தமிழக மருத்துவர்கள் நிலை என்னவாகும்?

0
238

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன காரணம் என்று பொது மக்களுக்கு புரிய வைப்பதற்காக எழுதப்படும் கட்டுரை இது.

மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளில் தங்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு இந்த வருடம் முதல் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு மறு பரிசீலனையில் திருத்தப்பட்டு தங்களுக்கு உரிய இடங்கள் வழங்க வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசு ஜல்லிக்கட்டு மாதிரி ஒரு நிரந்தர அவசர சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்கம் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றது.

வழக்கமான நடைமுறை என்ன?

அதாவது தமிழகத்தில் 1000 இடங்கள் பட்ட மேற்படிப்புக்கு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அகில இந்திய பட்ட மேற்படிப்பு நுழைவுத்தேர்வு , டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனயால் நடத்தப்படும், இதற்கு 15%”இடங்கள் அதாவது 150 இடங்கள் ஒதுக்கப் படும். மீதமுள்ள 850 இடங்களுக்கு தமிழக அரசு மருத்துவ கல்வித் துறை தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யும். இந்த 850 இடங்களில்,50% அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும் மீதி உள்ள 50% பொது மாணவர்களுக்கும் , ஒதுக்கீடு செய்யப் பட்டு இருந்தது. குறைந்தது  இரண்டு முதல் மூன்று வருட காலங்கள் அரசுப் பணியில் எம் பி பி எஸ் முடித்து பின்னர் பணி புரியும் மருத்துவர்கள் இந்த ஒதுக்கீடுக்கு தகுதி பெறுகின்றனர்.மேலும் இந்த ஒதுக்கீடுடில் மேற் படிப்பு பெறும் மருத்துவர்கள் அனைவரும் பணி மூப்பு வரை அரசாங்க பணியில் ஈடு படுவோம் என்று ஒப்பந்த உறுதிமொழி கொடுக்கின்றனர். இந்த ஒப்பந்தம் காரணமாகவே அரசுப் பணிகள் எல்லா இடங்களிலும் குறையின்றி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ஏன் இந்த வருடம் பிரச்சினை ஆனது?

இந்த வருடம்  பட்ட மேற்படிப்பிற்கு என்று அகில இந்திய அளவில் ஒரே ஒரு நுழைவுத்தேர்வு மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. தமிழக அரசு தனியாக நடத்தும் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இந்த நுழைவுத் தேர்வில் பங்கு பெறும் தமிழக மாணவர்கள் தரப் பட்டியல் தனியாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும், அந்த தர வரிசை மூலம் தமிழக அரசு தன்னுடைய வழக்கம் போல இட ஒதுக்கீடு பின்பற்றி மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுண்சில் அனுமதித்தது. அதன்படி அகில இந்திய அளவில் முடிவுகள் மற்றும் தர வரிசை வெளியிடப்பட்டு அந்த இடங்களுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டு இருக்கிறது. தமிழக அளவில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் முன்பு, வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றது.

அதாவது தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில்  இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும் அரசாங்க இடங்களுக்கும் இந்த 50% இட ஒதுக்கீடு  வேண்டும் என்றும் , தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வழக்கின் சாராம்சம் கூறுகின்றது. இது விசாரணை வரும் போது தான், இந்திய மருத்துவ  கவுண்சில் விதி எண் 9 பாரா 4 லில், இந்த மாதிரி ஒதுக்கீடு எதுவும் கூறப்படவில்லை, மலைப் பகுதிகளில் மற்றும் வேலை செய்ய சிரமம் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு வேலை பார்த்த வருட அடிப்படையில் 10,20 மற்றும் 30% மதிப் பெண்கள் கூடுதலாக வழங்கிக் கொள்ளலாம் என்றும், தனியாக இட ஒதுக்கீடு எதுவும் அந்த விதியில் குறிப்படவில்லை என்றும், இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகளில், இந்த இட ஒதுக்கீடு பின்பற்ற அவசியம் இல்லை என்ற வாதம் எடுத்து வைக்கப்பட்டதும், இதற்கு தகுந்த பதில் வாதங்கள் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்படாததால், இந்த வருடம் முதல் தமிழக அரசில் பணி புரிந்தவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு எதுவும் தேவை இல்லை எனவும், அகில இந்திய மருத்தவ கவுன்சில் விதிகளின் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு வந்ததும், அரசு பணி மருத்துவர்கள் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரவும் மேல் முறையீடு செய்யப்பட்டு நாளை(இன்று) திரும்ப தீர்ப்பு வெளிவர இருக்கிறது. இதன்படி ஊட்டி மற்றும் கொடக்கானல் பகுதியில்  உள்ள கிட்டத்தட்ட 70 இடங்களில் வேலை செய்யும் மருத்துவர்கள் மட்டுமே தகுதி பெறுகின்றனர், அதுவும் கூடுதல் மதிப்பெண்கள் மட்டுமே  பெற முடியும் .தனியாக இட ஒதுக்கிடு இல்லை.

