மோகன் சினிமாஸ் -5- Dunkirk

0
52

நோலன் மற்ற படைப்பாளிகளில் இருந்து அதிகளவில் மாறுபடுவது தனது கதை சொல்லும் பாணியில் மட்டுமே. ஒரே ஊருக்கு ஒரே பயணத்தில் மூன்று வெவ்வேறு பாதையின் வழியே கூட்டி செல்வது. அதில் ஆச்சர்யம்  அந்த அனைத்து பாதையுமே பயணிகளுக்கு பெரும் சுவாரசியமாகவே அமையும்படி பார்த்து கொள்வது. ஆதலாலே அதிக பயணிகள் மற்ற ஓட்டுனர்களை (இயக்குனர்கள்)  விட இவரிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது.

ஷூட்டிங் ஸ்பாட்டைவிட அதிக உழைப்பையும், நேரத்தையும் தனது ஸ்கிரிப்ட்திற்கு இவர் செலவழிப்பது இவரது அனைத்து படைப்புகளின் மூலம் நமக்கே தெரியும். இந்த படமும் ஒரு ஊருக்கு பல வழி பயணமே. பல வேலைகளில் இவர் தேர்ந்தெடுக்கும் பாதை பயணிகளுக்கு புதிராகவே இருப்பதால் இம்முறை DUNKRIK செல்லும் பயணிகள் ஒரு முறை இந்த மேப்பை (பதிவை) பார்த்து சென்றால் இந்த பயணம் உங்களுக்கு எளிய புரிதலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கதை அனைவரும் அறிந்த அதே இரண்டாம் உலகபோரில் பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் ஜெர்மன் படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். 26.05.1940 முதல்  04.06.1940 வரை என கிட்டத்தட்ட இந்த ஒன்பது நாட்கள் இவர்களின் வாழ்க்கையே இப்படம்.

இதே கதை உலகின் எந்த இயக்குனர் வசம் ஒப்படைக்கபட்டிருப்பினும் லட்ச கணக்கில் துப்பாக்கிகளும், டன் கணக்கில் தோட்டாக்களும், ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளும் பயன்படுத்தி கதை முழுக்க இவை வெடிக்கும் சப்தத்தையும், இதனால் பாதிப்படைந்த வீரர்களின் மரண ஓலத்தையும் பின்னணியில் ஒலிக்கவிட்டு பார்வையார்களின் பரிதாப ஓட்டுகளை வாங்கி சென்றிருப்பர். மேலும் அந்த கடல் முழுக்க ரத்தத்தையும் பிணங்களையும் கொண்டு மறைத்திருப்பர். உடைந்த கை மற்றும் கால்கள் என அந்த பீச் முழுக்க மனித உடல் பாகங்களின் கண்காட்சி வேறு தனியே நடந்திருக்கும்.

ஆனால் இதே கதையை இவரிடம் சென்றதால் அடைந்த மேன்மை என்ன?

 

https://www.youtube.com/watch?v=K6BEcoM0zik

இந்த டீசரில் வரும் பின்னணி இசையும், போர் விமானத்தின் இஞ்சின் ஒலி. அதை மட்டுமே (பெரும்பாலும்) கொண்டு பார்வையார்கள் அனைவரையும் இருக்கையிலே கட்டிபோட்டது. மேலும் வீரர்கள் அனைவரும் கதை துவங்குவதற்கு முன்னே சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். ஆதலால் தாங்கள் உயிர் பிழைத்ததாக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே உள்ளதால் கதை முழுக்க (பெரும்பாலும்) துப்பாக்கி, தோட்டா மற்றும் வெடிகுண்டுகளுடனே திரிவதில்லை. ஒரு கப்பல் போர்விமானம் மூலம் சாய்க்கபடுவதை அந்த கப்பல் முழுக்க இன்ச் பை இன்ச்சாக வெடித்து முழுகுவதையும், வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பதையும் மற்றும் அவர்களின் மரண ஓலங்கள் பின்னணியில் ஒழித்து பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்தவில்லை. ரத்தம் வீரர்களின் உடலில் இருந்து ஒரு துளி கூட பூமியில் சிதறும் காட்சிகள் இல்லை. மேலும் அவர்களின் உடல் பாகங்கள் அனைத்தும் அவர்களிடமே இறுதிவரை இருந்ததால் நாம் நிம்மதியாக வீடு திரும்ப ஏதுவாக இருந்தது.

