தடுப்பூசி அவசியமா?

0
194

தடுப்பூசி…….இது பற்றி ஆராய்ந்தால், நாம் பொன்னியின் செல்வன்  நாவல்  நிகழ்ந்த காலத்திற்குள்  செல்ல வேண்டும். அப்போது உள்ள புத்த மடங்களில் புத்த குருமார்கள், இந்த பாம்பு விஷ க்கடி முறிவு வைத்தியங்களில்  தேர்ச்சிப் பெற்று இருந்தனர்.  பாம்பு பிடிப்பவர்களை பாம்பு கடி எதுவும் செய்யாது. அவர்களின் உடம்பில்  சிறிது சிறிதாக விசம் ஏறி, பாம்பு பிடிக்கும் போது கடித்தால் கூட அந்த  விசம் உடம்பை பாதிக்காது மாதிரி உடம்பில் தடுப்பு சக்தி ஏற்பட்டு இருக்கும். அது தான் தடுப்பூசி  கருத்தின் அடிப்படை.. இன்றும் பாம்பு கடிக்கு பயன்படுத்தப்படுவது, பாம்பு  விசத்திற்கு , பாம்பு  விசம் உடம்பில் செலுத்தப்பட்டு, அதன் எதிர்ப்பு சக்திக்கு உருவாகும்  செல்கள்  இரத்தத்தில்  இருந்து தனியாக பிரித்து, பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவரின் உடம்பில் செலுத்தப்படுகின்றது.

முதன் முதலாக தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்ட நோய் பெரியம்மை ஆகும்,. எட்வர்டு  ஜென்னர் 1796 ல் தற்செயலாக ஒரு பசுவின் உடம்பில் உள்ள  கொப்புளம் பற்றி ஆராயும் போது  இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு அது ஒரு சிறுவன் தோல் மீது தற்செயலாக பட்ட போது அவன் இந்த நோய் எதிர்க்கும் சக்தி பெற்றது தெரிய வந்தது. அதன்  பின்  உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு 1979 ல் அந்த நோய் உலகத்தில் இருந்தே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் லூயிஸ் பாஸ்டர் 1897   காலரா தொற்று நோய் பாக்டீரியா கண்டு பிடித்து அதில் உள்ள வீரியம் தன்மையை சில வேதிப் பொருட்கள் மூலம் இழக்கச் செய்த பிறகு உடம்பில் செலுத்தினால் அதற்கு எதிர்ப்பு சக்தி உருவாகிறது கண்டுபிடித்தார். இதே போல் அந்த்ராக்ஸ்  பாக்டிரியாவிற்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டது.

1924 அலெக்ஸாண்டர் என்பவரால் டெட்டனஸ் பாக்டிரியாவை பார்மால்டிஹைடு என்னும் ரசாயனம் கொண்டு வீரிய குறைவாக ஆக்கப்பட்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதே கால கட்டத்தில் தான் டிப்தீரியாவிற்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டது, 1970 ,1980 கால கட்டத்தில் நாம் இருவர் , நமக்கு இருவர் என்ற சிவப்பு முக்கோணம் விளம்பர படுத்தப்பட்ட காலங்களில், நலவாழ்வு மையங்களில், சத்துணவு கூடங்களில் , எலும்பும் தோலுமாக, கக்குவான் இருமல், இளம் பிள்ளைவாதம் போன்ற நோய்களால் பாதிப்பு அடையாமல் இருக்க டிபிடி தடுப்பூசி போட வேண்டும் என்ற விளம்பரம் இருக்கும். இந்தக் கால தலைமுறையினர் அந்த விளம்பரம் பார்த்தால் ஏதோ சோமாலியா குழந்தைகள் என்று கண்டிப்பாக நினைக்க வாய்ப்பு உண்டு. இந்த தடுப்பூசிகள் நேரடியாக பலன் தந்தது மட்டும் அல்லாமல் , இதய வால்வு நோய்களை கணிசமாக அளவு குறைத்ததும் உண்மை.

1950 கால அளவில்  வீரியம் குறைந்த உயிருடன் உள்ள வைரஸ் தடுப்பூசியாக பயன் படுத்தலாம் என்று இளம் பிள்ளைவாதம், அதாவது போலியோ சொட்டு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.  அது வரை  ஊசி மூலம் போடப்பட்டு இருந்த போலியோ தடுப்பு ஊசி, சொட்டு மருந்தாக போட ஆரம்பம்  ஆனவுடன், இந்த வைரஸ் , அந்தக் குழந்தைகளின் மலம் மூலமாக வெளியேறி, நீர் , நிலைகளில் கலந்து அதன் மூலம் அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பரவி, மொத்த மக்களுக்கும் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணியது. கிட்டத்தட்ட போலியோ இல்லாத இந்தியா உருவானது  இந்த சொட்டு மருந்து ஊற்றும் முறையால் என்று சொன்னால் மிகையாகாது.

வைரஸ்கள் வளர்ச்சி செய்யும் முறை பலவும்  மேம்பட்ட பிறகு , எல்லோ பிவர், இன்பூளயன்சா,  ஹெபடைடிஸ் ஏ , பி ,ஹெச்பிவி ( HPV) போன்ற பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் Hepatitis  B virus vaccine, கல்லீரல் புற்று நோய் ,Human Pappiloma virus கருப்பை வாய் புற்று நோயும் தடுக்கக் கூடியது என்பது சிறப்பு.

காலரா, கக்குவான் இருமல், இளம் பிள்ளை வாதம், தட்டம்மை போன்ற தொற்று நோய்களில் இருந்து இன்று  இந்தியா  வெளியேறிக்கொண்டு  இருப்பதில்  இந்த  தடுப்பூசிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இப்போது தடுப்பூசி நல்லதா? கெட்டதா? என்ற வாதம் அவசியம் இல்லை  என்று தோன்றுகிறது. இணையத்தில் தேவையில்லாமல் பரப்பப்படும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதிய கட்டுரை இது.

மருத்துவர் இராதாகுமார்

 

437total visits,2visits today