கதிர் குறள் – 250

0
25

“சார்”

“வாங்க சக்தி, ரிசல்ட் முழுசா பார்த்துட்டிங்களா? நம்ம டிபார்ட்மென்ட் ஓவர் ஆல் எவ்ளோ பர்சென்டேஜ்?”

“ஒரு பிரச்சனை ஆகிருச்சு சார்”

“என்னாச்சு?”

“லேப் மார்க் என்ட்ரி பண்ணும் போது தப்பாகிருச்சு சார்”

“முதல்ல உட்காருங்க, என்னன்னு தெளிவா சொல்லுங்க”

“நமக்கு யுனிவர்சிடி பிராக்டிக்கல் நடக்கும் பொழுது, வெப்சைட் டவுன் னு மார்க்கை எக்செல்ல யுனிவர்சிடி ஃபார்மெட்ல டைப் பண்ணி எக்ஸ்டர்னல்கிட்ட சைன் வாங்கிட்டு, ஒரு வாரம் கழிச்சு எல்லா லேபுக்கும் சேர்த்து ஒட்டுக்கா நான்தான் என்ட்ரி பன்னேன்.”

“சரி”

“அதுல ஒரு லேப் ல் மார்க் தப்பா என்ட்ரி ஆகிருச்சு சார்”

“எத்தனை பேருக்கு?”

“ஒருத்தனுக்குத்தான் சார்”

“யாருக்கு?”

“அரவிந்துக்கு”

“டிபார்ட்மென்ட் டாப்பருக்கா? எவ்ளோ மாறிருக்கு?”

“ரிஜிஸ்டர் நம்பர் சொல்லி மார்க் சொல்லுவாங்க, தொடர்ந்து அடிக்கும் போது மார்க்குக்கு பதிலா அவன் நம்பரை மார்க்கோட இடத்துல என்ட்ரி பண்ணிட்டேன் சார், வெறும் 12ன்னு”

“என்னங்க சொல்றிங்க? மாத்த முடியாதா?”

“இல்லை சார், தெரியலை, காலைல 10 மணிக்கு ரிசல்ட் வந்தப்புறம் தான் கவனிச்சோம். இப்ப என்ன பன்றதுன்னே தெரியலை சார்”

“நல்லா படிக்கற பையங்க, அப்படியே விட முடியாது, சரி வாங்க பிரின்சிபலை போய் பார்க்கலாம்”

“வேணாம் சார் பயமாயிருக்கு”

“சரி நீங்க வந்து வெளியே நில்லுங்க, ஏதாவது டீடெய்ல்ஸ் கேட்டாருன்னா உங்களைதானே கேட்கனும்.”

சக்திக்கு நடுக்கம் அதிகரிக்க துவங்கியது. ஒரு நன்றாக படிக்கும் மாணவன், அதுவும் டிபார்ட்மென்ட் டாப்பர் தனது அலட்சியத்தால் ஃபெயில் ஆகிவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய குற்றம், அந்த பையன் கோர்ட் வரைக்கும் செல்லலாம், இடையில் என்றால் பரவாயில்லை. தேர்வு முடிவுகள் அறிவித்தாகிவிட்டது.

சற்று நேரத்தில் பிரின்சிபல் அழைத்தார்

“சக்தி, ராஜேஸ்வரிகிட்ட மேட்டர் என்னன்னு சொல்லி லெட்டர் டைப் பண்ணி சீல் வச்சுட்டு வாங்க, நான் சைன் பண்ணி தரேன். ஃபேக்ஸ் அனுப்பிருங்க. யுனிவர்சிடில பேசுனேன். அவங்க நீங்க அனுப்புன எக்சல் காபில சரியான மார்க் இருந்தா உடனே மாத்திடறேன்னு சொல்லிருக்காங்க. அதுலயும் தப்புன்னா நீங்கதான் சென்னைக்கு அலையனும் சொல்லிட்டேன்.”

“ஓகே சார், தேங்யூ சார்”

சக்திக்கு வேலையே போக வாய்ப்புள்ளது என்று தெரியும், அதனால் தான் நடுங்கியது. இதே மற்ற டிபார்ட்மென்ட் HODக்களாக இருந்தால் பழியை தூக்கி ஸ்டாஃப் மீது சுமத்தி, அவர்கள் நல்ல பெயர் எடுப்பதற்காக வேலைக்கே உலை வைத்திருப்பார்கள். இது போல் பிரின்சிபல் வரை வந்து சிபாரிசு செய்ய மாட்டார்கள்.

