கதிர் குறள் – 264

0
35

“யார் பெரிய பணக்காரன்?” என்று வகுப்பில் ஒரு ஆசிரியர் கேட்டார். நாங்களும் பில்கேட்ஸ், அம்பானி என தெரிந்த பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்வியை நாங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என புரிந்ததும் விளக்குவதற்காக குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

ஒரு மாலை வேளையில் ஒரு பணக்காரன் தன்னைப்போல கோடிகோடியாக சம்பாதிக்கும் சக பணக்காரனுக்கு போன் செய்தாராம். சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என ஒருவர் கேட்க, மற்றவர் “இன்றைய வருமான, செலவுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். அதற்கு மற்றவர் “போடா ஃபூல், உங்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு எண்ண முடிஞ்சா நீயெல்லாம் என்னடா பணக்காரன்?” என்று பரிகசித்தாராம். இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தன்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, இவ்வளவு செலவு செய்ய வேண்டும், இவ்வளவு சேமித்து வைக்க வேண்டும், இன்னும் இவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ரு கணக்கு போடுபவர்கள் பணக்காரர்களே கிடையாது. அவர்களுக்கும் மாத சம்பளக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? சொல்லப் போனால் உண்மையான பணக்காரர்கள் பணத்தினை உபயோகிக்க மாட்டார்கள். சற்று யோசித்து பாருங்கள். அம்பானியும் அதானியும் தங்கள் கோட் பாக்கெட்டுக்குள் பர்ஸ் வைத்து பணமா வைத்திருப்பார்கள்? இல்லை கிரெடிட் கார்ட் வைத்து கொண்டிருப்பார்களா?

தன் அடையாளத்தையே சொத்தாக மாற்றி இருப்பார்கள். அவர்களுக்கு பணமுடை என்பதே இருக்காது. இது செய்ய வேண்டும், ஆனால் அதற்கான நிதி இல்லை என்று என்றுமே தடுமாறி நின்றிருக்க மாட்டார்கள். வழமை போல் ஒரு உதாரணம் சினிமாவில் இருந்து. “தனி ஒருவன்” படத்தில் ஜெயம் ரவி அனைத்து பண பரிமாற்றத்தையும் தடுத்த பின் அரவிந்த் சுவாமி பின்வாங்கி விடுகிறாரா என்ன? 5 நிமிடத்தில் வேண்டிய பணத்தை வரவழைப்பாரே? அதுதான் பணக்காரன் என்பதற்கான அடையாளம். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பணத்தை சம்பாதித்து சேமிப்பவன் பணக்காரன் அல்ல. அதனை ஒரு கருவியாக, ஆயுதமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு தூக்கி போடுகிறவன் தான் பணக்காரன். அவனுக்கு பணம் முக்கியமல்ல. அவன் நினைத்தது நடக்க வேண்டும்.

இது போன்றவர்களை இப்போது மில்லினியர் என்கிறோம். வெறும் பணத்தினால் அளவிடுகிறோம். அப்படியில்லை. இவர்கள் தான், இவர்களை போன்றவர்கள் தான் வரலாற்றை எழுதுபவர்கள். மொத்த உலகிலுள்ள அனைவரின் தலையெழுத்தையும் முடிவெடுப்பது உலகெங்குமுள்ள 1000 பணக்காரர்களும் அதிகாரமுள்ளவர்களும் தான். கடந்த நூற்றாண்டின் மொத்த வரலாற்றையும் மாற்றியது ஹிட்லர் என்ற தனிமனிதனின் சிந்தனை என்பதனை மறுக்க முடியுமா? டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கும் நமக்கும் தொடர்பில்லையா என்ன? முதலில் எதற்கு வேண்டும் பணம்? எதற்கு வேண்டும் அதிகாரம்? அதை வைத்து என்ன செய்வது? நமக்கு தெரியாது.

இப்போது உங்கள் கையில் ஒரு கோடியை கொடுத்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால் அதை செலவளிப்பது குறித்துத்தான் யோசிப்போம். நாம் அப்படித்தான் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். சிலருக்கு அதனை வைத்து பல கோடிகளை சம்பாதிக்க தெரியும் அவ்வளவு தான். பணம் என்பது ஒரு வெண்ணெய், அதை அப்படியே உண்பது சாதரணமாக அனைவரும் செய்வது, அதை கடைய தெரிய வேண்டும். நெய்யாக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணமும் அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தெரியுமா?

