புத்தகத்தை கிழியுங்கள்

0
49

புத்தகங்களை படித்திருக்கிறீர்களா? அதன் வாசத்த அறிந்திருகிறீர்களா? அதனை கட்டி அணைத்து தூங்கி இருக்கிறீர்களா? பாத்ரூமுக்கு கொண்டு சென்று படித்திருக்கிறீர்களா?(வாசகர் நினைப்பு எங்கே போகிறது என தெரிகிறது!பிச்சி புடுவேன்) படித்து விட்டு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? தூக்கம் இல்லாமல் தவித்துயிருக்கிறீர்களா? ஏன், காய்ச்சல் வந்து நடுங்கி இருக்கிருக்கிறீர்களா? சிலர் இந்த கேள்விகளுக்கு மிரண்டிருக்கலாம். புத்தக வாசிப்பில் இவ்வளவு இருக்குமா?

ஆம் இருக்கிறது! நமக்கு பலருக்கு புத்தக வாசிப்பு என்பது அபத்தமானதாக இருக்கிறது. புத்தகம் வாசிப்பவர்களை ஒரு ஜந்து வாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிகழ் காலம் அறியாதவர்களாக, கோழைகளாக, பார்க்கப்படுகிறார்கள். புத்தக புழு என விமர்சனமும் செய்யப்படுகிறார்கள். சிறுகதை, நாவல் துவங்கி கட்டுரை வாசிப்பது வரை எதையுமே தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றாக நினைக்கும் சமூகம் அதிகரித்தே வருகிறது. அதன் விளைவுகளே, இன்று சிறந்த புத்தகங்கள் கூட சில ஆயிரம் பிரதிகளை தாண்டுவதே இல்லை. அதுவும் அதிக விளம்பரம் இருப்பதால் மட்டுமே அந்த நிலை. பல புத்தகங்கள் எப்பொழுது வந்தது என்றே தெரிவதில்லை. பிரபல எழுத்தாளர்கள் போக , இன்றைய இளம் எழுத்தாளர்களை கூட அதிகம் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல்  காரணம்  பாட புத்தகங்கள். பாலிய வயதில் நமக்கு புத்தகம் அறிமுகம் ஆவது நாம் சிறிதும் விரும்பாத பள்ளி கூடங்களில் தான். விளையாடி களைத்துக் கிடக்க வேண்டிய பருவத்தில் புத்தகங்கள், பள்ளிகள், ஆயுதம் தாங்கிய ஆசிரியர்கள் என நரகத்தில் தள்ளியதன் விளைவு புத்தகத்தின் மீதான வெறுப்புக்கு காரணம் ஆகியது. மற்றும், பள்ளியில் நாம் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நம்மால் எளிதாக செல்ல முடியும். ஆனால், பள்ளி நூலகத்திற்கு மட்டும் செல்லவே முடியாது. ஏன் புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் எனக் கேட்டால், புத்தகங்களை கிழித்து விடுகிறார்களாம். சார், குழந்தைகள் புத்தகங்களை கிழிக்க தான் செய்வார்கள். அவர்கள் தான் குழந்தைகள். எவ்வளவு கிழிக்க போகிறார்கள்? என்றேனும் ஒரு