கதிர் குறள் – 246

0
36

“மனுசனை போட்டு உழப்பி எடுக்கறாங்கடா”

“டேய் இருடா. சாப்பிட உட்கார்ந்ததும் ஆரம்பிக்கற. என்ன வீட்ல செம அடியா?”

“வீட்டு பிரச்சனையே தேவலை. ரெண்டு நாள் கொஞ்சிட்டு. ஒருநாள் சண்டை போடறாங்க. அது பிரச்சனை இல்லை”

“பின்ன ஆஃபிஸ்லயா? இல்லையே. உன்னை விட அதிகமா திட்டு வாங்கற நானே புலம்பறது இல்லையே.”

“அய்யய்ய, மச்சி என்னை பேச விடறா? இப்ப நான் புலம்பறன்னா அதுக்கு பிரச்சனை தான் காரணமா இருக்கனுமா? ஏன் குழப்பமா இருக்க கூடாதா?”

“என்ன குழப்பம்?”

“எப்படி வாழ்றதுன்னு தான்.”

“என்னை குழப்பற பாரு. வாழ்றதுல என்ன குழப்பம் உனக்கு? உனக்கு பிடிச்ச மாதிரி வாழு.”

“அதுல தான் குழப்பமே. நேரடியா கேட்கறேன். வாழ்க்கைக்கு நேர்மை அவசியமா? இல்லையா?”

“ரொம்ப அவசியம்டா. பழகறவங்ககிட்ட ஆரம்பிச்சு செய்யற வேலை உட்பட எல்லா இடத்துலயும் நேர்மையா இருக்கனும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும்.”

“இதை தான்டா நானும் சொன்னேன். அந்தாள் ஒத்துக்கவே இல்லை”

“யார் ஒத்துக்கலை?”

“எங்க பக்கத்து வீட்டுக்காரர்..”

“யார்? அந்த ரிட்டயர்ட் கவர்ன்மென்ட் ஆஃபிசரா?”

“ஆமா”

“ஆமா. அவர் என்ன வேலை பார்த்துட்டு ரிட்டயர்ட் ஆனார்?”

“அது தெரியலை, ரூரல் டெவலப்மென்ட்ல இருந்தார்னு மட்டும்தான் தெரியும்”

“என்ன சொல்றார்?”

“நேத்து பேசிகிட்டு இருந்தோம். தானா பேச்சை வேலை எல்லாம் எப்படி போகுதுன்னு ஆரம்பிச்சி இப்படி சம்பளத்தை மட்டும் நம்பிகிட்டு இருந்தா எப்படி உருப்படுவேன்னு வந்து முடிச்சார்?”

”உன்னை இலஞ்சம் வாங்க சொல்றார்னு நேரடியா சொல்லுடா”

”எனக்கு அதுல விருப்பம் இல்லைன்னு சொன்னதும் ஆரம்பிச்சார்டா மனுசன். அரை மணி நேரம் அந்தாள் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து கிடைக்கற சந்தர்ப்பத்துல எல்லாம் எப்படி சம்பாதிச்சார். ஒருதடவை கூட எதுலயும் மாட்டாம கௌரவமா ரிட்டயர்ட் ஆனதுன்னு அறுத்து தள்ளிட்டார் மனுசன். அவரை பொறுத்த வரைக்கும் சைட்ல சம்பாதிக்க முடியாதவன் கையாலாகதவன்னு அர்த்தம்.”

”உன் மூளையை சலவை பண்ணி அனுப்பி இருக்கார்னு சொல்லு.”

