கதிர் குறள் – 249

0
25

இணையத்துல புழங்கற முக்கால்வாசி பேர்க்கு மேல வாசிக்கிற பழக்கம் இருக்குன்னு நம்பறேன். அப்ப அவங்க எல்லோர்க்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். குறிப்பா வீட்ல யாருக்கும் வாசிக்கிற பழக்கம் இல்லாம இருந்து புதுசா வாசிக்கிறவங்களுக்கு. என்னன்னா நீங்க ஆழமா ஏதாவது ஒன்னை படிச்சுட்டு இருக்கும் போது ஏதோ விசித்திர ஜந்துவை பார்க்கற மாதிரி பார்ப்பாங்க. இதை அனுபவிச்சதுண்டா?

யாரும் அதிகம் படிக்காத கம்பனையோ, காரல்மார்க்ஸை வாசிக்கும் போது மட்டும் இல்லை. எல்லோரும் வாசிக்கிற ராஜேஸ்குமார், சுஜாதா, பாலகுமாரனை வாசிக்கும் போதே அப்படி பார்ப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல ஒரு மாதிரி எரிச்சலா இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையா இருக்கும். இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது? போடா போய் சினிமா மட்டும் பாருன்னு ஒரு கர்வம் வரும். உனக்கு தெரியாததை, உன்னால முடியாததை நான் செய்யறேன்னு ஒரு ஆணவம் வரும். அது இயல்பான விஷயம் தான். ஆர்வமில்லாம இருக்கவங்களை இதை வச்சு எளிமையா தண்டிக்கலாம். நிஜமா, வாசிக்கிற பழக்கம் இல்லாதவனை ஒரு இடத்துல உட்கார்ந்து தடியா ஒரு புத்தகத்தை படிக்க சொல்லி கொடுங்களேன். மூலையில மாட்டிகிட்ட பூனைக்குட்டி மாதிரி சீறுவாங்க.

வாசிக்கிற பழக்கம் உரையாடல், விவாதத்துல தான் அடுத்த கட்டத்துக்கு போகும். கிட்டத்தட்ட சினிமா மாதிரி தான். நாம பார்த்துருப்போம், பிடிச்சுருக்கும். இன்னொருத்தர் எழுதுன விமர்சனத்தை படிச்சா வேற கோணத்துல அணுகி இருப்பார். என்னை கேட்டா படத்தை பார்த்தாலும் வெவ்வேற கோணமுடையவர்களோட விமர்சனத்தை படிச்சாதான் முழுமையடையும். அதே மாதிரி தான் புத்தகத்தை குறித்து நடத்தப்படும் இலக்கிய கூட்டங்களும், விவாதங்களும். அது நம்ம பார்வையை இன்னும் ஆழப்படுத்தும், அகலப்படுத்தும். இங்கே நிறைய சினிமா விமர்சனங்கள் எழுதப்படற மாதிரி நூல் விமர்சனங்கள் எழுதப்படறதில்லை. சினிமாவை பாராட்டுனாவோ திட்டுனாவோ அதுல நிறைய பேரோட பங்கு இருக்கறதால அது படைப்பை மட்டும்தான் பாதிக்குது.

புத்தகங்களை குறித்து வைக்கப்படற விமர்சனம் நேரடியா எழுத்தாளரை மட்டும் தான் போய் சேருது. அதனால எழுத்தாளரை புகழவோ, திட்டவோ விரும்பாதவங்க அந்த நூல் குறித்து பேச மாட்டேங்கறாங்க. இது அந்த புத்தகத்துக்கு எழுத்தாளருக்கும் நஷ்டத்தைதான் தரும். ஒரு படைப்பு எல்லோர்கிட்டயும் போய் சேரனும்னா அதை பத்தின பேச்சு அவசியம்.

இப்படி புத்தகங்களை விமர்சிக்க வாசிப்பனுபவம் இருக்கவங்க மறுக்கறதுனால தான் புதுசா வாசிக்கிறவங்க விவாதிக்க வராங்க, அது பெரிய குற்றமெல்லாம் இல்லை. இருந்தாலும் ஆழமான பார்வை இருக்கவங்க விவாதிச்சா இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம். நிறைய பேரை போய் அடையும். படிச்சதே அதோட சேர்த்து மொத்தம் 5 புத்தகமா தான் இருக்கும், அவங்க பேசும் போது கேட்கறவங்களுக்கு இது நமக்கு தெரியாதா? சொல்ல வந்துட்டான்னு தோணிடுமே. அது தப்பில்லையா? வெறுமனே கடமைக்கு செய்யற மாதிரி ஆகிடாதா?

கடமைக்கு செய்யறதுன்னதும் சமீபத்துல நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வருது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தா நாளைக்கு மரம் நடுவிழா. நடப்போற குழியை சுத்தி சிவப்பு கம்பளம், என்னவோ விஜய் அவார்ட்ஸ்க்கு வர மாதிரி. அதே மாதிரி வறட்சியினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவாரணம் தரும்போது சிரிச்ச முகத்தோட போட்டோக்கு போஸ் கொடுக்கறது. வீட்ல ஒருத்தன் செத்து அதுல கிடைக்கற பணத்தை வாங்கும் போது எவனுக்காவது சிரிப்பு வருமா? பார்க்கவே எரிச்சலா இருந்தது. அடுத்தவங்களோட கஷ்டம் புரிஞ்சு அவங்களுக்கு உதவனும்னு உதவுங்க, வெறுமனே விளம்பரத்துக்காக, கடமைக்குனு செஞ்சு செய்யறவங்களை அசிங்கப்படுத்தாதிங்க. கேவலமா இருக்கு.

வள்ளுவர் காலத்துலயும் இப்படி பெருமைக்கு எருமை மேய்க்கறவங்க இருந்துருப்பாங்க போல, இதையும் எழுதிருக்கார்.

அதிகாரம்: அருளுடைமை     குறள்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

உரை: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

கதிர் ராத்

163total visits.