ஒருவழியாக எக்ஸல் காபியில் சரியான மதிப்பெண் 95 என இருக்கவும் பிரச்சனை தீர்ந்தது. சாவகாசமாக மாலை பேசும் போது சக்தி தன் துறைத்தலைவரை கேட்டான்

“ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க மட்டும் இல்லன்னா பிரின்சி என்னை சாப்பிட்டுருப்பார்”

“விடுங்க சக்தி, பரவாயில்லை”

“எப்படி சார் இப்படி இருக்கிங்க? ரிசல்ட் வந்துருச்சு, இப்ப வந்து சொல்றனேன்னு கொஞ்சம் கூட கோபம் வரலையா?”

“இதுல கோபப்பட்டு என்ன ஆக போகுது?”

“அப்படி இல்லை சார், மத்த HOD ங்கலாம் அவங்க ஸ்டாஃப திட்டற மாதிரி நீங்க திட்டலைனாலும் பரவாயில்லை, குறைஞ்சது கோபம் கூட வராமலா இருக்கும்?”

“மத்த HOD க்குளாம் பிரின்சிகிட்ட என்ன ஏத்து விழும் தெரியுங்களா? அந்த பயத்துல அப்படி நடந்துக்கறாங்க. நியாயமா அவங்களே இப்படி திட்டுனா ஒருத்தருக்கு எவ்வளவு காயப்படும்னு புரிஞ்சுகிட்டு திட்டாம இருக்கனும். இப்ப நீங்க ஒரு புரஃபசர், உங்களுக்கே பிரின்சி திட்டுவார்னு எவ்ளோ தயக்கமா இருந்தது அவரை பார்க்க? ஆனா எங்கேயோ இருக்க கோபத்தை பையன்கிட்ட காட்ட யோசிக்கறதில்லை, அது தப்பு. என்னை பத்தி பிரின்சிக்கு தெரியும். உங்களை பத்தி எனக்கு தெரியும். ஏதாவது பிரச்சனைன்னா உடனே கோபப்பட்டு திட்டறதால எதுவும் மாறிடாது. அடுத்து என்னன்னு யோசிக்கனும். நானும் உங்களை திட்டிட்டா பிரின்சி என்னை எதுவும் செய்யாம விட்ருவாரா? அவருக்கு பிரச்சனை தீரனும் அவ்ளோதான். அவருக்கு மட்டும் எல்லோரையும் திட்டனும்னு என்ன ஆசையா? உங்களை திட்டாம இருந்த நேரத்துல என்ன செஞ்சா இந்த பிரச்சனை முடியும்னு யோசிச்சேன். அவர்கிட்ட உள்ளே போய் பிரச்சனைய சொன்னா என்ன பன்னலாம்னு கேட்பார். அதுக்கு பதில் சொல்லிட்டிங்கன்னா ஒன்னும் சொல்ல மாட்டார். தெரியலைன்னா செத்தோம். அவர்கிட்ட நான்தான் யுனிவர்சிடிக்கு பேச சொன்னேன். என்னையே தான் பேச வச்சார். அவர் பேசவேயில்லையே”

“அவர் பேசலையா சார்?”

“நான் தான் பேசுனேன். சும்மா உங்ககிட்ட அவர் பேசுனதா சொன்னார். அவருக்கும் ஏதாவதுன்னா சேர்மேன்கிட்ட பாட்டு விழும். பொதுவா சொல்றேன். மனசுல வச்சுக்கோங்க, உங்களுக்கு கீழ இருக்கவங்களை திட்டவோ கண்டிக்கவோ செய்யறதுக்கு முந்தி, உங்களுக்கு மேல இருக்கவங்ககிட்ட மாட்டுனா உங்களுக்கு என்னாகும்னு யோசிங்க. உங்களுக்கு ஏத்து கிடைச்சா எப்படி வலிக்குமோ, அதே தான் உங்களுக்கு கீழ இருக்கவங்களுக்கும். இதை மனசுல வச்சுகிட்டு பையன்கிட்டயும் கொஞ்சம் கனிவா நடந்துக்கங்க”

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 250

வலியார்முன் தம்மை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து

உரை: தன்னைவிட மெலிந்தவர் மேல் துன்புறுத்தச் செல்லும் போது, ஒருவன் தன்னை விட வலியவரின் முன் தான் நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

-கதிர் ராத்

214total visits.