”ச்சே, அந்தாள் சொல்றதாலலாம் என் நேர்மையை விட்டு கொடுத்துட மாட்டேன். எனக்கு என்ன வருத்தம்னா அந்தாளை மடக்கி பேச என்கிட்ட ஒரு பாய்ண்ட் கூட இல்லை. எதை சொன்னாலும் நான் சைட்ல சம்பாதிச்சேன், நல்லாதானே இருக்கேன்னு வாயை அடைச்சுடறார். என்னை விடு. மத்தவங்க இந்த மாதிரி ஆளுங்களை ரோல்மாடலா எடுத்துக்கனும்னு நினைக்க ஆரம்பிச்சுட மாட்டாங்களா? கிட்டத்தட்ட அதர்மம் ஜெயிச்சுருச்சுங்கற மாதிரிதானே அர்த்தம்.”

”டேய்…. விட்றா”

”இல்லை மச்சி, இந்த மாதிரி ஆளுங்க தப்பு பண்றது மட்டும் இல்லாம அதை எல்லோர்கிட்டேயும் பீத்திக்க வேற செய்யறானுங்க. பேசிட்டு வந்தாலும் வாதத்துல தோத்துட்டு வந்தது என்னை உறுத்திகிட்டே இருக்கு.”

”நீதான்டா புரியாம பேசிட்டிருக்க”

”என்ன புரியனும் எனக்கு?”

”லஞ்சம்ங்கற விஷயத்துல மட்டும் இல்லை, இந்த மாதிரி ஆளுங்க எல்லா விஷயத்துலயும் தனியா தெரிவாங்க. இப்போ ஒரு படம் வருதுன்னா அதை தியேட்டர்ல போய் பார்க்கறவன் கூட சும்மா இருப்பான். டவுன்லோட் பண்ணி பார்க்கறவன் தெரிஞ்சவனுக்கு கொடுத்து பார்க்க சொல்லுவான். இல்லை மத்தவங்களையும் பண்ண சொல்லுவான்.”

”சரி”

”தப்புன்னு தெரிஞ்சும் பண்றவங்களை ரெண்டு விதமா பிரிக்கலாம். வேற வழி இல்லாம பண்றவங்க. திமிருக்கு பண்றவங்க. வேற வழி இல்லாம பண்றவங்க தப்பு பண்ணிட்டமேன்னு உறுத்தல்ல தான் புலம்பிகிட்டு இருப்பாங்க. திமிருக்கு பண்றாங்க பாரு, அவனுக்கும் உறுத்தல் இருக்கும். அதை சமாளிக்க என்ன செய்வான்னா மத்தவங்களையும் தப்பு பண்ண தூண்டுவான். மத்தவங்ககிட்ட பேச ஆரம்பிச்சதும் எங்கே தான் பன்ன தப்பை மத்தவங்க குத்தி காட்டி சொல்லிடுவாங்களோன்னு முதல்லயே “பார்த்தியா என் திறமையை”ன்னு பீத்திப்பாங்க.

”ஓ, இப்ப அந்தாள் தன்னை சமாதானப்படுத்திக்கத்தான் பீத்திக்கறானா?”

”ஆமா, ஏன் ரிட்டயர்ட் ஆகறதுக்கு முந்தி எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியது தானே? தூக்கி உள்ள வச்சுருப்பாங்க. கடைசி நாள் வரைக்கும் உள்ளுக்குள்ள பதறிகிட்டு தான் இருந்துருப்பான். முதுகுக்கு பின்னாடி எல்லோர்கிட்டயும் திட்டு, சாபம் வாங்கிருப்பான். இப்படி பொழச்சுட்டு அதை பெருமையா வேற பேசறான்னா வேற என்ன பண்ண முடியும்? இனி மேல் என்ன மனசு மாறுனாலும் நேர்மையை ஆதரிச்சு பேசற தகுதியை இழந்துட்டான். மீறி பேசுனா எல்லோரும் உனக்கென்ன யோக்கியதைன்னு கேட்டுருவாங்கன்னு பயம். அதான் இப்படி, கிட்டத்தட்ட இதெல்லாம் பயத்துல புலம்பற மாதிரிடா, பார்த்து பரிதாபபடனுமே தவிர குழப்பிக்க கூடாது.”

