நிழல்கள் – சிறுகதை

0
67

“நெஜமாதான் சொல்றியாடா?”

“சீனியர் மேனேஜரும், மஹேந்திரன் சாரும் பேசுறப்ப நான் கூடதான இருந்தேன். கன்ஃபார்ம் தான் போல!”

“ஒத்துக்க சான்ஸே இல்லப்பா.

‘சூப்பர் சிங்கர்’ ல வைரமுத்து சாரை வைச்சு நாம பண்ண டி.ஆர்.பி னால அவர் செம்ம அப்சட். ஒத்துக்க மாட்டார்னு லாம் சொன்னாங்க?”

“அவர் மனசுல என்ன நெனைச்சாரோ? நம்மால யோசிக்க முடியுமா என்ன?” என சிறிய புன்னகை உதிர்த்துவிட்டு நகர்ந்தான் ராம்.

நான் யோசித்துக்கொண்டே தான் இருந்தேன். கால ஓட்டத்தில் இதெல்லாம் சாதாரணமாக விஷயம் என என்னால் எடுத்துக்கொள்ளவே முடியவில்லை.  ராம் சொல்வது கூட உண்மைதான். “அவர் என்ன நெனைச்சாரோ?”

“என்னோடு சேர்ந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் அவரும் இல்லை! அவரோடு சேர்ந்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் நானும் இல்லை!” – என வைரமுத்து பேசிய வார்த்தைகள் என்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டது. இதைவிட அவர் நகைப்புடன் கூறிய ஒரு விஷயம் அத்தனை அர்த்தமானது என்பதை யாரும் உணர்ந்திருப்பார்களா என்பது ஆச்சர்யம்தான். கட்டாயம் அது அவர் கேள்விகளை எதிர்நோக்கி வீட்டிலேயே ஒருமுறை சொல்லிப்பார்த்து வந்துருப்பார் என்றே என்னால் அனுமானிக்க முடிந்தது.

கோபிநாத் கேட்கிறார். “உங்களுக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை?”. அதற்கு வைரமுத்து ” இளையராஜாவுக்கு இளையராஜா பிரச்சனை. வைரமுத்துவுக்கு வைரமுத்து பிரச்சனை!” என சொல்லி அதிர சிரிக்கிறார்! இருவருக்கும் தங்களது ஈகோ ரட்டினக்கால் போட்டு மூக்கின்மீது உட்கார்ந்துவிடுகிறது என்பதை அட்சரச்சுத்தமாக எப்படி சொல்லிவிட்டார். கவிஞராயிற்றே. வாழைப்பழ ஊசியேற்றல் பற்றி சொல்லத்தேவையில்லை.
இன்னமும் இந்த ஒளிபரப்பை youtube ல் தினம் ஒருவர் எப்படியேனும் பார்த்துவிடுகிறார். இசை ரசிகர்கள் மத்தியிலும், ராஜா – வைரமுத்து அபிமானிகள் மத்தியிலும் இது முக்கியமான எப்பிசோடும் கூட. தன்னை சிறிதளவேனும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் இடத்தில் ராஜா தலை வைத்துப் படுப்பதில்லை. இதனால் ராஜா கட்டாயம் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே பேசிக்கொண்டிருந்தனர்.

எப்படியோ அனுமதி கொடுத்துவிட்டார். கண்டிப்பாக மகேந்திரன் சாரிடம் முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும். கவிஞர் தொடர்பான கேள்விகளும், அவர் சம்மந்தப்பட்ட எந்த விஷயமும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு மகேந்திரன் சார் கட்டாயம் செவி சாய்த்துதான் இந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கியிருப்பார்.

இயக்குனர் பாலாவே 1000வது படமான தாரை தப்பட்டைக்கு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த யோசித்து பின் வெள்ள பாதிப்பின் காரணமாக இளையராஜா வேண்டாம் என மறுத்துவிட்டார். பிரச்சனைகள் வடிந்துவிட்ட நிலையில் ஒத்துக்கொண்டு இருக்கிறார்!

