ஒரு பாஸ்கல் அழுத்தம்

0
404
அரைத்தூக்கத்தில் அவள் ‘ஸ்ஸ்ஸ்’ என்றது வலியினாலோ, பரவசத்தினாலோ இருக்கலாம். இரண்டிற்குமான காரணம் என் உதட்டின் வரி சிறு சீண்டலால் மட்டும் என்பது இதோ இதோடு நான் அவள் முதுகின் தழும்பில் வைக்கும் மூன்றாவது முத்தம் சொல்கிறது. இறுக்கமாக அணைத்துக் கொள்கிறேன். அவள் முதுகின் பாதி இளஞ்சூடும், என் மார்பின் கதகதப்பும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைய, அதற்குக் கீழ் போர்வை தட்டையான பாம்பின் பதத்தில் நெளிந்து கொண்டு இருக்கிறது. இந்த இதமான சூட்டின் வெப்பம் இன்றைய இரவுக்குப் போதுமானதாக இருக்கிறது. அதனால் போர்வையை எடுத்துப் போர்த்தக் கறி வலித்தவனாய் அப்படியே அணைத்துப் படுக்கிறேன் அவளை!!
எத்தனை வேகமாக ஓடிவிட்டது. இவளுடனான இந்தக் காதல் வாழ்க்கையின் மூன்று வருடங்கள் தான் எத்தனை இனிமையானவையாக கடந்திருக்கின்றன. முன்னெப்போதும் இருந்ததைப் போல இந்த மூன்று வருடங்களில் ஒரு நொடி கூட தனிமையை உணர்ந்ததில்லை. அவளை அப்படி உணர வைத்ததும் இல்லை. நகம் வெட்டும் பொழுது தவறுதலாய் கையின் இம்மியளவு சதை பிய்ந்து நகக்கண்ணிலிருந்து சிவப்பு வெளிப்படுவதற்குள் அவள் கண்களில் ஆறு சொட்டேனும் தரையில் வீழ்ந்திருக்கும். அவளைப் பார்த்ததில் இருந்து இன்று வரை காதலின் கொண்டாட்ட தினங்கள் எங்களுக்கு.
எனக்கு இதையெல்லாம் நினைக்க நினைக்க காதல் பீறிட்டு அவளை இன்னமும் ஒரு பாஸ்கல் அழுத்தத்தில் கொஞ்சம் அதிகமாக இறுக்குகிறேன். லேசாக சிணுங்கித் திரும்பிப் படுக்கிறாள். நெற்றியில் முத்தமிட்டு நானும் சித்த கண்ணயர்கிறேன். காலை அன்னை இல்லத்தில் பதிவு செய்ய அழைத்திருக்கிறார்கள். முன்பே பார்த்து வைத்த பெண் குழந்தையைத் தத்தெடுக்க இருப்பதற்காக. மூன்று வருடங்களுக்கு முன்பே நானும் அவளும் பேசி வைத்துக் கொண்ட விஷயம் தான். அவளை எங்கு பார்த்தேன் என்பதெல்லாம் மறக்கக் கூடியக் காரிய நிகழ்வா என்ன? திரைச்சீலையின் பின் ஆடும் பொம்மலாட்ட பொம்மைகளின் நிழலாய் அசைந்தாடிச் செல்கின்றன நினைவலைகள்.
அம்மா அப்பா என யாரையும் நான் பார்த்ததில்லை. பாட்டியின் வளர்ப்பு. வீராச்சி அவள். ஒண்டி ஆளாய் அத்தனையும் செய்துப் படிக்க வைத்தாள். நல்ல வேலை கிடைத்தது. பாட்டியையும் அழைத்தேன். எல்லா கிராமத்துக் கிழவிகளையும் போல “உந்தாத்தன் வீட்டவிட்டு எங்கன வர்றது? நீ போய்யா ராசா. சம்பாரிச்சுட்டு இங்கன வந்து கொட்டு. எல்லாம் பொன்னா வெளையோணும்.!”, என்றாள்.
ஜார்க்கண்ட். மொழி தெரியாத ஊரில் எனக்காகவும் சலாம் போட ஆட்கள் என மிதப்பைக் கூட்டியது. பகட்டும் கூடியது. ஒரு வருடம் ஒரே ஓட்டம் தான். நல்ல சம்பளம், குடி, கூத்து, கூத்தி, அத்தனையும். அடுத்த ஒரு வருடத்தில் அது இன்னும் தீவிரமாகியது. இடையே வீராச்சி இறந்து போன விஷயமும், அதற்குக் கொள்ளிப்போட்ட விஷயமும், சம்பிரதாயமாய் அழுதுவிட்டு காரியங்கள் முடித்த விஷயமும் இந்தப் பத்திக்கு சம்மந்தம் இல்லாதது தானே??