”அப்ப அந்தாள் வாழ்க்கைல பெருசா ஜெயிச்சுட்ட மாதிரி பேசனதுலாம்?”

”என்னடா புரியாம பேசற? பல கோடி பணம் இருக்கட்டும். 2 நாளைக்கு சேர்த்து ஒட்டுக்கா சாப்பிட முடியுமா? இல்லை 2 நாள் சாப்பிடமா தான் இருக்க முடியுமா? எந்த நோயும் வராம பார்த்துக்க முடியுமா? வந்த நோய்க்கு அதிக செலவுல வைத்தியம் பார்க்கலாம். ஆனா அப்ப கூட நிம்மதியா சாக முடியாது. அந்தாள் நேர்மையா இல்லாம இருந்ததை விட, அதை பெருமையா பேசறது பெரிய தப்பு. அனுபவிப்பார்.”

”ஏன்டா அப்படி சொல்ற?”

”இவர் மட்டும் இல்லைடா? நாட்ல ரொம்ப பேர் பணத்துக்காக, புகழுக்காக எல்லா அநியாயத்தையும் பண்ணிட்டு நிம்மதியா இருக்கறதா நினைச்சுகிட்டு ஓடிட்டே இருக்காங்க. ஓடி முடிச்சதும் வாழ்க்கைல என்ன கிழிச்சுருக்கோம்னு பார்க்க சொல்லு, கேவலம் தான் மிஞ்சும். இப்படி இருக்கவங்களால யாரையும் கிட்ட வச்சுக்கவே முடியாதுடா, நம்பிக்கையே வராது. சொந்த குடும்பத்தை கூட நம்ப மாட்டாங்க. சுத்தி கூட்டமே இருந்தாலும் தனிமை தான். பணம் இருக்கும். அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல போயிரும். சொல்லப்போனா கர்ணனுக்கு தேவைப்படற நேரத்துல பிரம்மாஸ்திர மந்திரம் மற்ந்துடற மாதிரி இந்த மாதிரி ஆளுங்களுக்கு பணம் இருந்தும் ஒண்ணும் செய்ய முடியலையேங்கற கட்டம் வாழ்க்கைல வந்துகிட்டே இருக்கும். அந்த தோல்வியை இவங்களால தாங்கவே முடியாது. இப்ப கொடுமை என்னன்னா நாட்ல இந்த மாதிரி ஆளுங்களோட எண்ணிக்கை கூடிகிட்டே போறது தான்”

”இதுக்கு என்ன பண்ணாலம்ங்கற?”

”உன்னாலயோ என்னாலயோ ஒன்னும் பண்ண முடியாது. ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கோ, சக உயிர்களை, சக மனுசனை பத்தி யோசிக்காம, தன்னை பத்தி மட்டும் யோசிக்கறவங்க குறுக்கு வழில முன்னேறி நான் ஜெயிச்சுட்டேன் பார்த்தியான்னு பீத்திக்குவாங்க. அவங்க எதை இழந்துருக்காங்கன்னு அவங்களுக்கே தெரியாது. சொல்லப்போனா எது உண்மையான சொத்துங்கறதே அவங்களுக்கு கடைசி வரைக்கும் புரியப் போறது இல்லை. அந்த மாதிரி ஆளுங்களோட சுய புராணத்தை கேட்க வேண்டி இருந்தா கேட்டுட்டு உச்சு கொட்டி பரிதாபபட்டுட்டு வா. குழம்பிகிட்டு வராதே.”

”உச்சு கொட்றதா?”

”ஆமா, உங்களால நேர் வழியில் சம்பாதிக்க முடியாம போனதை நினைச்சு வருத்த படறேன்னும். இது தோல்வி, இதை சாதனையா சொல்லிட்டுருக்க கூடாதுன்னு சொல்லிட்டு வா.”

அதிகாரம்: அருளுடைமை     குறள்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

உரை: அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

-கதிர் ராத்

241total visits.