ஆயிரம் படங்கள்! நினைக்கையிலேயே மலைப்பு ஏற்பட்டு ஒரு சோர்வை உடல் கண்டு சுகம் கொள்ள உட்கார்ந்துவிடுகிறது. எப்படி உழைத்திருக்க வேண்டும்? படத்திற்கு ஐந்து பாடல்கள் என்று வைத்துக்கொண்டாலும் கிட்டத்தட்ட ஐயாயிரம் பாடல்கள். அந்த படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்புகள். அது இல்லாமல் இசை நிகழ்ச்சிகள், திருவாசகம் போன்ற தனிப் பாடல் தொகுப்புகள். இசை என்பதை மட்டுமே சுவாசிக்கும் ஒருவரால் கூட இத்தனை உழைப்பை தான் நேசிக்கும் விஷயத்திற்காகக் கொடுக்க முடியுமா? இன்னமும் அவர் சொல்வது ஒன்றுதான்! “இசைக் கடலில் நான் ஒரு துளி. அவ்வளவே!”

கடைசியாக ஆரம்ப வேலைப்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. பெரிய பெரிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் என அத்தனை பேரிடமும் இளையராஜா பற்றிய பேட்டிகள் என இசை நிகழ்ச்சிக்கு அறிமுகம் கொடுக்கப்பட்டது. அறிமுகத்தின் சிறப்பாக இளையராஜாவிடம் நேர்காணல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ‘காஃபி வித் டிடி’ போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு ‘ராஜா’ என்பதால் பெயர் மாற்றத்துடன் டிடி ராஜாவிடம் கேள்விகள் கேட்டபடி இருந்தார். மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘photo session’ ல் எதிர்பார்த்ததைப் போல கவிஞர் பற்றிய புகைப்படமும் வரவில்லை. அவர் பற்றிய பேச்சும் வரவில்லை!

அப்படி என்னதான் இருவருக்குள்ளும் பிரச்சனை? வெறும் 6 வருடங்கள் தான். 1980 நிழல்கள் முதல், 1986 புன்னகை மன்னன் வரை! ஆனால் இந்த 6 முதல் 7 வரையிலான வருடங்களில் இவர்கள் சாதித்தது பல வருடங்களாக கண்ணதாசன் – எம்.எஸ்.வி அவர்களின் பிணைப்பு.

இளையராஜா தான் வைரமுத்துவை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தது. மிகப்பெரிய நண்பனாக தோளோடு தோள் சேர்த்து வேலை வாங்கியவரும். ‘வைரமுத்து’ அந்த 80 களில் மட்டும் அல்ல. இன்றும் அசைக்க முடியாத பிரம்மாண்டக் கவிஞராக உருவெடுத்து நிற்க அறிமுக அளவில் இளையராஜா ஒரு மிகப்பெரிய தூண் போன்று நிற்பவர்.

நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வைரமுத்துவை இளையராஜா இல்லையென்றால் இன்னொரு இசையமைப்பாளர் அறிமுகப்படுத்தி இருப்பார். இதிலென்ன அதிசயம் என்று! ஆனால் அந்த நேரத்தில் இளையராஜா தான் இருந்திருந்தார். சாதாரண ஒரு இசையமைப்பாளராக அல்ல. தமிழ்த் திரையிசைக்கு ஒரு புத்துயிர் கொடுக்கும் ஆன்மாவாக! மொத்த தமிழ்த் திரையிசையை கிராமியம் கலந்த இசையை மக்களுக்கு எடுத்துக் கொடுக்கும் தேவதூதனாய் இருந்தார். இளையராஜா அல்லாத ஒரு முகாந்தரத்தை வைரமுத்துவுக்கு வேறு யார் கொடுத்திருந்தாலும் அவர் இப்படி ஜொலித்திருக்க முடியாது!

இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்பது அவர்களாகவே இன்னும் சொல்லாத ஒரு மர்மம்தான். வைரமுத்து ‘இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்’ புத்தகத்தில் கோர்ட், நோட்டிஸ் என்று ஜாடை மாடையாகத்தான் சொல்லியிருப்பார். பொதுவாக சிலர் நெருங்கிய நண்பர்கள் சொன்னதை வைத்து சில காரணங்களை முன் வைப்பார்கள்!

வைரமுத்து கொஞ்சம் தற்பெருமை அதிகம் நாடுபவர். தான் பாடல் எழுதும் படங்களில் தான்தான் அத்தனைப் பாடல்களும் எழுத வேண்டும் என்று ஆசைப்படுவார். அப்பொழுதுதான் ‘பாடல்கள் – வைரமுத்து’ என்று வரும். முடிந்தால் தன் சிறிய புகைப்படம் கூட வரும். இளையராஜா அல்லாது அவர் மற்ற சில படங்களுக்கு பாடல்கள் எழுதப்போக, இளையராஜாவிடம் நேரத்தவணைகள் வாங்க ஆரம்பித்தது இளையராஜாவுக்கு முதல் முகச்சுருக்கம் வரக் காரணமாக இருந்தது.
பின் இளையராஜா தன் படங்களுக்கு மற்ற சில எழுத்தாளர்களையும் எழுத ஆரம்பிக்க விரிசல் பெரிதானது.