நாள் புரிந்து விடுவார்கள். இல்லையேனில், புரிய வையுங்கள். இதன் பின், அவர்களால் எளிதாக புத்தகத்தை நெருங்க முடியவில்லை. அது போதாது என்று, தன்னை தீவீர வாசிப்பாளர்கள் என காட்டி கொள்பவர்கள் செய்யும் அட்டுழியங்கள் வேறு. நானும் ஆரம்பத்தில் இப்படி எதையாவது எழுதி வைப்பவர்களை எல்லாம் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறேன். பின், நிறைய படிக்க படிக்க ஏதேனும் படைப்புகளை உருவாக்குபவர்கள் எல்லாம் தெய்வமாகி விட்டார்கள். ஆனால், அதிகம் படித்து விட்டு  மற்றவர்களை திட்டிக் கொண்டே இருக்கும் மன நோய் (மன்னிக்கவும், அவர்கள் செய்யும் செயல்கள் அப்படி, முக்கியமாக விமர்சகர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ,நோயில் முற்றி போனவர்கள்) படைத்தவராக் இருக்கிறார்கள். சமிபத்தில் கூட, ஒரு முன்னாள் கல்லூரி பேராசிரியர் சந்தித்தோம். வயதொன்றும் பெரிதாக் இல்லை. கல்யாணம் ஆக வேண்டிய வயது தான்! அவரை பற்றி மாணவர்கள் ஆகா, ஓகோ எனக் கூற, அவரை சந்திப்பதில் ஆவலாய் இருந்தேன். நன்றாகவும் பேசினார். வரலாறு, நாடகம், இலக்கியம் என எங்கெங்கு எல்லாமோ சென்றார், நடுவில் பெண் மாதவிடாய் பிரச்சினை வேறு அலசப்பட்டது. நிறைவாக, என் தோழி அவரிடம் அசந்து தனது ஆராய்ச்சியை பற்றிய குறிப்புகளை சொன்னார், அவ்வளவுதான் அவர் அவளை வறுத்து எடுத்து விட்டார். இது தான் இருவருக்கும்  முதல் அறிமுகம்,  ஒரு பெண், குடும்ப சுழ்நிலையில் இவ்வளவு பெரிய படிப்பு படிப்பதே பெரியது. அதனை ஊக்குவிப்பது கூட தேவையே இல்லை. அவளை தாழ்த்தி பேசாமல் ஆவது இருக்கலாம் அல்லவா? மேலும்,  அது ஒன்றும் அபத்தமான ஆராய்ச்சி எல்லாம் இல்லை. மிக முக்கியமான ஆராய்ச்சி. கல்லூரி பேராசிரியர்களிடம் உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இணையத்தின் வாயிலாக எப்படி ஏற்படுகிறது? நீங்களே சொல்லுங்கள் மக்களே! இது தவறா? பின் ஏன் அப்படி நடந்துக் கொண்டார் என்று சாதாரண மக்களின் பிரதிநிதியாகிய நான் குழம்புவதால் அவர் மன நோய் உள்ளவர் என நினைத்துக் கொண்டேன். ஒருவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காத புத்தக வாசிப்புகள் எல்லாம் எப்படி நல்ல புத்தக வாசிப்பாக்க இருந்து விட முடியும்? பின்,ஏன் மாத விலக்கு பற்றி எல்லாம பேசி சீன் போடுகிறீர்கள்?

