நீங்க இடதுசாரியா ? வலதுசாரியா??

0
64

நமக்கு  இடதுகையும் முக்கியம் வலது கையும் முக்கியம் எதை சொல்லலாம் என்பதை தாண்டி நேற்றைய  அரசியலின் முக்கிய வாக்கியங்கள் இன்றைய அரசியலின் புதிய பரிணாமத்தில் அர்த்தம் மறைக்கப்பட்டு அலங்காரமாக மாறிபோன ஒரு அரசியல் நோக்கு தான் இடது வலது சாரிகள் என்னும் வாக்கியங்கள்.

எதிர்த்து கேள்வி கேட்டாலே தேசதுரோகி நீ! என்னும் நம் ஜனநாயக நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்குமோ இது? நமக்கு தெரியாது. நாம் தெரிந்துக்கொள்வோம்.

அது என்ன இடதுசாரி? Left wing politics அதாவது இடதுசாரி என்பது சமூக சமத்துவத்தை ஆதரிக்கும் அரசியல் நிலைப்பாடாகும். ஒடுக்கபடும் மக்களின் நலன்களை கவனிக்க, ஒடுக்கங்களை ஒடுக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இடதுசாரிகளே.

இந்த இடது வலது அரசியல் பிரெஞ்சு புரட்சியில் ஆரம்பித்தது. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சி அதாவது ஏகாதிபத்தியத்தை  ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு  உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான காரணமாக இதுவே அமைந்தது.

இடதுசாரி கொள்கைகள் முழுக்க முழுக்க திட்டமிட்ட பொருளாதார கொள்கை கொண்டவை. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளர்க்கு தேசியவாதம், சமூகவுடமை, மக்களாட்சி, சமய குருமார்கள் எதிர்ப்பு போன்றவை நோக்கங்களாக இருந்தது. மூன்றாம் நெப்போலியனின் 1851 ஆம் ஆண்டுச் சதிப்புரட்சியைத் தொடர்ந்து இரண்டாம் பேரரசு உருவான பின்னர், அரசியலில் தீவிர குடியரசியம், கற்பனைச் சமூகவுடமை என்பவற்றுக்குப் போட்டியாக மாக்சியம் உருவாகியது.

 மன்னராட்சியில்  குடியாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. இதனால் நில உடைமை அமைப்பு வலுப் பெற்றிருந்தது. தொழிற்சாலைகளில் உழைப்பதற்குத் தொழிலாளிகளின் கூலி உழைப்புத் தேவைப்பட்டது. பொருள்களை உற்பத்தி செய்வதற்கு கச்சாப் பொருட்கள் தேவைப்பட்டன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்து இலாபத்தைப் பெறுவதற்கு சந்தைகள் தேவைப்பட்டன. இதற்கு நில உடைமை அமைப்பு தடையாக அமைந்தது. முதலாளிவர்க்கத்திற்கும் இது தடங்கலாக இருந்தது. த‌ங்க‌ளுடைய‌ உழைப்புச் ச‌க்திக்குறிய‌ ப‌ல‌னைப் பெறுவ‌தற்காக‌ உரிமைக‌ளை கோருவ‌தற்காக தொழிலாள‌ர்க‌ள் தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை அமைத்துக் கொண்டன‌ர். ம‌ன்ன‌ர்க‌ளுக்கும் முத‌லாளி வ‌ர்க்க‌த்தும் இடையில் ந‌டைபெற்ற போராட்ட‌த்தில் தொழிலாளி வர்க்க‌ம் முத‌லாளி வ‌ர்க்க‌த்தை ஆத‌ரித்த‌து.

முதலாளி வர்க்கம் தன் சொந்த நலனுக்காகவே உரிமைக்கோரி போராடிப் பெற்றது. அதே போன்று தொழிலாளிகள் தங்களுக்கான உரிமையை கேட்ட போது முதலாளி வர்க்கம் அவற்றை மறுத்தது. தொழிலாளி வர்க்கம் அதுவரை சந்தித்து வந்த சிக்கல்களுக்கு விடை காணும் வகையில்  காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் தொழிலாளி வர்க்க அரசியலுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை உருவாக்கி அளித்தனர். இதுவே மார்க்சியம் எனப்பட்டது.

