வள்ளி ராஜ்ஜியம் பாகம்-5

0
26

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே

“ரொம்ப அழகான காதல் வரிகள்” என்று இராவணன் அந்த வரிகளை படித்துக்காட்ட, சரஸ் ரசித்து சொன்னாள். நண்பன் ஒருவனின் காதல் கவிதை கூடிய சீக்கிரம் படத்தில் பாடலாகவும் வரும் என்றான். தற்செயலாக வாய்ப்பு கிடைத்து உயர்ந்தவளுக்கு வாய்ப்பிற்காக ஏங்கும் நெஞ்சின் குமுறல் புரியுமோ!!

இராவணன் இரவுகளில் சரஸ் வேலையாட்களை ஏமாற்றி அவள் அறைக்கு வந்து காதல் பேசும் நெருக்கம் வளர்ந்த காலங்கள் அவை. சரஸ் முழுமையாக இராவணன் அடிமையாகிருந்தாள். சரஸ் “ஆம், நான் இராவணனை தான் மணம் புரிவேன்” என்பதை சொல்வதில் பயம் கொள்ளவில்லை. இராவணன் வளரும் வரை பொருக்க சொல்லி கேட்டிருந்தான். ஹிந்தி பட நடிகை ஒருத்தி இப்படி மணம் புரிந்திருக்கிறாள் என்று நிறைய எடுத்து சொல்லியும் அவன் கேட்க மறுத்துக்கொண்டே வந்தான்.

இராவணனும் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்தான். படம் முழுக்க வரும் கதாப்பாத்திரங்களில் நடித்தான். சம்பளம் பேட்டா என்பதில் கறாராக இருந்தான். அது கொஞ்சம் தடையாக இருந்தது. வளராத பையனுக்கு எதுக்கு இவ்வளவு எகத்தாளம் என்று நிறைய பேச்சுக்கள். திறமையை பயன்படுத்தும் இயக்குனர்கள் தேடி அழைத்து வாய்ப்பு கொடுத்தனர் அவனுக்கு.

யூனியன், நடிகர்கள் சங்கம் என்று நிறைய நிகழ்ச்சிகளில் பங்குக்கொண்டான். அரசியல் புரளி பேசினான். விநியோகம், திருட்டுதனமாக பட சுருள்களை விற்பது, என்பதில் கொஞ்சம் பணம் சம்பாதித்தான். சினிமாகாரர்கள் இராவணன் என்ற  நாடக நடிகன் இருக்கிறான் தெரியுமளவிற்கு வளர்ந்திருந்தான்.

சரஸ் எஸ்.ஆர் படங்கள் தவிர்த்து நிறைய படங்களை நடிக்க தொடங்கினாள். கூட இரண்டு அழகு ஹீரோயின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் எஸ்.ஆர்.வி. சரஸ் கூட இணைத்து கிசுகிசுக்கள் வர தொடங்கியதும். அவர் பெருமையை காக்க அது தேவையாக இருந்தது.

எஸ்.ஆர் எனும் அரசன் வளர்ந்துக்கொண்டிருந்தான். அரசியல் கருத்துக்கள் நிரைந்த வசனங்கள், மக்கள் நன்மை என அவர் படங்கள் வேறு பரிணாமம் கொண்டது.  நிறைய காந்தி, அண்ணா பொதுநல கருத்துக்கள் பேசியது. தேசப்பற்று நிறைந்த பாடல்கள் கொண்டிருந்தது.

தனக்கு பிரச்சனையாக இருக்கும் ஒரு சமூக ஆர்வலரை எஸ்.ஆர் தீர்த்துக்கட்டி தனது வீட்டு தோட்டத்திலே புதைத்தார். ஆர்வலர் காணலை என்று பிரச்சனை பூதாகரம் ஆனது.

