வள்ளி ராஜ்ஜியம் பாகம் – 1

0
98

வாசகர்களுக்கு வணக்கம் !!

உலகமே நாடகமேடை அதில் நாமெல்லோரும் நடிகர்களே சொன்னவர் இயல், இசை, நாடகம் என்று ஆங்கில இலக்கியத்தை ஆளும் வில்லியம் சேக்சுபியர். இங்கே ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேவை. அதுவே  வெற்றியை நிர்ணயிக்கிறது. வெற்றி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அம்மாவிற்கு குழந்தை சாப்பிட்டால் போதும், அப்பாவிற்கு குழந்தை வளர்ந்தால் போதும், குழந்தைக்கோ இருவரும் அதன் போக்கில் விட்டால் போதும்.  வாழ்வானது உணவு,தண்ணீர், காற்றின் மீது சார்ந்திருப்பதுப்போல் அவன் கனவுகள் மீதும் சார்ந்திருக்கிறது. சிலருக்கு ஒரே லட்சியம், சிலருக்கு நூறாயிரம் கனவுகள் அதை நிறைவேற்றும்  லட்சியம். சரித்திரப்பக்கங்கள் நிரப்பும் கலை அவர் அவர் முயற்சியில் ஒளிந்திருக்கிறது.  ஒவ்வொருவரின் தேவையும் கனவும் வெவ்வேறு திசையில் பயணித்து  காலத்தால் ஒரே புள்ளியில் இணைக்கப்படும் உன்னத கனம் வாழ்க்கை அதன் பொருளை உணர்த்தும், அதன் கொண்டாட்டம் ஆர்ப்பரிக்கும் அமைதியில் பீறிடும்,  கனவிற்கு வெற்றிக்கும் இடையில் உள்ள வலிகள், இதயத்தை கிழிக்கும் பிரிவுகள், அவமானங்கள் , துரோகங்கள் தான் அது என்று ஞானத்தை கொடுத்து.

சிலர் வாழ்கை நிழல் நிஜம் எது எங்கே என்பதில்லாமல் போகும்..

சிலர் வாழ்கை நிழலாக  மட்டுமே போகும்…

சிலரது வாழ்கை நிஜத்தை மறைத்தே போகும்..

சிலர் வாழ்கை  நீராக போகும்…

வாழ்கை போகும்!!

எழுத்தை கொடுத்து எண்ணத்தை கொடுத்து எழுத தூண்டிய ஒருமைக்கும்  தமிழ் மொழிக்கும் நன்றி.

கதையில் ஆஹா!! இந்த கதாபாத்திரம் யாரையோ நினைவிற்கு கொண்டு வருதே என்று தோன்றினால் கண்ணாடியில் பார்த்ததை மறக்காதீர்.

துப்பலுக்கும் தூவளுக்கும் குனிந்த எழுத்தாணியுடன்… 

வள்ளி ராஜ்ஜியம்

அத்தியாயம் 1

எனக்கு கிரீடம் போல தெரிவது  உனக்கு தொப்பியாக தெரியும் அதுவெல்லாம் அவங்க அவங்க ஞானம் பொருத்து மாறும்.  காற்றை கிழித்து வேகமாய்  போறது எவ்வளவு ஒரு ஆறுதலான விசயமோ எனக்கு அவ்ளோ பயம் உனக்கு. கண்ணோட்டங்களை விவரிக்கும் பொருட்டு ஜெயன் ஜென்னிக்கு அவன் எண்ணங்களை சொல்லிக்கொண்டிருந்தான்.

ஆமாம் முகலாயர் கட்டிட கலையும் சோழர்கள் கட்டிட கலையும் எனக்கு வித்யாசங்கள் காட்டினாலும் உனக்கு ஒன்று போல் தெரிவது போல, இந்த கன்றாவியான தாடி எனக்கு அசிங்கமாகவும் உனக்கு பியூட்டி பாக்டறாக தெரிவது போல  தானே என்று கிண்டலாக  ஜென்னி கூற அவள் கட்டிடகலை கிண்டலை  என்ன ஞாபக சக்திடா இவளுக்கு !!, வியந்தான்.

