வசந்த மனோஹரி

0
40

நெஞ்சின் மீது புத்தகத்தை வைத்தபடி அப்படியே உறங்கிப்போயிருந்தார் பாபு.

“தாத்தா.. தாத்தா.. என்னைப் பாருங்க.. என்னைப் பாருங்க தாத்தா..” என்றபடி அவர்மீது தொத்தி ஏறி மடி மீது உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளாலும் மீசையின் இரு புறமும் முறுக்க ஆரம்பித்தாள் பேத்தி.. வசந்த மனோஹரி. ஒரே மகன் சம்பத்திற்கு ஒரே மகள். தாத்தாவின் உயிர்…

அறுபது வயதில் அவருக்கு,… அந்தப் பிஞ்சு உள்ளத்தின் கள்ளம் கபடமில்லாத அன்பை விட வேறென்ன வேண்டும்?

“தாத்தா.. எனக்கு யாரு தாத்தா …வசந்த மனோஹரின்னு பேரு வச்சது? இன்னிக்கு எங்க மிஸ்ஸு என்னைய கேட்டாங்க தாத்தா…”

“நாந்தான்டா வெச்சேன்..”

“ஏன் தாத்தா அப்டி வெச்சீங்க?”

அது ஒரு ராகத்தோட பேருடா தங்கம்..”

“ஜில்லூ.” அம்மாவின் அழைப்புக் குரல் கேட்டதும் சிட்டாக ஓடிபோனாள் குழந்தை!

இது வரை அவர் மகன் கூட அவரை கேட்டதில்லை. இப்போது…

நினைவுகள் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பாய்ச்சலாக ஓடியது.

நகரத்தின் நெரிசல் வெறுத்துப்போய்… சற்று தொலைவிலிருந்தாலும் பரவாயில்லை என்று புதிதாக மாறி வந்த வீடு.. விசாலமான ஓட்டு வீடு! வாடகையும் குறைவு! எல்லாவற்றையும் விட அக்கம்பக்கம் நன்றாகப் பழகுகிறார்கள் என்பதில் அம்மாவுக்கு அளவற்ற சந்தோஷம்!

எதிர்வீட்டில் வயதான அம்மா-அப்பா மற்றும் ஒரு பேரிளம்பெண். 30 வயதை அப்படித்தானே சொல்லணும்? அரசு பள்ளியில் இசை ஆசிரியை! வசந்தமனோஹரி. தண்டபாணி தேசிகரின் சிஷ்யை! ம்யீசிக் பீஏ. அம்மாவிற்கு இந்த சூழல் மிகவும் பிடித்துப் போயிற்று.

நகரத்திற்கு போகவர இரண்டு பஸ்கள் மட்டுமே. 35 ஆண்டுகள் முன்னர் மனிதர்கள் குறைந்த வசதிகளிலேயே நிறைவாக வாழ்ந்தார்கள்.

வீட்டில் அம்மா, அப்பா.. அவன், அவனது தங்கையும் தம்பியும்.. எதிர்வீட்டில் பாட்டு டீச்சர் குடியிருக்கிறார்கள் என்றதும் தங்கைக்கு கர்னாடக இசையின் மேல் திடீரென ஆசை வந்தது! அம்மாவிடம் நச்சரித்து வீட்டிலேயே வந்து சொல்லிக் கொடுப்பதாக ஏற்பாடாகி, வகுப்பும் தொடங்கியது.

தி. ஜானகிராமனின் தீவிர ரசிகனான காரணத்தாலேயே அவனுக்கு கர்னாடக இசைமீது அளவுகடந்த காதல்!

தானும் பாட்டு படித்துக் கொள்வதாக கேட்கவே துணிவற்றவனாக பாட்டு கிளாஸ் நேரத்தில் கையில் ஒரு புத்தகத்தையும் பிரித்து வைத்துக் கொண்டு கண்கள் புத்தகத்திலும் மனசு முழுவதும் சங்கீதத்திலுமாக ஹாலில் உட்கார்ந்து கொண்டு, அல்லாடிக் கொண்டிருந்தான். பாட்டு டீச்சர் அவனை விட ஐந்து வயது மூத்தவர்தான் என்றாலும் அன்றைய நாளில் வயதுப்பையன் ஒரு பெண்ணிடம் பாட்டுப் படிப்பதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிற திடமான கருத்து எல்லாருக்குமே..
ஒரு மாதமாகியும் ‘சரளி வரிசையே’ தாண்டவில்லை… தங்கை. சுருதிப் பெட்டி ஓலிக்கத்தொடங்கி டீச்சர் ‘ஸா….ப…ஸா..’ எனத்தொடங்கும்போதே அவன் மனம் கழன்றுபோய் இசையோடு ஐக்கியமாகிவிடும்! மாலை 5 மணியானால் நன்றாக ‘மேக்கப்’ பண்ணிக்கொண்டு நண்பர்களோடு சுற்றக் கிளம்பும் அவன் கொஞ்ச நாட்களாக வீடே கதியென்று கிடக்க ஆரம்பித்தான்..

