பரமசிவம் ஆசாரி – சிறுகதை

0
43

“கதிரேசா, ஒரு நூறு ரூவா குடுத்து விடேன்!”, என்று அலைபேசியில் கேட்டு முடிக்கும்முன் குரல் தழுதழுத்தது. 46வயது, குரல் தழுதழுக்கும் வயது அல்ல. தழுதழுப்புக்கு வயது மட்டும் காரணமாக இருப்பதும் இல்லை. கை நடுக்கம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது. தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும்பொழுது மகள் உன்னிப்பாக கவனித்து கவலையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வெடுக்கென்று. பரமசிவம் ஆசாரிக்கு என்னமோ போலிருந்தது. தனக்கு இந்த நிலை வரும் என்று அவர் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை!

 பரமசிவம் ஆசாரியை அறிந்திராதவர்கள் இந்த சுற்று வட்டாரத்தில் இல்லை. விஸ்வகர்ம ஹிந்து அமைப்பில் தங்கநகைத் தொழிலாளர்களில் கிட்டதட்ட 2000தலக்கட்டுகள் உண்டு. அனைவரின் மரியாதைக்கும் உரியவர் பரமசிவம் ஆசாரி. அவர் அப்பா ராஜா ஆசாரியும் அவரது பரம்பரையினரும் எட்டையபுரம் ஒட்டிய கிராமங்களில் தங்கவேலை செய்து வந்தவர்கள். “அப்பவே உங்க தாத்தா எல்லாம் எட்டையபுரம் ராசா கிட்ட வேட்டி நிறைய தங்க கட்டியா மடிச்சு வாங்கிட்டு வருவாகடா”, என்று இன்னமும் பீற்றிக்கொள்வாள் சுந்தரவடிவு, பரமசிவனின் அம்மா. “அப்பறம் ஏன் தாத்தா சாராயத்துல விசத்த வச்சு குடிச்சாங்கலாம்?”, எனக் கேட்டால் காது கேட்காதது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு வேறு எதையாவது பேசுவாள், கிழட்டுக் கட்ட; கேப்பக்கூழும், உளுந்தங்களியும் தான் இந்த உசுர இன்னமும் புடிச்சு நிப்பாட்டுதுனு சொல்லுவா. பேரன்களை திங்க சொன்னா திம்பாய்ங்களா என்ன? எதிர்த்துப் பேசி கிண்டலடிச்சு விடுவாய்ங்க. அது பதிலுக்கு சுருக்குனு வார்த்தைய பேசி விட்டுரும்; அதுனாலயே பாட்டிமேல பேரன்களுக்கு ஒரு எளக்கனாட்டம்.

ஒரு ரெண்டு வம்சாவழியாதான் இங்க கோயமுத்தூரில் வந்து தங்கவேலையை செய்துகொண்டு இருந்தவர் பரமசிவம் ஆசாரி; ‘இருந்தவர்’னு தான் சொல்லணும். இன்னியோட அஞ்சு சொச்ச வருஷமாச்சு தங்கத்தைத் தொட்டு. அவர் அண்ணன் தங்கவேல் ஆசாரி எதுனால இறந்தார்னு பரமசிவம் ஆசாரிக்கு தெரியாமலா இருக்கும்? குடி தான்! அளவுக்கு அதிகமா குடிச்சு குடல் வெந்துபோயி, குப்புசாமி நாயுடுல சேர்த்து கடைசியில ஒண்ணும் பண்ணமுடியாம இறந்தாரு. சுந்தரவடிவு கிழவிக்கு குப்புசாமி ஆஸ்பத்திரினா அத்தனை கோவம் வரும் அதுக்கப்புறம் எல்லாம். “அந்த ஆஸ்பத்திரிக்கு மட்டும் யாரும் போகாதீங்க, என் பையனை கொன்ன ஆஸ்பத்திரி”னு ஓலம்போடும்! கதிரேசன் அப்பா இறக்கும்போது கதிரேசனுக்கு 15வயசு; கதிரேசன் தான் மூத்த பையன்; சக்தி, வெற்றினு ரெண்டு பேர் இருக்க, தங்கவேல் ஆசாரி இறந்த அன்னைக்கு பித்துபிடிச்சவனா இருந்தான் கதிரேசன். கண்ணுல ஒரு சொட்டு தண்ணி இல்ல. ரெண்டு மூணு மாசத்துக்கு அப்பறம் தான் சரியானான். சொந்த ஊரு நாகம்பட்டிக்கு கூட்டிட்டு போயி மொட்ட போட்டு பரிகாரம் பண்ணுனாக!