ஜெயன் தனிமை விரும்பி. மக்கள் சூழ சிரிப்பு சத்தம், கூச்சல் எல்லாம் அவனுக்கு பிடிக்காது. அமைதி என்பது அவனுக்கு எப்போதும் தேவையான ஒன்று.  ஜென்னியை அவனால் பொருத்து போக முடியும். ஏழு வயதிருந்து நட்பு அவளுடன். அவன் எண்ணங்கள் அவளுக்கு மட்டுமே புரிவது அவன் அதிசயிக்கும் அதிசயங்களுள் ஒன்று.  வாயாடி பேசினால் மனம் காற்றில் மிதக்கும். ரெமி மாட்டின் போலே அடிக்கடி தேவைப்படும் அவள் “என்னடா”.

ஜெயன் ஒரு ஆர்க்கிடெக்ட்.  இது பணக்கார படிப்பாச்சே, இது எப்படி அனாதை பயல் படிச்சான் என்று கேட்டால் அதற்க்கு பதில் இது தான் “அவனுக்கு திறமை இருந்தது எண்ணம் இருந்தது படித்தான்”.

அவன் ஜெயன். கேர் ஆப்  ஞானசகாயம், அன்பு இல்லம், கோப்பை, யாழ்ப்பாணம்.  ஞானசகாயம் மட்டும் என்று சொல்ல முடியாது, கூடவே அவனோடு வளர்ந்த மற்ற மூவரையும் லிஸ்டில் சேர்க்கலாம்.

அவன் வாழ்க்கை பயணம் ஹைதெராபாத்தில் தொடங்கி கோப்பையில் வளர்ந்து பின் டெல்லியில் கொஞ்ச நாள் படிப்பிற்காக  அதன் பின் ஜெய்ப்பூர்,  திருச்சி, சென்னை மாநகரத்தில் வேலைக்காக  என்று தொடங்கி பனை மரங்கள் இல்லாத நிறைய தமிழ் பேசும், இழிவாக அரசியல் நடத்தும், பொய்த்துப்போகும் மழையோடே அங்கே இங்கே துப்பாக்கி சூடு இல்லாத தமிழ் நாடு என்று நிரந்தரம் ஆனது.

இரண்டு நாட்களாய்  மனமெல்லாம் அதிகாரமாக திடீர் சொந்தமாக  “எனக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, நீயும் நானும் இனி ஒண்ணு தான் ” என்று ஆறுதலாக சொல்கிறேன் பேர்வழி என்று எறிச்சலூட்டும் விதமாக சொல்லிவிட்டு போன விஜயன் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

மறப்பதற்கு ஒரே வழி. அழகி பிளாக் வெல்வெட் தங்கமாய் ஜொலித்துக்கொண்டு குளிர்பெட்டியில் அமர்ந்திருந்தாள். வாங்கும் போது வேண்டுமா என்று யோசித்தவன் இன்று அடடா என்று கொஞ்சிக்கொண்டே அரை பாட்டில் உள்ளே தள்ளினான்.

மது நெடி ஜென்னிக்கு தெரியும் அளவிற்கு அவன் குடித்திருந்தான். குடியிலும் தத்துவங்களாக உதிர்த்தான். அவன் எண்ணங்களை எல்லாம் புரியவைத்து விடும் நோக்கில் பேசி தீர்த்தான்.

நீ என் பக்கத்துலே இப்படி எப்பவும் ஒக்காந்துக்கோ ஜென்னி”

“சரி”

“இன்னமும் கொஞ்சம் நெருக்கமா ஒக்கார்ந்து தலையை தடவி, முடியை கோதி, உனக்கு நான் இருக்கேன்னு சொல்லு”

“உனக்கு நான் இருக்கேன் அப்பாக்கு அடுத்து, சரியா ”

“நான் அப்பா கிட்டே கேக்குறேன் ஜெய் நீ இப்போ ரெஸ்ட் எடு ”

“எய்ன்ஸ்டீன் என்ன சொல்லிருக்கார் தெரியுமா? கற்பனை தான் உலகத்தை முன்னேத்தும். “

“சரி”

