வள்ளி ராஜ்ஜியம் – பாகம் – 3

0
31

ஜென்னி இந்த ஸ்கீம் பற்றிய பிரச்சனையை பேசி புரிய வைத்து விஜய் கையெழுத்தும் வாங்கி வந்துடுங்க. கம்பெனியின் தலைமை நிதி அதிகாரி சொன்னால் கேட்டு தானே ஆகனும்.

அவர் போய் பேசலாமே, அது என்ன அவளை அனுப்புவது? அவள் திறமையை வளர்கிறாராம். விஜய் சார் கேள்வி கேட்டால் பதில் சொல்வது ரொம்ப கஷ்டம். பதிலே சொல்ல முடியாத மாதிரி சங்கடமா கேள்வி கேட்பார். பேச முடியாதபடி கண்களை பார்த்துட்டே இருப்பார். ஆண்களென்றால் காக்க வைப்பார். பெண்கள் என்றால்? இது என்ன கேள்வி? கூடுதல் அரைமணி நேரம் காத்திருப்பு தான். இதுவரை அவளுக்கு கிடைத்த தகவல்.

ஜெயனிற்கு அழைத்தாள் கைபேசியில். எப்போதும் போல் அவன் பதில் இல்லை. கிட்டதட்ட ஒரு வாரமாக பேசவில்லை. சரி வேலை பளு போல என்றெண்ணி விட்டாள். விஜயனை சந்தித்தால் ஜெயன் பற்றி பேசலாமா, தெரிந்தது போல் கட்டிக்கொள்ளலாமா, ஜெயனிடமிருந்து விஜயனுக்கு என்னத்தான் வேண்டும் என்று கேட்கலாமா , பல சந்தேகம் அவளுள்.

கடந்த இருபது நாட்களாக விஜயன் அவளுக்கு எதோ ஒரு வகையில் புலப்பட்டுக்கொண்டே  இருக்கிறான். விஜயன் என்று ஒரு நடிகன் இருக்கிறான், தேர்ந்த நடிகன் அவள் வேலை பார்க்கும் கம்பெனியின் தலைமை நிர்வாகி என்பது போக அவன் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய தூண்டும் நிகழ்வுகள் ஜென்னியின் கண்முன்னே நடக்கிறது.

விஜயனின் ரசிகர்கள் அவனுக்கு நடிப்பு தான் முக்கியம் என்பர். அவன் பத்திரிகைகளில் பைனான்ஸ் உலகில் சூப்பர் ஸ்டார் ஆவதே லட்சியம் என்பான். ரசிகர்கள் தூக்கி கொண்டாடினால் “என் வேலையை நான் செய்றேன். இதுக்கு எதுக்கு இவ்வளவு கொண்டாட்டம்” என்று கேட்பான். படம் ஓடலை என்றால் நல்ல ரசனை இல்லை மக்களுக்கு என்பான்.  சுருங்க சொன்னால் சித்தம் கலங்கிய ஜீவன் அவன்.

விஜனின் உதவியாளனுக்கு செய்தி சொல்லியாகிவிட்டது. ஈ.சி.ஆரில் ஒரு வீட்டில் ஷூட்டிங். ஜென்னி அங்கே மதியம் இருக்க வேண்டும். ஜென்னியை கிளப்பினார் தலைமை நிதி அதிகாரி. “பார்த்தும்மா, தண்ணி பாட்டிலாவது கையில் கொண்டுப்போ”

அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை எண்ணிக்கொண்டாள்.

“என்ன சரஸ்வதி? நன்னா இருக்கேல!!”

“வாங்க ஸ்வாமி, எப்படி இருக்கான் என் பையன்?”

“அவனுக்கென்ன? ராஜா வீட்டு கன்னுக்குட்டியாச்சே”

“எப்போ நான் என் பையன் மட்டும்ங்கிற வாழ்க்கையை வாழறது ஸ்வாமி”

“என்ன சரஸ் கேள்வியிது. அது நடக்கவே நடக்காதேம்மா “

“இந்த கேள்வியை கேட்கும் போதாவது இந்த சாபத்துல இருந்து விடுதலை கிடைக்குமானு தோன்றது “

“சரி அதை விடு. நாகராஜன் பேச்சை கேட்டு இப்படி நீ படுத்து இருக்கிறது நல்லாயில்லை. மக்கள் முட்டாளில்லை கேட்டுக்கோ “

“என்னை என்ன பண்ண சொல்லறீங்க. நல்லா மாட்டிண்டு இருக்கேன். வருமான வரி வழக்கு மொத்த காரணமும் அவன் தான். நான் அதில் விடுதலையாகனும், அதுக்கு இது தான் வழி. நாகராஜனை அவன் வழியே போய் தான் சிக்க வைக்கனும்”