அடுத்த ஒரு வருடம். வேலையில் பதவி உயர்வு. கூடுதல் சம்பளம், கூடுதல் மஜா, கூடுதல் குடி. தவறான நண்பர்களின் கூட்டு நாம் வந்த வழியைக் கூட புகைமூட்டமாய் மறக்கடித்து விடும். மொழி தெரியாத ஊரில் என்னை கேள்வி கேட்கவும் யாரும் இல்லை. இந்த 4 வருடங்களில் கணக்கில்லாத குடியைக் குடித்திருக்கிறேன். எல்லா வித ப்ராண்டுகளும். எல்லா பிராண்டுகளின் பெயர்களும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதத் தெரியும் என்பது கூடுதல் விவரம் இங்கே. இங்கு ஜார்க்கண்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கே மஜாவிற்கு ஆளும் வந்துவிடும். சமயங்களில் போர் அடித்தால் கூட்டாய் நாங்கள் நாலு பேர் அங்கு செல்வோம். எல்லா விதமான பொஸிஷன்களும் அத்துப்படி இந்த இருபத்தேழு வயதில். திருமணம் பற்றியெல்லாம் யோசித்ததில்லை. கேவலமான அந்தப் பழமொழி வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கும்.
இரண்டு வாரங்களாய்க் காய்ச்சல் பின்னியெடுத்தது. உடம்பெல்லாம் எதிர்பாராத மாற்றம். இரு வாரங்களாக வேலைக்கும் செல்லவில்லை. இருமல் விடாமல் பிடித்துப் படுத்தி எடுத்தது. சாதாரணக் காய்ச்சல் மாத்திரைகள் சிகிச்சைப் பலனின்றி செயலிழந்து போயிருந்தன. இரத்தம் சுண்டிவிட்டதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாகவும் டாக்டர் கூறி இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆம். என் இரத்தத்தில் ஹெச்.ஐ.வி கூட்டல் குறியாக இருந்ததென டாக்டர் கூறி, ஆரம்ப நிலை என்றும் அட்மிட் ஆகிவிடும் படியும் கூறினார். குறி போட்ட ஆட்டத்திற்கெல்லாம் விதியாய் வந்து தலைமேல் விழுந்ததாய் ஒரு உணர்வு.
கண்களெல்லாம் குளம் கண்டுவிட்டிருந்தது. அது ஆறாவதற்குள் என்னுடைய அறையை அடைவது நலம் என்று பட வேகமாக ரூமுக்கு விரைந்தேன். இந்த சில நாட்களில் தான் எத்தனை எத்தனை அலட்சிய வாழ்க்கை? புத்தியில் உரைய அழுகை பீறிட்டு வெடித்தது. அழுகை ஆத்திரமாக மாறி தற்கொலை எண்ணமாக மாறியது. இதோ கடைசியாய் ஒரு குடி என கண்ணெல்லாம் கள்வெறி ஏறக் குடித்தேன். எச்.ஐ.வி வரக் காரணமான இடத்திற்கு இதோ கடைசியாகச் செல்வதென மனம் குடிக்கும் கடைசி பெக்கில் தீர்மானம் செய்து விட்டிருந்தது. தள்ளாட்டத்துடனேயே அங்கு சென்றேன்.
வழக்கமாய் அங்கு பார்க்கும் பெண்களெல்லாம் காம தேவதைகளாகக் காட்சியளிப்பார்கள். இன்று வாயின் இருபுறமும் கூரிய பற்களுடன் அரக்கிகளாக தென்பட்டனர். அதிலும் புதிதாக இருந்த ஒரு தேவதையைத் தேர்வு செய்து அரை போதையிலேயே அறைக்குள் சென்றேன். அவள்தான் ஆதிரா. அத்தனை அழகு. உள்ளே வந்ததில் இருந்து ஒரே அழுகை. ஒலி அளவு டெசிபலில் சற்றும் வித்தியாசமில்லாமல். ஏன் அழுகிறாள் இவள்? வேசி தான். சம்மதித்து தான் அறைக்குள்ளே வந்திருக்கிறாள். என் வாழ்வின் கடைசி நாளாக நிர்ணயித்து இங்கு வந்த எனக்கு அவள் அழுகையினை சமிக்ஷை செய்யாமல் இருக்க முடியவில்லை. பேச்சுக் கொடுக்கலாமென்று பேச்சை துவக்கினேன்.
“ஏன் அழுகிறாய்?”
“ஹூம்.. ஹூம்.. !” அலறல் இன்னும் அதிகமாக.
“என்ன ஆச்சு உனக்கு? வேணாமா?”