அப்பா இல்லாத பையனுக்கு அப்பாவா இருக்க வேண்டியவர் பரமசிவம் ஆசாரி. அண்ணன் இறந்த அப்பறம் அவர் குடும்பத்தும் சேர்த்து உழைக்க வேண்டி நிலையில் இருந்தவர். ஆனா கதிரேசன் அப்பவே தங்கவேலைல உட்கார்ந்துட்டான். அவன் தனி ஆளா நின்னு குடும்பத்தக் காப்பாத்திக்கிட்டான். “சும்மா இருக்குற நேரம் என்னடா செய்வனு கேட்டா வேலை செய்வேன்”, என்பான். தம்பி வெற்றியை டிப்ளமோ படிக்க வைச்சான்; தங்கச்சிக்கும், மச்சான் கூட கல்யாணம் பண்ணி வைச்சான். பொன்னுத்தாயி அத்தனை பூரிச்சுப்பா. புருஷன் போயிட்டாலும் மகன் அத்தனையும் பொறுப்போட பார்த்துக்குறான்னு!

பரமசிவம் ஆசாரி பட்டறைல கிட்டத்தட்ட அஞ்சாறு பேர் உட்கார்ந்து வேல பார்ப்பங்க அப்பல்லாம். அவர் பார்த்து வேலை குடுத்தா செய்வாங்க; ‘கூடவே பாரு; தனி வேலைலாம் உனக்கு செட் ஆகாது’னு அவரு நெனைச்சார்னா பரமசிவம் ஆசாரி கூடவே சம்பளத்துக்கும் உட்கார வைச்சு வேலை செய்ய சொல்லுவார். எல்லாரும் மாமன், மச்சான் வகையறா தான்! தங்கம் உருக்க ஒரு ஆளு, வளையம் அகத்த ஒரு ஆளு, பால்ஸ் போட ஒரு ஆளு, பொடி வைக்க ஒரு ஆளு, கொலுசு ஊத ஒரு ஆளுனு வேலைய பிரிச்சுக் குடுத்து கிலோ கணக்குல வேலை இருந்தாலும் ரெண்டு மூணு நாள்ல முடிச்சுக் குடுத்துருவார். எல்லாருக்கும் டீ, காபினு அவர் சம்சாரம் கொழலாமணிட்ட இருந்து நாளுக்கு எட்டு வேலையும் வந்துரும். தங்க வேலை செய்யுறவங்க லாம் பாதி பேரு டீ குடிச்சே வாழ்றவங்க தான்! உடம்பு அலுப்பு ஆளைப் போட்டு தூக்கிரும்; அதுக்காகவே நைட்டான ஆனா குடிக்க ஆரம்பிச்சுருவாங்க. பரமசிவம் தான் குடிக்க செலவு செய்யுறது. தனக்கு மட்டும் இல்லாம கூட வேலை பார்க்குற எல்லாருக்கும் வாரி வழங்கிடுவார். திருப்பி காச எதிர்பார்க்காம எல்லாருக்கும் குடுத்துடுறது. வேலை கையில இருக்குற நேரம் நாம தான் ராஜா ங்குற நெனைப்பு, மிதப்புனும் சொல்லலாம். கொழலாமணி இதெல்லாம் கண்டிக்காம இல்லை, அப்பவே ஒரு கட்டுக்குள்ள கொண்டுவராம விட்டாச்சு வேற. அவளுக்கு பசங்க படிக்க, சாப்பிடனு எல்லாம் பார்த்துக்கிட்டாலே போதும்னு இருந்துச்சு. ‘ரொம்ப குடிக்காதீங்க’னு மட்டும் சொல்லுவா.  அவ்வளவு தான்! பசங்களை நல்லா படிக்க வைச்சுட்டா! மிடில் கிளாஸ்னாலும் என்ன கேட்டாலும் பசங்களுக்கு பரமசிவம் கேட்டதை வாங்கிக் குடுத்துருவார். அதுல குறையே வைச்சுக்கிட்டது இல்ல. பசங்க காலேஜ் ஃபீஸ் முதற்கொண்டு எங்கயும் கடன் வாங்காம குடுத்திருந்தார்.