கடைசியில் அம்மாவிடம் சரணடைந்தான். ‘ அம்மா! எனக்கு பாட்டுப் படிக்க கொள்ளை ஆசைம்மா.. டீச்சர்கிட்ட கேட்டுப்பாரும்மா..! “ எனக் கெஞ்சினான்!
‘நல்ல பெண்தான், பாவம் கல்யாணமாகி ஒரே மாதத்தில் புருஷனோட வாழமாட்டேனென்று வந்து விட்டாளாம்! அஞ்சு வருஷமா.. விவாகரத்தும் தரமறுத்து ரகளையில்….’ என்று டீச்சரைப்பற்றி அம்மா சான்றிதழ் வழங்கினாள்.

அடுத்த நாள் அவனுக்கும் அனுமதி கிடைத்தது. ஆனந்தமாக படிக்கத் தொடங்கினான்! ஒரு வாரத்தில் ‘சரளி வரிசை’ முடித்து ‘ஜன்டை வரிசை’க்கு வந்துவிட்டான்’

‘நல்ல ஸ்வர ஞானமும்- குரல் வளமும் ‘ இருக்கு. ரெண்டு வருஷம்
-உழைச்சு கத்துகிட்டு சாதகம் பண்ணினீங்கன்னா.. என்னைவிட அருமையாப் பாடுவீங்க….’ என்று டீச்சர் அவனிடம் சொன்னபோது..தம்புராவின் மென்மையான சுருதி அவனைத் தழுவிச் செல்வதாய் உணர்ந்தான் . பொறாமையால் தங்கையின் காதுகளில் புகைவருவது போலத் தோன்றியது அவனுக்கு. வகுப்பு முடியும் போது “தினம் ஒரு ராகத்தை ஆலாபனை செய்யுங்கள்.. நிறைய ராகங்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்வேன்” என்றான் பாபு. டீச்சரும்.. ஒரு நாள் “கல்யாணி” ஒரு நாள் “பூபாளம்” ஒரு நாள் “நீலாம்பரி” என்று ஆலாபனை செய்து விட்டுத்தான் சுருதிப் பெட்டியை எடுத்து வைப்பார்.

பாட்டு வகுப்பில் அவனும் டீச்சரும் அடுத்தகட்டத்திற்குப் போயிருந்தனர். தங்கை அங்கேயே முக்கிக் கொண்டிருந்தாள்! அவனைப் பார்த்தவுடன் டீச்சரின் முகத்தில் மலரும் ஒரு மலர்ச்சியை வீட்டில் அம்மாவும் கவனிக்கிறாளோ என்று அவனுக்கு சற்று அச்சமாக இருந்தது . தன்னைவிட ஐந்து வயது மூத்தபெண் என்பதாலும், அவரது இசைஞானத்தின் மேல் கொண்ட பக்தியாலும் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டான்! என்றாலும் அவனைப் பார்த்தவுடன் அவனுக்காகவே எனத் தனியாக வெளிப்படும் முகமலர்ச்சி சில நேரங்களில் அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது!

திடீரென ஒருநாள்…..அலுவலக முகவரிக்கு அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. பார்த்தவுடன் யாரும் சொல்லிவிடலாம். அழகான, நேர்த்தியான ஒரு பெண்ணின் கையெழுத்து..

படபடப்புடன் பிரித்துப் பார்த்தான்..

