கதிர் குறள் – 263

0
35

பிராணயாமம் – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தியா மட்டுமன்றி பல நாடுகள் பரிந்துரைத்ததன் பேரில் ஐநா சபையில் ஒப்புதல் பெற்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாட துவங்கிவிட்ட நிலையில் அனைவருக்கும் தெரிந்துருக்கும் என நம்புகிறேன். எனக்கு அதனை குறித்து என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். எனக்கு மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அனைவருக்கும் தியானம், பிராணயாமம் குறித்து சொல்லித் தருவார். அவருக்கு நாங்கள் “பாபாஜி” என்றுதான் பெயர் வைத்திருந்தோம். யாராவது தனியாக சிக்கினால் அவ்வளவுதான். பல விஷயங்களை, நல்ல விசயங்களைத்தான் சொல்லித் தருவார். ஆனால் இதெல்லாம் ஏறுகின்ற வயதா அது? புதிதாக வந்திருந்த நோக்கியா N series போனை வைத்து குறும்படம் எடுக்க முயற்சித்த காலம் அது. இப்போது நினைத்தால் பேசாமல் அவரிடமே கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். யாருக்கேனும் விருப்பம் இருந்தால் அவரைத் தேடி போக தேவை இல்லை. அவரே நம் அறைக்கு வந்து சொல்லித் தர தயாராக இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது மன அழுத்தத்தை குறைக்கவும் உடல்நலத்திற்காகவும் கற்கலாம் என போனால் மாதம் ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள். ஈஷாவெல்லாம் துவங்கிய புதிதில் எங்கள் ஊரில் வீடுவிடாக வந்து இலவசமாக சொல்லித் தர அழைத்தார்கள். இப்போது என்ன விலை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சரி எங்கெங்கோ போகிறது. விசயத்திற்கு வருவோம். கல்லூரிக் காலத்தில் தேடி வந்த பிராணயாமத்தின் அருமையை தெரிந்துக் கொண்டது பாலகுமாரனை வாசிக்க துவங்கிய பிறகு தான்.

பல நாவல்களில் என்று சொல்வதை விட கிட்டத்தட்ட அனைத்து புத்தகங்களிலும் மூச்சுப்பயிற்சியில் நன்மைகளை சொல்லி விடுவார். அதில் “வேட்டை” என்று ஒரு நாவல். அதில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த ஒருவன், நல்ல குணவானாக இருப்பான். அதற்கு அவனிடம் இருந்த மூச்சுப்பயிற்சியும் யோகா செய்யும் பழக்கமுமே காரணம் என கூறி இருப்பார். அப்படி இருந்தவன் திடிரென ஒருநாள் வேலையை விட்டுவிட்டு யோகா சொல்லிக் கொடுக்க போவதாக சொல்வான். மற்றவர்களை விட அவனுக்கு பெண் கொடுத்த மாமனார் அதிர்ந்து போவார். வருமானம் வருமா என்று பயந்த வண்ணம் கேட்பவருக்கு அவரது மகள், நாயகனின் மனைவி பதில் சொல்வாள்.

“அப்பா, உங்களுக்கு இருந்த சந்தேகம் எனக்கும் இருந்தது, நிறைய கேட்டு தெரிஞ்சுகிட்டேன். என் வீட்டுக்காரர் மத்தவங்க மாதிரி பணத்துக்கு பின்ன அலையறவர் இல்லை. சத்தியமான வாழ்க்கை வாழ விரும்பறார். சத்தியம் இருக்க இடத்துல சௌகர்யத்துக்கு குறைச்சல் இருக்காது. அவர் பெரியமனுசர்ப்பா, அவரை வேட்டையாட சொல்லாதிங்க”

இது கிட்டத்தட்ட நாவலின் இறுதியில் வரும் வசனம். எனக்கு ஆழமாக பதிந்தது. பணத்திற்கு பின் ஓடுவதும் வேட்டை தானே. உண்மை தான். வேட்டை நாவல் வந்தது 2003ல். அப்போது யோகா சொல்லித்தர ஆரம்பித்து வருமானமில்லாமல் சிரமப்படுகிறவர்கள் யாரேனும் உண்டா? உண்மையில் அனைவரும் மூச்சுப்பயிற்சி செய்கையில் மனம் அமைதியாகும். தேவையற்ற குழப்பம், கோபம், குரோதம் இருக்காது. அதை விட முக்கியம் ஆசை குறையும். பேராசை சுத்தமாக இருக்காது. அப்படி இருக்கையில் நாடே சுபிட்சமாக இருக்கும். ஆனால் இதற்கு முக்கியமாக சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும். சுயநலம் இருந்தால் இவற்றை செய்ய முடியாதா என்றால் செய்யலாம் என்பது தான் உண்மை.