“வேணாம்னு சொன்னாதான் உங்களால என்ன பண்ணிட முடியும்?”
கொஞ்சம் தீர்க்கமாக பார்த்தான் அவளை. அவள் உதட்டின் ஓரம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளுடைய பேச்சின் வழியே வலுக்கட்டாயமாக அவள் இங்கிருப்பதை அவனால் யூகிக்க முடிந்திருந்தது.
“எப்படி இங்க வந்த?”
“அப்பா அம்மாலாம் நான் இப்படினு தெரிஞ்சு வயசு வந்த வயசுலயே என்னை உதறித் தள்ளிட்டாங்க. ஒரு மாமா ஒருத்தன் இத்தனை நாள் அவன் கூட வச்சுருந்தான். மொத்தமா என்னைக் கசக்கி எடுத்துட்டு இப்போ இங்க மொத்தமா வித்துட்டும் போயிட்டான்!”
இவன் பார்வைகள் கொஞ்சம் தீர்க்கமாகின. “இங்க ரொம்ப கொடுமையா?”, என்றான் மேலும் ஒன்றும் அறியாதவனாய்.
“இன்னிக்கு நீங்க வந்ததோட சேர்த்து எனக்கு பத்து!”, சொல்லி முடிக்கும் முன் வந்த அழுகை ஆங்காரமாய் ஒலித்தது.
“நீ இப்படிதான்னு தெரிஞ்சும் வருவாங்களா? தப்பா நெனைச்சுக்காத. தெரியாம கேட்டுட்டேன்.”, என்றான் தயக்கத்துடன்.
“அப்படி என்ன இருக்குனு பார்க்கத்தான வர்றீங்க? வர்றாங்க? அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம் நாங்க? வாழ்க்கையில நாங்க பண்ணாத தப்புக்காக நாங்க தண்டனை அனுபவிக்கனுமா?”, அழுகை பகிரங்கமாகவே ஒலித்தது இப்போது. ஒட்டுமொத்த கோவத்தின் வெளிப்பாடாய் அது உருவெடுத்தது.
கோவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். இவன் மெதுவாக அவளை தன்மீது சாய்த்து அணைத்துக்கொண்டான். அவள் எதுவும் பேசவில்லை அதன் பிறகு. அவளுக்கும் அந்தப் ஸ்பரிஸம் அப்போதைக்கு தேவைப்பட்டது தான். என் கண்களில் இருந்தும் கண்ணீர். அணைத்தபடி இருக்க என் கண்ணீர் அவளின் பின்னங்கழுத்தில் விழ அவள் ஏன் என்றாள். அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன். ஒருகணம் இருவரும் தேங்கிய கண்ணீரோடு பார்த்துக் கொண்டோம். பார்வைகளுக்குப் பேசிக்கொள்ள முடியும் என்பதைக் கண்கூடாக உணர்ந்த நிமிடங்கள் அவை.
சென்னைக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிறது. மீண்டும் நல்ல வேலை. மாதம் ஒருமுறை பாட்டி ஊருக்குச் சென்று அந்த வீட்டில் தங்கியிருந்து வருவோம். வாரம் ஒரு முறை எச்.ஐ.வி க்கு ஆயுர்வேத மருத்துவம். எனக்கு அவள் அவளுக்கு நான். நான் குடி கும்மாளம் என்று வாழ்ந்த நாட்களை எல்லாம் ஆதிராவுடன் வாழும் நேரங்கள் கடந்து என்னை எனக்கு முழுதாய்க் காட்டிக்கொண்டு இருக்கிறது. எனக்கான ஒரு உறவாக அவளும், அவளுக்கான ஒரு உறவாக நானும், காதல் மட்டும் கொஞ்சமும் குறையாமல் இந்த மூன்று வருடங்கள் சென்று விட்டது. நாளை எங்களுடன் ஒரு குழந்தையும் வந்துவிடும்.
இதை சொன்னேனா என்று தெரியவில்லை. ஆதிரா ஒரு திருநங்கை. அதனாலென்ன? எனக்கு என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதாய்ப் பட்ட விஷயம் அவளுக்குப் பெரியதாய்ப் படவில்லையே. காமம் தாண்டிய காதல் இன்னமும் எனக்கும் அவளுக்குமான புரிதல்களை பல பரிமாணங்களில் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. குழந்தை வந்துவிட்டாலும் கூட இந்த ஒரு பாஸ்கல் அழுத்தம் குறைவில்லாமல் அணைத்தபடி நானும் அவளும் இருப்பதைவிட வேறு என்ன இருந்துவிடப் போகிறது?
-மு. பாலகுருநாதன்

1622total visits.