வள்ளி ராஜ்ஜியம் பாகம்-7

0
18

வில்லன் இராவணன் முறைக்க, திரும்பி கண்களை முறைத்துப்பார்க்க வேண்டிய சரஸ் வெட்கப்பட்டாள், இல்லை சிரித்தாள். நிறைய முறை டேக் எடுத்தது. நடிக்க காத்திருந்த எஸ்.ஆர்க்கு கோபம் தலைக்கு ஏறியது.

இயக்குனர் பிரேக் விட்டார் சரஸ் சிரிப்பு அடங்க.

குருவி “அக்கா, ஐயா கோபப்படுறாங்க, கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் காத்திட்டு இருக்கார்”

சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே வந்தமர்ந்த சரஸ்க்கு குருவி எச்சரிக்கை போல சொன்னாள்.

சரஸ் “எந்த ஐயா?”

“நம்ப எஸ்.ஆர்.வி ஐயா தான்” குருவி முணுமுணுப்பாக சொன்னாள்

“ம்ம்ம், எனக்கு இந்த ஷாட் வரலை நான் என்ன பண்ண முடியும்”

கவனித்துக்கொண்டிருந்த எஸ்.ஆர்.வி “சரஸ் ” என்று சத்தமாக அழைத்தார்.”என்ன விளையாட்டுத்தனம்? சுருள் வீணாகாது!! கவனம் செய்யும் வேலையிலே இருக்கனும், கண்டதை பார்த்து சிரிச்சிட்டு இருந்தா பொழப்பு சிரிச்சிடும் ”

சரஸ் பதிலுக்கு “எனக்கு இந்த பொழப்பே வேண்டாம் ஐயா, நான் வீட்டிலே இருந்துக்கிறேன் அம்மாவோட , பள்ளிக்கூடம் போறேன், காலேஜ் போறேன், நான் நடிக்கலைன்னா யார் உங்க படம் பார்ப்பாங்க?”  எள்ளல் நிரம்பி வழிய.

எஸ்.ஆர்.வி கோபம் கொண்டார். கோபத்தின் உச்சியில்சிறிதும் யோசிக்காமல் சுற்றம் மறந்து  “அடி பெம்பட்டி” என்று அடிக்க கை ஓங்கினார். எல்லோரும் வந்து தடுக்க தன்நிலை உணர்ந்து எஸ்.ஆர் சூழல் அழுத்தம் கொடுக்க “இன்றைக்கு இது போதும்” என்று கர்ஜித்து  கிளம்பிவிட்டார்.

சரஸ் ஆடிப்போனாள். எஸ்.ஆர் அவளை அடிக்க கை ஓங்கினார் . இராவணன் அதை பார்த்தும் சும்மா இருந்தார். அடிக்க வருகையில் எஸ்.ஆர் முகத்தில் குரோதம், ஒருவகையான ஆளுமை பார்வை நீ என் அடிமை என்று சொல்லாமல் சொன்னது.

கலங்கினாலும் இயக்குனரிடம் “எனக்கு நேரமில்லை, இந்த நாளை வேஸ்ட் செய்ய முடியாது. நான் நடிக்கிறேன்” என்று அவள் பகுதிகளை நடித்தாள் செவ்வனே. குருவி சமாதானம் செய்ய இரண்டொரு முறை முயற்சி செய்ய சரஸ் கவனிக்கவேயில்லை.

வீட்டிற்கு திரும்புகையில் கைகளால் முகம் பொத்தி அழுதாள் சரஸ். “வலிக்குது அம்மா” என்று சொல்லிக்கொண்டே அழுதாள். குருவி அவள் முதுகை வருடி கண்களை துடைத்து ஆறுதல் வார்த்தை பேசி ஒன்றும் பரயோஜனப்படவில்லை.

“எங்கம்மாவை என்னடா பண்ண ராஸ்கல், நான் பெம்பட்டியாம், இதுவெல்லாம் நடந்தும் எங்கம்மா என்னை இவனை நம்பி விட்டு போயிருக்காங்க குருவி” என்று புலம்பினாள்.

