வயிற்றுவலி – மருத்துவ கட்டுரை

0
22

“மோகன்!! இன்னிக்கு பாண்டிச்சேரி போயிட்டு வரலாமா?”

“இல்லடா வேண்டாம்”

“ரெண்டு நாள் லீவு தானே…எங்கயாச்சும் போயிட்டு வருவோம்”

“இல்லடா… நான் வரல…எனக்கு வெளியில போகணும்னாலே பயமாயிருக்கு”

“ஏன்டா?”

“கொஞ்ச நாளாவே வயிறு வலிக்குது… எதை சாப்பிட்டாலும் சரியா செரிமானம் மாட்டேங்குது… வாந்தி வர்ற மாதிரியே இருக்கு”

“கொஞ்சம் இஞ்சி டீ சாப்பிட்டு பாரேன்”

“கொஞ்சம் என்ன.. நிறைய குடிச்சாச்சி….லெமன் இஞ்சி ஜூஸ், ஈனோ, டைஜின் சிரப் எல்லாம் குடிச்சு பாத்தாச்சு.. கொஞ்சம் சாப்பிட்டா கூட வயிறு உப்பசமா ஆயிடுது…. சாப்பிட்டவுடனே வயித்த கலக்குது….இதனாலேயே வெளில போக பயமாயிருக்கு… எங்க போனாலும் டாய்லெட்ட தேடிக்கிட்டு இருக்கிறது அசிங்கமா இருக்கு…”

“அப்ப வா.. மொதல்ல கிளம்பி ஹாஸ்பிட்டல் போவோம்”
இருவரும் கிளம்பி அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
மருத்துவர் மோகனிடம் சில கேள்விகள் கேட்கிறார்..

ம : நீங்கள் மலம் கழிக்கும் போது இரத்தம் எதுவும் சேர்ந்து வருகிறதா?

மோ : இல்ல சார்

ம : மலம் கழித்தவுடன் வயிறு வலி சரியாக போகிறதா?

மோ : ஆமா!

ம : மலத்துடன் சளி போல் எதுவும் போகிறதா?

மோ : ஆமா!

ம : உங்களுக்கு காய்ச்சல் எதுவும் வருதா?

மோ : இல்லை

ம : சரியாக பசிக்கிறதா?

மோ : பசியெல்லாம் நல்லா தான் எடுக்குது… ஆனா கொஞ்சம் சாப்பிட்டா கூட வயிறு உப்பி போகுது.. சாப்பிட்டதும் வலி இழுத்து புடிச்ச மாதிரி இருக்குது… மலம் கழிச்சவுடனே வலி சரியாயிடுது

ம : உடல் எடை எதுவும் குறைஞ்ச மாதிரி இருக்கா?

மோ : இல்லை

ம : வேலை நேரம் எப்படி?

மோ : எனக்கு இரவு நடுநிசி வரைக்கும் வேலை இருக்கும்

ம : உணவு நேரத்திற்கு எடுத்துக்குவீங்களா?

மோ : இல்ல..நேரம் தவறி தான் சாப்பிடுவேன்…காலையில லேட்டா எழுந்துக்கறதால 11 மணிக்கு தான் டிபன் சாப்பிடுவேன்… சில நாள் அதுவும் கிடையாது…. நேரா மதியம் சாப்பிடுவேன்.

ம : எங்கே சாபிடுவீங்க?

மோ : பெரும்பாலும் ஹோட்டல் தான்… கேண்டின்ல நேரத்துக்கு போய் சாப்பிட முடியாது… எனக்கு சொந்த ஊர் இது இல்ல… பொழப்புக்காக இந்த ஊர்ல இருக்கேன்.

ம : தூக்கம் சரியா இருக்கா?

மோ : வேலை முடிய நேரம் ஆகிறதால சரியான நேரத்துக்கு தூங்க முடியாது… வந்த்தும் கொஞ்ச நேரம் லாப்டாப்ல இல்ல மொபைல்ல படம் பாத்துட்டு தான் தூங்குவேன்…

மேலே உள்ள உரையாடல் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் அதை கொண்டு மோகனின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
 மோகன் அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரி
 வேலைப்பளு
 நேரந்தவறிய உணவு முறை
 சரியான தூக்கமின்மை
 காலை உணவை தவிர்த்தல்

இதனால் மோகனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள்
 வயிற்று வலி
 வயிறு உப்பசம்
 செரிமானக் கோளாறு
 சாப்பிடவுடன் மலம் கழித்தல்
 குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு

இதன் காரணம் என்ன?

சாப்பாடு மிக நீண்ட இடைவெளி விட்டு சாப்பிடுவதால் வயிறு நெடு நேரம் அசைவற்று சும்மா இருக்கிறது. ஹோட்டலில் உள்ள சுகாதார குறைபாட்டினால் வயிற்றுக்குள் கிருமிகள் செல்ல அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சரியான இடைவெளியில் சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் அமிலம் கலந்த நீரானது இவ்வகை கிருமிகளை அழித்து விடும். இல்லையெனில் இந்த கிருமிகள் பல்கிப் பெருகி குடலில் உள்ள நரம்புகளை தூண்டிவிட்டு வலி ஏற்படுத்துகிறது. இந்த கிருமிகளை அழித்தால் மட்டுமே இந்த பிரச்சினை சரி ஆகும்.

நமது குடலில் செரிமானத்திற்கு உதவும் லாக்டோ பேசில்ஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் வளர வழியில்லாமல் மேற்சொன்ன இந்த கிருமிகள் செய்து விடும்.
இதனால் தான் நமது முன்னோர்கள் வேப்பம் பூ, வேப்பிலை போன்ற கிருமி நாசினிகளை உணவில் பயன்படுத்தியுள்ளனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கிருமிகளை முற்றிலுமாக ஒழித்து விடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஆன்டிபயாடிக் போன்ற உயிர்க்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிருமிகளை அழித்தால் மட்டும் போதாது. லாக்டோ பேசில்ஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி ஆக வேண்டும். அப்போது தான் உணவுப் பொருள் நன்றாக நொதித்து செரிமானம் ஆகும்.

இதற்கு மிகவும் உதவியாக இருப்பது நீராகாரம். முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் அருந்தும் போது இரவு முழுவது அந்த நீரில் வளர்ந்த நுண்ணுயிரிகள் காலியாக உள்ள குடலில் முதலில் சென்று பின்னர் நாள் முழுவதும் உண்ணும் உணவுகளை செரிக்க உதவுகிறது.
சாப்பாட்டில் கடைசியாக சாப்பிடும் புளிக்க வைத்த தயிர், மோர் இவற்றில் இந்த வகை பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. குடலின் உள்ளே உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன.

இதை அடிப்படையாக கொண்டு ஆவின் நிறுவனம் தயாரிக்கும் ப்ரோபயாட்டிக் தயிர் (probiotic curd) செரிமானத்திற்கு உதவுகிறது.

இந்த வகை பாக்டீரியாக்கள் இப்போது பவுடர் வடிவிலும் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. வலி மாத்திரைகள் மலத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் எவற்றைச் சாபிட்டாலும் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளா விட்டால் இந்த பிரச்சினை வருடக்கணக்கில் நீடிக்கும் ஆபத்து உள்ளது.

இதை தவிர வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் தகுந்த மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் நலம்.

டாக்டர். இராதா குமார் M.D., D.M

120total visits.