நாடோடியின் நாட்குறிப்பு – 1

0
144

என்னைப் பொறுத்தவரையில் ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்றால் எழுதப் போகும் அந்த குறிப்பிட்ட தலைப்பு குறித்து கொஞ்சமாக இல்லை நிறையவே தகவலறிவு தெரிந்திருக்க வேண்டும். சிறுகதை எழுதுவதாக இருந்தால் ஒரு சிறு குறிப்பைக் கொண்டு ஒரு பக்கத்திற்கு முன்னும் பின்னுமாக அந்த குறிப்போடு வார்த்தைகள் சேர்த்து புனையும் திறமை வேண்டும். தொடர்கதையெனில் கதை துவங்கும் வாரத்திலிருந்து எழுதுவதற்கும் படிப்பதற்கும் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய மனநிலை வேண்டும். கவிதை எழுத நுண் உணர்வு வேண்டும்.

மேற்கூறிய நான்கு நிலைகளில் நுண்ணுணர்வுகள் மட்டுமே அவ்வப்பொழுது கைக் கொடுக்கும். அவ்வப்பொழுது தானே தவிர எப்பொழுதும் அல்ல. சரி இது நான்கையும் தவிர்த்து என்ன எழுதலாமென்று யோசித்த பொழுது தான் பயண அனுபவங்களை ஏன் பகிர்ந்துக் கொள்ளகூடாது என்று தோன்றியது.

சரி பயண அனுபவத்தை எழுதலாமென்ற முடிவோடு ஒருசில பயண கட்டுரைகளை வாசித்த பொழுது அத்தனைக் கட்டுரைகளிலும் அதை எழுதுபவர் எங்கெங்கெல்லாம் இளைப்பாறினாரோ அந்த ஊரின் பெயரெல்லாம் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதை படிக்கும் நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, கடந்த ஆறு வருடங்களில் மட்டும் கோடைக்கானலிற்கு குறைந்தபட்சம் முப்பது தரமேனும் சென்று வந்திருப்பேன் (பைக்கில் தனியாக, நண்பர்களோடு காரில் என எல்லாமும் சேர்த்து தான்)

ஆனால் ஒவ்வொரு முறையும் திரும்பி வருகையில் பாதையை மறந்து சாலையில் வருவோர் போவோரிடம் வழி கேட்டே நாற்கரை சாலைக்கு வந்து சேருவேன். இப்படிப்பட்ட மனநிலைக் கொண்ட ஒருவன் எப்படி பயணம் குறித்த கட்டுரையை எழுதிட முடியும்..?? இருப்பினும் எழுதுகிறேன். காரணம் என்ன தெரியுமா..? நான் ஒரு பயணியே அன்றி நடமாடும் மேப் அல்ல என்பதனால் தான் அதுவுமில்லாமல் இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் ஒவ்வொருவர் கையிலும் திசைக்காட்டியும் வழிகாட்டியும் இருக்கிறது.

முதல் காதல், முதல் முத்தம் முதல் இரவு இப்படி முதல் முதலென்று எல்லாவற்றையும் குறிப்பிடும் பொழுது இந்த முதல் என்பது ஒரு பரவசத்தை குறிக்கும் நிலையாக தான் இருக்கும். ஆனால் எனக்கான முதல் பயணம் எனக்கு பரவசத்தைக் கொடுக்கவில்லை “அவசரப்பட்டுட்டேனோ..” என்ற பயத்தையும், எரிச்சலையும் கோபத்தையும் தான் கொடுத்தது. ஒரு கட்டத்தில் செல்லுமிடத்திற்கு போய் சேர்ந்துவிட்டால் போதுமென்ற எண்ணத்தையும் கொடுத்துவிட்டது. ஏனென்றால் அந்த முதல் பயணத்தில் நான் தேர்ந்தெடுத்த வண்டியைத் தவிர்த்து மற்றவை அனைத்துமே தவறுகள் தான்.

செப்டம்பர் 8, 2010 புதன்கிழமை தான் என்னுடைய முதல் தொலைதூர நெடும் பயணம். நாகர்கோவில் – சென்னை. அடுத்த நான்கு நாட்கள் சரஸ்வதி பூஜை விடுமுறை இருந்ததால் புதன்கிழமை அலுவலகத்திற்கு விடுப்பு எழுதி கொடுத்துவிட்டு மதியம் 12 மணிக்கு வண்டியைக் கிளப்பியது முதல் தவறு. அலுவலக வேலை தினம் என்பதால் மொபைல் அழைப்பை தவறவிட்டிட கூடாது என்ற காரணத்தினால் மொபைலை vibration modeற்கு மாற்றி சட்டைப்பையில் போட்டுக்கொண்டது இரண்டாவது தவறு. விண்ணைத்தாண்டி வருவாயா வெளியான அந்த காலகட்டத்தில் ‘ஆரோமலே’ பாடலை மனதில் வைத்துக் கொண்டு அந்த பாடலில் சிம்பு தலையிலிருந்ததைப் போலவே ஒரு அரைச்சட்டி ஹெல்மெட் மற்றும் ரே பானின் aviator கண்ணாடியை மாட்டிக் கொண்டது மூன்றாவது தவறு.