சரஸ் அம்மா சங்கீதா நல்ல நடிகை. எஸ்.ஆர் ஆருயிர் தோழி.அப்படி தான் எஸ்.ஆர் சொல்லுவார். அந்த தோழிக்கு அர்த்தம் யாரும் அறிந்திலேர். சங்கீதாவிடம் இருந்த அழகு, கௌரவம், திமிர், பண்பு எல்லாமே இரட்டிப்பாக இருக்கிறது மகள் சரஸிடம் அறிந்தவர் சொல்லும் கிசுகிசுக்கள்.ஒரு நாள் சங்கீதா காணாமல் போனாள், மகள் சரஸ் நுழைந்தாள் தமிழ் சினிமாவுக்குள்.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவளை அழைத்து வந்தனர். ஆறே மாதம் நடிப்பு பயிற்சி பின் எஸ்.ஆர்.வியுடம் படம். படம் சில ஊர்களில் இரண்டு வருடம் தொடர்ந்து திரை அரங்குளில் ஓடிக்கொண்டிருந்தது. நடிக்க தொடங்கி ஐந்து வருடம் ஆயிற்று. பல புதுமுகம் ஹீரோயின் வந்தாயிற்று. சரஸ்  நிலவரம் நாளுக்கு நாள் கூடியது. ஆண் பெண் வேடம் இட்டு பெண் கதாபாத்திரம் செய்துக்கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் முன்னேறி நான் இல்லாமல் படம் ஓடுமா என்ற கர்வ நிலையில் ஹீரோயின்கள் இருக்க அமைதியான சரஸ்ற்கு பட வாய்ப்பு குவிந்தது.

சரஸ் அவள் பாகம் எல்லாம் நடித்துக்கொடுத்து தான் சென்றாள் எஸ்.ஆர் காதுகளில் எட்டியது. அவருக்கு சரஸ் தடம் மாறவில்லை என்று நம்பிக்கை தொடர்ந்தது.

அன்று இரவு இராவணனுடனான சந்திப்பில் சரஸ் கோபப்பட்டாள், அழுதாள், குறைகூறினாள்.இராவணன்,”சரஸ் நீ சின்னப்பெண் அல்ல, பொதுவாழ்வில் இருப்பவள், உன் உணர்ச்சிகளை, மனதின் எண்ணங்களை பளிங்குபோல் வெளியே காட்டுவது நல்லதில்லை” சரஸ் கோபத்தை சமாதானம் செய்ய முடியாமல் புத்திமதி சொல்லி கிளம்பி விட்டான்.

அழுதுகொண்டே இருந்த சரஸிடம் “அக்கா, உனக்கு தேவை உங்க அம்மாவிற்கு என்ன ஆனது என்னும் தகவல் தானே நான் சேகரிச்சு சொல்றேன் வா தூங்கலாம்” என்று அழைத்துப்போனாள்.

முயற்சி செய்து விஷயங்களை சேகரித்தாள். எஸ்.ஆர் வீட்டு சமையல்காரன் “ஒனக்கு தெரியாதா!! ஐயா சங்கீதம்மா மேல ஆசை பட்டது, அந்தம்மாக்கு என்னல்லாம் பிரச்சனை கொடுத்தாரு!! நடிக்கவே விடலை… இதே வீட்டிலே மூணு மாசம் ரூமில் அடச்சி வெச்சிருந்தார்.அந்தம்மா ம்ம் மசியவில்லை. தஞ்சாவூர்காரா பெண்பிள்ளை சும்மாவா?? பெண் பிள்ளை வளர்க்க பொழப்பு தேடி கஷ்டப்பட்டா… பாரு, இந்த பெரியாளுங்க செய்யும் வேலையை, நல்ல தோழியாக இருக்கேன் இத்தா இந்த நடுவீட்டிலே நின்னு  சொன்னாங்க, நல்லா மனசார பாராட்டுவாங்க, பாவம் ” சலித்துக்கொண்டே பேச்சை முடித்தார்.

அடுத்து எஸ்.ஆர் வீட்டிற்கு வரும் நர்ஸ் “ஐயோ. அந்த அம்மாக்கு உடம்பு சுகவீனமாகி போச்சு நான் தான் இருமல் மருந்து கொடுத்துட்டே இருப்பேன், எப்போ பாரு கஷாயம் போட்டு குடிக்கும்”

கொஞ்சம் முன்னேறி மருத்துவர் வரை சென்று விசாரித்தாள். அப்பாவி உதவி மருத்துவர் “சங்கீதாக்கு தொண்டையில் பிரச்சனை இருந்தது, அதை அவங்க பொருட்படுத்தவே இல்லை.அதனால தான் இறந்துபோனாங்க” குருவி மிரண்டுபோனாள். சங்கீதா இந்த உலகத்தில் இல்லை.துக்கம் தொண்டையை  அடைக்க விசாரித்ததை அப்படியே போய் சரஸ்வதியிடம் சொன்னாள். சரஸ் அழுதாள், ஆர்ப்பாட்டம் செய்தாள். எஸ்.ஆர்.வி அரக்கனை சட்டையை பிடித்து உலுக்கி கேட்கப்போனாள்.

