பன்னீர் ரோஜா

0
202

சும்மா இருத்தல் தகுமோ?புலம்புதலும் வேலை தான் !!

வெற்றிகரமாக இருபத்தெட்டு நாட்கள் ஒன்றாக கடத்தியதை கொண்டாட இருவரும் ஓட்டலின் வாசலில் வண்டியில் சென்று இறங்கினோம்.

நான் பார்க் பண்ணிட்டு வர்றேன் நீ உள்ளே போ”

ஓட்டல் உள்ளே செல்ல திரும்பியவள் பக்கத்தில் பாட்டி ஒருத்தி மல்லியும் ரோஜாவும் விற்றுக்கொண்டிருந்தாள் கண்ணில்பட்டது.

ரோஜாபூ!! நல்ல பிங்க் நிற ரோஜா. பன்னீர் ரோஜா என்றும் சொல்லுவார்கள். நல்ல வாசனையான ரோஜாபூ. இதோ  இங்க இருக்கேன் என்று காட்டிக்கொடுக்கும் வண்ணம். கை சூடிற்க்கே பொல பொலவென உதிரும் ரோஜாபூ. நீள ரெட்டை பின்னல்களுக்கு தினமும் காலை எட்டேமுக்காலுக்கு தலையை ஆட்டிக்கொண்டே வரும் தாத்தாவின் கையால் வாங்கி இட்டுக்கொண்ட ரோஜா. இரண்டு ரூபாய்க்கு பத்து பூ கொடுக்கும். சில நேரம் எல்லா பூவையும் கொடுத்து விட்டு இருபது ரூபாய் வாங்கி போகும் அந்த தாத்தா. எங்கேயோ தொலைந்து போன்றதொரு நிலையில் நினைவில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

ஏய் என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்க!! உள்ளே போகலையா நீ” வந்தவர் பூவை பார்த்ததும், “பூ வாங்கிக்கோ!! ஆமாம் எங்க இருக்கு முடி அங்க வச்சிக்க” சலித்தும் கொண்டார்.

உள்ளுக்குள்ளே நீள் பின்னல் சின்ன பெண் சிரித்துக்கொண்டாள்.

கிருஷ்ணகிரியில் நீதிமன்றத்திற்கு பின்னால் தான் அந்த பாய் தோட்டம். அந்த தோட்டத்தின் இந்த பக்கம் ஹௌசிங் போர்ட். என் பால்யம் சுமந்த பிரதேசம். எங்கள் வீட்டின் பின் கதவில் பாய் தோட்டத்தின் முருங்கை தொங்கும். அந்த தோட்டத்திற்கும் வீட்டிற்கும் அவ்வளவு நெருக்கம்.

அன்று வேப்பம்பூ ரசம், புங்கை எண்ணெயில் தீபம், மாவிலை தோரணம், ஜாதிமல்லிப்பூ வாசம் தூங்கு மூஞ்சி மரம் ஊஞ்சல்  எல்லாம் கனவாகவோ ஏக்கமாகவோ மாறும் என்று யாரேனும் சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன்.

பாய் தோட்டத்தின் கோபார் காஸ் நாற்றம், மாட்டு சாணி நாற்றம், சில நேர சண்டைகள் பல நேரம் இஞ்சி பூண்டு வாசனை, ஜாதிமல்லி, டேரா, ரோஜா பூக்கள் வாசனை, எந்நேரம் போனாலும் கிடைக்கும் வாழை இலை, முருங்கை இலை, மாவிலை நினைவலையில் சிக்கி சுழல்ன்றது.

எந்நேரமும் படுக்கையிலே இருக்கும் பாய் தாத்தா, ஒய் ஒய் என்று கத்தும் பாயம்மா, பாவமான ரோஜாப்பூ தாத்தா, என்றோ கால்களில் சிக்காமல் சரக்கென்று ஓடி ஒளிந்த பாம்பு எல்லாம் நினைவில் தங்கியிருக்கும் சின்ன சின்ன உணர்வுகளுக்கு இங்கே அடுக்கு மாடியில் வெறும் துளசி செடியை பசுமையின் அடையாளமாக பார்த்துக்கொண்டும் ஏசியில் சிலுசிலுப்பை உணர்ந்துக்கொண்டும் முருங்கையை பழமுதிர்சோலைகளில் அநியாய விலையில் வாங்கிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறேன் என்று சொல்வதில் சோகம் கூடுமோ குறையுமோ?