“நாகராஜனுக்கு  உன் பிடி ஒவ்வொன்னா குடுக்கறே. நியாயமா நடந்துக்கோ சரஸ். இந்த வாட்டியும் உங்க ஆட்சி தான். கொடுத்த வாக்கை போய் காப்பாத்துற வழியை பாரு”

“குடிநீர் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் கையெழுத்து ஆகியிருக்கு ஸ்வாமி. நியூஸில் தான் வரவே இல்லை “

“உன் கையில் இந்த ஸ்டேட்டும், நாகராஜன் கையில நீயும் மாட்டிகிட்டு திண்டாடனும்ங்கிறது சாபம் போல ”  ஸ்வாமி கோபமாய் சீறினார்

சரஸ் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். தனக்கு சுயநலம் என்று ஸ்வாமி நினைக்கிறார் என்று வருத்தம் ஊறியது நெஞ்சில். பணம், புகழ், பதவி ஆசையெல்லாம் ஒழிந்து போய் நாட்கள் ஆச்சு தெளிவுபடுத்த எத்தனித்தாள்.

“ஸ்வாமி, என் வினை இப்படி மாட்டிருக்கிறேன். இது முடியட்டும் கண்டீப்பா அந்த அணை கட்டும் ஆணை, பின் இலவச வீடு கட்டும் ஆணை எல்லாம் முடிச்சு காட்டுறேன் “

“என்னமோ செய், உனக்கு அப்பறம் யாரு இந்த கட்சியை தலைமை தாங்கனும் என்பதெல்லாம் தெளிவு செய்திடு “

“அவர் பையன் தான். கண்டு பிடிச்சுடலாம் என்று நாகராஜன் வாக்குறுதி கொடுத்திருக்கான்”

ஸ்வாமி தலையில் அடித்துக்கொண்டார். அவர் அறைக்கு வந்துவிட்டார். கோபம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. இதற்கான தீர்வு அவர்க்கு கிடைத்தப்பாடில்லை.

“ஏன்னா? எப்படி இருக்கா சரஸ், ஆளே சூம்பிபோய் இருக்காப்ல காட்றாளே நியூஸிலே”

“பாதகி நன்னா தான் இருக்கா, நான் கண்ணை மூடிட்டா நீ பேசாம தேசாந்திரம் போய்டு”

“பெருமாளே !! அபசகுனமா பேசாதீங்கோ”

இரவு எட்டு மணியாகியும் விஜயன் அவளை கவனிக்கவில்லை. தொடர்ந்து கைபேசி அழைப்புகளும், ஷூட்டிங் என்றும் இருக்க ஜென்னி அவளுக்கான அந்த இருக்கையில் அமர்ந்தபடியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

கையில் பைல்கள், ஒரு தோள் பை, அதில் தண்ணீர் பாட்டில் மானேஜர் சொன்னபடி முக்கால்வாசி காலி ஆகியிருந்தது, கூட கொஞ்சமாய் தலைவலி. எவ்வளவோ  கட்டுப்படுத்தியும் முடியாமல் கடந்த இரண்டு மணி நேரமாக விஜயனுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள்.

கடைசி வாய் தண்ணியும் தீரும் நேரம் அவளிடம் வந்தான் விஜயன். வியர்வையில் அப்பியிருந்த பேஸ் க்ரீம் திட்டு திட்டாக தெரிந்தது. கண்கள் ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது. கை சருமத்திற்கும் முக சருமத்திற்கும் வேறுபாடுகள் மட்டுமே தெரிந்தது.

“உன்னை ஆறு மணி வரை காக்க வைப்பது என் திட்டம். கூடுதலாக இரண்டு மணி நேரம் இறைவன் இச்சை” என்றான்

கூடவே “நான் மாத்திக்கிட்டு வர்றேன் சைன் போடற பேப்பர்ஸ் எடுத்து வைங்க ” அகன்றான்.

ஜென்னி ஜெயன் கடுப்பானதற்கு அர்த்தமுள்ளது என்றெண்ணிக்கொண்டாள். ஜெயனுக்கு ஏவுதலாக பேசினாலே  பிடிக்காது. இதில் இவன் நடத்தை மொத்தமும் உலகை ஆளும் ராஜன் போல் அல்லவா இருக்கிறது.

அவன் வரட்டும் என்று அமர்ந்தபடி அவள் இருந்தாள். பாஸ்கரிடம் ஜென்னியின் கையெழுத்து இருக்கும் அந்த இன்கம் டாக்ஸ் புத்தகத்தை எடுத்து வர சொன்னான்.

