கை விளக்கு ஏந்திய காரிகை

0
61

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இப்பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்கப் போராடும் மனுக்குலத்திற்கு தன் வாழ்வு ஒரு துளியாவது பயனுள்ளதாய் இருக்க வேண்டுமென தீர்க்கமாய் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். அந்த சொற்பத்திலும் உலக மக்களின் மனதில் இன்றும் சிற்பமாய் வாழும் ஒருவர் தான் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்…

இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் பெரும் செல்வந்தர்களான பெற்றோர்களுக்கு இரண்டாவது மகளாக 1820 ஆம் ஆண்டு மே 12 ல் பிறந்தவர் தான் நைட்டிங்கேல். தனது 17வது வயதில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோரையும், பெரும் செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் துச்சமென தூக்கி எறிந்துவிட்டு ஆதரவும், அன்பும், அரவணைப்பும் தேவைப்படும் நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகப் புறப்பட்டார்…

நைட்டிங்கேல் செவிலியராக முடிவெடுத்த அந்நாட்களில் செவிலியர் பணி என்பது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் செய்யும் ஒரு தொழிலாக இருந்தது. அந்த நிலையை மாற்றி செவிலியர் பணிக்கென ஒரு குழுவை உருவாக்கி அவர்களுக்கென கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும், செயல் முறைகளையும் உருவாக்கி அதைத் தீவிரமாகக் கடைபிடிக்கவும் செய்தார்…

1854 ல் நடந்த கிரீமியன் போரில் நைட்டிங்கேலும், அவரது குழுவினரும் போரில் காயம்பட்ட வீரர்களுக்குச் செய்த சேவை தான் அவர்களை உலகப் புகழ்பெறச் செய்தது. ஒவ்வொரு இரவும் கையில் விளக்கை ஏந்திக்கொண்டு நோயாளிகளின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு சிகிச்சையும், நம்பிக்கையையும் அளித்தார். கையில் விளக்கேந்தி நோயாளிகளின் வாழ்வில் ஒளியூட்டிய காரணத்தால் “கை விளக்கேந்திய காரிகை” எனப் போற்றப்பட்டார். நைட்டிங்கேலின் வருகைக்குப் பிறகு வீரர்களின் இறப்பு சதவிகிதம் 43 லிருந்து 2 சதவிகிதமாகக் குறைந்தது…

போருக்குப் பிறகு இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேல் செவிலியர்களுக்கென முதல் பயிற்சிப் பள்ளியை உருவாக்கினார். நோயாளிகளின் அறை , உணவு , உடை , சுத்தம், சுகாதரம் போன்ற விசயங்களில் அடிப்படை கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்துக் கொடுத்த கோட்பாடுகள் தான் உலகம் முழுவதும் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது…

நைட்டிங்கேலின் சிறப்பான பணியைப் பாராட்டி இங்கிலாந்து அரசு தனது உயரிய விருதுகளை அவருக்கு அளித்து கௌரவித்தது. உலக நாடுகளின் பல உயரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்…

தன் கடும் உழைப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட நைட்டிங்கேல் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 90-வது வயதில் காலமானார். இவரது நினைவைப் போற்றும் வகையில் இவர் பிறந்த தினம் இன்று உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது….

# உயிர் காக்கும் கடவுள்களாகப் போற்றப்படும் மருத்துவர்களுக்கு இணையாகப் போற்றப்பட வேண்டிய செவிலியர்களுக்கு இன்றும் இச் சமூகம் சரியான அங்கீகாரத்தையும், மரியாதையையும் கொடுக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை…..

குறைந்தபட்சம் நீங்களாவது அடுத்தமுறை ஒரு செவிலியரைச் சந்திக்க நேர்ந்தால் அவருக்கு மரியாதை கொடுங்கள். அவரது சேவைக்கு நன்றி கூறிப் பாராட்டுங்கள். நீங்கள் கொடுக்கும் அன்பும், மரியாதையும், பாராட்டும், நன்றியும் நோயாளிகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த அந்தக் கை விளக்கேந்திய காரிகைக்குச் செலுத்தப்பட்ட நன்றியாகவும், மரியாதையாகவும் இருக்கட்டும்…

# உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு என் இனிய செவிலியர்கள் தின வாழ்த்துகள்..

-ச.தாஸ்

831total visits.