தவறுகளை நன்மை செய்து மறைத்துக்கொண்டிருந்தவர் இம்முறை சிக்கலில் மாட்டிக்கொண்டார். பிடி வாரண்ட் வரை வந்து விட்டது. “நான் யாரையும் கொலை செய்யலை,அது எனக்கு வராது” என்றார். அவர் செய்யலை, செய்ய சொன்னார் ஆட்கள் செய்தனர். எஸ்.ஆர் எப்போதும்  உண்மை பேசுபவர்.

சட்டம் கடமையை செய்து தான் தீரும். செய்தது

“முதலே தண்ணி குடிங்க அப்பறம் என் கைகளுக்கு விலங்கு மாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் சொல்ல அவர் “ஐயா” என்று விசும்பினார்.

பாதுகாப்பாக சிறை வரை வந்து விட்டு சென்றனர். “ஐயா, குத்தமில்லை என்று நிரூபிச்சிட்டா வெளிய வந்துடலாம் ஐயா, உங்களுக்கு வசதி குறைவில்லாமல் இருக்கும்” என்று அன்பாக நடத்தினர். எஸ்.ஆர் உருகிப்போனார்.

சென்னை எஸ்.ஆர் இரசிகர் மன்றம் புகழ் வாய்ந்த கிரிமினல் வக்கீல் சௌந்தர்ராஜனிடம் போக அவர் அவர்களை வக்கீல் ஸ்வாமிநாதனிடம் அனுப்பினார்.

“அடடா, இது என்ன எஸ்.ஆர்க்கு வந்த சோதனை” என்று கிண்டல் பேசினார் ஸ்வாமிநாதன்.

குற்றவியல் சட்டங்களை கரைத்துகுடித்தவர். முதலில் ஜாமீன் வாங்கித்தந்தார். எஸ்.ஆர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று அடித்தளமாக வாதத்தை தொடங்கினார். எஸ்.ஆர் செய்த நன்மைகள் உதவின.

“என்ன ஒய் அடுத்து சினிமா பக்கமா?” என்று கிண்டல்களை ஒதுக்கினார்.

உண்மையை தெரிந்துக்கொண்டு ” உங்க ஆளுங்க ஒருத்தனை ஒத்துக்க சொல்லுங்க” என்று யோசனை கொடுத்தார் ஸ்வாமிநாதன்.

ஸ்வாமிநாதனின் யோசனை ஒத்துப்போக அதை செய்ய வைத்தார். ஒத்துக்கொண்டவன் “எங்க அய்யாவை திட்டினான், நான் கோபத்தில் அடித்தேன் சுருண்டுட்டான்” என்று ஒப்புக்கொள்ள எஸ்.ஆர் மீது மக்கள் அன்பு புரிந்தது.

எஸ்.ஆர் அரசியல் பிரவேசம் செய்ய தகுந்த நேரம் அரசியல்வாதிகள் பேச, சினிமா மோகம் குறையாமல் இருந்தது எஸ்.ஆர்விக்கு.

எஸ்.ஆர் ஒத்துக்கொண்டு ஜெயிலுக்கு போனவன் குடும்பத்திற்கு உதவி செய்தார். மகளுக்கு படிப்பு, மகனிற்கு வேலை, மனைவிக்கு தங்க வீடு, வருமானம் என்று செய்துக்கொடுத்தார். அவன் மனைவி “அவன் வெளியே இருந்து என்ன பண்ண போறான்!! ராசா நீ நல்லா இருக்கோணும்” வாழ்த்தினாள்.

ஸ்வாமி,”எனக்கு காசெல்லாம் வேண்டாம், நீங்க வந்து என் நாடகத்தை பார்க்கணும்” என்று அன்பாக அழைத்தார்.

கேஸ் முடிந்தது. எஸ்.ஆர் குற்றவாளி இல்லை என நம்பின கூட்டம் இருக்க அவர் தான் செய்தார் என கூட்டமும் கிளம்பியது. அதை கண்டுக்க யார் இருந்தார்.

எஸ்.ஆர் கவனம் முழுக்க முழுக்க அவர் பிரச்சனையை சுற்றியே இருக்க சரஸ் மீது கவனம் குறைந்தது.