“வாங்க ஜென்னிட்டா எனக்கு பசிக்குது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”

“சார் எனக்கு நேரமாகுது. பத்து மணிக்கு மேல நான் இருக்கும் ஏரியா பாதுகாப்பா இருக்காது “

“நான் வீடு வரை வந்து விடறேன் “

“இல்லை சார், ஒத்து வராது. சைன் போட்டு என்னை ஆட்டோ ஏத்தி அனுப்பிடுங்க. உங்க கார் ட்ரைவரெல்லாம் நம்ப முடியாது “

“ஜென்னிட்டா நான் உங்களுக்கு பாஸ் சொன்னதை செய்யனும்’

“அது வேலையில் மட்டும் தான், நான் எப்படி ட்ராவல் செய்யனும் என்றெல்லாம் நீங்க சொல்ல வேண்டாம்”

பெண் திமிர் இரசிக்க கூடியதாகவும் இருக்கு என்றெண்ணிக்கொண்டான்.

“சார், இந்த இன்வெஸ்ட்மென்ட் நல்ல லாபம் தரக்கூடியது தான். ஐந்து வருடம் கழித்து பதினைந்து பர்ஸன்ட் லாபம் சார் ” விளக்கும் தொனியில் அவள் கூற.

அவன் சிரித்தான். அவள் பதினைந்து பர்ஸன்ட் கணக்கிற்கு விளக்கம் கொடுத்தான். அதில் உள்ள ஆபத்தை சொன்னான். நடிகனுக்கு என்ன தெரியும் என்கிற எண்ணம் மாறியது.

“போன பன்னிரண்டு வருடமாக தான் நடிகன், அதற்கு முன் பிஸ்னஸ் மேன்” என்றான்

மனிதன் எண்ணங்கள் அவன் கண்களை சார்ந்தே இருப்பது அவன் பிறப்புடன் வரும் சாபம் போல என்றெண்ணம் அவளுள் ஓங்கியது.

வீட்டிற்கு அழைத்து சென்றான். குருவியை அழைத்து அம்மா என்று அறிமுகம் செய்தான். சேர்ந்து இரவு உணவு ஆனதும் கையெழுத்திட்டு அவள் வீடு வரை கொண்டு சென்று விட்டு வந்தான்.

உறக்கமில்லா இரவானது சரஸிற்கு. பதினாறு வயதிலிருந்து தொடங்கிய நடிப்பு நிறுத்தமில்லாமல் தொடருகிறது. நடிப்பின் பரிணாமம்  நிழலுக்கும் நிஜத்திற்கும்  வித்யாசம் அவள் மட்டுமே அறிவாள் என்பதே.  நிம்மதி என்பது அவளுக்கு படைத்தவன் மறுத்த வரம்.

இருபத்து ஐந்தில் போகவேண்டிய உயிர் அறுபத்தி ஐந்திலும் இன்னும் கொஞ்ச நாள் என்று நீட்டிக்கொண்டிருக்கிறது வாழ்நாளை. அப்படியே ஆகட்டும் என்ற நடிப்பும்.

“அம்மா, அம்மா” என்றபடி கைகளை விரித்துக்கொண்டு ஆகாயம் பார்த்துக்கொண்டும் துளைசி மாடத்திற்கருகில் சுற்றி சுற்றி விளையாடிய போது கிடைத்த நிம்மதி தான் அவள் தேடல். அம்மா போனாள் அவள் கூடவே அதுவும் போயிற்று.

 நெஞ்சில் பாரம் அழுத்த, பாதுகாப்பற்ற நிலயிலும் சிரிக்க சிரிக்க கடந்த நொடிகள் ராவணனுடனே கடந்து போயிற்று. கடத்திய பெருமை இராவணனுக்கு சேரும்.

வெறுமை நிறைந்த தருணங்களை தன் ஆறுதலால் நம்பிக்கை நிறைத்ததாக மாற்றி அமைத்த எஸ்.ஆர் ஆறுதலை கூட எடுத்து சென்றாகிவிட்டது.

 “பெரியம்மா இது ஜென்னிட்டா, என் கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க” என்ற அவன்  கண்ணியமான அறிமுகம் குருவிக்கு அவள் சபதம் நிறைவேறியது என்று சொலவ்து போலே இருந்தது.

வெளிப்படையான அவன் வாழ்கை முறையும் கூட அவளுக்கு வெற்றி செருக்கை  தான் கொடுத்தது.

குருவிக்கு கண் செய்கையால் அழைப்பது. நாலு பேர் முன் பேசினால்  அடிக்குரலில் கர்ஜிப்பது, என இருந்தவன் மகன் தவறென்றாகினும் ஆமாம் நான் தான் செய்தேன் கர்வமாக கூறுவது அவள் வெற்றி என்ற நினைப்பே தூக்கம் கொடுத்தது.

-ஜிவி

முந்தைய  பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/valli-rajjiyam-part-2-by-jivi/

456total visits.