“” இந்த நாட்டான் பய கற்பனை என் வாழ்க்கையை கெடுத்துரும் போல.  அவன் எவ்ளோ அதிகாரமாக என் கிட்ட நடந்துக்கிட்டான் தெரியுமா? நான் யாரு நெனச்சிட்டான் அவன், எனக்கு  நீ, அப்பா, முருகு, ரிச்சி அவளோ தான். அண்ணன் கிண்ணன் எல்லாம் எவனும் கிடையாது. அப்பா ஏதும் சொல்ல மாட்டார். நீ என் பிள்ளைடான்னு பாவமா சொல்லுவார். நீ என்ன சொல்ற ஜென்னி.?? அப்படி தானே சொல்லுவார்….? அப்படி தான் சொல்லுவார்  .”

“சரி நீ தூங்கு நடக்குறதை பாத்துக்கலாம்.”

“நான் திரும்ப மங்களூர் போய்டுறேன். தொந்தரவு இருக்காது.”

“சரி”

“ஐயோ நீ தனியா இருப்ப!! நான் போகல”

“சரி ”

“இனி நான் குடிக்க மாட்டேன்”

“சரி”

“ஜென்னி என்னை  கல்யாணம் பண்ணிக்க போற..”

“ஏய் என்ன???”

“நீ கவனிக்கிறீயானு டெஸ்ட் பண்ணேன் டெஸ்ட் “, சிரித்தான்.

“உதைப்பேன், நீ பேசாம தூங்கு”

“நீ பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோ”

“நான் கிளம்புறேன்”

“ஓகே ஓகே நான் சைலன்ட் மோட் போறேன். ” இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டான்.

நேரம் செல்ல புலம்பினவன் அயர்ந்து தளர்ந்து கண் மூடினான். ஜென்னி அவன் அறை கதவை சாற்றிவிட்டு மதுவை கிச்சன் சிங்கில் ஊற்றினாள். மெத்தையில் படுத்து கண் முடியவன் பதறி ஓடினான். “கொட்டாதே ஜென்னி”

ஜென்னி,”ஜெய் இது உடம்புக்கு கெட்டது’

அவன் “மனசுக்கு நல்லது ஜென்னி”

“ஐயோ, இது தப்பு”

“எது சரி எது தப்பு எனக்கு தெரியும்”

அவள்  கையில் இருந்ததை பிடுங்கி மூடி போட்டு பிரிட்ஜில் அடைத்தான். அவளை கிளப்பினான்.”நீ வீட்டுக்கு போ, நான் தூங்குறேன், காலைல வாக்கிங் வர்றப்போ வந்து  எழுப்பு”

ஜென்னிக்கு அவன் சாப்பிட்டால் தேவலை போல் இருந்தது . சாப்பிடு என்று சொல்லலாம் தான். சாப்பிட்டு தெளிந்தான் என்றால் திரும்ப குடிப்பான். திரும்ப அவன் புலம்பல்களை கேட்க வேண்டும். கல்யாண பேச்சையெல்லாம் கேட்க வேண்டும். வாந்தியை அள்ளணும்.

விஜயனுக்கு மனம்  கோபத்தில் பொங்கி வழிந்துக்கொண்டிருந்தது. யாரை பிடித்தும் அவனால் சரஸ்வதியை எப்படியும் நெருங்க முடியவில்லை மருத்துவமனையில். அவளை சுற்றி நாகராஜன் கும்பல் கும்பலாய் ஆள் வைத்து பாதுகாத்துக்கொண்டிருந்தான்.

நிற்க நேரமில்லாமல் வேலைகள் தலைக்கு மேல் பாரமாக. உள்ளுக்குள்ளே எப்போதும் இருக்கும் அந்த அரிப்பு சோர்வை கொடுத்துக்கொண்டே இருக்க, யாருமில்லாத தனிமை அவனிற்கு வரம். அந்த கார் பயணமும் அப்படி தான் இருந்தது. அரைமணி நேர பயணம் தான். வீட்டிற்கு சென்று கட்டஞ்சாயா குடித்தால் தெம்பு ஏறிடும் அவனிற்கு.