“ஏய் பாப்பாவோட படம் ஏற்பாடு செய், மக்கள் இந்த கருமத்தை மறக்கணும்”

“ஐயா பாப்பா இப்போவெல்லாம் பெண்ணியம் நிறைந்த கதாபாத்திரம் தான் நிறைய நடிக்குதுங்க”

“சரி கதை அப்படியே இருக்கட்டும்.அவள் ரகளை செய்வாள் தான், மத்த ப்ரொடூயூசர் கிட்ட பேசி இருபது நாள் வாங்கு போதும்”

“செய்துடலாம் ஐயா”

“ஐயா ரோஜாவோட நடிக்கலாமே!!”

“வேலையை மட்டும் பாருங்க”

ஸ்வாமிநாதன் சபதத்திற்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடானது. நாடகம் பார்த்த எஸ்.ஆர் ஸ்வாமியை படத்துலயும் நடிங்க வாங்க என்று அவர் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.

ஸ்வாமி தன் குசும்பை தவறாமல் எஸ்.ஆரிடமும் காட்டினார். “குத்தம் செய்யலாம், தைரியமாக செய்யலாம், குற்றம் வழக்கு நீதி என்ற நிலையெல்லாம் அப்பாற்பட்டு சென்று” என்று பத்திரிகைக்கு பேட்டிக்கொடுத்தார்.

எஸ்.ஆர்  ஸ்வாமியை தன்னுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்துக்கொண்டார். அவர் குசும்பை ஒதுக்கினார். அப்படி தான் அரசியல் பழகியது ஸ்வாமிக்கு.

எஸ்.ஆர் “ஏய் அந்த ஸ்வாமியை கூப்பிட்டு நிலமையை சொல்லு என்ன பண்ண என்று கேட்டிரு” என்பதாக ஆரம்பித்து

“எதுக்கு அவங்க கூப்பிட்டதும் அவங்களுக்கு ஆதரவு தரேன் என்று போறீங்க, அவங்க எண்ணம் என்ன என்று பாருங்க” என்று எஸ்.ஆர்க்கு அரசியல் ஐடியாக்கள் கொடுக்கும் வரை வளர்ந்தார்.

“வரேன், வரலை என்று கொஞ்சம் இழுபறி கொடுங்க. உங்கள் அன்பை மட்டும் மக்களுக்கு சொல்லிட்டே இருங்க”

ஸ்வாமியின் யோசனைகள் வளர உதவியது. அவனோடு பேசுங்க, அவன் தேவையை விசாரிங்க, அதை கொஞ்சம் கவனிங்க , கட்சி தான் எதிர்க்கட்சி மத்ததெல்லாம் நம் ஆட்சி தான் என அரசியல் கற்றுக்கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தார் ஸ்வாமி. அதன் படி தேவைகள் என பெட்டிகள் கைமாறி எம்.எல் ஏக்களை வாங்கி என அரசியல் வாணிகம் ஆனது.

பொதுநலம் ஸ்வாமிக்கும் எஸ்.ஆர்க்கு பொதுவாக இருந்ததும் வளர்ச்சிக்கு உதவியது  சுயநலம் ஒருவருக்கு ஒருவர் அறியாமல் கூடவே இழையோடியது. எஸ்.ஆர் சுயநலம் மிகவும் குறுகியது. அது மனித இயல்பில் ஒன்று. புகழ் கொடுக்கும் போதை. என்றுமே நிலையாக உச்சத்தில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கர்வம். ஸ்வாமியின் எண்ணமெல்லாம் தேவையெல்லாம் பயம், தேவை, காதல் என்ற வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் கண்ணழகி சரஸ்வதி மட்டுமே.

ரசிக்க தெரிந்த எந்த ஒரு ஆண்மகனும் தினம் காலை சரஸ்வதி முகம் பார்க்க வரம் வேண்டி  ஐந்து முறை  தொழுவான், உண்ணாது உறங்காது கவிதை படுவான் என்பது ஸ்வாமியின் எண்ணம். கண்களில் எப்போதும் ஆச்சர்யங்களை நிரப்பிக்கொண்டு மனதை முகத்தில் காட்டும் அந்த சிட்டுப்பெண் அவருக்கு வாழும் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தாள்.

