வள்ளி ராஜ்ஜியம் பாகம்-2

0
38

பெருசா நோய்னு சொல்லறதுகில்லை ஆனா மேடம்  முழிச்சியிருக்கிற நேரம் ரொம்ப குறைவு. டியுப் எல்லாம் மாட்டலை. பாத்ரூம் அவங்களே போயிட்டு வராங்க. சாப்பாடு வீட்டிலிருந்து தான் வரும். எந்த வீட்டு சாப்பாடெல்லாம் தெரியாது. நாகராஜ் சார் வந்தா சண்டை போடுவாங்க. ஒரு தடவை நான் போனப்போ “என்ன செய்வியோ, ஏது செய்வியோ  சீக்கிரம் முடி, இந்த அடஞ்சியிருக்கிறதெல்லாம் என்னால் முடியாது” கத்திட்டு இருந்தாங்க.

அப்போ அப்போ வந்து விவரம் கொடு என்று சொல்லி பாஸ்கர் வார்ட்பாய் கையில் இரண்டு ஐநூறு ரூபாய்களை திணித்தான்.

நீ நல்லாயிருக்கனும் கண்ணா என்று கடிதத்தில் உருகும்  அம்மா என்பவள் கம்பீரமாக அமர்ந்துக்கொண்டு சுற்றியிருப்போரை பார்வையில் அடக்கி சிங்கநடை போடும் பெண்ணாதிக்கவாதி. சிரித்து பேசி அழுது புரண்டு நடிக்கும் நடிகை. உரக்க பேசி மக்களை நம்பவைக்கும் அரசியல்வாதி. குணவதி, பாசிசவாதி, ஆதிக்கவாதி, துணிச்சல்காரி, இன்னமும் நிறைய கெட்ட கெட்ட வார்த்தைகளும்… எல்லாமே கேள்விப்பட்டதாக மட்டுமே. இதில் எது தான் அவள்?

அன்னமிடுபவள் அம்மா, அன்பானவள் அம்மா, அக்கறைக் கொண்டவள் அம்மா, அதிசயங்கள் அம்மா என்று பலர் சொல்ல அம்மாவிற்கு அர்த்தம் தெரியாதவன் அவன். அவள் யார் தான்?

பெரியம்மா சாப்பிட கொடுக்கிறேன் சாப்பிடனும், பெரியம்மா கடைக்கு போகனும். பெரியம்மா அம்மா கிட்டே பேசுறேன் அப்பறம் வாங்கித்தர்றேன். பெரியம்மாக்கு உடம்புசரியில்ல. பெரியம்மா நல்லவளில்லை. பெரியம்மா பாவம், எந்நேரமும் குருவி அவளை பெரியம்மா என்றே சொல்லி வளர்த்ததால் அம்மா என்கிற பாசம் உணர்ந்ததில்லை.

குருவியின் பாசம் வரையறைக்குள் இருந்தது. அவனுக்குள் இயல்பாய் எழும் நன்றியுணர்ச்சி கூட குருவி அனுமதித்ததில்ல. தான் ஒரு தாதி, வேலைக்காரி, சில நேரம் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் கடன்காரி என்பாள். யார் தான் இவள்?

தோற்றத்தால் கிளர்ச்சியை கிளப்பி காதல் வயப்படுத்தி அவனை திசைத்திருப்பிய அனுஷ்யா தான் யார்? பார்ட்டியில் பார்த்த நொடியில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை காதல் கொண்டு நாற்பத்தைந்து நாட்களில் திருமணம் ஆறு மாதத்தில் விவாகரத்து ஜீவனாம்சமாக அவன் லண்டன் வீடு, காசு. துளியும் சங்கடமில்லாமல் நட்பென்று பழகிக்கொண்டிருக்கிறாள். போதை முற்றிபோனாள் அழகன்டா நீ, என்று கவிதையாக பேசுவாள்.

இயற்கையான அவன் சமநிலையில் இல்லாத உடல் தேவைக்கு, அற்புதமான மகிழ்ச்சியான கணங்களை உணர,  சில நேரம் தனிமையை போக்க தூக்கமின்மையான இரவுக்கு பெயரில்லாத, ஊர் அறியாத முட்டைகண் கொண்ட பெண்கள் துணைக்கு உண்டு, கூடவே சோக கதைகளும் உண்டு. அவளெல்லாம் யார்?