ஐட்டம் குடுக்குற செட்டியாருங்க லாம் கேட்ட நேரத்துல வேல செஞ்சு குடுத்துருவார்னு கணக்கு பார்க்க லாம் அடிக்கடி கூப்பிடுறது இல்ல. பொதுவாக 1கிலோ வேலை வந்தால் அதில் இத்தனை கிராம் நம்ம செய்கூலியா எடுத்துக்கணும்னு ஒரு அளவு இருக்கும்; சம்பளம்னு வாங்கிக்குற முறை இந்த தொழிலில் இல்லை. கணக்கு கொடுப்பதும் மாதங்கள் கடந்து ஒருமுறை என்பதால் இஷ்டத்துக்கு தங்கத்தை எடுத்து வித்து செலவு செய்ய ஆரம்பித்து விட்டிருந்தார். நகைகளில் டச்சு கணக்கும் இருக்கும்; செம்பு கலந்து நகையைக் கொடுத்துவிட்டு தங்கத்தை எடுத்துக்கொள்வது தங்கவேலைகளில் எளிதென்றாலும் அதெல்லாம் 80களுக்கு முன்னமே போய்விட்டு இருந்தது. பரமசிவம் அப்படிச் செய்பவரில்லை என்றாலும் டெஸ்ட்டிங், ஹால்மார்க் முறைகள் எல்லாம் வந்தபிறகு அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதே உண்மை. அப்படி கணக்கு கேட்கும் நாள், வழக்கமாக வேறு செட்டியார் ஒருவரின் வேலையும் சமயத்தில் வரும்; அதைக் கொண்டு போய் கணக்கு காண்பித்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு சுழற்சி முறையில் எடுத்துவிடுவார் பரமசிவம்.

தவறான சேர்க்கைகள் அதிகமானது; குடியும் அதிகமானது. காலையும் குடித்து விட்டுத்தான் வேலையில் உட்காரவேண்டும் என்ற நிலைக்கு பரமசிவம் வந்தார். இரண்டு பையன்கள் படித்து முடிக்கும் நிலை, வேலைக்கு செல்ல தயாராகின்றனர். செட்டியார் எப்படியோ தங்கத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து ரொட்டேஷன் செய்வதை மோப்பம் பிடித்துவிட்டார். அந்த செட்டியாரின் வேலை நின்றது. கணக்கு காண்பிக்க அடுத்த செட்டியாரின் வேலையில் இருந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு கொடுத்துவிட்டார். இந்த செட்டியார் கொடுத்த வேலையை முடிக்க கடன்களை அதிக வட்டிக்கு வாங்கினார். கடன்காரர்களுக்குக் கொடுக்க இன்னும் தங்கம் அதிகமாகக் கையாடப்பட, இந்த செட்டியாரும் வேலையை நிறுத்த ஒட்டுமொத்தமாய் பண நெருக்கடி வந்தது பரமசிவனுக்கு. அப்பொழுது கடன்களும் அதிகமாகி, எல்லா தங்கத்தையும் கொஞ்சம் திருப்பிக் கொடுத்தும், கொஞ்சம் தராமலும் விட ஒட்டுமொத்தமாக வேலையும் நின்றே போனது. இந்த நேரங்களில் பரமசிவனுடன் இருந்த வேலையாட்கள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தனிப்பட்டறை வைக்க ஆரம்பித்து இருந்தனர்!