இந்த சரஸ்வதி ஆயகலைகளும் சரி , அவர் மனதையும் சரி அறிந்திருக்கவில்ல. அறியவும் முற்படவில்லை. எண்ணங்கள் எல்லாம் நடந்தால் விதி மீது பழி போட முடியாதே.

சரஸ்வதி மருத்துவமனையில் இருப்பதால் ஆரியர் கழகம் வீழ்ச்சி பாதையில் பயணிப்பதாக பத்திரிக்கைகள் கட்டுரைகள் வரைய ஆரம்பித்தன. சரஸ் நாகராஜனை அழைத்து அவர்கள் கட்சியில் உள்பூசல்கள்  ஏதும் இல்லை. கட்சி நன்றாக உள்ளதாக சொல்ல சொன்னாள். தன்னை பற்றி தன் உடல் நிலை பற்றி பேச சொன்னாள்.

நாகராஜன் தன் உதவியாளனிடம் “பாரேன் இதை தான் புகழ்ந்து எழுதிருக்காங்க. இது என்னனா கட்சியை பத்தி கவலைப்படுது”

உதவியாளன் “விடுங்க ஐயா அவங்க அப்படி கட்சி கட்சின்னு இருக்க போய் தானே இவளோ சொத்தை சேர்க்க முடிஞ்சது”

நாகராஜன் படபடப்பாக “டேய், கத்தி பேசி தொலைக்காத, கண்டுபுடிச்சா நீ நானெல்லாம் நிமிஷத்துல காலி ஆகிடுவோம்”

நாகராஜன் சரஸின் வலது கை.அவன் அறியாது சரஸின் செயல்கள் இருக்காது. எடுபிடியென வேலையில் சேர்ந்தவன் இன்று அவளை சிறை வைத்திருக்கிறான். சரஸ் ஏமாந்து போவது அவனின் “அக்கா”,”எங்க அக்கா” எனும் பாசம் பொழியும் அழைப்பில். கட்சியில் எந்த பதவியிலும் இல்லை, அரசு வேலையும் இல்லை, ஆனாலும் எதிர்க்கட்சி தலைவியின் சகலமும் அவனே.

“எங்கக்கா  பச்சை புடைவையில நடந்து வந்தா,கருமாரியே நேர்ல வந்து வரம் தர்ராப்ல இருக்கும்” என்று புகழ்வான்.சரஸ் அவன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டு எங்க அக்கா என்று சொல்வதில் மயங்கிபோவாள்.

சரஸின் தேவை எப்போதும் ஒன்றே. அன்பாய் பேசும் பழகும் ஓர் உறவு. அது ஊர் போற்றும் திருடனே என்றாலும் அவள் கண்ணுக்கு ஒழுக்கசீலன், நல்லவன், அவளின் நெருக்கம்.

தண்ணீர், காற்று, உணவு கூடவே கொஞ்சம் அக்கறை காட்டும் உயிர் போதுமே மனிதன் வாழ. சரஸிற்கு உணவு,தண்ணீர், காற்று, கூடவே சௌகரியங்கள் பொழியும் மாட மாளிகைகள் இருந்தும் அக்கறை அன்பு தொலைந்துப்போனது.

அவளுக்கு வாழ்கை போராட்டம் முழுக்க அன்பின் தேடலில் போக பெறுவதில் இருந்தாள் ஒழிய கொடுப்பதில் தவறினாள். அதன் விளைவு அவள் பெற்ற செல்வங்களும் அன்பிற்கு ஏங்கியது.

எவ்வளவு இருந்தாலும் நாம் ஏழைகளே, அன்பும் அரவணைப்பு இல்லாமல் போனால் !!

-ஜிவி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் : https://kalakkals.com/valli-rajjiyam-part-4-by-jivi/

516total visits.