எஸ்.ஆர்.வி “ஆமா, உங்க அம்மா இறந்துட்டா. உன்னை நல்லாபடியா வளர்த்துவிட சொல்லிட்டு இறந்துட்டா” என்று சொல்லி சங்கீதாவின் இறப்பு சான்றிதழ், மருத்துவ அறிக்கையை கொடுத்தார்.

உறைந்து அமர்ந்தவள் அறிக்கை கோப்பை பிரித்துப்பார்த்தாள். அவள் அன்னைக்கு காசநோய் இருந்திருக்கிறது. அது நுரையீரலை அழித்து அவளை கொண்டுபோயிருக்கிறது. இறந்து மூன்று வருடம் ஆகியிருக்கு.

எஸ்.ஆர் “நீ என் கடமை சரஸ், என்றைக்கும் உன் நன்மை, பாதுகாப்பு. மகிழ்ச்சி, நிம்மதி எனக்கு முக்கியம்”

சரஸ் “அப்படியா!! அப்போ நான் கல்யாணம் செய்துக்கிட்டா உங்க கிட்ட சொல்லனுமா என்ன ??”எஸ்.ஆர்  அதிர்ந்தார். சமாதனமாக பேசினார் “அந்த முக்கியமான கடமையும் எனது தானேம்மா, பெண் வாழ்கையில் திருமணம் ரொம்பவும் முக்கியம்.

“நான் உடைந்து போயிருக்கேன். எனக்கு கொஞ்ச நாள் நிம்மதி வேண்டும். சொன்னவள் குருவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் அவள் வீட்டிற்கு. இரண்டு நாள் வீட்டில் நினைத்த நேரம் அழுத்துக்கொண்டும், தன்னிரக்கம் கொண்டு இருந்தவள் சுற்றத்தை கவனித்தாள். வேலைக்கு ஆட்கள், வீடு, அவள் சம்பளம் கவனிக்க ஆள், கார் இதுவெல்லாம் யாரோடது. எஸ்.ஆர்.வியிடம் விசாரிக்கப்போனாள். எஸ்.ஆர் அனைத்திற்கும் பதில் சொன்னார்.

“என் சம்பளம் யாரு கவனிக்கிறா?”

“அதற்கு மேனேஜர் இருக்கார், உன் பணத்தில் இதுவரை இரண்டு அயல்நாட்டு கம்பெனியில் பங்கு வாங்கியிருக்கு”

“வீடு, கார்?”

“இரண்டும் என் பெயரில் இருக்கு, உன் ஐந்து வருட காண்ட்ராக்ட் முடிந்தால் உனக்கு சேரும் அது”

“வேலை ஆட்கள் சம்பளம்?”

“இதுவரை நான் தான் குடுத்துட்டு இருக்கேன்”

“போதும், இனி அப்படி வேண்டாம். நானே கொடுத்துக்கிறேன்”

“நான் கொடுக்கிறேன் சொன்னேன். என் பணம் என்று சொல்லலை”

அவள் கேள்வியாக பார்த்தாள்.

“அது உனக்காக என்று உன் அம்மா சேர்த்து வைத்த பணம்”

“என்னது, அம்மாகிட்ட பணம் இருந்ததா?”

“ஆமாம் அதை உனக்கு கொடுக்க சொன்ன பணம். பதினாறு வயதுபெண் அவ்வளவு பணம் எப்படி கையாளுவாயோ என்ற பயத்தில் வங்கியில் போடப்பட்டது” சரஸ் சலித்துப்போனாள். அப்படி நோயான பின்னும் எதற்கு பணம் சேமிக்கனும். அதை செலவு செய்து குணப்படுத்திக்கொண்டு அவளுடன் இருந்திருக்கலாம். இருந்திருந்தால் இந்த எஸ்.ஆர்.வியிடமெல்லாம் அடிவாங்க விட்டுருப்பாளா? அத்தனை பேர் முன்னிலையில் கை ஓங்கினாரே.

சரஸ் கிளம்புகையில் எஸ்.ஆர் “அன்றைக்கு எங்கே சங்கீதா மகள் வழி தவறி போய் விடுவாயோ என்று பயத்தில், உரிமையில் அடிக்க கை ஓங்கிவிட்டேன். மன்னித்துக்கொள்” என்றார். சரஸ் மனம் உருகிப்போனது. “நீர் சில சமயம் உரிமை எடுத்துக்கொள்ளும் விதம் பிடிக்கலை. மற்றப்படி உங்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு” என்றாள். தாய் நம்பி விட்டுப்போன உறவு. சண்டை சச்சரவு இல்லாமல் உறவை வைத்துக்கொள்ள முயற்சியை தொடங்கினாள்.

