புரையேறுதல்

0
128

நண்பர்கள்  யாராவது சாப்பிடும்  போது  புரையேறுச்சுனா தலையில்  தட்டி  தண்ணீர்  குடிங்க சொல்லிட்டு  வேண்டியவங்க யாரோ  நினைச்சு  இருக்காங்க  அப்படினு  சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு  போயிடுவோம்.

சாப்பிடும்  போது பேசாதே,   சிரிக்காதே, புரைக்கேறும் இப்படி  அம்மாவிடம்  திட்டு  வாங்காத  குழந்தைகள்  இல்லை.

பச்சப் புள்ளைய  பாலைக்  குடிச்சதும் கொஞ்ச  நேரம்  தோளில் போட்டு  முதுகில்  தட்டி  கொடு.  அப்படியே   தொட்டிலில் போடாதே புரையேறப் போகுது  என்று  அறிவுரை  சொல்லும்  பாட்டிகள்

மாசமா  இருக்கும்  போது மல்லாக்க  முதுகில்  படுக்காதே. இடது பக்கமா  தான்  திரும்பி  படுக்கனும் அப்படி  சொல்லிக்  கொடுக்கும்  அக்காக்கள்.

இப்படி  எல்லோரும்  சொல்லுறது  ஓரே விஷயம்  தான்.  அப்படி  புரைக்கேறினா என்ன  பண்ணும்.?

ஒரு சின்ன  சம்பவம்.

72 வயதான  அய்யா  , நல்ல  திடமான  ஆளு,  சர்க்கரை  வியாதி  கடந்த  பத்து  ஆண்டுகளாக   கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.  இந்த  தடவை  கோடைக் கால விடுமுறையை  தன்  பேத்தியோட அமெரிக்காவில்  கழிப்பதற்கு டிக்கெட்  போட்டாச்சு.  போன  வாரம்  தான்  மாஸ்டர்  ஹெல்த்  செக்  அப்  பண்ணி  இன்னும்  ஆறு  மாதம்   வரைக்கும்  தேவைப்படும்  மாத்திரைகள்  எல்லாம் வாங்கி வச்சு  கிளம்ப  ரெடி ஆகி விட்டது.  ஒரு நான்கு  நாளைக்கு  முன்னாடி  வெளி  வேலையா  போன  இடத்தில்  கொஞ்சம்  தாமதமாகி மாலை  காபி சிற்றுண்டி  சாப்பிட முடியல.  களைப்புடன்  வீட்டுக்கு  வந்த  ஆளு  மயக்கமா வருகிறது,  கொஞ்சம்  தலை  சுத்துது, படுத்துக்கிறேன்  என்று  சொல்லிட்டு  சோபாவில் படுத்து  இருக்காங்க. சரி சாப்பிடாமல் இருந்ததால் சர்க்கரை  குறைஞ்சு  இருக்கும்  என்று நினைத்து  ஒரு டம்ளர்  தண்ணீரில்  சர்க்கரை  கரைத்து  குடிக்க  சொல்லியிருக்காங்க. எழுந்து  உட்கார்ந்து  அவரால  குடிக்க  முடியல  அதனால  சாஞ்சிகிட்டே உட்கார  குடிக்க  கொடுத்து  இருக்காங்க.  குடிக்கும்  போதே  உமட்டிக் கொண்டு  வாந்தி  எடுத்து  புரையேறி விட்டது.   குடிச்ச  எல்லாம் வெளியே  வந்து விட்டது.  ஆளு நினைவு  மங்கி  மயக்கம்  ஆயிட்டாங்க.  வீட்டு  ஆளுங்க  விடல.  கொஞ்சம்  வாயில்  சர்க்கரை  போட்டு  கொஞ்சம்  தண்ணீர் ஊற்றி  விட்டாச்சு.  அவருக்கு   முழங்கனும் என்று  நினைக்கும்  அளவுக்கு  கூட சுய  நினைவு  இல்லை.  முழுசா  மயக்கம்  ஆயாச்சு.   உடனே  ஆம்புலன்ஸ்  மூலம்  வந்து மருத்துவமனையில்  சேர்த்தனர் . வரும்  வழியிலேயே  மூச்சுத் திணறல்  ஏற்பட்டது.  இரத்தத்தில்  உள்ள  ஆக்ஜிசன் அளவு  குறைந்து விட்டது.  உள்ளே  வந்ததும்  தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து  செயற்கை  சுவாசம்  அளிக்கப்பட்டு  இரண்டு  நாட்கள்  கழித்து  தான்  உயிருக்கு  ஆபத்து  நீங்கியது.  அப்புறமா  சுய  நினைவு  வந்தது.   ஆனாலும்  மூச்சு  விட  உள்ள  சிரமம்  குறைய வில்லை.   என்ன  விஷயம்  என்று  பார்த்தால்  இரண்டு  நுரையீரல்கள்  வேலை  செய்ய  வில்லை.  காய்ச்சல்  வர  ஆரம்பித்து  விட்டது.  அப்போது  சாப்பிட  முடியவில்லை.  வயிறு  வலி  ஏற்பட்டது.   ஏற்கனவே  சர்க்கரை  நோயாயினால் பாதி  அளவு  வேலை  பார்த்துக்  கொண்டிருந்த  சிறுநீரகங்கள் வேலை  செய்ய  மறுத்தன.  இதனால்  இரத்தக்  கொதிப்பு அதிகமானது.  படபடப்பு  மயக்கம்  திரும்ப  ஏற்பட்டது. இருதயம்   வழக்கத்தை விட  குறைவான வேலை செய்ததால் உடம்பில்  நீர்  தங்க  ஆரம்பித்தது.  திரும்பவும்  மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஒருவழியாக  ஒவ்வொன்றாக சரி செய்து  பத்து  நாட்கள்  கழித்து  மருத்துவமனையில்  இருந்து  வீட்டுக்கு  அனுப்பப்பட்டார்.  இது எதற்காக  இப்படி  நடந்தது  என்று  காரணத்தை  ஆராயும்  போது   அரை மயக்கத்தில்  இருந்த  போது குடித்த  தண்ணீர்  உணவுக்  குழாயில்  செல்லாமல்  மூச்சுக்  குழாய்  மூலம்  நுரையீரலில்  சென்று  சேர்ந்தது  தான்  காரணம்  என்று  தெரிய வந்தது.

