நயன்தாரா போல செட்டில் ஆவேன்- ஒண்டிக்கட்ட நேகா

0
30
Actress Neha in Ondikatta Movie Latest Images

ஒண்டிக்கட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ், பெயரிடப்படாத தமிழ் படத்தின் படப்பிடிப்பு என்று கடந்த சில வாரங்களாக சென்னை, சேலம் என்று ரவுண்டடித்து வருகிறார் நேகா. டிராவலுக்கு இடையில் கிடைத்த கேப்பில் நம்மிடம் பேசினார்.

கோலிவுட்டில் பிஸியாகிவிட்டீர்கள். சொந்த ஊர் ஞாபகம் இருக்கா?

பிறந்து வளர்ந்த ஊர், சொந்தங்கள், தாய்மொழி இப்படி கேரளாவை விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துடமாட்டேன். எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அவங்க அவங்க பிறந்த ஊர் எப்பவுமே ஸ்பெஷல். ஒரு இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊருக்கு போகும் போது அனுபவிக்கும் அந்த பரவசம் வார்தைகளால் விவரிக்க முடியாதவை. அம்பிகா, ரேவதி, நயன்தாரா போன்ற நடிகைகள் கேரளாவிலிருந்து இங்கு வந்து செட்டிலாகிட்டாங்க. அப்படின்னா தமிழ்நாடு எவ்வளவு பெஸ்ட்? எனக்கும் தமிழ் ரொம்பவே பிடிக்கும்.

முதல் சினிமா வாய்ப்பு எப்படி அமைஞ்சது?

சினிமாவில் நடிப்பேன்னு கனவிலும் நினைச்சுப் பார்த்ததில்லை. ப்ளஸ் டூ படிக்கும் போதுதான் என்னைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நோ சொல்லிவிட்டேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்கச் சொல்லி நண்பர்களும் உற்சாகம் கொடுத்தார்கள். இதுக்குமேல பிகு பண்ணக்கூடாதுன்னு சினிமாவில் நடிக்க ஒப்புக்கிட்டேன். என்னுடைய முதல் படம் தெலுங்குல அமைஞ்சது. அந்தப் படத்துக்காக போட்டோ ஷூட் எடுக்கப்பட்ட நிலையில் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்தது. அதைப் பார்த்துட்டு இவனுக்கு தண்ணில கண்டம் பட வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என் முதல் சினிமா. அதைத் தொடர்ந்து உச்சத்துல சிவா நடிச்சேன்.

ஒண்டிக்கட்ட?

நான் நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பரணி சார் அலுவலகத்தில் இருந்து கூப்பிட்டார்கள். அதுவும் எப்படி? உடனே கும்பகோணம் புறப்பட்டு வாங்க என்று அழைத்தார்கள். நோ மேக்கப் டெஸ்ட், நோ ஆடிஷன். டைரக்ட்டா படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். என்னுடைய கேரக்டர் பெயர் பஞ்சவர்ணம். கிராமத்து பின்னணியில் நடக்கிற கதை. திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என்று என்னுடைய கேரக்டர் இரண்டு டைமன்ஷன்ல இருக்கும். திருமணத்துக்கு முன் ஜாலி, திருமணத்துக்குப் பின் மூடி டைப்ன்னு நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர்.

கிளைமாக்ஸ், சென்டிமென்ட் காட்சிகளில் மேக்கப் சுத்தமா இருக்காது. ஹீரோவா விக்ரம் ஜெகதீஷ் பண்ணியிருக்கிறார். நாங்க ஜாக்ன்னு கூப்பிடுவோம். ஹீரோவா அவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அவருடன் நடிக்கும் போது கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடிந்தது. தயாரிப்பாளர் தர்மராஜ் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். அவருடைய நடிப்பும் கேஷுவலா இருக்கும். நாங்க மூவர்தான் படத்தை தாங்கிப் பிடிக்கும் முக்கியமான லீட்.

உங்க டைரக்டர் பரணி பற்றி சொல்லுங்கள்?

என்னுடைய டைரக்டர் பற்றி நான் புதுசா சொல்வதற்கு ஒன்றுமில்ல. இசைத் துறையில் பெரிய லெஜண்ட். அவர் போட்ட ஒவ்வொரு டியூனும் செம ஹிட். மியூசிக் டைரக்டராகவும், டைரக்டராகவும் அவருடைய ஒர்க் இதில் பெரிதாக பேசப்படும். ஒரு டைரக்டராக பர்ஃபெக்‌ஷன் அதிகம் எதிர்பார்ப்பார். அவருடைய கற்பனையில் உதித்த விஷயங்களை இம்மி பிசகாமல் அப்படியே ஸ்கிரீனுக்கு கொண்டு வந்துவிடுவார். கடின உழைப்பாளி. சிலபேர் கதை சொல்லும் போது சூப்பரா சொல்வார்கள். ஆனால் படப்பிடிப்பு சொதப்பலா இருக்கும். ஆனால் பரணி சார் எப்படி சொன்னாரோ அப்படியே எடுத்தார். மண் சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் மிகப் பிரமாதமாக காட்டியிருப்பார். குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்குமளவுக்கு ஃபீல் குட் மூவியாக எடுத்திருக்கிறார்.

கிளாமர்?

கிளாமர் நல்ல விஷயம்தான். இப்போது வெளிவரும் படங்களில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கிளாமர் பண்ண வேண்டியதில்லை. யதார்த்தமான கதைகள் அதிகமாக வருகிறது. ரசிகர்களை என்டர்டெயின் பண்ணணும்னா கிளாமர் கண்டிப்பா தேவை. அதுக்காக கிளாமர் பண்ணுவதில் தவறில்லை. தனிப்பட்ட விதத்தில் எனக்கு யதார்த்தமான படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால், மாடர்ன் டிரஸ் போட்டு நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ரோல் மாடல்?

சினிமாவில் என்னுடைய ரோல் மாடல்னா அது நதியா, ரேவதி, நயன்தாரா. நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்தும் லைம்லைட்டில் இருக்கிறார்கள். அவங்க நடித்த ஒவ்வொரு படத்திலும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். அவங்கள மாதிரி நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். நல்ல படங்களில் நடித்துப் பெயரெடுக்க வேண்டும். இண்டஸ்ட்ரியை விட்டுப் போன பிறகும் நான் நடித்த படங்கள் காலம் முழுவதும் நினைத்துப் பார்க்கக்கூடியளவுக்கு இனிமையான நினைவுகளாக இருக்கணும். இதுதான் என்னோட ஆசை.

பிடித்த ஹீரோக்கள்?

மம்மூட்டி, மோகன்லால், விஜய், அஜீத், விஜய்சேதுபதின்னு என்னுடைய பட்டியல் பெரியது. இவங்களோட நடிக்கணும்னு எனக்கு மட்டுமில்ல, நடிக்க வரும் எல்லாருக்கும் ஆசை இருக்கும்.

ஃபிட்னஸ் டிப்ஸ்?

நல்லா சாப்பிடுவேன். எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கு இணையாக உடற்பயிற்சி செய்வேன். சமீபத்தில் ஒரு வெறியில் உடம்பை குறைக்கிறேன் என்று சொல்லி ஜீரோ சைஸுக்கு கொண்டு வந்துவிட்டேன். இப்போது உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி விஷயத்திலும் கட்டுப்பாடாக இருப்பதால் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறேன்.

889total visits.