இது எதுமே இல்லாம எப்படி ஒரு இரண்டாம் உலக போரின் ஒரு பகுதி படமாக்க சாத்தியம்? மேற்கூறிய அனைத்தும் இந்த கதைகளிலும் நிகழ்ந்தது. ஆனால் அவை நமக்கு உணரவைக்க பட்டதே அன்றி காட்சிப் படுத்தபடவில்லை. உதாரணமாக ஒரு கப்பல் போர் விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்படும் போது அது பார்வையாளனுக்கும் அந்த விமானியின் பார்வையில் இருந்தே காட்டப்படும். நமக்கு மரணம் என நேரடியாக காட்டப்பட்டதே இருவரின் மரணம் மட்டுமே. ஒன்று வீரர்களை காக்க தனது சொந்த படகை எடுத்துவரும் (MARK RYLANCE) பெரியவரின் பதினேழு வயது மகனின் மரணம் (குண்டடிபட்டு இறப்பது போல் இல்லாமல் சிறு கைகளப்பில் தவறிவிழுந்து இறப்பது). மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் பலர் மறைந்திருக்கும் படகில் ஒளிந்துள்ள பிரெஞ்சு வீரனை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துகொள்ள அவன் மட்டும் நீரில் மூழ்கி (அதிலும் அவன் தத்தளித்து மூச்சி முட்டி இறப்பது போல் இல்லாமல் அவரது துடிக்கும் கை அசைவு மட்டுமே காட்டப்படும்) இறப்பது. ஆக நாம் நேரடியாக பார்த்தது இந்த இரு மரணங்களை மட்டுமே அதுவும் இந்த போரின் மூலம் நிகழ்ந்ததல்ல. இவையேதுமில்லாமல் நம்மால் ஒரு போர் திரைபடத்தை பார்த்த மனதிருப்தியை எவ்வாறு ஒரு இயக்குனராக அவரால் தர தரமுடிந்தது.

முன்பே கூறியது போன்று அவரின் கதை சொல்லும் பாணி. படம் துவங்கி இரண்டாம் நிமிடத்தில் நகரில் இருந்து கடற்கரை நோக்கி ஓடி வரும் ஒரு வீரனுடன் பயணிக்கும் கேமரா ஒரு ஷாட் (மறக்காமல் அந்த சிலிர்ப்பை அனுபவிக்கவும்). இந்த ஒற்றை கதை அங்கே மூன்றாக பிரியும் தரைவழி, ஆகாயவழி மற்றும் கடல் வழியென.

கிளை கதை:1.ஜெர்மன் விமானவழி தாக்குதல்களை சமாளிக்க இரு பிரிட்டிஷ் போர் விமானிகளாக JACKLOWDEN மற்றும் TOM HARDY இருவரின் ஆகாய வழி கதை.

கிளை கதை:2. DUNKIRK பகுதியில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ் நாட்டினரின் சில கப்பல்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவர்கள் நாட்டின் வீரர்களுக்கே முன்னுரிமை என்பதால் பிரெஞ்சு வீரர்களான FIONN WHITEHEAD மற்றும் ANEURIN BARNARD கப்பலில் திருட்டு தனமாக பயணிக்கும் கடல்வழி கதை.

கிளை கதை:3. கடற்கரையில் எஞ்சியுள்ள லட்சகணக்கான வீரர்களை கூட்டி செல்ல வரப்போகும் சுமார் 700 பிரிட்டிஷ் படகுகளுக்காக அவர்களுடனே காத்திருக்கும் ராணுவ உயர் அதிகாரி மற்றும் வீரர்களின் தரைவழி கதை.

இப்பதிவின் மூலம் படத்தின் கதை முழுக்க கூறியது போன்று தோன்றினாலும். இந்த மூன்று கதைகளையும் ஒரு சேர கூறாமல் தனது பாணியில் கூறிய விதத்தில் உள்ளது இயக்குனரின் சாதுர்யம். அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களும் மிகச்சரியாக தங்களது பணியை நிறைவேற்றி இருப்பினும் இக்கதைக்கு உயிர்நாடியான  எடிட்டிங் LEE SMITH (BATMAN series, INSPECTION) மற்றும் MUSIC HANS ZIMMER இருவரின் மூலமே இப்படம் முழுமை அடைந்துள்ளது. இந்த பதிவு முழுக்க இப்படத்தை பார்க்கும் வழிமுறை மட்டுமே. இதை முழுக்க படித்திருப்பினும் தனது கதை சொல்லும் பாணியில் மிகபெரும் ஆச்சர்யத்தை ஒளித்துள்ளர். திரையில் தரிசித்து ஆசிபெற்று கொள்ளவும்.

-மோகன் பிரபு

217total visits,1visits today