எண்ணங்கள் சூழ எப்போதும் நடமாட்டத்தில் அவன் காலங்கள் நகர்ந்தது. சுற்றியிருக்கும் மாய உலகம் அவனை நகர்த்தியது எனலாம்.

“கொழேந்தே நான் வந்திருக்கேன்டா” என்ற படியே வீட்டினுள்ளே நுழைந்தார் ஸ்வாமி மாமா என்று அவன் அழைக்கும் ஸ்வாமிநாதன் ஐய்யங்கார். நாடறிந்த குற்றவியல் வழக்கறிஞர், ஊரறிந்த நடிகர், மக்கள் போற்றும் பத்திரிகையாளர் “ஒனக்கு அந்த துப்பில்லை ” என்று முகத்திற்கு நேராக துப்பும் தூய்மையானவர்.

கடவுளையும் பேசுவார் கம்யுனிசத்தையும் பேசுவார். பிரபந்தத்தை வழிபடுவார், சோசியலிசத்தை வெளிப்படுத்துவார். கேள்வி கேட்போருக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுப்பார். தப்பு தண்டாவை கேலியாக எடுத்து சொல்லுவார், கைவைக்க முடியாத மேலிடத்தில் அமர்ந்துக்கொண்டு.

“குருவி… எப்படி இருக்கே” என்று கேட்டபடியே ரிமோட்டில் சேனல் மாற்றி விளையாடிக்கொண்டிருந்த விஜயனின் பக்கம் அமர்ந்தார்.

“இந்தா பாஸ்கரா!! கொஞ்சம் நம்ப சரக்கை எடுத்துண்டு வா “

விஜயன் கருமமே கண்ணாக இருந்தான்.

“எனக்கு நேரமில்லை, சொல்ல வந்ததை சொல்லிடறேன்!! பாரு பங்கஜத்தை எனக்கு அப்பறம் நீதான் பார்த்துக்கனும் “

“ஏன் அபி பார்த்துக்கமாட்டாளா ?”
“டேய் பொம்மணாட்டிகளுக்கு பொறுப்பு அதிகம், இவா கடல் தாண்டி அமெரிக்கா போகமாட்டாள், தீட்டும்பாள்.  பொண்ணாத்துல தங்கினா மரியாதையா சொல்லு !! அதனாலே எனக்கு அப்பறம் நீதான் பார்த்தாகனும் “

“இத சொல்ல தான் வந்தீங்களா “

பாஸ்கர் கொஞ்சமே விஸ்கியும் நிறைய ஐஸ் போட்டு எடுத்து வந்தான். குருவி சிக்கன்-65 எடுத்து வந்து வைத்தாள்.

ஒரு முழுங்கு விஸ்கி ஒரு கடி சிக்கன் சாப்பிட்டு,”நானும் ஹாஸ்பத்ரி போறேண்டா. திரும்ப வருவேன் நம்பிக்கையில்லை”

விஜயனுக்கு சிரிப்பாக இருந்தது. “ஏன் மாமா சென்டி டயலாக் எல்லாம், அவங்க ஐடியா கேட்க கூப்பிட்டு அனுப்பியிருப்பாங்க நீங்க போறீங்க”  “

“அதுயில்லைடா கண்ணா. எனக்கு எதோ குழாய் சுருங்கிடுத்தாம் ஆபிரஷன் பண்ணிக்கபோறேன். இந்த உடம்பில் கத்திப்பட்டா தாங்குமா? அதுவில்லாம செய்த பாபம் நிறைய இருக்கே. சுமை போதுமேனு பார்க்குறேன்”

குருவி, “நான் ஹாஸ்பத்ரி ஒத்தாசைக்கு வரட்டுங்களா ” ரொம்பவும் மரியாதையாக கேட்டாள். ஸ்வாமிநாதன் மறுத்துவிட்டார். தேவைகள் இல்லையென்றார்.  பாஸ்கருக்கு குற்ற குறுகுறுப்பாகி போனது விஸ்கி கொடுத்தது எண்ணி.

பாஸ்கர் மன்னிப்பு கேட்கவும். சிரித்தபடியே “மூணுநாள் முழுக்க விஸ்கியிலே மிதந்திருக்கேன், சுயம் மறந்து கெடந்துருக்கேன், இன்னைக்கு குடித்ததுலே தான் எமன் பாசக்கயிறு வீச போறானா” என்றார்.