பசுமையை தேடியது இல்லை இதுவரை. என்  தேவை பட்டியலில் அது இருந்ததும் இல்லை சூழல் பசுமை நிறைந்ததாக எப்பவும்  அமைந்தது விட்டதால்.

ஸ்ரீபெரும்புதூர், பூவிருந்தவல்லி, கிண்டி, நாவலூர் விட்டால் மயிலாப்பூர் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுற்றியவள் தான் இதே சிங்கார சென்னையை. அன்று  இந்த கருப்பு பூசிய மரங்கள் தண்ணீருக்கு ஏங்கும் மரங்கள், போட்டோசிந்தஸிஸ் செய்துகொள்ள கூட சத்து இல்லாத மரங்கள் கண்களில்பட்டதே இல்லை. கவனமெல்லாம்  செயற்கையான கலர்புல் சென்னை மீது இருந்ததாலோ என்னவோ!!

கவனம் திரும்பும் நேரம் பச்சை பசேல் என்பது வார்த்தை மட்டுமே ஆகிபோனதில் சோகம்.

மனசாட்சி பட்சி உள்ளுக்குள்ளே விவாதம் நடத்தியது.

“ஆரோக்கியமற்ற மரங்கள் ஆரோக்கியமான காற்றை கொடுத்து விடுமா என்ன??”

“சேச்சே சென்னை சுற்றுச்சூழல் ரொம்ப மோசம்ப்பா.”

“ஆமாம் மோசம் தான். யார் மோசமாக்கியது. நாம்ப தான். நாளுக்கு நாள் புதுப்பித்துக்கொண்டே போனதில் எங்கேயோ இயற்கையை வஞ்சித்து விட்டாயிற்று”.

 ஊர் பக்க நினைவு வந்தது.

“காஞ்சிபுரம் தாண்டினால் தான் கொஞ்சம் காற்று வரும் போல.”

“இங்கே இருக்கும் முக்கால்வாசி பேருக்கு சென்னை சின்ன வீடு போல என்ன தான் சுகபோகமாய் வைத்திருந்தாலும் சொந்த ஊரை தான் கொண்டாடுவோம். “

“ ஏன் அது?”

“ஏன்னா ஊர்ல எதையும் சாமான்யத்துக்கு சட்டு சட்டு மாற்ற முடியாது கேட்க நாலு பேர் உண்டு. இங்கே பணம் மட்டும் தான் கேட்கும். கொடுக்கும், வேலை செய்யும்.”

சென்னைக்கு மட்டும் தான் இந்த நிலையா ??”

“இல்லை வாய்ப்புகள் உருவாக்கும் எந்த நகரத்திற்கும் இந்த நிலை தான். சுமார் எட்டு மில்லியன் மக்களுக்கு மற்றும் இன்ன பிற உயிர்களுக்கும் சுவாசிக்க இந்த மரங்கள் போதுமா என்ன ? தண்ணீருக்கு எங்கே போக? “

“ பலமுகம் கொண்ட சென்னை சீர் செய்யவே முடியுமோ இதில் நெய்வேலி, தூத்துக்குடி, திருச்சி, சேலம், திருப்பூர், ராணிபேட்டை போன்ற இடங்களில் இயற்கையை பல்வேறு வகையில் வென்று கொண்டு தான் இருக்கிறோம்.”

“மனுஷன் ஓடறதே இந்த கால் வயிறு கஞ்சிக்காக தான் என்று சொல்லி கேட்டிருப்போம். ஓடுகிற ஓட்டம் இன்றைய நிலையில் கஞ்சி குடிக்க நிலத்தில் பயிர் விளைய வேண்டும் என்பதை மறக்கடிக்கறதென்றால் எவ்வளவு அடிமையாகி போயிருக்கிறோம் ஆடம்பரத்திற்கு. ”

எண்ணங்கள் நிலைகொள்ளாமல் பறக்கையில் கருத்துக்கு எங்கே பஞ்சம்.

“விளைநிலத்தை கிட்டத்தட்ட சில ஆயிரம் அடிகள் நோண்டி பூமியின் வெட்ப நிலையை மாற்றி சுற்று சூழலை கெடுத்து அந்த நிலத்தை வேறு எதற்குமே பயன்படாதவாறு மாற்ற முற்பட்டிருக்கிறோம் என்றால் நம்முள் பணத்தின் தேவை ஊன்றி போயிருக்கிறது என்றால் அது மிகையாகாது.”

