நடராஜ செட்டியார் தட்டெழுத்து பயிலகம்

0
33

நடராஜ செட்டியார்…

தமிழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் ஊரில் பாதி பேருக்கு காதல் எனும் உணர்வு மலர்ந்ததே தட்டெழுத்துப் பயிலகங்களில்தான்…!

இன்றையக் கலாச்சாரக் காவலர்களைப் போல், அன்று இளசுகளின் சொப்பனத்தில் சிம்மங்களாக வலம் வந்தவர்கள், அந்தக்கால டைப்பிங் இன்ஸ்ட்ரக்டர்கள்தான்.

ஊரிலிருந்த முக்கால்வாசி இன்ஸ்டிட்யூட்களில் ஒல்லியாக குச்சியாக ஒரு விரல் கிருஷ்ணாராவ் தோற்றப் பொலிவில் பாண்ட்ஸ் பவுடர் வாசம் கமழுவார்கள் அந்தப் பயிற்றுனர்கள்.

அட்லஸ் சைக்கிளில் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ் அடிக்கும் அழகான யுவர்கள் டைப் அடிக்க பயிலகத்துக்குள் நுழையும் முன் நாக்கு கொதிக்கும் சூட்டில் மசாலா டீ உறிஞ்சியவாறு சார்மினார் சிகரெட் ஊதுவார்கள்.

தெருமுனையில் வெள்ளை ரவிக்கை, சிகப்பு தாவணியில் ஓயிலாடி வரும் தத்தம் கீதாக்களையும், சுந்தரிகளையும் கண்டதும், விரல் நுனியில் புகையும் சிகரெட் துணுக்கை, ஒட்டிய கன்னங்கள் மேலும் ஒட்டிக் கொள்ளும் வகையில் நீளமாக ஒருமுறை வலித்துவிட்டு, வாயில் ரோஜாப் பாக்கையிட்டு வேகமாக மெல்லத் தொடங்குவார்கள்.

டேய் மச்சி…! என் சைட் வருது… நான் தம்மடிச்சா அவளுக்குப் பிடிக்காது…! என் வாயிலே நாத்தம் அடிக்கலையே…! பக்கத்தில் மசால் வடை தின்னுபவனிடம் தங்கள் ஐயத்தை அவசரமாகத் தீர்த்துக் கொள்ளுவார்கள்.

பசங்கள்தான் இப்படியென்றால், ஒரு மணி நேரம் இவர்கள் தங்கள் உயிரைவிட்டு விரலொடிய ஒடிய தட்டெழுதிய பழுப்பு வண்ணக் காகிதங்களில் சிவப்பு பால் பாயிண்ட்களால் கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஜாங்கிரி பிழிவார்கள் இன்ஸ்ட்ரக்டர்கள்.

‘ப்ரதர், நீங்க டைப் அடிக்கும் போது அக்கம் பக்கம் பார்க்காம ஃபுல் கான்ஸ்ட்ரேஷனோட உங்க ஸ்பீட் புக்கை மட்டும் பாத்து அடிக்கணும்…!’

‘இல்லேன்னா இந்ததரம் உங்களை போர்ட் பரீட்ச்சைக்கு அனுப்ப முடியாம போயிடும் என பொய்யாக மிரட்டிப் பார்ப்பார்கள். ‘

அந்த நேரங்களில் அவர்கள் உதடுகளில் நம்பியாரின் இகழ்ச்சி புன்னகை ஒன்று பளிச்சிட்டு மிளிரும். உடம்பில் கொஞ்சம் சூடு் சுரணை இருக்கும் பையனின் முகத்தில் விளக்கெண்ணைய் வடியும்.

‘சர்தான் போடா…’ தோல் தடித்த மானஸ்தர்கள் மனசுக்குள் சிரித்துக்கொள்ளுவார்கள். ஒருவனுக்கு பிகர் மடிந்துவிட்டால் போதும்… அவ்வளவுதான்… சரியான வயித்தெரிச்சல் கேஸுகள் இந்த இன்ஸுகள்.