கிளம்புகையில் “டேய் கண்ணா, கல்யாணம் பண்ணிக்கோ. பாஸ்கரா தங்கைக்கு கல்யாணம் பண்ணிட்டு வேற வேலைக்கு போ இவனை நம்பிட்டு இருக்காத. குருவி ஒடம்பை பார்த்துக்கோ” என்று சொல்லி நடந்தார்.

விறுவிறு நடை கவனம் கூடியிருந்தது. தள்ளாடல் வெளிப்படையாக தெரிந்தது. விஸ்கி மாயமோ என்ற சந்தேகம் என்றாலும் வயது எழுபதை தாண்டியதை காட்டியது தள்ளாடல்.

இந்த வாசல் வரை வழியனுப்பல் சம்பிரதாயமல்லாமல் அர்த்தங்கள் நிறைந்ததாகி போகுமோ என்ற எண்ணத்தை  அவன் எதிர்மறை சிந்தனை மூளை தூண்டியது.

ஸ்வாமிநாதன் எப்பவும் விஜயனிடம் மரியாதையை எதிர்பார்க்க மாட்டார். எனக்கென நண்மை நினைக்கும் உறவு என்ற நம்பிக்கை அவர்மீது உண்டு அவனிற்கு, இருந்தாலும் இனம் காணமுடியாத கோபமும், குருவிக்கு ஸ்வாமி மீது அளவுகடந்த  பக்தி இருந்தது.

இராவணனின் கவனம் சரஸ் மேல் படிவது உறுத்தியது குருவிக்கு.

சரஸ் அழகி ஆனால் யாராலும் அண்ட முடியாது. எஸ்.ஆர் எனும் அரக்கனை தாண்டி சென்று தொட முயற்சி செய்தால் உயிர் இருக்காது.

“இப்போது எல்லாம் நீங்க என்னை கவனிக்கறதே இல்லை.”

“ஆமாம், இந்த சரஸ் போடற சென்ட் பெயர் என்ன?”

“அது பாரின் சென்ட் எதோ பிக்காஸோ சென்ட்னு அக்கா சொல்லும்”

“அதை கொண்டுவா”

“ஐயோ அது அவங்களது”

“கொண்டுவா”

பார்த்தான். விசாரித்து தெரிந்துக்கொண்டான்.

புத்தகம் படித்துக்கொண்டிருந்த சரஸ் பக்கம் அமர்ந்தான் இராவணன். சரஸ் கொஞ்சம் அசைந்து சரியாக அமர்ந்தாள். கண்ணம் சிவந்தாள்.  அவளுள் பதற்றம் தெரிந்தது.

“இவளோ சின்ன வயசுல ரொம்ப நல்லா நடிக்கறீங்க”

“நன்றி, நீங்களும் தான்” எனும் போது அவள் குரல் மெல்லியதாக மாறியது. அவளோ இசையாக அவளால் பேசமுடியுமா என்பது போல் உணர்ந்தாள்.

இராவணன் “பாரிஸ் பேஷன்க்கு பெயர்பெற்றது, அங்கே டிஃபானி ரொம்பவும் பிரபலமான கம்பெனி. அதில் வேலை செய்யும் ஒருத்தரோட பெயர் தான் உங்க பெர்பியும் பெயரும் பேலமோ பிக்காஸோ “

சரஸ் வியந்தாள். கண்களை விரித்தாள். ஓர் அறிவாளியை கண்ட பிரமிப்பு அவளிடத்தில். உங்களுக்கும் டிஃபானி புடிக்குமா. எனக்கும் பிடிக்கும். இதுலே வரும் இந்த மரதூள் வாசனை கொஞ்சம் ரோஜா வாசனை எல்லாம் காட்டுக்குள்ளே இருக்கிற மாதிரி ஒரு உணர்வு கொடுக்குது, அம்மா கொடுத்தது. தீர போகுதுனு நெனச்சா கவலையாக இருக்கு.

இல்லைங்க அதுவெல்லாம் பயன்படுத்துற அளவிற்கு நான் முன்னேறல. அதை பற்றி தெரியும். நியூயார்க் பத்திரிகைகள் பாத்திருக்கேன்.