“ப்ரிய பாபு…!”
நீண்டதொரு மனப்போராட்டத்திற்குப் பிறகு தான், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்! வாழ்க்கையில் எந்த சுகத்தையுமே அனுபவிக்காத பாவி நான்!
அனுதாபம் வேண்டியல்ல! இது காதல் என்று சொல்லவும் எனக்குத் துணிச்சல் இல்லை! இல்லையென்று சொல்லிவிடவும் முடியவில்லை!
ஆண்மையில்லாத ஒரு மனிதனுக்கு வாழ்க்கைப்பட்டு வெளிப்படையாக அதை வெளியிலும் சொல்லவும் முடியாமல், சேர்ந்து வாழவும் முடியாமல் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கும் ஒரு பாவி நான்!
பாபு! நான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துவிட்டு நீண்ட மனப்போராட்டத்திற்குப் பிறகு தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்! நான் உங்களிடம் எந்த உரிமையும் கேட்க மாட்டேன். எனக்கென உங்கள் மனதில் ஒரு சின்ன இடம்..அது நட்பாக இருந்தால் கூட போதும். நான் அறிவற்ற பேராசைக்காரி அல்ல! உங்கள் பண்பு, இலக்கிய ரசனை…இசை ரசனை இவையெல்லம்தான் என்னைக் கவர்ந்தது. ஒரு நாள் ‘மோகமுள்” நாவலில் பாபு-யமுனா காதலைப்பற்றி நெகிழ்ந்துபோய்ப் பேசியபோது உங்கள் கண்களில் தெரிந்த ஒளி’ இதெல்லாம் தான் இந்தக் கடிதம் எழுத எனக்குத் துணிச்சலைத் தந்தது! நல்ல ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்! ஒருவேளை இது எதுவுமே பிடிக்கவில்லையென்றால் தயவு செய்து இதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். .உங்கள் மெளனத்தையே ‘மறுப்பாகப் புரிந்து கொள்கிறேன்’. எவ்வளவோ முயன்றும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் எழுதிவிட்டேன் பாபு. தயவு செய்து என்னை அசிங்கமாக எண்ணி விடவேண்டாம். யாரிடமும் இதுபற்றி சொல்லிவிடவும் வேண்டாம் .ப்ளீஸ்!

அளவற்ற ப்ரியத்துடன்
வசந்த மனோஹரி.

கடிதத்தைப் படித்த பாபுவிற்கு பட படவென வந்தது .இப்படி ஒன்று நடக்கும் என அவன் கனவில் கூட நினத்துப் பார்க்கவில்லை. எந்த ஒரு நேரத்திலும் அவன் அவர்களோடு சபலத்துடன் பேசவோ, பழகவோ இல்லை. பின் ஏன் இப்படி? இப்பவும் அவர்களின்மீது அவனுக்கு அனுதாபம்தான் பிறந்தது. அதே நேரத்தில் இதை ஏற்றுக் கொண்டால் வெறும் நட்பு எனும் எல்லைக்குள் நிற்காது என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது! ஒரு நிமிஷம், அவன் தன்னையே நொந்து கொண்டான். இது எதில் போய் முடியப்போகிறதோ என யோசித்தபோது அச்சமாக இருந்தது…………..

இந்த தர்மசங்கடத்திலிருந்து எப்படி மீள்வது? இந்தக் கடிதத்திற்கு பதில் எழுதுவதா? வேண்டாமா? என்ன செய்வதென்று தெரியாமல் பாபு தவித்தான்.

சென்றவாரத்தில் ஒரு நாள்… பாட்டு க்ளாஸ் முடியும் நேரத்தில், டீச்சர் பாபுவிடம் கேட்டார்..

“நெறையா படிப்பீங்க போல இருக்கு? யாரோட எழுத்துகள் பிடிக்கும்? எனக்கும் புத்தகங்கள்தான் பெரிய துணை.,”

” எனக்கு வாசிக்கறது… சுவாசிக்கிற மாதிரிங்க… தி. ஜானகிராமனின் புத்தகங்கள்னா உயிர்…”

“மை குட்னஸ்.. நானும் அவரோட தீவிர ரசிகை…அவரோட ‘அம்மா வந்தாளும்’ , ‘மோகமுள்ளும்’ என்னோட பேவரிட்.. எத்தன தடவை படிச்சாலும் அலுக்காது..”

“ஆனா, என்னோட சாய்ஸ்ல மொத இடம் ‘மோகமுள்’ ரெண்டாவது ‘மரப்பசு’ மூனாவது ‘அம்மா வந்தாள்’ மத்த எல்லாமும் பொக்கிஷங்கள்தான்….” என்று சொல்லிச் சிரித்தான்!

“இதென்ன புதுசா இருக்கு….? ஏன் அப்படி?”