இந்த நேரத்தில் கதிரேசனுக்கு கல்யாணம் ஆகி இருந்தது. ஏற்கனவே செட்டியாருக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்கு கதிரேசனிடம் ஒரு பெரிய தொகை வாங்கி அதை அவனே தான் அடைத்துக் கொண்டிருக்க, இப்பொழுது சுத்தமாக வேலையில்லாமல் போனார் பரமசிவம்! தங்க வேலையில் இது ஒரு பெரிய விஷயம்; ஐட்டத்தை குறித்த நேரத்தில் குடுக்க அடுத்தவர் தங்கத்தை ரொட்டேஷன் விடுவது தெரிந்துவிட்டால் அடுத்த வேலை கொடுக்க ஆள் இருக்காது. பையன்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்க அந்தப் பணம் வாடகைக்கும், கடன் கொடுப்பதற்குமே போதுமானதாக இருந்தது; ஜீவனாம்சம்?

அஞ்சாறு பேரிடம் வேலை வாங்கிய பரமசிவம் ஆசாரி, தான் வேலைக்கு அமர்த்திய மச்சான் ஒருவனின் பட்டறையிலேயே சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றார். அதிலேயே அவருக்குப் பாதி நொடிந்தது போல் ஆனது. அதுவும் சரியாகச் செல்ல முடிவதில்லை. காலையில் குடிக்காமல் வேலை செய்தால் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். அடுத்தவீட்டில் குடித்துவிட்டு வேலை செய்யப் போனால் சும்மா இருப்பார்களா என்ன? என்னதான் சொந்தபந்தமாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த யாரும் தயாராக இல்லை என்றே இருந்தது. ஒருநாள் வேலைக்குச் செல்வார். அதற்கான சம்பளத்தை வாங்கிக் குடித்துவிட்டு வீடு வருவார். பலமாக சத்தம் போடுவார். தன் இயலாமை ஆக்ரோஷமாக மாறுவதை அவரும் உணர்ந்திராமல் இல்லை. பின் எந்த வேலையும் செய்ய அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. உடலில் ரத்தம் என்பதே இல்லாமல், உடல் முழுக்க பாட்டிலாகத் தான் இருந்தது. மூலம், சர்க்கரை, இரத்த அழுத்தம் என அத்தனையும் அவதிப்படுத்தியது.

அவர் மூத்த மகன் ‘அப்பா வேலைக்கு செல்ல வேண்டாம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டான். இரண்டு மகன்களும் வேலைக்குச் சென்றுவிட்டு சாயங்காலம் மேல் வந்து கதிரேசனுடன் உட்கார்ந்து தங்கவேலை செய்வார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் அன்றைக்கு ஏதாவது அடுப்பெரியும். சுந்தரவடிவும், பொன்னுத்தாயியும் பரமசிவனை நினைத்து அத்தனை விசனப்படுவார்கள், “இருக்குறது இப்ப ஒரு பையன், அவனும் இப்புடி ஆயிட்டானே!”, என்று. பரமசிவம் தினமும் கதிரேசனிடம் 100ரூ மானிக்கு வாங்கிவிடுவார். குடிக்கவில்லை என்றால் அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் போகும் என்ற அளவிற்கு வந்தாயிற்று. அதைப்பற்றி அவர் சங்கடப்படாமலும் இல்லை; “என்ன செய்ய, இந்த சாவு சீக்கிரம் வந்துத் தொலைய மாட்டுதே”, என வருத்தப்பட்டுக் கொள்வார். கதிரேசனிடம் வாங்கும் பணத்திற்கு பையன்கள் வேலை செய்துவிடுவார்கள். சில நேரங்களில் அது பத்தாமல் கூட போகும். அந்த அளவில் பரமசிவம் வாங்கிக் குடித்து இருப்பார்! கதிரேசனும் சகித்துக் கொண்டு இருப்பான் சித்தப்பா ஆயிற்றே. ஆனால் கதிரேசன் மனைவி சகித்துக்கொள்ள வேண்டுமே.