விஜயன் அதிமுக்கிய புள்ளி. இன்று பிறந்த குழந்தை முதல் கல்லூரி கன்னிகள் இளமை கொதிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அபிமானன். காதல் வயப்பட்ட வைக்கும் விஜயன் ஒரு நடிகன், ஒரே முறை கல்யாணம் ஆகி ஒரே முறை டிவோர்ஸ் ஆன அழகன், பைனான்ஸ் கம்பெனி நடத்தும் வசீகரமானவன், திமிரு பிடித்தவன், கோபக்காரன். நாப்பதே வயது தான் ஆக போகிறது.

சரஸ்வதிக்கும் விஜயனிற்கும் இணைப்பு சங்களி நடிகர்கள் என்பது மட்டுமல்ல, சரஸ் விஜயனின் தாய். உலகம் அறியாத தாய். விஜயனின் ஊர் அறிந்த அம்மா குருவிக்கண்ணு  மற்றும் சரஸ் மட்டுமே அறிந்த உண்மை அது. சமீபத்திய ஆண்டுகளில் நாகராஜனுக்கு தெரிந்திருந்தது. இன்னும் முக்கியமான ஒருவருக்கு தெரியுமா தெரியாதா என்பது அவனிற்கு தெரியாது.

சரஸ்வதி அடுத்த முதலமைச்சர் ஆக போகிறவள். போன தலைமுறையின் கனவு கன்னி,செந்தமிழ் செல்வி, வீர மங்கை. ஆரியர் கழகத்தின் பெண்கள் அணி தலைவி. தலைவர் எஸ்.ஆர்.வி என்னும் சம்பத் ராஜ வர்மன் இறைவன் அடி சேர்ந்ததும் ஆரியர் கழகத்தின் தலைவரும் ஆனவள்.

இராவணன் நடிப்பு அவளோ நல்லா இருக்கு அவனை பயன்படுத்திக்க தெரியல டைரக்டருக்கு” யாரோ இருவர் பேசிக்கொண்டதை கேட்டு குருவி பூரிப்பாகி போனாள்.

செட்டில் சரஸ் கைகளை காற்றில் அசைத்து புருவத்தை வளைத்து நடனம் ஆடி எஸ்.ஆர் ஐ முத்தம் கொடுத்து சிரித்த படி வெட்கம் பட்டு நடித்துக்கொண்டிருந்தாள்.

குருவி ஒரு பக்கம் எஸ்.ஆர் அழகையும் இன்னொரு பக்கம் இராவணன் ஓரமாக கைகளை கட்டிக்கொண்டு அவர்கள் நடிப்பை உற்று பார்த்துக்கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டும் சரஸ் மற்றும் டைரக்டர் பக்கமும் கவனமாக இருந்தாள்.

ஷாட் முடிந்தது. குருவி ஒரு கையில் துணியும் ஜூஸ் பாட்டில் இன்னொரு கையில் கிட் பை என்று ஓடினாள் சரஸ் அமர போகும் இருக்கை பக்கம்.

சரஸ் எரிச்சலாக இருந்தாள். கோபங்கள் எல்லாம் கூடி அழுகை ஆகும்.அதற்கு இன்னும் நேரம் இருக்கு. எஸ்.ஆர் படம் என்றாலே அப்படி தான். சரஸ் எப்போதும் எரிச்சலில் இருப்பாள்.

மற்ற நேரம் குருவி இவரை பாரேன் அவரை பாரேன் என்று கிண்டல் செய்வாள். அதிர்ந்து பேசாத சரஸ்வதி வசனம் மட்டும் உரக்க பேசுவாள். சரஸ் நடிப்பை எல்லாரும் புகழ்வது இதுவும் ஒரு காரணம். இயல்பில் அமைதியான பெண் நடிப்பு என்று வந்தால் காளியாக மாறினால் உக்கிரம் காட்டுவதும் முறைப்பதும் நிஜ கடவுளே வந்தது போல் சூழலை மாற்றுவதும் அப்பப்பா கலைமகள் மொத்த கடாக்ஷமும் அவள் மீது தான்.