“இல்லீங்க… ‘அம்மா வந்தாள்’ எழுத அசாத்தியமான துணிச்சல் வேணும்.. ஆனா, ‘மோகமுள்’ எழுத அற்புதமான இசை ஞானமும் எல்லையில்லா காதல் உணர்வும் வேணும்ங்க. துணிச்சலா எழுத ஆயிரம் பேர் கிடைப்பாங்க.. ஆனால் இசையோட நுணுக்கங்கள அணு அணுவா ரசிச்சு அதை அப்படியே ஆத்மாவுக்குள்ள ஐக்கியப்படுத்தர ரஸவாதமும்… தன்னைவிட மூத்த பெண்ணை, அக்காவின் தோழியை உயிரைவிட மோலாகக் காதலித்து அதற்காக ஒரு தவம் மாதிரி வாழ்க்கையையே அர்ப்பபணிக்கிற ஒரு கதாபாத்திரத்தைப் படைக்கிற ரசனை தி. ஜானகிராமன் சாருக்குத்தான் வரும்…”

“உங்களுக்கு மோகமுள் பிடிக்கறதுக்கு அதைவிட முக்கியமான காரணம் வேற ஒன்னு இருக்கு…! அந்த நாவலின் கதாநாயகன் பேரும் ‘பாபு’ அதனாலதானே? ” என்று கேட்டு சிரித்தார் டீச்சர்…

” ஆமாம் என்றோ, இல்லை என்று மறுக்கவோ செய்யாமல் மைய்யமாக ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்..”

இவ்வளவு நேரம் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியதும்.. உணர்ச்சி மிகுதியால் தனது கண்கள் கலங்கிப் போயிருந்ததையும் அப்போது தான் உணர்ந்தான் பாபு!

பதிலுக்கு டீச்சரும்…
“உண்மை தான் பாபு, ‘யமுனா- பாபு’ காதலை கொஞ்சம் கூட விரசமேயில்லாமல் அத்தனை அழகா, அத்தனை நாசூக்கா, புனிதமான உணர்வா எழுத அவர்னால மட்டும்தான் முடியும்.. பாபு” எனச் சொல்லி சிலாகித்தார்.

டீச்சருக்கு தன்மீது ஏற்பட்ட ஈடுபாடு வலுப்பெற இந்த இலக்கிய விவாதம் மிகவும் முக்கியமானதாகப்பட்டது அவனுக்கு.

இதன் காரணமாகவே..தனக்கு கடிதம் எழுதும் துணிச்சல் அவருக்கு வந்திருக்கலாமோ என்றுகூட தோன்றியதுடன், தான் பேசியது தவறாகப் போய்விட்டதோ என்கிற சந்தேகமும் அவனுக்குள் முள்ளாய் உறுத்தியது…

எப்படியென்றாலும் பாபுவுக்கு டீச்சர் மீது நிறைய மரியாதையும் அவரது இசைஞானத்தின்மீது ஒரு ஆராதனையும் இருந்ததே தவிர, எந்தச் சூழலிலும் அவர் தவறான கற்பனைகள் செய்யும்படியாக அவன் ஒரு நொடிகூட அவரிடம் நடந்து கொள்ளவேயில்லை… பிறகு ஏன் இந்த குழப்பமெல்லாம்?

‘ஐய்யயோ! நீங்கள் கற்பனை செய்தபடி எனக்கு உங்கள் மீது எந்த எண்ணமும் இல்லை. தயவுசெய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்! உங்களை எந்த விதத்திலாவது நான் ‘டிஸ்டர்ப்’ பண்ணியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று ஒரு கடிதம் எழுதி அவரது பள்ளி விலாசத்திற்கு அனுப்பி விடலாமா? என்று நினைத்தான்! வேண்டாம்! விருப்பமில்லையென்றால் பதில் எழுதாமல் இருந்தாலே நான் புரிந்து கொள்வேன் என்று சொன்னபிறகு எதற்காக கடிதமெல்லாம்?

பதில் கடிதம் இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமோ என அச்சமாக இருந்தது அவனுக்கு…,. தலை வலிக்கிற மாதிரி இருந்தது. ஒரு காப்பி குடிக்கலாம் என எழுந்த போது மேனேஜர் அழைத்தார்.