“ஏன் தேவை இல்லாம உங்க சித்தப்பாவுக்கு சும்மா சும்மா காசு குடுத்து பழக்குறீங்க? கேட்டா இல்லைனு சொல்ல வேண்டியதுதானே?!”, என சலித்துக்கொள்வாள். ஒருமுறை இது பொன்னுத்தாயி காதுபட அவள் கொந்தளித்துவிட்டாள், கொழுந்தனாரைப் பற்றி பேசியதற்காக. இரண்டு குடும்பமாக வாழ்ந்து வந்தாலும் இன்றும் பொன்னுத்தாயும் கொழலாமணியும் அப்படி ஒற்றுமையாய் இருந்தனர். இரண்டு குடும்பமும் சேராமல் எதுவும் விஷேஷம் செய்ததில்லை. “அதான் அதுக்காக அவங்க பசங்க வேலை பார்க்குறாங்க ல? அப்பறம் எதுக்கு நீ சிண்டு முடியுற? ஆம்பளைங்க விஷயத்துல தலையிடாத!”, என மருமகளை வறுத்தெடுத்து விட்டாள். பொதுவாகவே கதிரேசன் அத்தனை செலவு செய்வதையும் எல்லாருக்கும் காசு இறைப்பதிலும் கதிரேசன் மனைவிக்கு அத்தனை பிடித்தம் இல்லை.

இது எப்படியோ பரமசிவம் காதுக்கு எட்ட அவருக்கு அத்தனை அசிங்கமாய்ப் போனது. உண்மைதான். அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. “இப்படி நான் உங்கள கட்டுப்பாட்டுல வச்சுருந்தா நீங்களும், நம்ம குடும்பமும் இப்படி கஷ்ட நிலைக்கு வர்ற அவசியமே இல்லையே!”, என கொழலாமணி வருத்தப்பட்டாள். “இனி கதிரேசன் கிட்ட காசு வாங்காதீங்கப்பா, எங்க கிட்ட கேளுங்க, இருந்த குடுக்குறோம்; இல்லைனா அன்னைக்கு குடிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா குடிக்குறத நிறுத்துங்க!”, என்று பையன்கள் மன்றாடிக்கொண்டனர்.

3 நாட்கள் இருந்தார். கைகள் வெடவெடத்தன. பூங்காவில் கொஞ்ச நேரம் நடக்கலாம் என சென்றார்; நடக்கக் கூட முடியவில்லை. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. நடுக்கத்தையும், வெடவெடப்பையும் குறைக்க வழக்கம் போல பீடி எடுத்துப் பத்தவைத்தார். ஹூஹும்! நடுக்கம் குறைவதாய் இல்லை. கதிரேசனிடம் காசு கேட்கவும் அத்தனை யோசித்துக் கொண்டார், ‘எங்கே அண்ணன் வீட்டுக்குப் போனால் மருமகள் அசிங்கப்படுத்தி விடுவாளோ’ என்று. எப்படி எல்லாம் வாழ்ந்தோம், இருந்தோம் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போனது. பையன்கள் வீட்டில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தனர். கொழலாமணியும் செயின் மாட்ட நாத்தனார் வீட்டிற்கு சென்றிருந்தாள். இருந்த அரிசியை வடித்து வைத்து, ரசம் வைத்து சாப்பிடச் சொல்லி சென்றிருந்தாள்.

பரமசிவம் கதிரேசனுக்குத் தயக்கத்துடன் ஃபோன் செய்தார். இதோடு எண்ணிலடங்காத அத்தனையாவது முறையாகத் திருப்பி தழுதழுத்த குரலில் “100ரூவா இருந்தா குடுத்து அனுப்பி விடேன்”, என்றார் யாசகமாக. அவனும் மனைவிக்குத் தெரியாமல் உடன் வேலை பார்க்கும் வேறு ஒரு பையனிடம் 100ரூ கொடுத்து “சித்தப்பா கிட்ட குடுத்துட்டு வந்து பொடி வை!”, என்றான். வாங்கிய காசுக்கு ஒரு குவார்ட்டரும் கொஞ்சம் எலி மருந்தும் வாங்கி வீடு வந்தார் பரமசிவம் ஆசாரி!

-குருபாய்

480total visits.