ஜெர்மானிய தத்துவ அறிவு, ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம் மற்றும் பிரஞ்சு சோசலிசக் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் மார்க்சியம் உருவானது எனப்படுகின்றது. மார்க்சியத்தின் படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு கூடுகிறது.

வலதுசாரிகள் என்பவர்கள் பாரம்பரிய கொள்களைகளை முன்னெடுப்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் புதிய குடிவரவாளர்களை எதிர்ப்பார்கள், கருக்கலைப்பை எதிர்ப்பார்கள், அந்நிய முதலீடுகளை தடுப்பார்கள். ஏற்கனவே உள்ள சமூக, பண்பாட்டு பெறுமதிகளை அப்படியே காக்க வெளிக்கிடுகிற அரசியல், தனிச்சொத்துடைமையை, முதலாளிய, நிலவுடைமைக் கட்டமைப்பை பேண நினைப்பவர்கள், சமூகத்திலுள்ள ஏற்றதழ்வுகள் மதம், ஆணதிகாரம் உட்பட பல கட்டமைப்புக்க்ளை நியாயப்படுத்தவும் பேணிக்காக்கவும் விரும்புபவர்கள் வலதுசாரிகள் எனப்படுவார்கள். முதலாளித்துவ நாடுகளில் பொதுவாக உள்ள கட்சிகள் எல்லாமே வலதுசாரி கொள்கையையே அதிகளவில் கடைப்பிடித்து வந்தன.

அமெரிக்காவில் உள்ள இரு கட்சி ஆட்சியில் ஜனநாயக கட்சி ஓரளவிற்கு இடது பக்கம் சாய்ந்தது. குடியரசுக்கட்சி வலது பக்கம் முழுமையாக சாய்ந்தது. ஆனால் இரண்டுமே சீனாவுடன் ஒப்பிடும்பொழுது வலதுசாரி கட்சிகள் தான். 1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவை விட சீனாவில் தான் பணக்காரர்கள் அதிகம்.

ஏன் முடியாட்சி இருக்க கூடாது? வலதுசாரி ஏன் கூடாது?

மக்களுக்கு அதிகாரம் இருக்காது. அரசன் என்பவனே சட்டமியற்றல், நிர்வாகம், நீதிபரிபாலனம் மூன்று அம்சங்களையும் காட்டுபடுத்துவான் என்பதால் அது சர்வதிகாரத்துக்கு வழிவகுக்கும். பிறப்பு-சாதியை வலியுறுத்தும்,  தனது இருப்பை பிறப்பு வழியால், பிறப்பு வழிச் சாதிய முறையையும் நியாப்படுத்தும், எப்படிப்பட்ட நல்லாட்சி மன்னன் ஆட்சியிலும் அவனது ஆட்சிக்கு எதிராக கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். எதிரான கருத்துக்களுடன் ஒத்து அல்லது ஏற்றுப்போக வேண்டும், இல்லாவிட்டால் அதை வன்முறையால் அடக்க வரவேண்டி வரும். சிக்கலாகி போகும். அரசனுக்கும் மக்களுக்கும் பொருளாதார இடைவெளி பெரிதென்பதால், மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தருவதிலோ, மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசன் திறனுடன் இயங்குவதற்குத் தடையாக இருக்கும். பிறப்பால் அரசுரிமைப் பெற்ற ஒரு அரசன் அரசை வழிநடத்துவதற்குரிய திறனைத் தன்னகத்தே இயல்பாக கொண்டிருப்பான் என எதிர்பார்க்க முடியாது. இன்னமும் இன்னமும் நிறைய…  ஜனநாயக நாடு எனும் இந்தியாவில் இதுவெல்லாம் இல்லாமலா இருக்கிறது. யோசிக்கனும்!! புரட்சி வெடிக்கனும்!!

சே குவாராவும் இடதுசாரி தான், நேருவும் இடதுசாரி

தான். முன்னவர் பாரளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர் ஜனநாயகவாதி. அடிப்படை ஜனநாயக உரிமைகளில் சொத்துரிமையும் அடக்கம். அதை  ஜனநாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம். வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம் இருக்குமாயின் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. இரண்டாம் உலகப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாதார கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல்படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. “ஜெர்மன் மிராக்கிள்” என்று இன்றும் போற்றப்படுகிறது.  1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. நேர் எதிராக  “இடதுசாரி” கொள்கைகளை பல பாணிகளில் பின் பற்றிய சுதந்திர இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா  போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய  பாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும் பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.