” பாபு! மெட்ராஸ் ஹார்பர்ல ஸ்விஸ்லேர்ந்து வந்த மெஷின்ஸ் டெலிவரி எடுப்பதில் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. இன்னிக்கு ஈவனிங்கே நீ புறப்படற. தேவையான பணத்தைக் கேஷியரிடம் வாங்கிக்கோ. உன்னோட ஜெகதீஷையும், தாமுவையும் கூட்டிட்டுப்போ. டாடா சப்பாரி வண்டி எடுத்துட்டுப்போங்க. டிரைவர் மாணிக்கத்தை கூப்டுக்க. ஒருவாரம் ஆனாலும் ‘ப்ராப்ளம் சால்வ்’ ஆகாமல் திரும்பி வரவேண்டாம்!”

எஸ்சார்! ஓகே சார்! தவிர. எதுவும் சொல்லமுடியாது. அவசர, அவசரமாக வீட்டிற்கு வந்து அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டு பரபரவென்று கைகளில் கிடைத்த துணிகளை சூட்கேஸில் திணித்துக் கொண்டிருக்கையில் ஆபீஸ் கார் வந்து அவனை அழைத்துக்கொண்டு ‘மெட்ராஸ்’ போகும் சாலையில் பறந்தது.

மேனேஜர் சொன்னது போல ஒரு வாரம்தான் ஆனது.. ஏகப்பட்ட சிக்கல்கள். அலையாய் அலைந்து எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பினான்.

ஊர்வந்து சேர்ந்து ஒரு நாள்கூட ரெஸ்ட் எடுக்காமல் அன்றைக்கே ஆபீஸ் போக வேண்டியிருந்தது. மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது தான் எதிர் வீட்டை கவனித்தான். வீடு பூட்டியிருந்தது..

டீச்சர் எழுதின கடிதம் தன் கைக்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டிருந்ததையும் அதற்கு தான் எந்த பதிலுமே எழுதவில்லை என்பதும் அப்போது தான் நினைவுக்கு வந்தது.

அம்மாவுக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவும் சாதாரணமாக. கேட்பது போல்.

” என்னம்மா? எதிர்வீடு பூட்டியிருக்கு?

“அய்யோ! பாபு அந்தக் கொடுமைய கேக்காதடா. நெனச்சாவே .மனசெல்லாம் பதறுதுப்பா.”

“என்னம்மா ஆச்சு? புரியற மாதிரி சொல்லும்மா.. “ அவனறியாமல் குரல் பதறியது.

“நீ ஊருக்குப் போயி ரெண்டு நாள் கழிச்சு அந்தப் பொண்ணு வசந்தியோட புருஷன் வீட்டு ஆளுங்கன்னு சொல்லி ரெண்டு கார் நெறையா பேரு வந்தாங்கப்பா. ஜாதி சங்கத்து ஆளுகளையெல்லாம் கூட்டிட்டு வந்துட்டாங்கப்பா. நாலு மணி நேரம் காரசாரமா பஞ்சாயத்து நடந்ததுப்பா. கடசீல எல்லாம் சமாதானம் பேசி அந்தப்பொண்ணையும் கூட்டிட்டுப் போனாங்கப்பா. அடுத்த நாள் வசந்தியோட அம்மா வந்து ‘நாங்கதான்ம்மா அவளை வற்புறுத்தி அனுப்பி வச்சோம். நாங்க உயிரோட இருக்குற வரை சரி. அதுக்கப்புறம் இவ நெலமை என்ன ஆகறதுன்னுதான் எப்படியோ அனுசரிச்சுப் போ சாமின்னு அனுப்பி வச்சோம்’ னாங்க. நானும் கூட நல்ல முடிவு பண்ணுனீங்கம்மான்னு சொன்னன்ப்பா.

“ஆனா… ரெண்டே நாள்ல சேதி வந்துச்சுப்பா.. அந்தப்பொண்ணு வசந்தி கெணத்துல குதிச்சு செத்துப் போயிட்டான்னு..”

“அம்ம்மா..!” பாபு அவனையறியாமல் அலறிவிட்டான்.