பக்கத்தில் தங்கள் மையிட்ட கண்களை படபடவெனச் சிமிட்டி வாயைப் பொத்திக் கொண்டு இளிப்பார்கள் சிஸ்டர்கள்.

சிஸ்டர்கள்ன்னு சொன்னா நீங்க தப்பா அர்த்தம் புரிஞ்சுக்கக் கூடாது. சிஸ்டர், பேப்பர்ல சிவப்புல வட்டம் போடறவருக்கு…! பிகரை அரும்பாடு பட்டு தேத்திவிட்ட நமக்கு இல்லை…!!!

*****

புருவமத்தியில் உற்றுக் கவனித்தால் மட்டுமே பார்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விபூதிப்பொட்டு வைத்துக் கொள்ளும் மண்டித்தெரு நடராஜ செட்டியார் இன்ஸ்ட்டியூட்டில் நான் சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள சேர்ந்தபோது அவருக்கு வயசு அறுபத்தஞ்சக்கு மேல் ஆகிவிட்டிருந்தது.

பாலாய் நரைத்த கேசம். பத்து நாட்களாக கத்தி பார்க்காத முகம். சிடு சிடுக்கும் பேச்சு. அவர் சிரித்து யாரும் பார்த்ததேயில்லை என பையன்கள் பேசிக் கொள்ளு வார்கள். எப்போதும் மங்கிப்போன நாலுமுழ வேட்டியில் வெள்ளையில் அரைக்கைச் சட்டை.

முப்பது ஆங்கிலம் மற்றும் பத்து தமிழ் மெஷின்கள், ரெண்டு டுயூப்ளிகேட்டிங் மெஷின்கள் என விஸ்தாரமானது அவருடைய பயிலகம்.

எல்லாமே ரெமிங்டன் ரேண்ட் மேக். இரவு எட்டு மணிக்கு மேல் தினமும் எல்லா மெஷினையும் சுத்தமாக துடைத்துவிட்டுத்தான் கடையை மூடுவார் அவர்.

பக்கத்து ஹாலில் பேச் பேச்சாக, லோயர், இண்டர், ஹையர் என ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் ஷார்ட்ஹேண்ட் கிளாஸ் அவரே எடுப்பார். மாலையில் எழு மணிக்கு அக்கவுண்டன்ஸி கிளாஸ். அதுக்கும் அவர்தான் மாஸ்டர்.

பழுதான மெஷின்களை அவரே அக்கு அக்காக கழட்டி மாட்டுவார். ஆல் இன் ஆல் அழகு ராஜா அவர்.

பிட்மன் புஸ்தகம் தலைகீழ் பாடம் அவருக்கு. அந்த புத்தகத்தை அவர் திறந்து நான் பாத்ததேயில்லை. குற்றால அருவிதான். கண்களை மூடிக் கொண்டு தான் ஸ்பீட் டிக்டேஷன் கொடுப்பார்.

அறுபத்து நாளாவது பக்கத்துல எட்டாவது லைன்ல மூணாவது ஸ்ட்ரோக் என்னதுடா…?

அதாண்டா… முழிக்காதேடா அச்சீவ்மெண்ட்டுடா… ஹாவிங் பிரின்ஸ்பல் ரொம்ப ரொம்ப முக்கியம்டா… ! மொதல்லே தியரி முக்கியம்…! ஸ்பீடு தன்னால வரும்.

அம்சவேணியையே மொறச்சுக்கிட்டு இருந்தா நீ எங்க உருப்படப் போறே…! சோடா புட்டி கண்னாடிக்குப் பின்னால் அவர் முழிகளும் கோபப்படும்…!

எதிர் பென்ச் அம்சவேணியின் முகம் எட்டு முழு நீளத்துக்கு கோணிக் கொள்ளும். அவள் கையில் இருக்கும் நீல நிற பென்சில் பற்களில் கடிபடும்.