வாசிக்க துவங்குபவர்கள் எல்லாம் இவரை போல் பலரை பார்த்து நாமும் இப்படி மன நோயாளி ஆகி விட கூடாது என பயத்திலே ஒதுங்கி கொள்கின்றனர். விமர்சிக்கலாம். அதற்கு முழு உரிமை இருக்கிறது. அது எப்படி விமர்சிக்க வேண்டும் என்றும் முறை இருக்கிறது. நமது நண்பர் ஒருவர் இருக்கிறார். அனைத்து படங்களையும் திட்டுவார். ஒடுக்கப்பட்டவர்களை குறிக்கவில்லை, பெண்களை மதிக்கவில்லை, யதார்த்தம் மீறி இருக்கிறது என்பார். ஆனால், தமிழகத்தின் பெரிய நடிகர் ஒருவரின் ரசிக குஞ்சுகளாலே கூட ஜீரணிக்க முடியாத படங்களுக்கு கூட இது தான் படம் ! தமிழக ரசிகர்களுக்கு இது போதும் என்பார். ஏன் இப்படி இரட்டை வேடம்?

அனால், புத்தகங்கள் சிறப்பானவை. அவை காதலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவை. தன்னை தொட்டு தூக்க, கொஞ்ச ஆட்களை தேடி ஏங்கி போய் இருப்பவை. அவைகள் உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னுள்ளே அடக்கி வாழ்ந்து வருகின்றன. ஐஐடி களும், பெரிய கல்லூரிகளும், பெரிய பள்ளிகளும் புத்தகங்களை  வாசிப்பதும் கற்று தருவது எல்லாம் கடலுக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

என்னிடம் பலர் கேட்கும் கேள்வி எந்த புத்தகத்தை வாசிப்பது என்பது தான். பெரும்பாலும் நான் கூறும் பதிலெல்லாம்   உங்களுக்கு விருப்பப்பட்டதை படியுங்கள். புத்தக அட்டையை பாருங்கள், அதன் நடுப்பக்கம் திறந்து சுவாசித்து பாருங்கள். உடலுறவில் வியர்வையின் பங்கு எப்படியோ அப்படி சில புத்தக வாசனைகள் நம்மையே ஈர்க்கும். சில பக்கங்களை வாசித்து பாருங்கள். உங்களுக்கு புரியும் மொழியில் உங்களுடேன் உரையாடும். அதை எடுத்து படியுங்கள். ஒருவேளை, படிக்கும் பொழுது பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள், மீண்டும் தேட துவங்குங்கள்.  எழுத்தாளர்கள் வைத்து புத்தகத்தை படிக்க விரும்பாதீர்கள். அதன் கருத்துகளை கொண்டு படிக்க முயலுங்கள். ஒரு வேளை, படிக்க துவங்கிய தளம் ஆன்மீகமாகவோ சினிமா சார்ந்த்தாக்வோ இருக்கலாம். ஆனால், அதே கதி எனக் கிடக்காதீர்கள், வேறு தளத்திற்கு செல்ல முயற்சியுங்கள். புத்தகத்தில் படிப்பதை எல்லாம் உண்மை என நம்பி விடாதீர்கள்.அதனை கொண்டு வாதிடாதீர்கள். விவாதம் செய்யுங்கள். பலர் புத்தகம் படிப்பதே மற்றவர்களிடம் தான் எல்லாம் அறிந்தவனாக காட்டி கொள்வதற்கு தான். அந்த மன நிலையில் படிக்காதீர்கள் முக்கியமாக, புத்தகம் படிக்காதவர்களை அற்ப ஜீவனாக என்ன தோன்றும்? தயவு செய்து அப்படி ஏதும் செய்து இன்றைய படித்த மன நோயாளிகளாக நீங்களும் ஆகி விடாதீர்கள்.

ஒரு கட்டத்தில் எழுத துவங்குங்கள். சிலர், சொல்வார்கள் ஆளாளுக்கு எழுத துவங்கி விட்டால் இலக்கியம் என்னாவது? தமிழ் சூழல் என்னாவது ? என்பார்கள். இவர்களை உடனே ஜாதி சாயம் பூசாதீர்கள். இவர்கள் எல்லா ஜாதிகளிலும் இருக்கிறார்கள். யாரையும் பற்றி கவலைக் கொள்ளாதீர்கள். நினைப்பதை பேசிக் கொண்டு எழுதிக் கொண்டே இருங்கள். நியாமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ளங்கள். நான் கூட தினம் மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்.  கொள்கை பிடிப்பில் இருப்பது எல்லாம் மனிதர்களே அல்ல. மனிதன் தன்னை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் நல்லதாக இருப்பது நலம்.

இங்கே ரசிப்பதற்கும் மற்றவரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்க தான் ஆட்களே இல்லை. நண்பர் ஒருவர், மாட்டின் வால் ஆடும் ஆட்டத்தை எல்லாம் ரசிப்பார். ஆனால், மனித உணர்வுகளுக்கு என்றும் மதிப்பு அளிக்க மாட்டார். மாடுகள் கேட்பதில்லை என்னை ரசி என்று. ஆனால் , மனிதம் கேட்குமே  உணர்வுகளை ஏன் புரிந்துக் கொள்ளவில்லை என்று. மீண்டும் சொல்கிறேன், படியுங்கள். புத்தகங்கள் காதலியாக, குழந்தையாக, ஆசானாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பது போல் நீங்களும் மாறிக் கொண்டே இருங்கள். தேங்கி போய் விடாதீர்கள். பின் , படித்த மன நோயாளி ஆக வேண்டியது தான்.

-இயக்குனர் சந்தோஷ்ஸ்ரீ

391total visits.