இளையராஜா இசை ஞானம் மட்டுமல்ல. கவி ஞானமும் உள்ளவர். வைரமுத்து எழுதும் சில பாடல்களை அவர் திருத்தம் செய்ய வைரமுத்துவுக்கோ மானக்குறைவாக அதைப் பார்க்க ஆரம்பித்தது அவர் மனது. இது வைரமுத்துவுக்கு முகச்சுருக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. வைரமுத்து எழுதிய முதல்வரி மிகவும் மிடுக்காகக் போக அதை மாற்றி நாட்டுப்புறப் பெண் பாடுவது போல இளையராஜா சொன்ன வரிகள்தான் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலின் சரண ஆரம்பம். இதேபோல ‘எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது’ பாடலை ‘இசை பாடும் தென்றல்’ படத்திற்காக வைரமுத்து எழுத, “என்னய்யா உரைநடை மாதிரி எழுதுற” என இளையராஜா சொல்லி வேறு ஒரு வரி சொல்ல “இதுதான் உரைநடை மாதிரி இருக்கிறது” என்று சொல்லி அறையை விட்டே சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிய சிறிய முகச்சுருக்கங்கள் பெரியதாக இருவரும் மற்றவர்களுடன் வேலை செய்வதை மறுதலிக்கும் விதமாகவே செய்து வந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ‘வைரமுத்து’ சாதிப்பாசம் மிக்கவர். அவரும் பாரதிராஜா என இருவரும் தேவர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். இளையராஜாவோ பிற்படுத்தப்பட்ட சமூத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் இளையராஜாவிடம் பேசும்பொழுது சாதி தொடர்பான சீண்டல்கள் இருந்தபடியே தான் இருக்கும். இருவரின் முகச்சுருக்கங்கள் பெரியதாக வளரும் ஒரு சமயத்தில் வைரமுத்து இளையராஜாவின் தாயை சாதி ரீதியாக தாழ்த்தித் திட்டிவிட மிகவும் நொறுங்கிப்போனார் இளையராஜா!
இதனால்தான் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட இளையராஜா வைரமுத்துவின் பெயரைக் கூட சொல்லிக்காட்டியது இல்லை.

குற்ற உணர்ச்சி இருப்பதாலேயே வைரமுத்து அடிக்கடி சில இடங்களில் இளையராஜாவைப் பற்றி மனம் திறக்கிறார். ஆனாலும் பிரிந்த காரணத்தைக் கூறியதில்லையே!

இளையராஜாவின் பிரிவுக்குப் பிறகு பலமுறை வைரமுத்து மன்னிப்பு கேட்டும், பாரதிராஜா மூலமாகக் கேட்டும் இளையராஜா அசைந்து கொடுக்கவில்லை. வெகுண்டெழுந்த வைரமுத்து செய்தது எல்லாம் தனி கதை. இளையராஜா தமிழ் இசையின் ராஜாவாக இருந்த அந்நேரம் வைரமுத்து கோலோச்சிய எழுத்தாளராக பெயர் எடுத்துவிட்டிருந்தார். ஆனால் ஒரு கவிஞனால் இத்தனை அசைக்க முடியாத ராஜ்ஜியத்தை உடைப்பது எத்தனைக் கடினம். இந்த ராஜ்ஜியத்தை உடைக்க இன்னொரு இசையமைப்பாளரால் தான் முடியும் என புது இசையமைப்பாளர்களை இயக்குனர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வைரமுத்து வரிகள்தான் வேண்டும் என்று பிடிவாதம் கொண்ட இயக்குனர்கள் எல்லாம் அவர் வசம் சாய வரியாக வந்ததுதான் ‘மரகதமணி’, ‘ஏ.ஆர்.ரகுமான்’ என கிட்டத்தட்ட 22 புது இசையமைப்பாளர்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியை வைரமுத்துவே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு இளையராஜாவை சாய்க்க வைரமுத்துவுக்கு 22இசையமைப்பாளர்கள் வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் இளையராஜா இன்னமும் கையில் பத்து, பதினைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார். தான் இளையராஜா பழிவாங்கல் விஷயத்தில் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நினைத்திருந்தாலும், வைரமுத்துவுக்கு உண்மை தெரியும்!