அம்மாடி… உன் அப்பனும் நானும் ஒன்னா வாத்தி வேலைப் பாத்தவங்க… அவன் ரொம்ப மானஸ்தன்… அவன் பேரைக் கெடுத்துடாதே நீ… அம்சத்தை தனியாக அழைத்து புத்தி சொல்லுவார்… அது கண்ணைக் கசக்கிக்கொண்டு மனசில் பதட்டத்துடன் வீட்டுக்குப் போகும்.

வெள்ளிக்கிழமை காலையில் இன்ஸ்ட்டிட்யூட்டே மல்லிப்பூ வாசத்தில் மணக்கும்… ஈரக் கூந்தல்கள் காற்றில் அலையாடும். ஒரே விபூதி மணம்தான்… மஞ்சள் பூசிய குங்குமம் பளிச்சிடும் முகங்கள்தான்… சரசரக்கும் பாவாடை சத்தம்தான்…

அன்றைக்கு இன்ஸ்டிட்யூட் ஜே… ஜேவென களை கட்டி இருக்கும் …! ஷார்ட் ஹேண்ட் கிளாஸ் நிரம்பி வழியும்.

ட்ரான்ஸ்க்ருப்ஷனை டைப் அடிக்கும் போது தப்பித் தவறி தாவணிகள் பக்கம் எவனுடய பார்வையோ கழுத்தோ மெலிதாக கால் இன்ச் திரும்பினாலும் போச்சு…!

பக்கத்து ரூமில் இருக்கும் செட்டியாருக்கு எப்படித்தான் மூக்கில் வேர்த்துவிடுமோ…? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்…! கூவத் தொடங்கிவிடுவார்.

டேய்… படிக்க வந்தவனுக்கு அவர் கொடுக்கும் ஏகபட்ச மரியாதை அவ்வளதான்…!

நீ கட்டின ஃபீஸ் எட்டு ரூவாயை வாங்கிட்டு ஓரே வழியா ஓடிப் போயிடு…! நாளேயிலேருந்து இந்தப்பக்கம் வராதே…!

பிகரை சைட் அடித்தவன், கிளாஸ் முடிந்து போகும்போது பட்லிங்க முன்னாடி மொத்தமாக தலை குனிஞ்சுதான் நிக்கணும்…! கழுவி கழுவி ஊத்திவிடுவார் செட்டியார்.

டெரர்தான் மனுஷன்…! அந்த கண்டிப்புதான், அவர்கிட்ட திட்டுவாங்கி திட்டுவாங்கிக் கத்துக்கொண்ட ஷார்ட் ஹேண்ட்தான் இன்னைக்கும் எனக்கு சோறு போடுது…!

ஆ.. ஆமாம் இன்னைக்கு இதெல்லாம் நான் ஏன் உங்கக்கிட்டேச் சொல்லிக்கிட்டு இருக்கேன்…?

காலையிலே ஜெயநகர் போர்த் கிராஸ்ல சூடச்சுட காஜர் போளியும் நிப்பட்டும் திங்கும்போது, எதிர்ல மையூஸ்ல காப்பி குடிச்சுக்கிட்டிருந்தவர் அச்சு அசல் செட்டியார் மாதிரியே இருந்தார். ஒரு நொடி உடம்பு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

முப்பதெட்டு வருஷம் முன்னாடி அவர்கிட்டேப் படிச்சேன் நான்…! அப்பவே எனக்கு வயசு எழுபதுன்னு அவரு சொல்லுவாரு…! எழுவதும் முப்பத்தெட்டும்… !

நான் கணக்குல கொஞ்சம் வீக்கு… கூட்டிக் கூட்டிப் பாத்துக்கிட்டே நிக்கறேன் நான்..! அங்கே நிக்கறது செட்டியாரா…?

வாழ்க நடராஜ செட்டியார்…!

-கஞ்சீவரம் சதாசிவம் ரவீந்திரமணி

769total visits.