மதுரை திருமங்கலத்திலிருந்து மதுரை ஏர்போர்ட் வழியாக மேலூர் செல்லும் பாதையில் சென்று திருச்சி ஹைவேயை அடையவேண்டுமென்ற பாதையைக் கூட தெரிந்து வைத்திருக்காமல் பயணிக்க துவங்கியது நான்காவது தவறு. இரண்டு நாள் தங்குவதற்காக முதுகுப்பையில் துணிபாரத்தை ஏற்றிக் கொண்டது ஐந்தாவது தவறு. ரைடிங் ஜாக்கெட் இல்லாமல் மிக சாதாரணமான ஒரு முழுக்கை டீஷர்ட்டை மாட்டிக்கொண்டது ஆறாவது தவறு. 750 கிமி பயணிக்க வேண்டிய பயணம் என்பதைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் ஒரு குவாடிஸ் செருப்பை காலில் மாட்டிக்கொண்டது ஏழாவது தவறு.

என்னுடைய ரைடிங் குரு ஏழரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் வந்த கதையை கேட்டு தப்பு கணக்கு போட்டுக் கொண்டது எட்டாவது தவறு. கிளம்பு முன் அனுபவசாலியான அவரிடம் அறிவுரை கேட்காமல் சென்றதை ஒன்பதாவது தவறாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது அவரது அறிவுரையைக் கேட்டு பயணத்தைத் துவங்கியிருந்தால் இப்படியொரு மோசமான அனுபவத்தை இழந்திருப்பேன் என்பதால் இந்த ஒன்பதாவது தவறை சரியாகவும் வைத்துக் கொள்ளலாம். last but not least திருநெல்வேலியிலிருந்த தோழியை சந்திக்க சென்று வந்ததையும் சிற்சில சமயங்களில் அவளையும் அழைத்துக் கொண்டு தென்காசி வரை சென்று வந்ததையும் வைத்து மனம் உருவாக்கி வைத்திருந்த அதீத நம்பிக்கையை நம்பி தெரியாத பாதையில் பயணிக்க துவங்கியது தான். over confidence உடம்புக்கு ஆகாது தம்பி என்று அப்பொழுது யார் சொல்லியிருந்தாலும் அன்றிருந்த மனநிலையில் எனக்கு அது உரைத்திருக்காது

முதற் கோணல் முற்றும் கோணல் இந்த பழமொழி எதற்கு வேண்டுமென்றாலும் சரியாக இருக்கலாம். ஆனால் என்னுடைய இந்த முதல் பயணத்திற்கு தவறு தான். இந்த கோணல்கள் தான் என்னுடைய அடுத்தடுத்த பயணத்திற்கு என்னை தயார்படுத்தியது. இந்த கோணல் தான் ஒரு பயணத்திற்கு என்னென்ன தேவை என்னென்ன தேவையில்லை என்று எனக்கு கற்றுக் கொடுத்தது. இந்த கோணல் தான் என் மனபலம் என்னவென்பதை எனக்கே காட்டிக் கொடுத்தது. இந்த கோணல் தான் என் அடுத்தடுத்த பயணங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. இந்த கோணல் தான் இன்று இந்த அனுபவ பகிர்வை எழுதிட காரணமாகவும் இருக்கிறது.

சரி பயணகதைக்கு செல்வோம். காலில் குவாடிஸ் செருப்பு, டைட் ஃபிட் ஜீன்ஸ், ஒரு சாதாரண முழுக்கை டீஷர்ட் அதையும் forearm வரை உருட்டிவைத்துவிட்டு, கண்ணுக்கு ரே-பான் ஏவியேட்டர் கூலர்ஸ், தலைக்கு அரைச்சட்டி ஹெல்மெட். பைக் மட்டும் ஏழாயிரம் கிலோமீட்டர் மட்டுமே ஓடியிருந்த புதிய யமஹா ஃபேசர்.

பயணத்தைத் துவங்கிய நாற்பதாவது நிமிடம் வள்ளியூர் மேம்பாலத்தைக் கடக்கையில் எனக்கான முதல் வரவேற்பைத் தந்தது நான் பயணித்துக் கொண்டிருந்த சாலையின் ஸ்பீட் லேனில் எதிர் திசையில் முகப்பு உடைந்து கிடந்த சிவப்பு நிற ஸ்கூட்டியும் அதன் அருகே வெள்ளைத் துணியைக் கொண்டு போர்த்தப்பட்டிருந்த ஒரு இளம்பெண்ணின் அல்லது பெண்ணின் பிணமும் தான்.

இடித்தது யார்..? என்ன வண்டி..? தவறு இந்த பெண்ணின் மீதா (ஸ்கூட்டி கிடந்த நிலையை வைத்துப் பார்க்கையில் இந்த பெண்ணின் மீது தான் தவறு சொல்லமுடியும்) அல்லது இடித்ததில் வண்டி திசை மாறி விழுந்து கிடக்கிறதா..? வெள்ளைத் துணியை போர்த்தியது யார்..? போர்த்தியவர் எங்கே போனார்..? போலீஸிற்கு தகவல் கொடுத்தாகிவிட்டதா..? திருமணம் ஆனவளா..? ஆகாதவளா..? வீட்டிற்கு தகவல் சென்றடைந்திருக்குமா..? திருமணமானவள் எனில் குழந்தைகள் இருக்குமா…? குழந்தைகள் இருப்பின் இந்த மரணத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்..? ஆகாதவளெனில் பெற்றவர்கள் இவளை நினைத்து ஏதும் கனவு கோட்டை எழுப்பியிருந்தால் அவர்களின் நிலை என்ன..? என்ற பல கேள்விகளோடு அந்த அநாதைப் பிணத்தைக் கடந்து தனது உச்சபட்ச வேகமான 100kphல் செல்ல துவங்கியது என்னுடைய ஃபேசர்.

-வாஸ்தோ

 

439total visits.