வைரமுத்துவின் கவிதைச் சொற்பொழிவு. வார்த்தைகள் இல்லாத இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி. இரண்டில் எதற்கு மக்கள் கூட்டம் அதிகம் வரும்? இரண்டில் எது அதிக சுவை தரும்?

இரண்டும் சேர்ந்தால் கிடைக்கும் சுவை? இன்னமும் இளையராஜா வைரமுத்து சேர்ந்துவிடுவார்களா என்று ஏங்கித்தவிப்பது பாரதிராஜா போன்ற அவரை நெருங்கியவர்கள் மட்டும் அல்ல. ஏகோபித்த தமிழ் இசை ரசிகர்கள். அது சாத்தியமா இல்லையா என்பதை வைரமுத்துவே விஜய் டிவி நிகழ்ச்சியில் மேடை அலங்காரத்துடன் கூறியும் விட்டிருந்தார்! என்னைப் பொருத்தவரையில் இருவரும் இணைவதெல்லாம் வேண்டாம். பரஸ்பர நட்பு பாராட்டிக்கொள்ளவாவது வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது.

நாட்கள் ஓடியது. ‘இசை நிகழ்ச்சி’ க்கான நாளும் நெருங்கியது. அந்த பொன் மாலைப்பொழுது ஆரம்பமானது. சென்னை ‘நந்தனம்’ மைதானம் முழுக்க மக்கள் வெள்ளம். இதுவரை யாருமே எதிர்பார்க்காத அளவில் மக்கள் கூட்டம். நந்தனம் மைதானம் சுற்றி அத்தனை ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல். தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர்கள் மட்டும் அல்ல. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என மைதானமே பிரபலங்களின் கூட்டமைப்பாகவும், ரசிகர்களின் பெரும்படையாகவும் பரப்பியிருந்தது!

இதற்கேற்ப இளையராஜாவும் தேர்ந்த இசைக்கலைஞர்களை இரண்டு வாரம் முன்னதாக வரவழைத்து பயிற்சியளித்திருந்தார். ‘சிவ சத்யாய’ என ஆரம்பிக்க அரங்கமே அதிர அதிர கைதட்டலுடன் வழக்கம் போல ‘மூகாம்பிகை’ பாடலுடன் இசைக் கச்சேரியைத் தொடக்கினார்.

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். “இதோ ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்திருக்கும் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து வருகிறார். உங்கள் பலத்த கரகோஷத்துடன்” என கோபிநாத் கூற அரங்கமே ஒரு நிமிடம் அமைதியாக, வைரமுத்து நடந்து வருகிறார். இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு மட்டும் அல்ல. ஒருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொள்கின்றனர். பல வருடங்களுக்கு முன் தோன்றிய இளையராஜாவின் முகச்சுருக்கம் திரும்ப ஒருமுறை பிரதி எடுத்தது. எப்படி இவர் வந்தார்? என்ற கேள்வி இளையராஜாவுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்கும் கேள்வி.

மெல்ல வந்து முதல் வரிசை அமர்ந்தார். இளையராஜாவுக்கு செய்வதறியவில்லை. கோவம் கலந்த முகத்துடன் பதற்றமாக காணப்பட்டார். எஸ்.பி.பி யை அழைத்து ‘மாங்குயிலே’ பாடவிட்டு  உள்ளே சென்றார். எல்லோரும் நிகழ்ச்சி அவ்வளவுதான் என பேசிக்கொண்டனர். வைரமுத்துவுக்கும் ஒன்றும் புரியவில்லை. கமல் மெல்ல வைரமுத்து அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டு ‘ராஜா சொல்லிதான் வந்தீங்களா?’ என்றார். வைரமுத்து மென்புன்னகையை மட்டுமே உதிர்த்தார்.

இளையராஜா உள்ளே மகேந்திரனை அழைத்து என்ன இது என்றார் கடுங்கோபத்துடன். நான் என்ன சார் பண்றது? உங்க ரசிகர்களில் ஒருத்தரா கூட வந்துருக்கலாம்ல! நான் அழைக்கவில்லை என்றார் பரிதாபமாக. இளையராஜா நிகழ்ச்சியை முடித்துக்கொள்வதாக சொன்னார். மகேந்திரன் எவ்வளவோ கேட்டுப்பார்த்தாகி விட்டது. நான் வேண்டுமானால் வைரமுத்துவிடம் பேசட்டுமா என்று கேட்க இளையராஜா யோசித்துக்கொண்டே ‘இல்லை நான் ஏதாவது சொல்லிவிட்டு கலைந்துவிடுகிறேன்’ என விருட்டென அரங்கத்திற்குள் நுழைந்தார்.