“அப்படி பணம் ஆடம்பரம் நவீனத்துவம் என்று பேச போனோம் என்றால் “வெள்ளைக்கார துரை கணக்கா என் புள்ள வரணும் ” என்று தாத்தா பாட்டி தத்தம் பிள்ளயை எண்ணியதில் துவங்கியதோ இந்த வஞ்சகம்”.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று சங்க திணையில் பிரித்ததை க்ரானைட் கல்லு குவாரி பகுதி,  புதுகுடி பகுதிகள், மீதேன் மற்றும் கனிமங்கள் நிறைந்த பகுதி, தேசதுரோகி என்று முடிவானவரை அகற்றும் பகுதி மற்றும் மறந்துபோன பகுதி என்று இப்போது சூழலில் பிரிக்கலாம்.

கருமேகங்களை வாவென்று அழைக்க மலை உச்சிகள் மழுங்கி போனது, பொழிந்த நீர் குளமாக அங்கே குழி இல்லை, தேங்கிய நீர் பூமி உரிய வழியுமில்லை கான்க்ரீட் மற்றும் சுவுகாகிதங்களின்  பயனால்.

நாகரீகம், வளர்ச்சி என்று நமக்கு நாமே துரோகம் செய்துக்கொண்டோம். படைத்தவன் நாம் செய்யும் அட்டகாசம் தாங்காமல் எப்போதேனும் சின்ன தும்மலோ ஏப்பமோ விடுத்தால் அன்று உயிர்கள் சேதாரம் என்று செய்தி வாசித்து ஊருக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சண்டை போட்டுக்கொண்டு இன்னமும் சேதாரம் பெரிதாக்குவோம்.

“என் பாட்டன்கள் உருவாக்கின  என் அப்பன் அனுபவித்த நான் கண்ட உலகம் என் அடுத்த தலைமுறைக்கு  இருந்ததாம் இருக்கா என்று தெரியாமல் போன “கடவுள்”” நிலையாகி போகுமோ??”

விசித்திரமான ஜீவராசிகள் தான் நாம்.

என்ன ஆச்சு உனக்கு, என்னமோ இழந்த மாதிரியே இருக்க ??கல்யாணம் ஆகி இருப்பத்தெட்டு நாள் தான்மா ஆகுது !! அதுக்குள்ள இப்படியா ??? “

ஆமாம் இழந்து தான் போயிற்று” மனம் சொல்லியிற்று

ஆறுதலாக “ஒரே இடத்துல அடைஞ்சி இருந்தா இப்படி தான் சோகமா இருக்கும். வேலைக்கு போனா சரி ஆகிடும்”

“பச்”

உனக்கு என்ன வேண்டும். நல்ல ஒரு கிரௌண்ட்ல வீடு. கிணத்து தண்ணி, மாடு, ஆடு, காக்கா, குருவி, கிளி தானே, நீயும் வேலைக்கு போ கனவை நிறைவேத்திடலாம்”

 ஹஹா, வேலைக்கு தானே போய்டலாம், அப்போது தானே, கண்டது போனது பற்றி  கவலைப்பட தேவையில்லை பாருங்க

 ஆமாம் லைக் டார்கெட்ஸ், ஆஃப்ரைசல், சேல், ரிசல்ட் என்று நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கும் மெஷின் ஆகிவிடுவோம்”

 பன்னீர் ரோஜா வெறும் நினைவு ஆகிப் போனதில் வருத்தம் இல்லை இப்படியே போனோமென்றால் அரிசியும் பருப்பும் இன்னொரு பன்னீர் ரோஜாவாகி போகலாமோ என்ற பயம்.”

 “அந்த பிங்க் ரோஜா இன்னும் எங்கேயோ அதன் பண்பில் வளர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. மண் அதன் வேலை செய்துக்கொண்டு தான் இருக்கிறது. ரோஜா வளர்ந்த இடம் இன்று பிளாட் ஆகிபோயிற்றே கோர்ட்டிற்கு மிக அருகில் என்றாகி போனதே.”

 “இரசனைவாதி எனக்கே இப்படி என்றால் மண்ணில் விதைத்து அது உருமாறி அடுத்தவர் பசி தீர்த்ததை பார்த்த விவாசாயிக்கு எப்படி இருக்கும். தேவைகள் நம்மை துரோகி ஆக்கியதை நினைத்து தான் வருத்தம்.”

 -ஸ்வேதா சந்திரசேகரன்

863total visits.