1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வந்திருக்கிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசூலும்  உருவாகியிருக்கிறது.

30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள், இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். வலதுசாரி என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர். இந்திரா  காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு  இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்  “இடதுசாரி முற்போக்குவாதி” என்ற முத்திரை பெற துடித்து,  இந்திரா காந்தியின் பாசிசத்திற்க்கு துணை  போயினர். தற்போதைய நிலவரத்திற்கும் அப்போதைக்கு ஆழ்துளை வேற்றுமை என்று சொல்லவேண்டுமென்றால் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சிக்காரர்.

த‌னி ம‌னித‌ ம‌த‌, க‌ட‌வுள் ந‌ம்பிக்கைக‌ள், கூட்டு வ‌ழிபாடுக‌ள் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளை பின்ப‌ற்ற‌ எல்லோருக்கும் அடிப்ப‌டை உரிமை இருக்கிற‌து. ஆனால் ம‌த‌ம் அர‌சிய‌லில் க‌ல‌க்க‌வோ, அல்ல‌து ம‌த‌த்தின் பெய‌ரால் அடிப்ப‌டைவாத‌ம், அட‌க்குமுறை, செய்வதோ நடந்தால் அது ஃபாசிச‌ம்(fascism). அது வ‌ல‌துசாரி சிந்த‌னை ஆகாது. சித்தாந்ததை நிலை நிறுத்த ஏற்ற தாழ்வுகளை அகற்றும் நோக்கம் என்று நம்பிக்கொண்டு  அடிப்படை உரிமைகளை நசுக்க தயங்காதவர் தான். ஃபாசிசவாதி. ம‌த‌ உரிமை வேறு, ம‌த‌வெறி வேறு.  இடது வலது சாரியை தாண்டி நல்லது செய்யும் பேர்வழி என்று மதவாதம் உருவாக்கி ம‌னித‌ உரிமைக‌ளை மீறி அற‌ம் அழிக்கும் வ‌ழிமுறைக‌ள் எல்லாம் ஏதோ ஒரு வ‌கை ஃபாசிச‌மே.

இந்தியாவில் இடதுசாரியா வலதுசாரியா என்றால் பதில் சொல்ல முடியாத நிலை. எப்படி அரசு வலதுசாரி எனலாம் என்று கேட்டால் பதில் இதோ, தலைவர் ஒருவர் வேறொரு மதத்தினருக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். மாடு தெய்வம்.  அதை உண்ணும் மனிதனை கொன்றால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். சாதீய ஒடுக்கு முறையால் இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். இன்னமும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  பொருளாதார கொள்கைகள் சோசலிசக் கொள்கைகள் அல்ல. மேலும் வேண்டுமா என்ன???

தீண்டாமையை ஒழிக்க முடியாமல் காந்திஜி தோற்றிருக்கலாம், கண்ணால் பார்ப்பதே கூட தவறு என்று கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமைக் கொடுமையை  ஜனநாயக நாடு இன்று  வென்றிந்தாலும் வாழ்நிலை தாழ்த்தப்பட்டு வறுமையும் பசியும் பஞ்சமும் அதிகமாகிக்கொண்டே வருவதை மறுக்கமுடியாது. ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. ஏழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப்படுகிறது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிறது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். புரட்சிகள் அசைவற்று நிற்பது இல்லை, நின்றும் போகாது.