அவன் படிக்கும் ஆர்வம் உள்ளவன் என்பதை புரிந்துக்கொண்டாள். அவன் மீது ஆர்வம் கூடியது. தனக்கானவன் என்பது போலே மாயை தோன்றியது. கற்பனை ஊறியது.

ஆமாம், இந்த மாதிரி கிழட்டு கூட்டம் எல்லாம்  ஹீரோவா நடிச்சா எப்போ நிஜமாகவே திறமை இருக்கிறவங்க மேலே வருவாங்க என்று பெருமூச்சு விட்டு எஸ்.ஆர்.வியை கடிந்துகொண்டாள்.

“சரிங்க, நான் ஒத்திகைக்கு போறேன்” கிளம்பிவிட்டான் அவன்.

சரஸிற்கு சூழல் ஒளி மங்கி போனது.

பக்கம் நின்று கவனித்துக்கொண்டிருந்த குருவிக்கு இராவணன் எண்ணம் புரிந்தது. கேட்டு விடுவது என்று அவனை நோக்கி சென்றாள்.

“நீங்க செய்றது அநியாயம்” கூவினாள் குருவி

“எது அநியாயம், அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு”

“எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு”

“உன்னோட சேர்ந்து நானும் அவள் காலை கழுவட்டுமா”

“சரஸ் அக்கா தொட நெனச்சா உங்க உயிருக்கே ஆபத்து”

இராவணன் சிரித்தான். “போடீ, அவ்வளவு முட்டாள் இல்லை நான். “எஸ்.ஆர்  தன் வேலைக்காக ஒருவனை போட்டு தள்ளியது இராவணனிற்கு தெரிந்திருந்தது. எதோ எஸ்.ஆர் என்னும் எலி அவன் கைக்குள் சிக்கியிருப்பது போல மாயை அவனிற்கு தைரியம் கொடுத்தது.

கெஞ்சலாக நம்ப குழந்தை என்று வாய் திறந்தவளை முறைத்தான் இராவணன். அவள் முகம் மூடிக்கொண்டு அழுதாள்.

ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டார் இராவணன்.

மனம் ஒடிந்து, உடல் சக்திபோயிற்று. உலகம் நின்றுபோய்விடாதா என்று தோன்றியது. உடல் பாரமானது

“இந்தா புள்ள குருவி, சாயந்திரம் நாலறைக்கு வந்திரு நாடக சபைக்கு, ஸ்வாமிநாதன் சபதம் நாடகம் இருக்கு” சொல்லிவிட்டு நகர்ந்துக்கொண்டான் தகவல் சொல்லும் அண்ணன்.

முடியாது, உடம்பு கொதிக்குது சொல்ல அங்கே ஆள் இல்லை. குருவி மூன்றைக்கு சரஸ் படப்பிடிப்பு முடிந்ததும் நாடக சபைக்கு சென்று சொல்லப்போனாள்.

வேறு ஆள் இல்லை என்று அந்த இருபது நிமிடம் மேடை மீது நடிக்கும் கதாப்பாத்திரம் என்று அவள் ஆசையாக ஒத்துக்கொண்ட பாத்திரம் அவளே நடித்தாக வேண்டிய கட்டாயம்.

மாத்திரை போட்டுக்கொண்டு வந்து நின்றாள். பேசினாள், நடித்தாள், தொப்பென்று கீழே விழுந்தாள்.

அவள் நடிப்பில் அசந்து ஜனம் கரகோஷம் எழுப்பினர். ஸ்வாமிநாதன் பதறிட்டார். திரை போடப்பட்டது, வலிப்பு தொடங்கியது. குருவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

ஒரு வாரமாகியும் குருவி வராதது சரசுக்கு கஷ்டமாக இருக்க விசாரித்ததில் தெரிந்தது மருத்துவமனையில் இருக்கிறாள் என்று.

கரு கலைந்தது.  உதிரப்போக்கு  நிற்கவில்லை, கூடவே சக்தியில்லாதது வாட்டி வதைத்தது. அவளை பார்த்துக்கொண்டது அந்த நாடக குழு மக்கள் தான். ஸ்வாமிநாதன் பணபலமாக, வசதி பலமாக இருக்க குருவி தேறி வந்தாள்.