அவர் நுழையவும், மாங்குயிலே பூங்குயிலே முடியவும் சரியாக இருந்தது. அவர் பேச ஆரம்பிப்பதற்குள் கோபிநாத் இதோ கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றுவார் என அவரை மேடைக்கு அழைத்தார். மொத்த மைதானமும் திரளாகக் கைதட்ட வைரமுத்து மேடையேறுகிறார். இளையராஜா முகத்தில் ஏகோபித்த கலவரம். வைரமுத்து மேடையேறியவுடன் இளையராஜாவின் முகம் பார்க்கிறார். இளையராஜாவின் அருகில் வந்து கட்டியணைக்கிறார்.

தான் கொண்டு வந்திருந்த வைர கிரீடத்தையும், பொன்னாடையையும் உதவியாளரைக் கொண்டு வரச்சொல்லி அணிவிக்கிறார். வைரமுத்துவின் கண்களில் பெருமிதக் கண்ணீர்! இளையராஜாவின் முகச்சுருக்கம் மெல்ல குறைய தழுதழுக்க ஆரம்பிக்கிறார்.

வைரமுத்து பேச ஆரம்பிக்கிறார். “இது உண்மையிலேயே ஒரு பொன் மாலைப் பொழுது. இந்திய திரைஇசையின் ராஜாவாக இருக்கும் நண்பன் இளையராஜாவுக்கு வைர கிரீடம் எல்லாம் எம்மாத்திரம்?
நான் வந்தவுடன் நண்பர் கமல்ஹாசன் கேட்டார். நீங்களா வந்தீர்களா இல்லை இளையராஜா அழைத்தாரா என்று. நாங்கள் ஏன் பிரிந்தோம் என்ற ரகசியம் போல இதுவும் ரகசியமாகவே இருக்கட்டும். 30 வருடங்களுக்கு முன்னான நட்பு இன்று பரஸ்பரம் பார்த்துக்கொள்வதை விட வேறு என்ன இருந்துவிடப் போகிறது?”
அழுகிறார். . .

இளையராஜா தோள்மேல் கை போட்டுவிட்டு “நான் இப்பொழுது வடிக்கும் கண்ணீர் அவனுக்கும் சேர்த்துத்தான். என் அகம்பாவத்தை அது கரைத்துக் கொண்டிருக்கிறது! திரும்ப இணைந்து படம் செய்வது எல்லாம் தேவையா?
என் கன்னம் கிள்ளி சிரிக்க வைக்கும் இளையராஜா என் கன்னம் வடிகிற கண்ணீர் துடைத்தால் போதுமே! திரும்பவும் இணைந்து வேலை செய்ய வேண்டுமா என்ன?”
என இளையராஜாவைப் பார்க்கிறார்!

இந்தமுறை இளையராஜா வைரமுத்துவை இறுக்கி அணைத்து அவர் கண்ணீர் துடைக்கிறார். ஒருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை! வைரமுத்துவை இருக்கையில் அமரச் செய்துவிட்டு தன் உதவியாளரிடம் கிசுகிசுக்கிறார் இளையராஜா. கை அசைக்க ஆரம்பிக்க ‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ பாடலைப் பாட ஆரம்பிக்கிறார்.
‘இசைக்கலைஞன். என் ஆசைகள் ஆயிரம். நினைத்தது பலித்ததா?’ என வைரமுத்துவைப் பார்த்து சிரிக்க, வைரமுத்தும் சிரிக்க அரங்கமே அதிர்கிறது.

மகேந்திரன் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கோபிநாத் மெல்ல மகேந்திரன் அருகில் சென்று “சார். எப்டி சார் வைரமுத்துவ வரவைச்சீங்க?” என்று மெதுவாக காதில் கிசுகிசுக்கிறார்.
“இளையராஜா மாதிரி டப்பிங் பேசுற ஆள் பிடிச்சு வைரமுத்து கிட்ட ஃபோன்ல பேச வைச்சேன்” என கண்ணடித்தார் மகேந்திரன்!

533total visits.