வறுமை மற்றும் ஏற்ற தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதை அடைய எந்த வழியை பின்பற்றினால், விளைவுகள் நிலையாக எக்காலத்திலும் இருக்கும் என்பதே முக்கியம். வெனிசுலாவின் அண்டை நாடான சிலேவில் எண்ணை வளம் இல்லை. தாமிர கனிம வளங்கள் உண்டு. கடந்த 40 வருடங்களாக சந்தை பொருளியல் கொள்கைகளை மிக கவனமான, சரியாக பயன்படுத்தி, வறுமையை வெகுவாக குறைத்து, இன்று தென் அமெரிக்க கண்டத்திலேயே மிக வளமான, நிலையான நாடாக திகழ்கிறது ஆனால் வெனிசுலா சோசியலிசம் பேசி, தனியார் துறைகள் பலவற்றையும் அரசுடைமையாக்கி, வரி விகிதங்களை உயர்த்தி அன்னிய செலவாணி விகித்தை செயற்கையாக நிர்ணியத்து பெரும் சிக்கலில் மாட்டியது. கச்சா எண்ணையின் விலை குறைய குறைய, அதன் ஏற்றுமதியை மட்டும் நம்பி பெரும் அளவிலான நலத்திடங்களை உருவாக்கியிருந்த வெனிசுலா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளும் கச்சா எண்ணை ஏற்றுமதியை நம்பியே இருப்பவை தான். ஆனால் அங்கு வெனிசுலா போல் ‘சோசியலிச’ பாணி பொருளியல் கொள்கைகளை அமல்படுத்தாமல், சந்தை பொருளியல் கொள்கைகளை செயல்படுத்தி, அதே நேரத்தில், எண்ணை உற்பத்தியில் ஈட்டிய ராயல்ட்டி மூலம் பெரும் நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, நிலையாக செயல்படுகின்றன.

விவசாயத்தையும் நவினமயமாகாமல் இந்தியாவில் சோசலிசக் கொள்கைகள் தடுத்துவிட்டன. விவசாயமும் இதர தொழில்களை போல் உற்பத்தி சார்ந்தது தான் என்பதனை மறந்து.

 சுதந்திரத்திற்க்கு முன்பு வரை  விவசாயத்தின் தன்மை வேறு, இன்று உள்ள நிலை வேறு. அன்று அரசின் தலையீடு மற்றும் கட்டுபாடுகள் இன்று போல் இல்லை. அரசு உதவிகளும் அதிகம் இல்லை. எனவே விவசாயம் இதர தொழில்களை  போலவே  வளர்ந்தது. அன்று ஜமீந்தார்கள், பெரு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் அதிகம்  இருந்தனர்.  நில வரியும் மிக அதிகமாக இருந்தது. நில வரியையும், அதை வசூல்  செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஜமீந்தார்கள்  முறையையும் ஒழித்து விட்டோம். அது மிக சரியான செயல்தான். ஆனால் சோசியலிச கொள்கைகளின் அடிப்படையில் சுதந்திர இந்தியாவில்,  நில உச்சவரம்பு சட்டங்களை உருவாக்கி, பெரும் நிலசுவாந்தர்களின் ‘உபரி’ நிலங்களை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு   பகர்ந்தளிக்கும்  லட்சியவாதம் என்று சீரிழந்து விட்டோம். ஒரு தனிபட்ட விவசாய பண்ணை வெற்றிகரமாக, குறைந்த செலவில் மிக அதிகம் விளைச்சலை உருவாக்க, குறைந்தபட்ச நிலம் தேவை. உலகெங்கிலும், முக்கியமாக வளர்ந்த நாடுகளில் விவசாய பண்ணைகளின் சராசரி அளவு 500 ஏக்கர்களுக்கு  மேல் உள்ளது. ஒரு லச்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் பண்ணைகளும் உள்ளன. இவை முதலாளித்துவ நாடுகளில் மட்டுமல்ல், முன்னால் கம்யூனிச நாடுகளான சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளிலும் அன்று கூட்டு பண்ணைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்டவையாக திகழ்ந்தன. எனவே அவற்றின் உற்பத்தி திறன் மிக அதிகரித்து, நவின வேளான்மை சாத்தியமானது.

வெளிப்படையான சுதந்திரச் சமூகங்களும், தடையற்ற வர்த்தகமும், உலகப் பொருளாதாரத்துடனான பன்முக இணைப்பும் தான் தேசத்தின் வெற்றிக்கும் வளத்துக்கும் காரணமாக இருக்க முடியும்.  15 முதல் 64 வயது வரை கொண்ட மக்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுவதால் இந்தியா நிச்சயமாக மிகுந்த வளர்ச்சியடையும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறிவருகின்றன. 2020-ம் ஆண்டு இந்தியாவின் சராசரி வயது 29-ஆக இருக்கும் என்று தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறியுள்ளது. அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழப் போகிறது. ஆனால் இந்த இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவை முன்னேற்றி விட முடியுமா? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என மேடைக்கு மேடை முழக்கமிடும் அரசியல்வாதிகள், திறன் மிக்க இளைஞர்களால் தான் இது சாத்தியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

-ஸ்வேதா சந்திரசேகரன்

215total visits.