எப்படி இதுவரை இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் செய்யப்பட்டது?

தமிழக அரசு, தன்னுடைய மக்கள் நலன் கருதி, தன்னுடைய மருத்துவமனயில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வேண்டும் என்பதற்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு முறையும் இந்த விதியில்  தற்காலிக சட்டத் திருத்தம் கொண்டு வந்து தயவு செய்து கொண்டு வந்திருக்கிறது என்பது வெளி வந்திருக்கிறது. இந்த தற்காலிக சட்டத் திருத்தம் இந்த வருடம் முதல்  ஜல்லிக் கட்டு நிரந்தர சட்டம் மாதிரி நிரந்தர சட்டத் திருத்தம் கொண்டு வந்து, இது வரை நடை முறையில் உள்ள அந்த 50% இட ஒதுக்கிடு முறை தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பயன் பெற ஏதுவாக இருக்க வேண்டும் என்பதே, தற்போது போராட்டத்தில் ஈடுபடும் அரசு மருத்துவர்களின் வேண்டுகோள் .

இந்த இட ஒதுக்கிடு முறை தடை செய்யப் படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

1.தமிழக சுகாதார திட்டம் ( Tamilnadu health system project)  உலக வங்கி உதவியுடன் நடத்தப்படும் திட்டம், அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ வசதி முழுக்க முழுக்க தமிழக அரசு மருத்துவர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த சிறப்பு பயிற்சி பெற்ற  மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த திட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

2. கிராமப் புறங்களில் பணி புரியும் மருத்துவர்கள் தட்டுப் பாடு ஏற்பட்டு முதல் நிலை சிகிச்சை பிரிவில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிரமப்பட்டு, கர்ப்பிணி இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாகி சுகாதார வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளப்படும்.

3. இதனால் சுகாதார தொற்று திட்டங்கள், டெங்கு , சிக்கன்குனியா, மலேரியா போன்ற சமூக நோய்கள் கட்டுப் படுத்த முடியாமல் பெருகி மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகி வர நேரிடும். இந்த பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்ய மருத்துவர்கள் தட்டுப்  பாடு ஏற்படும்.

4.இரண்டாம்  நிலை மருத்துவ மனைகளில் சிறப்பு பயிற்சி படித்தவர்கள் பற்றாக்குறையால், சின்ன சின்ன அறுவை சிகிச்சைக்கு, பாம்பு கடி, விஷம் அருந்தி தீவிர நிலையில் உள்ளவர்கள், விபத்து ஏற்பட்டு காயங்கள் உள்ளவர்கள் கூட அடுத்த நிலைகளில் உள்ள மருத்துவ மனைக்கு, மருத்தவ கல்லூரிகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு நோயாளிகள் உரிய காலங்களில் முதல் உதவி செய்யாமல் இறப்பு விகிதம் அதிகரிக்க நேரிடும்.

5. பட்ட மேற்படிப்புக்கு உள்ள கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுத் துறையில் எண்ணிக்கை  நாளடைவில் குறைந்து வந்து இந்த இடங்கள் போதிய தகுதி இல்லை என்று மருத்துவ கவுண்சிலால் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

6. போன வருடம் நடைபெற்ற சிறப்பு  பட்டமேற்படிப்பு( super speciality entrance) 80% இடங்கள் தமிழக கல்லூரியில் தமிழகம் இல்லாத மாணவர்களால் நிரப்பப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் படிப்பு முடிந்த உடன் அவரவர் சொந்த மாநிலத்திற்கு பயணப் பட்டு விடுவார்கள். தமிழகத்தில் பணி புரிய அரசாங்கம் அல்லாத பணிகளில் கூட மருத்துவர்கள் கிடைப்பது தட்டுப் பாடு நிலவும் சூழ்நிலை உள்ளது.

6. மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி என்ற தமிழ்நாடு அரசு திட்டம், வெறும் கட்டிடங்களை மற்றும் அமைப்பதோடு மற்றும் நின்று விடக்கூடாது எனில், தமிழக அரசு பணி மருத்துவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும். இது வரை உள்ளது மாதிரி மருத்துவ துறையில் எப்போதும் நிறைவு பெற வேண்டும் என்பதே தமிழகத்தில் உள்ள அரசு பணி மருத்துவர்கள் மட்டும் அன்றி அனைத்து மருத்துவர்களின் வேண்டுகோள்.

நாளை(இன்று)  சாதகமாக வெளி வரும் தீர்ப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் போராடும் சக மருத்துவர்களுக்கு என்றும் ஆதரவுடன்…..

-Dr. இராதாகுமார் M.D., D.M

1270total visits.