பணத்தை வைத்து அதிகாரத்தினை சம்பாதிக்கலாம். அதிகாரத்தைக் கொண்டு பணத்தினை சம்பாதிக்கலாம். இரண்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதானி யார்? மோடி யார்? இருவரும் எங்கு இருந்து துவங்கினார்கள். ஒருவருக்கு பணமும் இன்னொருவருக்கு அதிகாரமும் எப்படி வந்தது? யோசித்து பாருங்கள். பணமும் அதிகாரமும் சேர்கையில் எழுத படிக்க தெரியாதவரை மருத்துவராக்கலாம். கொலை செய்துவிட்டு மக்கள் தலைவராகலாம். நம்மை சுற்றி இது நடந்துக் கொண்டு தானே இருக்கிறது. சட்டமன்றத்திற்கு செல்லும் எத்தனை பேர் மீது கொலை வழக்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே? மலையை வெட்டியவர்களை என்ன செய்ய முடிந்தது சட்டத்தால்?

இவ்வளவு நேரமும் விளக்கிய பணத்தையும் அதிகாரத்தையும் சம்பாதித்து என்ன செய்வார்கள்? வேண்டியவர்களை மேலே தூக்கி விடுவார்கள். வேண்டாதவர்களை குழி தோண்டி புதைப்பார்கள். இதை செய்ய மேற்சொன்ன இரண்டும் இல்லாமல் செய்ய முடியாதா என்றால் செய்யலாம். உலகில் இந்த இரண்டையும் மிஞ்சிய ஒன்று உண்டென்றால் அது தவத்தால் கிடைக்கும் ஞானம் தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தெளிவான பார்வை. அனைத்து விசயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறன். இதுவரை என்ன நடந்தது? என்ன நடந்துக் கொண்டிருக்கிறது? எதை எப்படி மாற்றினால் என்ன நடக்கும் என்று அனைத்தையும் கணிக்கும் திறன் வேண்டும். இத்திறன் சிலருக்கு இயற்கையாய் வரும். மற்றவர்கள் பயிற்சியால் பெறலாம். தியானத்தினால் தவத்தினால் இத்திறனை பெறலாம்.

தமிழர்களுக்கு பிடிக்காதவர்தான். சுப்பிரமணிய சுவாமியை எடுத்துக் கொள்ளுங்கள். மனிதருக்கு வயது 77 தெரியுமா? அந்த வயதில் நீங்கள் செயல்படுவீர்களா? என்று யோசியுங்கள். இத்தனை வயதிலும் முழுமையாக செயல்பட காரணமாக அவர் கூறுவது சூரிய நமஸ்காரத்தையும், யோகாவையும், தியானத்தையும் தான். இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு சொந்தம் கிடையாது. இதெல்லாம் எதுவும் செய்யாமலேயே கலைஞர் இருந்திருக்கிறார். அது அவருக்கு இயற்கையாக கிடைத்தது. நாம் பயிற்சியின் மூலம்தான் பெற வேண்டும்.

கவனத்தை முழுமையாக ஒருமுகப்படுத்த கற்றுக் கொண்டால் அனைத்தும் சாத்தியம் என்கிறார் விவேகானந்தர். சிகாகோவிற்கு சென்ற பொழுது முன்பின் பழக்கமே இல்லாமல் முதல் முறையிலேயே தண்ணிரில் மிதக்கும் தக்கைகளை துப்பாக்கியால் குறிதவறாமல் சுட்டதற்கு காரணமாய் அவர் சொன்னது இது தான். இதனை, இத்தவத்தினை செய்வதால் யோசிக்கும் திறன் மேம்படுவதால், குழப்பமில்லாமல் எடுக்கும் முடிவுகளால் வேண்டியவர்களை காக்கவும், வேண்டாதவர்களை தூக்கவும் முடியும் என்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்:தவம்   குறள் எண்:264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

உரை: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

கதிர் ராத்

186total visits.