குருவி சொல்லாமல் விட்டது சங்கீதா மீது எஸ்.ஆர்க்கு காதல் இருந்தது. அது குணவதி சங்கீதாவை அசிங்கபடுத்தும் என்ற எண்ணத்தில் சொல்லாமல் விட்டது.

“நீ நாடகத்தில் நடிச்சிட்டே இருந்தா சினிமாகாரங்க கண்ணுக்கு தெரியாது. யாரிடமாவது அசிஸ்டன்டாக சேர்ந்து முயற்சி செய்” என்று தினம் மூன்று வேளை உணவிற்கு வழி செய்தவள் அவளை எப்படி தவறாக சொல்வது என்ற எண்ணத்தில் சொல்லாமல் போனாள். பின்னாளில் அது தவறென்று உணர்ந்து என்ன லாபம்.

குருவி என்றுமே கடந்த காலத்தை, எதிர்காலத்தை கணக்கிட்டு செய்யும் வித்தையை பழகவில்லை. அது அவளுக்கு வரவேயில்லை. அப்படி கணக்கிட்டு வாழ்பவருக்கும் அவள் போல எல்லா வித கஷ்ட நஷ்டங்கள் இருந்தது. நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு வாழலாம் என்ற முடிவில் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இராவணன் எஸ்.ஆர் சங்கீதாவின் மரணத்தை மறைத்தார் என்பதை கேள்விப்பட்டதும் சரஸ் அவள் உடமைகளை கவனித்தே ஆகவேண்டும் என்றான். அவள் உழைப்பு மதிப்பு அவளுக்கு தெரியவேண்டும் என்றான். வாழ்வாதாரம் கவனிப்பு முக்கியம் என்றான். அவள் வாழ்விற்கு இனி அவளே பொறுப்பு என்றான். சரஸ்  இனி  பொறுப்பாக இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டாள். மனதில் எழும் காதல் கோட்டையில் இராவணன் அரசனாக அமர்ந்துக்கொண்டான் இன்னமும் அழுத்தமாக.

“உன் தாய் உனக்கென்று விட்டு போன சொத்துக்களை தெரிந்து வைத்துக்கொள். உன் வரவு செலவுகளை கணக்கு பார். உரியவன் பார்க்காவிட்டாள் குன்றும் குறையும்” என்று அவள் விழிப்பு நிலையை உயிர்ப்பிவிட்டான்.

கழுதை, மழலைத்தனம் பணம் விஷயத்திலுமா இருக்கும் இவளுக்கு. எவ்வளவு பணம் இதுவரை சுருட்டினானோ இந்த எஸ்.ஆர்  ராஸ்கல். உயர் ரக ஜவ்வாதும், பட்டாடையும், படை சூழ் வருவதும் போவதும் அவன் மட்டும் தான் அனுபவிக்கணுமா? என்ன? இந்த இராவணன் அனுபவிக்க கூடாதா? சரஸ் அவன் காதலி,அவள் பணம் அவனோடதும் தான். மனம் எஸ்.ஆரை கருவியது. பணத்தை எண்ணி பேராசைக்கொண்டது.குருவி சரஸை ஏமாற்றி பணம் சம்பாத்திருந்தால் இந்நேரம் அவர்கள் இருவரும் சேர்ந்தே நாடக கம்பெனி தொடங்கியிருக்கலாம். ஏனோ இராவணன் ஆசைபடும் பெண்களெல்லாம் மக்கு பெண்களாகவே இருக்கின்றாரோ . அலுத்துக்கொண்டான்.

தியாகராய நகரில் நிறைய மனமகிழ் கிளப் இருக்காம். அதில் எல்லாம் உறுப்பினர் ஆனால்  மது, சீட்டு எல்லாம் இலவசமாம். எங்கே தெரிய போகுது இந்த குருவிக்கோ, சரஸ்வதிக்கோ? குருவிக்கு டூயட்  பாட்டிற்கு ஆடனும் என்றால் சரஸிற்கு காஷ்மீர், சிம்லா போகனும். இல்லை லண்டன் போகணும் படிக்கணும். அப்பப்பா முட்டாள் பெண்கள். இராவணன் எண்ணங்கள் நிலைக்கொள்ளாமல் விரிந்தது. சரஸை அவன் கையுக்குள் வைத்துக்கொள்ள திட்டம் போட்டது.

-ஜிவி

 

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/valli-rajjiyam-part-6-by-jivi/

159total visits.