ஏனென்றால் தியானப் பயிற்சியினை அனைவராலும் செய்ய முடியும். கொலை செய்பவர்களாலும் முடியும். கொஞ்சம் கூட கோபப்படாமல் முகத்தை கோரமாக்காமல் கொலை செய்யும் சைக்கோக்கள் வாழும் நாடு இது. உதாரணத்திற்கு ஒரு திரைப்படம் சொல்கிறேன். கந்தசாமி படத்தில் விக்ரமை கொலை செய்ய ஆட்களை அனுப்புகையில் ஸ்ரேயா சொல்வார் “அவனை கொல்லமுடியாது. கோபப்படறவனை ஈசியா அடிச்சிடலாம். கூலா இருக்கவனை நெருங்க கூட முடியாது”. ஆம். நீங்கள் மணிக்கணக்கில் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா செய்வதும் ஒன்று தான். உங்கள் கோபத்தை முழுமையாக கையாள தெரிவதும் ஒன்று தான்.

கோபத்தை கையாள்வதென்றால் கோபமே வராமல் பார்த்துக் கொள்வதல்ல. கோபம் வந்தாலும் போனாலும் அது உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு இருக்க வேண்டும். கோபம் வருகையில் அடக்குவது எளிது. வரவழைக்க முடியுமா? எங்கே கோபப்படுங்கள் என்று யாராவது சொன்னால் உடனடியாக மொத்த கோபத்தையும் கொட்ட முடியுமா? முடியும். அதுதான் கோபத்தை கையாள்வது. சிலருக்கு இயல்பாக வரும். சில பயிற்சிகளால் செய்யலாம். இதற்கும் ஒரு சினிமா காட்சியினை உதாரணமாக சொல்கிறேனே. அவெஞ்சர்ஸ் படத்தில் ஏலியன் படைகள் வந்து பூமியை தாக்கிக் கொண்டிருக்கும் பொழுது மற்ற ஹீரோக்களால் சமாளிக்க முடியாது. எங்கே ஹல்க் என்று தேடுகையில் உடைந்த பைக்கில் டாக்டர் வருவார். கேப்டன் அமெரிக்கா ஹல்க்கிடம் இது நீங்கள் கோபப்பட வேண்டிய நேரம் என்பார். அதற்கு ஹல்க் “அதுல ஒரு இரகசியம் இருக்கு, நான் எப்பவுமே கோபமாதான் இருக்கேன்”. இது தான் கோபத்தை கையாள்வது. இதனை பலர் கட்டுப்படுத்துவது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி, ஒரு காலத்தில் இங்கு முழுக்க யோகாவும், தியானமும், மூச்சுப் பயிற்சியும் இருந்திருக்கிறது. எதனால் அது நின்று போனது என்ற கேள்வி வரலாம். அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். வெறுமனே உடல்பயிற்சியாகவும், மனப்பயிற்சியாகவும் இருந்தது சமய சடங்காக மாறியது. அதனை ஒரு கூட்டம் மட்டும் சொந்தம் கொண்டாடியது ஒரு காரணம். இன்னொன்று அந்நிய படையெடுப்பு. அமைதியான குணம் நமக்கு சரி வரும் எதிரிக்கு வசதியாக போய்விடுமே? அனைவரும் மூக்கைப் பிடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டால் வருபவனுக்கெதிரே வாள் பிடிப்பது யார்?

ஒவ்வொரு தோல்வியும் இங்கிருப்பவர் கைகளில் ஆயுதத்தைத்தான் தந்தது. அப்படி ஒரு கூட்டம் போருக்காக செல்கையில் இன்னொரு கூட்டம் எங்களுக்கு அது ஒத்து வராது. நாங்கள் நாட்டின் நன்மைக்காக இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்கிறோம் என ஒதுங்கினார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். இல்லையென்றால் அழிந்த கலைகளுடன் மூச்சுப்பயிற்சியும் இணைந்திருக்கும். நியாயத்திற்கு இது போன்ற யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தெரிந்தவர்கள் அதனை பணத்திற்காக யாருக்கும் சொல்லித்தரக் கூடாது. விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாக சொல்லித்தர வேண்டும். வேறு எதையும் செய்யாமல் இக்கலைகளை மட்டும் பரப்புபவர்களை மக்கள் பாதுகாக்க வேண்டும்.

எப்படி அக்காலத்தில் புலவர் பெருமக்களை வள்ளல்கள் நீ தொடர்ந்து வாசி, எழுது. உன் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆதரித்தார்களோ அப்படி இக்கலைகளை பரப்புவோரை மக்கள் சௌகர்யமாக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்க வேண்டியவை இன்று கார்ப்பரேட் குருஜிக்களிடம் சிக்கிக் கொண்டிருக்காது. அனைவரும் ஆர்வமாக கற்க வேண்டிய கலைகள் இவை. இதனை பாதுகாத்து பரப்புவது என்பது ஒரு தவம். அத்தவத்தில் ஈடுபடுவோர்கள் சுயநலமின்றி வருமானத்திற்கு அலையாமல் பொதுநலத்துடன் இருக்க வேண்டும். அவர்களை மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும்.

இதைத்தான் அனைவரும் ஆசைகளை விடுத்து தவம் செய்ய அமர்ந்துவிட்டால் எப்படி அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் என்று எண்ணித்தான் ஒரு சாரர் தவ வாழ்வினையும் மற்றவர் அவர்களுக்கு உதவும் லௌகீக வாழ்விலும் ஈடுபடுகிறார்கள் என்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: தவம்   குறள் எண்:263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

உரை: துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை மறந்தார்களோ?

கதிர் ராத்

177total visits.