“நீ கவலைப்படாதே டாக்டர் என் தங்கை, உன்னை நல்லா கவனிச்சுப்பா, எப்பப்பாரு இந்த மூக்கை பொத்திட்டு அழுறதை மட்டும் கொறைச்சிக்கோ ” என்றார் ஸ்வாமி.

“எனக்கு உயிரோட இருக்க வேணாம், நான் போறேன் “

“அட என்ன பிரமாதமா நடிச்சே தெரியுமா நீ, உன்னை விட்டா எங்க போறது அந்த நடிப்புக்கு நானு “

“சரஸ் அக்காகிட்டே போங்க, அவங்ககிட்ட காத்துக்கிட்டது தான்”

“என்னம்மா நீ உன் இராவணன் மச்சானை திரும்ப உன் பக்கம் இழுக்க வேணாமா!! போறேன் போறேங்கிற. நின்னு தான் பாரேன் என்ன நடக்குதுன்னு” என்று ஸ்வாமிநாதன் சொல்ல அப்போதைக்கு போறேன் ஜபம் குறைந்தது.

மருத்துவமனைக்கு அலுக்கும் வரை அங்கேயே  இருந்தாள். காலையில் பைபிள் ஓதும் சிஸ்டர் முதல் இரவு நைட் டூட்டி பார்க்கும் நர்ஸ் டாக்டர் வரை பழக்கம் ஆனார்கள். உடல் தேறி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை கூடும் வரை இருந்தாள். வலிப்பு வருமானால் அதற்கான மாத்திரை, மருந்து என்று தெரிந்து வைத்துக்கொண்டு நேரத்திற்கு சாப்பிட்டாள்.

சரஸ், எஸ்.ஆர்.வி நடிப்பில் இதயத்தின் ராகம் வெளியானது. இராவணனும் நடித்திருந்தார். ஹாஸ்பத்திரியில் பேச்சில் படத்தில் சரஸ் அழகாக இருப்பதாக பேசிக்கொண்டனர். இதன் இன்னொரு பாகமும் இருக்காம் அதுலயும் சரஸ் தான் கதாநாயகியாம் என்று பேசிக்கொண்டனர்.

ஸ்வாமிநாதனிடம் கேட்டு தன்னை டிஸ்சார்ஜ் செய்துக்கொண்டாள். சரஸிடம் சென்றாள்.

“குருவி, வந்திட்டியோ!! வா நீ எனக்கு ஒத்தாசையாக வேணாம். நான் உனக்கு உதவிக்கு வர்றேன்” என்று துள்ளலோடு ஏவிஎம் சென்றார்கள்.

குருவியை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு சரஸ் வாயடித்தாள். அவளின் மாற்றம் குருவிக்கு ஆச்சர்யம் தந்தது.

எஸ்.ஆர்.வி வந்தார் எல்லோரும் நின்றனர். சரஸ் அமர்ந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டார்.

எஸ்.ஆர் “என்ன குருவி நல்லாயிருக்கியா ?” என்று கேட்டுக்கொண்டே குருவி கையில் பத்து ரூபாய்க்கொடுத்தார். அமர்ந்திருந்த சரஸ் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றார்.

“சரி நீ உட்காரு குருவி என் முக்கியமான விஷயத்தை சொல்லனும், இனி தாங்காது” என்றபடியே குருவி கையிலிருக்கும் பத்து ரூபாயை பார்த்தாள்.

நான் கொடுக்கிறது போறாதா அந்த ஆள் கொடுக்கிறது வேற வேணுமா என்று கோபமாய் பிடுங்கி எறிந்தாள்.

“என்ன சரஸ் இது குழந்தைத்தனம், பணம் பணம் தானே அதை தூக்கி எறியலாமா ?”  என்று கொஞ்சியப்படியே சரஸ் கைகளில் அழுத்தி கன்னங்களை தட்டிவிட்டு சென்றான் இராவணன்.

சரஸ் பறந்தாள் வானத்தில், குருவிக்கு பூமி நழுவியது. விழுந்தாள். வண்டியில் போனாள். அதே மருத்துவமனை வேற பெட்டில் அட்மிட் ஆகினாள்.

-ஜிவி

முந்தைய பகுதியை வாசிக்க இங்க சொடுக்கவும்:http://kalakkals.com/valli-rajjiyam-part-1-by-jivi/

237total visits.