“ஆமாப்பா! வயிறெல்லாம் வேகுது. . நல்லா லட்சனம்மா வேலைக்குப் போயிட்டு அம்மா, அப்பாகூட சந்தோஷமா இருந்துச்சு. இப்புவும் கூட நம்ம ஊட்டுக்குள்ள உக்காந்து பாடிகிட்டே இருக்கற மாதிரியே இருக்குதுப்பா. என்னாலயே தாங்க முடியல. அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கதறுனதை கண்ணால பாக்க முடியலப்பா.” என்று சொல்லியபடி அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

“அவங்கப்பா அம்மா ரெண்டு பேருமே உறுதியா சொல்றாங்கப்பா. எம்பொண்ணு ஒரு நாளும் தற்கொலை பண்ணிக்க மாட்டா. அந்தப் பாவிகதான் என்னமோ பண்ணிட்டானுகன்னு ஆனா, இவங்க ரெண்டு பேரும் வயசானவங்க, ஆள் பலம் இல்லை. அவன் வீட்டில ஜாதி சங்கம், அரசியல் பலமென எல்லா இடத்திலும், முழு சப்போர்ட். மீறி இவங்க ஏதாவது பண்ணினாலும் தொடர்ந்து அவனுக தொந்தரவு குடுப்பாங்கன்னு எல்லாருமே சொல்றாங்கப்பா.

பெரியவங்க ரெண்டு பேரும் வெறுத்துப் போயிட்டாங்கப்பா.. “எங்க பொண்ணே போயிட்டா.. இனி நாங்க யாரைப் பழி வாங்கி என்ன சாதிக்கப்போறோம்” னுட்டாங்கப்பா.. மூனாவது நாள் காரியம் முடிஞ்சதும்., எங்கயோ போறம்மா ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் வீட்டைபூட்டிட்டு கெளம்பிட்டாங்கப்பா”
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அம்மா சொன்னதெல்லாம் காதால் கேட்கும் தைரியம் கூட தனக்கு இல்லையோ? என்று இருந்தது பாபுவுக்கு.

மனதார தான் எந்தக்குற்றமும் செய்யவில்லை. அந்தப் பெண்ணை நேசிப்பதாகச் சொல்லி ஏமாற்றவில்லை. அந்தப்பெண்ணின் சபலத்தைத் தூண்டி விடவில்லை. ஒரு வேளை மெட்ராஸ் போகும் முன்பு ஒரு வார்த்தை.. ‘நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். அதைத்தாண்டி என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.’ என்று சொல்லியிருந்தால்கூட அந்தப் பெண் தன் கணவன் வீட்டிற்கு போயிருக்க மாட்டாரோ? இந்த மரணம் தவிற்கப் பட்டிருக்கலாமோ?

தனது கோழைத்தனத்தால் ஒரு பாவப்பட்ட பெண் பரிதாபமாக செத்துப் போனாரோ? தன்னுடைய அலட்சியம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதோ?

யோசனை செய்து யோசனை செய்து பாபுவின் தலை புண்ணாகிப் போனது தான் செய்தது. சரியா? தவறா? என்று மனம் விட்டு யாரிடமும் பேச முடியாத ஒரு சூழல் உருவாகி விட்டது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால்.. கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு எதிர்வீட்டுப் பையனோடு தொடர்பு இருந்துள்ளது அதனால்தான் கணவனோடு சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என கண் காது மூக்கு எல்லாம் வைத்து நிறைய கதைகள் உருவாகும்.

அதோடு எந்த சூழலிலும் இந்தக் கடிதம் பற்றி யாரிடமும் .. சொல்லிவிட வேண்டாம் என “வசந்த மனோஹரி’ சொல்லியிருந்தார்.அல்லவா?

ஒரு தவறும் செய்யாமல் குற்ற உணர்ச்சியாலும், பழகின காரணத்தினால் ஏற்பட்ட பச்சாதாபத்தாலும் பாபு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான்.

நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்து, சாதாரணமான பெண்களைவிட கூடுதல் ரசனையோடு, கலை உணர்வோடு அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இசையில் பட்டதாரியாகி, நிறைய இலக்கியங்கள் படித்த அறிவு பூர்வமான ஒரு பெண் இப்படி அவலமாக செத்துப் போவது மிகக் கொடுமையானது என்பதைஅவரைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் மனதிற்குள் ஒரு ஊமை வலியை அனுபவித்தான் பாபு..35 வருடங்களான போதும் மனதிற்குள் மாறாத வடுவாக

இவ்வளவு மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த போதும் அந்தப்பெண் மீது கருணையும், இரக்கமும்தான் வந்ததே தவிர ஒருபோதும் வெறுப்பு வரவில்லை. அதன் விளைவுதான் யாருக்குமே சொல்லாமல் தனது உயிரான பேத்திக்கு அவரது பெயரை வைத்து தனக்குள்ளேயே ப்ராயசித்தம் தேடிக்கொண்டார் பாபு..

-இரவிச்சந்திரன் அரவிந்தன்

322total visits.