித்து கொள்ள அனைவரும் நினைத்திருப்போம். சரி இன்னொரு கேள்வி கேட்கிறேன். ஏதாவது ஒரு கணத்தில் உங்கள் வாழ்க்கையை அல்ல, உலகத்தினை அழிக்க நினைத்ததுண்டா? உலகம் என்றால் மொத்த பூமியை கேட்கவில்லை. மனித இனத்தினை பற்றி கேட்கிறேன்.

கேள்வியை நன்றாக கவனியுங்கள். உங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த மனித இனமும் அழிய வேண்டும் என விரும்பியது உண்டா? நான் அப்படி நினைத்திருக்கிறேன். “ஓநாய் குலச்சின்னம்” என்ற ஒரு புத்தகம் அப்படி நினைக்க வைத்தது. கேள்விப்பட்டதுண்டா? இந்த புத்தகம் சீன மொழியில் எழுதப்பட்டது. இது தமிழில் வருவதற்காக இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டதாக கேள்விப்பட்டேன். அப்படி என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்வதற்காகவே வாங்கி படித்தேன்.

இன்று தமிழகம் முழுக்க போராட்டங்களாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தாமிரபரணி போராட்டங்கள் அனைத்தும் எதற்காக? விவசாயத்தை பாதுகாப்பதற்காக. நாளுக்கு நாள் விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கிக் கொண்டே போகிறது. அனைவரும் இதற்காக வருந்துகிறார்கள். உண்மை தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? முன்பு இவ்வளவு விவசாய நிலங்களே இல்லை. நூறு வருடங்களுக்கு முன்பு 150 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை இப்போது 750 கோடியாகி விட்டது. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உணவு தேவைகளுக்காக காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் விளை நிலங்களாக மாற்றப்பட்டது. அதனால் இறந்த உயிரினங்கள், பாதிக்கப்பட்ட பழங்குடியினர் ஏராளம்.

http://www.panuval.com/image/cache/catalog/discovery-book-palace/onai-1-800x800.jpg

சுருங்க சொல்ல வேண்டுமென்றால் விவசாயத்தை எப்படி தற்போது கார்ப்பரேட்டுகள் அழிக்கின்றனவோ அதே போல் மேய்ச்சல் தொழிலை அழித்து தான் வேளான்மை வளர்ந்தது. எப்படி மேடை நாடகங்களை அழித்து சினிமா வளர்ந்து அதை அழித்து திருட்டு VCD கலாச்சாரம் வளார்கிறதோ அதே போல காடு-மேய்ச்சல்-விவசாயம்-கார்ப்பரேட். இங்கு எதுவும் நிலையில்லை.

ஒன்றையொன்று அழித்து மாறிக் கொண்டே இருக்கும். மாற்றங்களுக்கு காரணம் மனிதனின் தேவைகள். ஆனால் பாதிக்கப்படுவது அவனை தவிர்த்த அனைத்து உயிரினங்களும். இதை ஆணியடிப்பது போல தெளிவாய் “ஓநாய் குலச்சின்னம்” சொல்லியிருக்கும். புத்தகத்தை முடிக்கும் பொழுது மட்டும் எனக்கு அந்த சக்தி இருந்திருந்தால், எந்த சக்தி என கேட்கிறீர்களா? X men படத்தில் வரும் சார்லஸ்க்கு இருக்கும் சக்தி. ஒரே நேரத்தின் உலகில் இருக்கும் மனிதர்களை அழிக்க முடிந்திருந்தால் கட்டாயம் செய்திருப்பேன். நான், என் குடும்பம் அழிவது கூட பெரிதாய் தெரியவில்லை.

இப்பொழுது கூட ஜப்பானில் ஒன்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இயந்திரத் தேனீக்கள். இயற்கையான தேனீக்கள் குறைந்து வருவதால் இந்த கண்டுபிடிப்பாம். இயற்கை தேனீக்கள் வளர்ப்பது அவ்வளவு கடினமான காரியமா? எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? இதெல்லாம் தெரிய வருகையில் என்னுடன் சேர்ந்து மொத்த மனித இனமும் அழிந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. மற்ற உயிரினங்களாவது நிம்மதியாக வாழும். இந்த உலகத்தின் ஆயுளும் கொஞ்சம் கூடும்.

எனக்காவது எப்போழுதாவது தான் இப்படி தோன்றும். சிலர் இருக்கிறார்கள். அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களுக்காக வாழ்க்கை முழுவதும் போராடுபவர்கள். விலங்கு நல வாரியத்தை சேர்ந்தவர்கள் போல் கௌரவத்திற்கு செய்பவர்களை சொல்லவில்லை. ஒருவரை உதாரணத்திற்கு சொல்கிறேன்.

https://s-media-cache-ak0.pinimg.com/originals/bb/a3/b5/bba3b59e89c3caf9f204b350e7194f4a.jpg

கெவின் ரிச்சர்ட்சன்(Kevin Richardson). விலங்கியல் படித்தவர் காட்டு உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தவர். அவற்றின் வாழ்வு நிலையை உயர்த்த விரும்பினார். சொத்துக்களை விற்று சொந்தமாக இடம் வாங்கி சிங்கம், சிறுத்தைகளுடன் வாழ துவங்கினார். பராமரிக்க பணம் பத்தவில்லை. தன்னுடன் தோழமையாய் பழகும் சிங்கங்களுடன் போட்டிகளை நடத்த ஆரம்பித்தார்.

இவரது Man Vs Lion – Foot ball பிரபலமானது. இப்படி சம்பாதித்த பணத்தை வைத்து நிறைய நிலம் வாங்கி அந்த உயிர்களை ஆரோக்கியமாக பாதுகாக்கிறார். யோசித்து பாருங்கள். சிங்கம், சிறுத்தை, புலி இவையெல்லாம் செல்லமாக ஒரு அடி அடித்தாலே ஆள் காலி. அதுவும் அவ்வபோது நடக்கும். ஏகப்பட்ட தையல் போட்டிருக்கிறார். இருந்தும் அவற்றை அடைத்து வைப்பதெல்லாம் இல்லை. ஒரே குடும்பம் தான், கும்மாளம் தான், இணையத்தில் இவர் பெயரை தேடி பாருங்கள். தெரிந்து கொள்ள வேண்டியதும் பார்க்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. இவரை போன்றவர்களை பற்றி வள்ளுவர் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறார். பாருங்கள்.

அதிகாரம்: அருளுடைமை குறள்: 244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

உரை: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைப்பெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

கதிர் ராத்

196total visits.