குருவி தந்த ஜூஸ் குடித்து விட்டு எஸ்.ஆர் அறைக்கு சென்றாள் சரஸ். தொடர்ந்த குருவியை வாயில் பக்கம் நிறுத்தினாள்.

என் அம்மா எப்படி இருக்காங்க” திமிராக சரஸ் கேட்டதற்கு

தேன் ஒழுகும் கொஞ்சலான ஆண்மை நிறைந்த குரலில் எஸ்.ஆர் “நல்லா இருக்காங்க, சரசு நல்லா நடிக்கறாளா என்று விசாரிச்சாங்க”

எனக்கு நீங்க அப்படி என் இடுப்பை அழுத்தியது பிடிக்கலை, சில நேரம் நீங்க வரம்பு மீறி போறீங்க” என்றாள் கண்டிப்பாய்.

நடிப்புனா அப்படி தான்ம்மா” என்றார் அவர் பெரும்மூச்சு விட்டு.

நல்லா நடிக்கறீங்க” என்று வெளியே வந்துவிட்டாள் சரஸ்.

எஸ்.ஆர் சிரித்துக்கொண்டார்.

தொடர்ந்து படமாக்கலில் இராவணன் நடித்தார். இடையே சரஸ் கண்களை நேராய் பார்த்தார் இராவணன். சரஸ் படபடப்பாகி போனாள். குருவி ராவணனை தவிர எங்கும் பார்த்தாள் இல்லை.

“பெரியம்ம்ம்…மா….” என்று விஜயன் அழுத்தி கூப்பிடவும் குருவி

“ஆங்’ என்று நினைவு திரும்பினாள். “ஹாஸ்பிடல் போனீங்களா??, அக்காவை பார்க்க முடிஞ்சுதா?” ஆர்வமாக கேட்டாள். குருவியின் நேற்றைய நாட்கள் நிரப்பியவள் ஆயிற்றே. குரோதம் இருந்தாலும் சரஸ் விஷயத்தில் எப்போதும் அன்பே ஜெயித்தது அவளிடத்தில்.

“எரிச்சல் கிளப்பாதீங்க. குளிச்சிட்டு வரேன். எனக்கொரு சாய வேணும்”

“சரிப்பா”

விஜயன் அறைக்கு சென்று குளித்தான். “விஜி கண்ணா நீ நல்லா இருக்கனும், உயிரோட இருக்கனும், சந்தோஷமா இருக்கனும் இதற்கு நான் உன்னை விலகனும்” அந்த கடித வாசகங்கள் தலை மேல் விழுந்து சிதறியது தண்ணீருடன்.

தன்னுள் ஒரு மீதி வலிகொண்டது போல நிவாரணத்திற்கு ஏங்குவது போல உணர்வு அவனை சூழ்ந்தது. இதை கடப்பது இயலாதது போல உள்ளுணர்வு உறுத்தியது.

அவன் அசிஸ்டன்ட் பாஸ்கரை அழைத்தான். பாரு நேத்து வார்ட்பாய் ஒருத்தன பார்த்தோமே அழைச்சிட்டு வா. எனக்கு ஹாஸ்பிடல் நிலைமை தெரியனும்.

“பெரியம்மா” கூவினான்.

குருவி கட்டஞ்சாயாவை கொடுத்துவிட்டு “நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, சரஸ் அக்கா நிம்மதியாகட்டும், இந்த பூமியில சுக போகமா நிம்மதியாக  நீ வாழறது தான் அவங்க தேவை. வேற எதுவுமே இல்லை. இன்னமும் என் கடமை நிறைவாகலை, உனக்கொரு துணை வந்தாச்சுன்னா தான் என் கட்டையும் வேகும்” மூச்சு வாங்க சொல்லிக்கொண்டே முந்தானையால் வாய் பொத்தி அழுதாள்.

“உனக்கும் தெரியாதா என் அப்பா யாருன்னு?”

அழுத்துக்கொண்டிருந்தவள் கைகளை விரித்து தலையை ஆட்டி இல்லை என்றப்படியே  இடத்தை விட்டு அகன்றாள். அவள் பாணி அது. விஜயனின் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு அவள் பதில் அப்படி தான் இருக்கும்.

-ஜிவி

 

 

 

359total visits.