நுரையீரலில்  காற்று  மட்டுமே  ஏற்றுக்  கொள்ளப் படும்.  அதை தவிர  எது சென்றாலும்  அது அந்நியப்  பொருட்களாக கருதப்பட்டு  அதை வெளியேற்ற  அது முயற்சி  எடுத்துக் கொள்ளும்  நடவடிக்கையே  மூச்சுத்  திணறல்  ஆக  வெளியே  தெரிகின்றது.

புரையேறுதல்  என்பது  இது தான்.  சாப்பிடும்   போது உணவுப்  பொருட்களோ ? தண்ணீரோ உணவுக் குழாய் மூலம்  செல்லாமல்  அருகிலுள்ள  மூச்சுக்  குழாயில்  செல்லும்  போது அங்குள்ள  உணர்வு நரம்புகள்  அதை உணர்ந்து   கீழே  செல்ல  விடாமல்  தடுக்க  இருமல்  ஏற்படுத்தி  அதை வெளியேற்ற  முயற்சி  செய்கின்றன.

ஆனால்  வழக்கமாக சாப்பிடும் போது  மூச்சுக்  குழாய்  மூடி   இருக்கும்.  பேசிக்  கொண்டே சாப்பிடும்  போது  அல்லது  உணவுப்  பொருட்களை வாயில்  வைத்துக்  கொண்டு  சிரிக்கும்  போது மூடியிருக்கும்  மூச்சுக் குழாய்  திறந்து  உணவுப்  பொருட்கள் உள்ளே  செல்ல  வாய்ப்பு  ஏற்படும்.

தூங்கும்  போது  மூச்சுக் குழாய் தன்னை அறியாமல்  மூடி  திறக்கும்.  பிறந்த  குழந்தை தாய்ப்பாலை   குடிக்கும்  போது தன்னையறியாமல்  வாயில்  பாலை  வைத்துக்  கொண்டே  தூங்கி  விடும். இதனால்  அப்படியே  தொட்டிலில்  போடும்  போது அது எளிதாக  மூச்சுக்  குழாயில்  சென்று  விடும்.  இதனால்  தான்  தோளில்  தட்டி  பால் இறங்கியது  உறுதிப்படுத்திக்  கொண்டு  தொட்டிலில்  இட வேண்டும்.

சாதாரண  சின்ன சின்ன  விஷயங்களில்  கவனம்  செலுத்தினால்  , வரப்போகும்  மிகப்பெரிய  ஆபத்தை  தவிர்க்கலாம்  என்பதை  மீண்டும்  ஒருமுறை  இந்த  சம்பவம்  நினைவு  ஊட்டுகிறது.

-மருத்துவர் இராதாகுமார். M.D.

807total visits,3visits today